Chapter 02
நான் யமுனையின் கரையினில் பிறந்தவள்..
ஆரண்யத்தின் அதிபதியே..!
எனது காத்திருத்தல் உனக்கானதா..?
“40 கொண்டை ஊசி வளைவுகள்.. 50க்கும் மேல் சிறு வளைவுகள்.. மனிதன் கார் ஓட்டுவானா இந்தக் காட்டுப் பாதையில்..?” வெறுப்புடன் சொன்னான் ஆதவன்..
அவன் அலுத்துக் கொண்டதைப் போல அந்த மலைப்பாதை இல்லை.. ப்ரீதிக்கு அது ‘பூலோக சொர்க்கம்..’ போல கண் முன் விரிந்தது..
யாருமற்ற வனாந்தரம் அச்சுறுத்தும் என்று யார் சொன்னது..? யாருமற்ற புல்வெளிகளும் அருவிகளும் வனத்துக்குள் வா என்று ப்ரீதியை அழைப்பதைப் போல இருந்தது.. பரபரப்பான நகர வாழ்க்கைக்குப் பழக்கப்பட்ட ப்ரீதி சொக்கிப் போனாள்.. யாருமற்ற புல்வெளியாக..
மரங்கள் அடர்ந்த அற்புத ஆரண்யம் மலைச் சரிவில் ஆத்மார்த்தமாக அவளை வரவேற்றது.. மலையை வெட்டிப் போடப்பட்டிருந்த சாலைகளில் கார் வளைந்து வளைந்து மேலே ஏறியபோது ப்ரீதியின் கண்கள் மின்னின..
காடு அவளைக் கவர்ந்தது.. எங்கு பார்த்தாலும் காபித் தோட்டம்.. தேயிலைப் பாத்திகள்.. பச்சைப் பசேலென மனம் முழுவதும் புத்துணர்ச்சியை நிரப்பும் பூலோக சொர்க்கம்..
பனித்துளிகள் சில்லிட புலிகளும், யானைகளும் பளிங்கு பாறைகளும்.. இருந்த வனத்தில் கொட்டும் அருவிகளும்… துள்ளியோடும் நதிகளும்.. ஓடைகளும்.. நீல நிற ரிப்பன்கள் போல பச்சைக் கம்பளம் விரித்ததைப் போல கானகத்தின் ஊடே தெரிந்ததில்..
“ஆஹா..” என்று மகிழ்ந்து போனாள் ப்ரீதி..
“புதிதா வர்றவங்க ஆஹான்னுதான் சொல்லுவாங்க.. முதன் முதல் பார்க்கும் மயக்கம் அது.. இருந்து பார்த்தாத் தெரியும்.. இது எவ்வளவு இம்சைன்னு..” கடினமான குரலில் சொன்னான் ஆதவன்..
‘ஆஹான்னு ஒரு வார்த்தைதானேடா சொன்னேன்.. அதுக்கு ஏண்டா சண்டைக்கு வர்ற..’ ப்ரீதியின் உற்சாகம் வடிந்து விட்டது..
ஆதவனின் கோபம் எதன்மீது..? ஊர் மீதா..? இல்லை அவன் பக்கத்தில் அவள் உட்கார மறுத்து விட்டாள் என்பதற்காக அவள் மீதா..?
மலைப் பாதையிலிருந்து பார்க்கும் போது வானமும் பூமியும் தொட்டுக் கொண்டதைப் போல இருந்தது.. அற்புத வானம் மேலே தெரிந்தது.. அது முத்தமிட்ட பசும்புல்வெளி தொடுவானாய் விரிந்தது.. ப்ரீதியை ஆகர்ஷித்த அற்புத வனம் பக்கவாட்டில் பிரிந்தது..
“காட்டுக்குள் போய் பார்க்கலாமா..?” ஆவலை அடக்க முடியாமல் கேட்டு விட்டாள்..
“என்னது..???” அவள் கேட்கக் கூடாத ஒன்றைக் கேட்டு விட்டதைப் போல ஆதவன் முகம் சுளித்தான்.
“ஸாரி அத்தான்.. காபித் தோட்டமும், தேயிலைத் தோட்டங்களும் நிறைய இருக்கா.. பார்க்க ஆசையா இருக்கு..” தவறு செய்து விட்டவளைப் போல அவள் விளக்கம் சொன்னாள்..
அவள் தணிந்து பேசியதில் அவனது கர்வம் செருக்குக் கொண்டது.. போனால் போகிறது என்று மன்னிப்பைத் தந்தருளினான்..
மழை பெய்து கொண்டிருந்தது.. எப்போதும் மழை பொழியும் இடமென்று விசாகா சொல்லியிருந்ததினால் அது பற்றி ஆதவனிடம் அவள் கேட்கவில்லை… குதூகலத்தையும் அடக்கிக் கொண்டாள்.. இயற்கையை ரசிக்கத் தெரியாதவனிடம் அதன் அழகைப் பற்றிக் கேட்பதைப் போல அபத்தம் வேறு ஒன்றுமில்லை..
தேயிலைச் செடிகளின் பசுமை அவளை மயக்கியது.. பெய்யும் மழையெல்லாம் பச்சயம் செய்யும் மாயத்தை அங்கு அவள் கண்டாள்.. மலையும் மலை சார்ந்த வாழ்வும் இறைவன் கொடுத்த வரமென்று அவளுக்குத் தோன்றியது.. அப்பேற்பட்ட வரம் கிடைக்கப் பெற்ற பாக்கியசாலி ஆதவன்.. அந்த வாழ்வை வெறுக்கிறான்..
‘கழுதைக்குத் தெரியுமா.. கானகத்தின் அழகு..?’
அவள் மனதில் நினைத்த நினைவை மட்டும் ஆதவனும் அவளைப் பெற்ற தந்தையும் தெரிந்து கொண்டால் என்னவெல்லாம் ஆகும் என்று நினைவுப் பறவை சிறகை விரிக்க யத்தனித்தது.. வேண்டாம் என்று மறுத்து விரட்டி விட்டாள்..
ஆரண்யத்தின் அழகை அள்ளிப் பருகும் அப்போதைய பரவச நிலையை அவளால் கட்டுப் படுத்திக் கொள்ள முடியவில்லை.. அள்ளிப் பருகி விடும் துடிப்போடு சுற்றிலும் தெரிந்த இயற்கையின் அழகை ஆவலுடன் பார்த்தாள்.. பார்க்கப் பார்க்க பரவச நிலைக்குள் மூழ்கும் இன்பத் தினறல்.. வேகமாக ஊஞ்சலில் ஆடுவதைப் போன்றதொரு அற்புத நிலை..
எத்தனை விதமான மரங்கள்.. பூக்கள்.. விலங்குகள்.. ஓடைகள்.. அருவிகள்.. என்று சொர்க்கத்தின் நுழை வாயிலைப் போலவே இருந்தது.. குறுக்குப் பாதைகளும், குதிரைப் பாதைகளும் பக்கவாட்டில் பிரிந்து ஓடியதைப் பார்க்கத் திகில் படம் போலவே இருந்தது.. அவள் பக்கம் அடிக்கடி திரும்பி முறைத்த ஆதவனைப் பார்க்க நேரும் போதெல்லாம் திகில் அதிகமானது..
வாகன இரைச்சல்கள் இல்லாமல் மாசில்லாத குளிர்காற்று.. சுத்தமான தேங்காய் தண்ணீரின் சுவை கொண்ட நீர்.. என்று மலைவாழ் மக்களுக்கான இயற்கையின் கொடைகளைப் பற்றி ஆதவன் என்றேனும் நினைத்துப் பார்த்திருப்பானா..?
அவள் ஏன் அதை நினைத்துப் பார்க்க வேண்டும்.. பெரிய இவன் போல அவன் பேசுவதை வாங்கிக் கட்டிக் கொள்வதற்கா..?
இதுபோன்ற ஆரண்யத்தில் ஓர் அங்கமானால் தொடுவானம் என்பது தொட்டு விடும் தூரம்தான்.. அதைப் புரிந்து கொள்ளாத ஞான சூன்யத்திடம் மனதின் உணர்வுகளை பகிர்ந்து கொள்வது வெகு சிரமம்.. அதோ.. அந்த மேட்டுக்குப் பின்னால் ஏதோ புலியொன்று பதுங்கி நிற்பதைப் போன்ற பிரமை உண்டாகிறதே.. இதுதான் வனம் தரும் உணர்வா..? ஒவ்வொரு திருப்பத்திலும் உடல் முழுவதும் குளிர் பரவும் இதம்தான் வனம் தரும் உணர்வா..? சொப்பனக் காவியமாய் கண்ணெதிரே விரியும் ஆரண்யத்தின் அழகு அவளை அடிமை கொள்கிறதே.. இந்த மயக்கம்தான் வனம் தரும் உணர்வா..? வரமென வந்ததைப் போல வனத்தை துதிக்கிறாளே.. ஏன்..? இதுவும் வனம் தரும் உணர்வா..?
எதுவென்று தெரியாத இனம் புரியாத மயக்கம் அவளை ஆட்கொண்டது.. ஆரண்யத்தில் காத்திருப்பது யார்..? அவளது கந்தவர்னா..? இந்தக் கேள்வி அவள் மனதில் எழுந்தது விந்தையிலும் விந்தைதான்.. யாரைப் பார்த்து அவள் பேசிப் பழக வேண்டும் என்று அனுப்பி வைக்கப் பட்டாளோ அந்த ஆதவன் காருக்குள் இருக்கிறான்.. அவனன்றி எவரை அவள் தேடி வந்திருக்கிறாள்..?
ப்ரீதி வனத்தைப் பார்த்தாள்.. அந்தக் காட்டில் பறக்கும் பட்டாம்பூச்சியாக மாற ஏனோ அவள் மனம் விழைந்தது.. சரிவில் இறங்கினால் காடு.. எங்கே.. வில்லாதி வில்லனாக அவளது அத்தை மகன் காருக்குள் உட்கார்ந்திருக்கிறானே.. என்னடா.. பூனாவில் இருந்து மாமன்மகள் விருந்தாளியாய் வந்திருக்கிறாள்.. அவளுக்குக் காட்டைச் சுற்றிக் காட்டுவோம் என்று நினைக்கிறானா..? அதை விட்டுவிட்டு இங்கே மனிதன் இருப்பானா என்று புலம்பித் தள்ளுகிறான்..
‘இவன் இருக்க மாட்டான்னு வேணும்னா சொல்லலாம்..’
ப்ரீதியின் மனது பொங்கிய பொங்கல் வேலை செய்து விட்டதோ என்னவோ.. சம தரையில் ஓட ஆரம்பித்த கார் சட்டென நின்று விட்டது..
“என்ன ஆச்சு..?”
“தெரியலை.. இப்பத்தான் வாங்கிய புதுக்கார்.. ஜெர்மன் கம்பெனி..”
தேவையில்லாத விளக்கம் சொன்னான் ஆதவன்.. இறங்கிப் போய் காரின் பானட்டைத் திறந்து பார்த்தான்.. இதுபோல அந்தக் கால சினிமாக்களில்தான் வரும் என்று அவனுக்குத் தெரியாமல் தலையில் அடித்துக் கொண்டாள் ப்ரீதி.. ஜெர்மன் கம்பெனிக் காரில் லேசர்தான் வேலை செய்யும்.. பானட்டைத் திறந்து பார்த்து என்ன செய்வது..?
கிடைத்த வாய்ப்பை இறுகப் பற்றிக் கொண்டு கார் கதவைத் திறந்து இறங்கினாள் ப்ரீதி.. ஆதவன் உதட்டைப் பிதுக்கிய வண்ணம் காரை ஆராய்ந்து கொண்டிருக்க இவள் காரை விட்டு விலகி நின்று இயற்கையின் அழகை தன் செல்போனின் கேமராவில் படம் பிடிக்க ஆரம்பித்தாள்.. ஆராய்ச்சி செய்து ஓய்ந்து போன ஆதவன் செல்போனை எடுத்து மெக்கானிக்கை அழைத்தான்.. இவள்..
“நேரமாகுமா அத்தான்..?” என்று பவ்யமாகக் கேட்டாள்..
“மெக்கானிக் வந்து பார்த்தாத்தான் தெரியும்..” எரிச்சலுடன் சொன்ன ஆதவன்..
“காருக்குள்ளே அடங்கி உட்காரு..” என்று அதட்டினான்..
“ஓடாத காரில உட்கார்ந்து என்ன பண்ண..?” ப்ரீதியின் கிண்டலில் அவன் முகம் விழுந்து விட்டது.
மெக்கானிக் பக்கத்தில்தான் இருந்திருப்பான் போல.. ஐந்தே நிமிடங்களில் வந்து விட்டான்.. அவனும் ஆதவனும் காரில் கவனமாக.. ப்ரீதி நழுவிச் சரிவில் இறங்கி காட்டுக்குள் நடந்து விட்டாள்..
எத்தனை விதமான பறவைகள்.. அனைத்தும் பச்சைப் பசேலென்ற மரங்களில் கூடுகட்டி சிறகடித்துக் கொண்டிருந்தன.. எங்கோ கேட்கும் குயிலின் பாடல்.. நீரோடையில் உடல் நனைத்து ஆட்டி மயக்கிய வாலாட்டிக் குருவி.. கழுத்தை வளைத்துப் பார்த்த மைனா என்று
அழகான பறவைகளின் கூட்டம்.. சலசலத்து ஓடும் நீர்.. கரையோர கூழாங்கற்கள் என்று கண்களில் பட்ட காட்சிகளை எல்லாம் படம் பிடித்துக் கொண்டே போனாள்.. அவளது காலடியோசையில் நீரருந்திக் கொண்டிருந்த பறவைகளின் கூட்டம் ‘குபிர்’ என வானில் பறந்ததில் ஓர்நொடி அசையாமல் நின்றாள்..
“இது பறவைகளோட இடம்.. பயமில்லாம தண்ணீர் குடித்துக்கிட்டு இருந்தவைகளை விரட்டி விட்டுட்டு அதுக என்னவோ உனக்கு அநியாயம் செய்து விட்டதைப் போல விழித்துக்கிட்டு நிற்கிற..? யார் நீ..?”
அதட்டலும், அதிகாரமும் நிறைந்திருந்த ஆண்குரலில் பயந்து போனவளாக திரும்பிப் பார்த்தாள்.. நீண்டு வளர்ந்திருந்த மரத்தில் ஓர் காலை மடக்கி ஊன்றிக் கைகளை முன்புறமாக மடித்துக் கட்டி சாய்ந்து நின்றிருந்தான் ‘அவன்..’
மாநிறம்.. ஆறடிக்கும் மேல் உயரம்.. அடர்ந்த மீசை.. தீர்க்கமான நாசி.. கட்டுக்குள் அடங்காமல் காற்றில் கலையும் தலைமுடி.. செவ்வரி ஓடிய கண்கள் என்று அவன் பார்த்தவுடன் மனிதல் பதிந்து விடும் கம்பீரத் தோற்றத்துடன் இருந்தான்..
‘யார் இவன்..?’
சொன்னால் மட்டும் தெரிந்து விடுமா என்று தனக்குத்தானே மானசீகமாக குட்டிக் கொண்டாள் ப்ரீதி.. அவன் அவளை ‘யார் நீ..’ என்று கேட்டால் அதில் ஓர் அர்த்தம் இருக்கிறது.. அவள் அவனை ‘யார் நீ..’ என்று கேட்டால் அடிக்க வந்துவிட மாட்டானா..?
இருந்தாலும் அவனது அதிகார தோரணைக்கு அடி பணிய மறுத்தது அவள் மனம்.. அப்படி அவள் என்ன தவறைச் செய்துவிட்டாள்.. பறவைகளை செல்போனில் படம் பிடித்தாள்.. அவளது காலடி சப்தத்தில் அவை நீரருந்தாமல் ஓடிவிடும் என்று கண்டு வைத்திருந்தாளா..? என்னவோ ஸ்கெட்ச் போட்டு அவள் பறவைகளை விரட்டி விட்டு விட்டதைப் போல அதட்டுகிறானே.. அவனென்ன அந்த ஆரண்யத்தின் அரசனா..?
“பறவைகளோட இடத்துக்கு நான் வந்தது தப்பு.. நீங்க வந்தது மட்டும் சரியா..? என் காலடி சத்தத்திலதான் அதுக பறந்துச்சுன்னு உங்களுக்கு எப்படி தெரியும்..? உங்க காலடி சத்தத்தில கூட பறந்திருக்கலாமில்ல..? ஆக்சுவலி.. நான் மெதுவா நடப்பேன்.. காலடி சப்தமே கேக்காதுன்னு என் அம்மா சொல்வாங்க..”
ரோசத்துடன் அவள் கையைக் கையை ஆட்டிப் பேசியதில் அவனது விழிகளில் சுவராஸ்யம் வந்ததோ..? அவள் ஊன்றிப் பார்த்த போது அவன் முகம் உணர்வுகள் துடைக்கப்பட்டு நிச்சலனமாக ஆகியிருந்தது..
‘இப்பல்லாம் ஆம்பளைகதான் அழுத்தக்காரங்களா இருக்காங்க.. பாட்டு மட்டும் பாடி விடறாங்க.. ஆறு அதும் அழமில்ல.. அது சேரும் கடலும் ஆழமில்ல.. ஆழம் எது ஐயா.. அது பொம்பளை மனசுதான்ய்யான்னு.. அத்தனையும் ஆம்பளைகதான்..’
ப்ரீதியின் முகத்தில் நவரசமும் வந்து போனதை அவன் ரசித்துப் பார்த்ததைப் போல இருந்தது.. உண்மையா என்று ஊன்றிப் பார்த்தால் அவன் நிச்சலனமாக முகத்தை வைத்துக் கொண்டு அவளை சோதிப்பான்.. தேவையா..?
“காலடி சத்தமே கேட்காதுன்னா.. எப்படி..? பூனை போல நடப்பியா..?”
அவனது ரசனை மிக்க பார்வை அவள் பூனை போல நடந்தால் எப்படியிருக்கும் என்பதை கற்பனை செய்து பார்ப்பதைப் போல இருந்ததில் அவள் பல்லைக் கடித்தாள்.
“என் நடை பூனை நடைதான்.. உங்க நடை யானை நடை..! இல்லேன்னு சொல்ல முடியுமா..?”
“முடியாதுன்னு சொன்னா என்ன சொல்வதாக உத்தேசம்..?”
“பறவைகளை பற்றி விட்டது நீங்கள்தான்.. நானில்லைன்னு சொல்கிறதாக உத்தேசம்..”
பட்டென்ற அவளது பதிலில் அவன்..
“ஊஹீம்..?” என்று புருவங்களை உயர்த்தி இறக்கினான்..
ஓர்நொடி மயங்கிப் போனவள் திடுக்கிட்டாள்.. என்ன இது.. ஆளில்லாத ஆரண்யத்தில்.. அறிமுகமில்லாத ஒருவனுடன் பேசிக் கொண்டு நிற்கிறாளே.. அதிலும் அவனது மேனரிசத்தில் மயங்கியும் தொலைக்கிறாள்..
“நான் போகனும்..” அவள் திரும்பி வேகமாக நடந்தாள்..
“எங்கே போகனும்..?” அவனது கேள்வி அவளைத் தடுத்து நிறுத்தியது..
“காருக்கு.. எங்க கார் திடிர்ன்னு நின்னுருச்சு.. அத்தான் மெக்கானிக்குக்கு போன் பண்ணி வரச் சொல்லி சரி பண்ணிக்கிட்டு இருக்கிறார்.. அங்கே போகனும்..”
அவள் நின்று பதில் சொன்னாள்.. அவள் சொல்லச் சொல்ல அவன் முகம் கடுப்பானதில் துணுக்குற்றாள்..
‘யார் இவன்..?’ இந்தக் கேள்வி அவளைக் குடைந்தது..
Reviews – aaranyam azhakanathu / ஆரண்யம் அழகானது
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.