Chapter 10
மாறும் இவ்வுலகில் மாறாதது
என் காதல் மட்டுமே..
வால்பாறையை விட்டுச் சற்று தள்ளியிருக்கும் ‘கானவயல்’ அழகான ஊர்.. அங்கும் அதைச் சுற்றியிருக்கும் மற்ற ஊர்களிலும் அவனை அறியாதவர்கள் இல்லை.. அவன் முன் நின்று பேச தயங்குவார்கள்.. ஒர் சிறு பார்வையில் எவரையும் எட்டி நிறுத்தி விடும் பாரம்பர்யமும் பணபலமும் கொண்டவன் அவன்.. நட்சத்திரப் பிம்பம் கொண்டவன்.. சித்தார்த்தன்..!
அவன் பெயரைக் கேட்டால் எவராக இருந்தாலும் எழுந்து நின்று விடுவார்கள்.. அப்படிப்பட்டவனைப் பார்த்து ஒரு சிறுபெண் விரல் உயர்த்தி எச்சரிக்கிறாள்..
அவனை அவனாக உணரச் செய்தவளை உற்றுப் பார்த்தான் சித்தார்த்தன்.. அவன் பார்வையில் லஜ்ஜை கொண்டு முகம் சிவந்தாள் அவள்.. சித்தார்த்தன் உல்லாசம் கொண்டான்.. இதுபோன்ற உணர்வு இதற்கு முன் அவன் மனதில் குடியேறியதில்லை.. எங்கிருந்தோ வந்த ஒருத்தி.. அவனது பின்புலம் அறியாமல் பேசிச் சிரிக்கிறாள்.. அவளது சிறு பார்வையில் அவனது இரும்பு மனம் இளகுகிறதே.. எப்படி..?
‘ஒருவேளை என் பேக்ரவுண்ட் தெரியாமல் இவள் பேசிப் பழகுவதால் நான் ஸாப்ட் ஆகிறேனா..?’
அதுவாகத்தான் இருக்கும் என்று உறுதிபடத் தெரிந்தது.. வால்பாறை வட்டாரத்தைச் சேர்ந்தவர்களுக்கு அவன் உச்சாணிக் கொம்பு.. ப்ரீதி பூனாவில் இருந்து வந்தவள்.. அவனது பெயர் கூடத் தெரியாத போதே இயல்பாகப் பேசியவள்.. அவனைக் கண்டதும் அவளது விழிகளில் தெரியும் மயக்கம் அவனுக்கானது.. அவனது பின் புலத்திற்கானதல்ல..
அவன் யார் என்பதை இன்னும் ப்ரீதிக்கு எவரும் சொல்லி இருக்க மாட்டார்கள் என்பதை அவன் அறிவான்.. சொல்ல வேண்டிய உறவுகள் அதைச் சொல்லச் சிரமப்படுவார்கள்..
“காலையில் எழுந்ததும் காபி குடிப்பாங்கன்னு கண்டிருக்கேன்.. இப்படிக் காட்டைத் தேடி வருவாங்கன்னு கண்டதில்லை.. இரண்டு நாளுக்கு முன்னாடியும் இப்படித்தான்.. காட்டுக்குள்ளே தனியா சுத்திக்கிட்டு இருந்த.. அப்படியென்ன உனக்கு காட்டின் மேல் இவ்வளவு காதல்..?”
கேட்டவனின் மனம் ‘நானும் காடுதான்..’ என்றது.. அவன் மனதிலும் ஈரம் உண்டு.. பசுமை உண்டு.. வெளியே தெரியாது.. தெரியவும் விடமாட்டான்.. அடர்ந்த கானகத்தில் புதைந்துள்ள ரகசியங்களை யாரால் அறிய முடியும்..?
“ம்ம்ம்..” குழந்தையாக அவள் தலையை ஆட்டினாள்..
“ஆச்சரியம்தான்.. சிட்டிப் பொண்ணுக்கு காட்டைப் பிடிச்சிருக்கு..”
“என்ன.. இப்படிச் சொல்லிட்டிங்க.. இது இயற்கைங்க.. சுத்தமான காற்று, நீர்ன்னு கடவுள் கொடுக்கும் கொடை.. சிட்டியிலே அப்படியில்லைங்க.. பொல்லுசன்.. நிலத்தடி நீர் குறைவுன்னு மனுசங்க பூமியைப் போட்டுப் பாடாய் படுத்திக்கிட்டு இருக்காங்க..”
படு தீவிரமாக முகத்தை வைத்துக் கொண்டு அவள் பேசியதில்..
“பாருடா.. நீ கூட சீரியஸா பேசுவியா..?” என்றான் அவன்..
அவளுக்கு ரோசம் வந்து விட்டது.. அது என்ன அவளைப் பார்த்து இப்படிக் கேட்டு விட்டான்.. அவள் சீரியஸாகப் பேசக் கூடாதா..? பேசினால் ஆகாதா..?
“ஏன் ஆகாது..?” படு கூலாகச் சொன்னான் சித்தார்த்தன்..
“உன்னைச் சின்னப் பெண்ணுன்னு நினைச்சிருந்தேனா.. அதுதான்.. சீரியஸாப் பேசினதில கொலாப்ஸ் ஆகிட்டேன்..”
“ஆவிங்க.. ஆவிங்க.. காலேஜ் முடித்து விட்ட பெண்ணைப் பார்த்து இவர் சின்னப் பெண்ணுன்னு நினைத்தாராம்..”
“பின்னே.. நீயென்ன நூற்றுக் கிழவியா..?”
“இல்லை சார்.. எல்.கே.ஜி படிக்கிற பப்பா..”
“பப்பா..?”
சித்தார்த்தன் பலமாக சிரித்தான்.. ப்ரீதி கோபித்துக் கொண்டு தாம், தூம் எனக் குதித்துவிட்டு வீட்டுக்குச் செல்லப் போவதாக அறிவித்தாள்..
“தனியாகவா..?” என்றான் அவன்..
“தனியாத்தான் வந்தேன் சார்..” என்றாள் அவள்..
“காட்டில் சிங்கம், புலி, கரடியெல்லாம் இருக்குமே..”
ஒற்றை வரிதான் சொன்னான்.. அவள் ஓடியே வந்து விட்டாள்.. பயமென்றால் பயம்.. அப்படியொரு பயம்.. கண்களில் கிலி வழிய சுற்றுமுற்றும் பார்த்தபடி அவனருகில் ஒண்டி நின்றபடி கிசுகிசுப்பான குரலில்..
“இங்கேயும் இருக்குமா..?” என்று வெடவெடத்தாள்.
“இது காடுதானே..?” அவனும் கிசுகிசுத்தான்..
“பக்கத்து காடுதானே..?” அவள் விளக்கம் சொன்னாள்.
“காட்டிலே பக்கத்து காடு, தூரத்து காடுன்னு இருக்குதா..? அறிவாளி..! ஆமாம் ஏன் கிசுகிசுக்கிற..?”
“நீங்களும்தான் கிசுகிசுக்கறீங்க..”
“நீ பேசினதால அதே டோனில நானும் பேசினேன்..”
“சத்தமாப் பேசினாக் கேட்டு விடுமே..”
“யாருக்கு..?”
“சிங்கம், புலி, கரடிக்கு..”
அவன் உரத்த குரலில் சிரிக்க ஆரம்பிக்க அவள் அவசரமாக அவனது வாயைப் பொத்தினாள்.. சித்தார்த்தனின் சிரிப்பு நின்று விட்டது.. அவனது இதழ்கள் உணர்ந்த மலர்கரங்களின் ஸ்பரிசம் அவனை எங்கோ கொண்டு சென்றது.. மெலிதாக இதழ் குவித்து அவளது வளைக் கரத்தில் முத்தமொன்றைப் பதித்தான்.. அவள் சட்டென கையை இழுத்துக் கொண்டாள்.. எதிர்பாராத முத்தத்தின் குளிர்ச்சியை அவளது உள்ளங்கை உணர்த்திக் கொண்டிருந்தது.. உணர்வின் வேகம் தாளாமல் அவளது கண்கள் கலங்கி விட்டன.. அவனுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.. அதிகமாக உரிமை எடுத்துக் கொண்டு விட்டானா..?
“ஸாரி..” முணுமுணுத்தான்..
“வீட்டுக்குப் போகனும்..” அவன் முகம் பார்க்க முடியாமல் நிலம் பார்த்தபடி அவளும் முணுமுணுத்தாள்..
“வா.. போகலாம்..”
அவன் முன்னால் நடக்க பின் தொடர்ந்தவள் அவனது வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் மூச்சிரைக்க அவனது கைபற்றி நிறுத்தினாள்.. அவளது கைபட்ட இடம் தேனாக இனிக்க..
“என்ன..?” என்றான் சித்தார்த்தன்..
“இவ்வளவு வேகமாப் போனா எப்படி சார்..? அதிலயும் பின்னாடி திரும்பிப் பார்க்க மாட்டேன் என்றீங்க.. சிங்கம், புலி, கரடி துரத்தினா என்னத்தைச் செய்வேன்..?” ப்ரீதி அங்கலாய்த்தாள்..
சித்தார்த்தனுக்குள் பிரியம் முகிழ்ந்தது.. ஆரண்யத்தின் அழகை ரசித்துக் கொண்டிருந்தவளை, அச்சுருத்தி விட்ட குற்றஉணர்வு எழுந்தது..
“பயப்படாதே.. இந்தப் பக்கம் சிங்கம், புலி, கரடியெல்லாம் வராது.. யானை வேண்டும்ன்னா வரலாம்..” என்று சொன்னான்..
“சிங்கம், புலி, கரடியும் இருக்கும்ன்னு சொன்னீங்களே..”
“அது சும்மா விளையாட்டுக்கு சொன்னது.. கொஞ்சூண்டு உண்மையும் இருக்கு.. காடுகள்ன்னு இருந்தா அங்கே விலங்குகளும் இருக்கும்தானே.. அது இருக்கும் இடத்துக்குத்தான் நாம வந்திருக்கிறோம்..”
“எதுக்கும் என்னைத் தனியா விட்டு விடாதீங்க.. ப்ளீஸ்..”
மருண்ட அவள் விழிகளை உற்றுப் பார்த்தான் அவன்.. அவளது விழிகளின் கலக்கத்தில் அவனது புருவங்கள் சுருங்கின..
“பயமா இருக்கா..?”
“ம்ம்ம்..”
“இந்தக் காடு வேண்டாம்.. பூனாவிற்கேப் போய் விடலாம்.. இனி இந்தப்பக்கம் வரவே கூடாதுன்னு தோணுதா..?”
ப்ரீதி நின்று கானகத்தைச் சுற்றிப் பார்த்தாள்..
மனித கால் தடங்களே படாத கானகம்.. கொட்டும் அருவி.. கொஞ்சும் அடிவானம்.. முகடுகளின் மேகம்.. பொழியும் மழைத்தூறல்.. ஆதியிலும் ஆதி கொண்ட அந்தம் இந்தக் கானகம்.. இதன்மீது பயமா..?
‘இல்லை’ என்பதைப் போல இடம் வலமாக தலையை அசைத்தாள்.. சித்தார்த்தனின் முகம் மலர்ந்து விட்டது.. எதனால் அந்த மலர்ச்சி என்று தெரியாவிட்டாலும் ப்ரீதியின் மனம் லேசானது..
“கையைப் பிடிச்சுக்க..”
சித்தார்த்தன் நீட்டிய கையை தயக்கமில்லாமல் அவள் இறுக்கிப் பிடித்துக் கொண்டதில் அவனது மனம் நிறைந்தது.. இருவரும் பேசியபடி சாலையை நோக்கி நடந்தார்கள்..
“அதிகமான டூரிஸ்ட் இங்கே வருவதில்லை போல… இப்பேற்பட்ட அருமையான டூரிஸ்ட் ஸ்பாட்டை மிஸ் பண்ணிட்டு மக்கள் கொடைக்கானல், ஊட்டின்னு அலைகிறாங்களே..” ப்ரீதி ஆதங்கப்பட்டாள்..
“பெரும்பாலான சுற்றுலா விரும்பிகளின் கண்களில் எங்கள் ஊர் படவில்லை என்பதில் எனக்குச் சந்தோசம் அதிகம்..” சித்தார்த்தன் சொன்னான்..
“ஏனாம்..?”
“ஏன்னா.. மனிதர்களின் காலடி பட்டால் இதன் இயற்கையழகு குறைந்து மாசு நிரம்பி விடும்.. இப்பக் கொடைக்கானலுக்கும், ஊட்டிக்கும் அந்தக் கதிதான் வந்திருக்கிறது.. அது வால்பாறைக்கும் வர வேணடாம்..”
“இப்படி விரட்டினா எப்படி சார்..? ஹாலிடேஸ்க்கு இந்தப் பக்கம் வந்து போகிற டூரிஸ்ட்டுகளால உங்க ஊரின் அழகு ஒன்றும் கெட்டுப் போய் விடாது சார்..”
“எங்கள் ஆரண்யத்தின் சாலைகளில் தனித்து நடை பயிலும் ஒற்றைக் காட்டு யானையின் தனிமையைக் கலைத்து அதை ஓட ஓட விரட்ட இங்கே யாரும் வந்து விடக் கூடாது… அதன் தும்பிக்கையில் தொற்றியிருக்கும் தும்பிகளின் வாழ்க்கைச் சுழல் பற்றி ஆராய்கிறேன் பேர்வழியென்று எந்த அறிவாளியும் எங்கள் காட்டுப்பக்கம் வந்து விடக் கூடாது..”
கவிதை போலப் பேசினான் சித்தார்த்தன்.. அவனது பேச்சு நயத்தில் மனதை பறி கொடுத்தாள் அந்த மாது.. என்னவொரு தெளிவு.. என்னவொரு நிதானம்.. செதுக்கி வைத்த சிலை போல இருந்தவனின் முகவடிவும், உயரமும் அவளை மயக்கின.. அவன் பேசப் பேசக் கேட்டுக் கொண்டிருக்கலாம் போல இருந்தது..
கற்றோரை கூற்றோரே காமுறுவர்.. இயற்கையை ஆராதிப்பவள் ப்ரீதி.. அந்த இயற்கையோடு இயற்கையாக கலந்து வாழ்ந்து காத்து வருபவன் சித்தார்த்தன்.. அவன்மீது அவள் மனதில் ஆதர்சம் வருவதும் இயற்கைதானே..
சடசடவென மழைத்துளிகள் விழுந்ததில் அவர்கள் ஒரே ஒட்டமாக காரை வந்தடைந்தார்கள்.. காரில் ஏறி அமரவும் பெருமழை கொட்டவும் சரியாக இருந்தது.. காரின் முன்பக்க கண்ணாடியில் சாரை சாரையாக வீழ்ந்த மழைத் தாரைகளைப் பார்த்தவள்..
“வீட்டில் இருந்து கிளம்பறப்ப மழை வருகிற அறிகுறியே தெரியலை தெரியுமா..” என்று புலம்பினாள்..
“இதுக்கு ஏன் அப்செட் ஆகிற..?”
“உங்களுக்கென்ன.. ஈஸியாச் சொல்லிட்டிங்க.. நீங்க வரப் போய் ஆச்சு.. இல்லேன்னா காட்டுக்குள்ள தன்னந்தனியா மாட்டியிருப்பேனில்ல..”
“மாட்டியிருக்க மாட்டாய்..”
தீர்மானமாக அவன் சொன்னதில் வியப்புடன் அவன் முகம் பார்த்தாள்..
“எப்படி..?”
“எப்படியும் நான் வந்திருப்பேன்.. ஏன்னா.. இந்தக் காடு வேறு.. நான் வேறு இல்லை.. இந்த வனம் எனக்கு இன்னொரு அம்மா..”
சித்தார்த்தனின் நாத்தளுதளுத்தது… ப்ரீதி துணுக்குற்றாள்.. கம்பீரமான சித்தார்த்தனைப் பார்த்துப் பழகியிருந்தவளுக்கு நெகிழ்ச்சியான சித்தார்த்தன் புதியவனாகத் தெரிந்தான்.. ஓர் நொடிக்குள் நெகிழ்ச்சியி-லிருந்து மீண்டு பழைய சித்தார்த்தனாகி அவன் காரைக் கிளப்பினான்… அடர்த்தியான மழைத்தாரைகளினூடே தெரிந்த பாதையில் கார் ஊர்ந்தது..
“இங்கே எந்த நொடியிலும் மழை வரும்..”
“சிரபுஞ்சி போலவா..?”
“ஆமான்னு வைத்துக்கலாம்.. இந்தப் பக்கம் மனிதர்கள் வாழும் பகுதி இருக்கிறதுன்னு யாருக்குமே தெரியாமல் இருந்தது.. வழக்கம் போல இதையும் ஒரு இங்கிலிஸ்காரர் தான் கண்டு பிடித்தார்.. அவர் பெயர் கார்வர் மார்ஷ்.. எப்போதும் மிதமான வானிலை.. மலையும், மழையும் சூழ லத்தின் அமெரிக்க ஊரான ‘சிலி’யைப் போல இருந்த மலைப் பிரதேசம் இது.. ஆனைமலைக் காடுகளுக்கு அப்பால் ஓர் ஊர் இருப்பதைக் கண்டு பிடித்த கார்ல் மார்ஷ் சிலியின் முக்கிய ஊரான ‘வால் பாறைகோ..’ என்று பெயர் வைத்தார்.. மெல்ல, மெல்ல அது ‘வால்பாறை’ன்னு ஆனது..”
“இங்கே பழங்குடிகள் இருக்கிறாங்களா..?”
“அவங்க கம்மிதான்.. மெஜாரிட்டி பீப்பிள்.. ‘வந்தேறிக’ தான்.. அப்படிச் சொன்னாத்தானே எல்லோருக்கும் பிடிக்கும்.”
அவன் இமைசிமிட்டிச் சிரித்த சிரிப்பில் அவளது உள்ளம் கொள்ளை போனது.. சிலுசிலுவென மலைக்காற்று.. மழைக் காற்றும் சேர்ந்து கொண்டதில் அவனோடு ஒன்றிக் கொள்ள வேண்டும் போல உள்ளம் கிளர்ந்தது.. ப்ரீதி பயந்து போனாள் இப்படிப்பட்ட பலவீனமான மனதுடையவளா அவள்..?
“பழனி, திருநெல்வேலி, கோவை, ஈரோடு, மைசூர், தர்மபுரின்னு பல ஊர் மக்கள் குடியேறியிருக்கிற ஊர் வால்பாறை..”
அவளது மனப் போராட்டத்தை அறியாமல்.. அவள் பக்கம் திரும்பாமல் கண்ணியமாக கதை சொல்லிக் கொண்டிருந்தவனின் மீது காதல் வந்ததோ இல்லையோ.. மரியாதை வந்தது.. அவளது தனிமையையும் அந்தச் சூழலையும் அவன் பயன்படுத்திக் கொள்ள நினைக்க வில்லையே..
‘இதுவே ஆதவனா இருந்திருக்கனும்..’
அருவெறுப்புக் கலந்த பயத்தில் அவளது முகம் வெளிறிப் போனது.. சந்தர்ப்பம் கிடைத்து விட்டால் ஆதவன் தொட்டுப் பேசத் தயங்கியதே இல்லை.. அதுவே ப்ரீதியின் மனதில் வெறுப்பை வளர்த்துவிட்டது.
Reviews – aaranyam azhakanathu / ஆரண்யம் அழகானது
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.