Chapter 03

0Shares

காதல் இனிது என் மன்னவா..!

காதலிக்க வா..

உன் மன ரணம் ஆற..

என் மன தீரம் சேர..

“அத்தானா..? அப்படின்னா..?”

அவனது கேள்வி அவளுக்கு ஆச்சரியத்தை அளித்தது.. அவன் தெரிந்து கேட்கிறானா.. இல்லை தெரியாமல் கேட்கிறானா என்ற சம்சயத்துடன் அவன் முகத்தை உற்றுப் பார்த்தாள்.. கல்லுளி மங்கன்.. பாறை போல முகத்தை வைத்துக் கொண்டிருந்தான்.. இப்படி எவ்வித உணர்வையும் பிரதிபலிக்காத முகத்துடன் இருந்தால் அவன் என்ன நினைவில் இருக்கிறான் என்பதை எப்படித்தான் அவள் கண்டு பிடிப்பது..?

அவளது பதிலுக்காக அவன் காத்திருப்பதைப் போல அவனது விழிகள் அவளை ஊடுறுவியதில் அவளுக்குள் வீம்பு வந்தது..

‘இவனே யாருன்னு தெரியாது.. இவன் கேட்கிற கேள்விக்கு நான் எதுக்கு ஆன்சர் பண்ணிக்கிட்டு நிற்கனும்..’

போடா என்று நாக்கைத் துருத்திக் காட்ட ஆசைதான்.. ஆனால் ஆளே இல்லாத அத்துவானக் காட்டில் அவனும் இவளும் மட்டும் நின்று பேசிக் கொண்டிருக்கையில் இவள் அழகு காட்டி வைத்தால் அதன் பின் விளைவுகள் என்னவாக இருக்கக் கூடுமோ..

‘நல்ல விதமா இருக்காது.. அது மட்டும் கன்பர்ம்..’ அவளது அறிவு எச்சரித்தது..

“அதுவா சார்.. அத்தை மகனை எங்க ஃபேமிலியில் அத்தான்னு அழைப்பாங்க சார்.. போதுமா சார்..”

கைகட்டி வாய் பொத்தாத குறையாக அவள் பவ்யம் காட்டியதில் சின்னதாக ஓர் சிரிப்பின் இழை அவனது இதழ்களில் வந்து போனதைப் போல இருந்தது..

இருந்ததுதான்.. நிச்சயமாக சொல்வதற்குத்தான் அவன் இடம் கொடுக்க மாட்டேன் என்கிறானே.. அளந்து வைத்த பேச்சு.. அளவிடும் பார்வை.. என்று எல்லாவற்றுக்கும் அளவுகோல் வைத்திருக்கிறானே..

“நான்..? உனக்கு..? சார்..?”

‘வேறு யார்..?’

விசித்திரமாக அவனைப் பார்த்தாள்.. முன்பின் தெரியாதவனை எப்படி அழைப்பது..?

‘அத்தான் அப்படின்னா கூப்பிட முடியும்..?’

மனதில் எழுந்த கேள்வியில் திடுக்கிட்டாள் ப்ரீதி.. இவன் யாரோ எவரோ.. இவனைப் போய் ‘அத்தான்’ என்ற வார்த்தையோடு எப்படி இணை சுட்டினாள்..?

அவளது தடுமாற்றத்தை அவன் கண்டு கொள்வான் என்பதில் ப்ரீதி சமாளிப்பாக பதில் சொல்ல முயன்றாள்..

“உங்களைப் பார்த்தா இந்தக் காட்டுக்கே ராஜா போல தோணுச்சா.. அதான்.. முன்ஜாக்கிரதையா சார்ன்னு கூப்பிட்டுடேன்..”

“இல்லேன்னா எப்படிக் கூப்பிட்டிருப்ப..? வாடா, போடான்னா..?”

“வாட்..?!”

ப்ரீதி வாயடைத்துப் போனவளாக அவனைப் பார்த்தாள்.. அவன் விழிகளில் சிரிப்பு வந்து போனதைப் போல இருந்தது.. எல்லாமே ‘போல’ தான் எந்த உணர்வையும் அவன் தங்க விடுவதில்லையே..

“உங்களைப் போய் வாடா, போடான்னு கூப்பிடுவதா..? அம்மாடியோவ்.. யாரு நீங்க..”

ப்ரீதி இயல்பாக சொன்னாள்.. அவனது தோற்றமும், தோரணையும் வெகு உயரத்தில் இருப்பவன் என்பதைச் சொல்லாமல் சொல்லின என்றாலும்.. அறியாத ஊரில், புதிதாக அறிமுகம் ஆகும் நபரை ‘வாடா, போடா’ என்று அழைப்பதா..? ப்ரீதியினால் அது முடியாது 

என்பதோடு அவள்தான் அவனிடம் தனித்து சிக்கிக் கொண்டிருக்கிறாளே.. மரியாதை இல்லாமல் பேசிவிட்டு மாத்து வாங்க அவளென்ன முட்டாளா..?

“நான் யார்ன்னு உனக்குத் தெரியுமா..?” நிதானமாக அவன் கேட்டான்..

‘நீ பெரிய தேசிங்கு ராஜா..! போவியா..’ ப்ரீதிக்கு வண்டை வண்டையாக வாய் வரை வந்தது.. அதற்கு மேல் வர திராணியில்லாததால் ஓடிப் போய் விட்டது..

“தெரியாது சார்.. சொன்னாக் கேட்டுக்கறேன் சார்..”

மறுபடியும் பவ்யம்.. சிரிக்காமல் சிரிக்கும் வித்தையைக் கற்று வைத்திருந்த அந்த ஜெகஜால கில்லாடி அவளை ஊன்றிப் பார்த்தான்.. ப்ரீதி மயங்கிச் சரிந்து விடாமலிருக்கப் பக்கத்திலிருந்த மரத்தில் சாய்வதைப் போலப் பாவனை செய்தபடி மரத்தைக் கெட்டியாக இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்..

‘எங்கப்பா அத்தானுடன் பேசிப் பழகி ஓர் முடிவைச் சொல்லுன்னா அனுப்பி வைத்தா.. வழியில் ஓர் ஆள் மயக்கி என்னை மயக்கப் பார்க்கிறானே.. குதிரை மேலத் தூக்கிப் போட்டுப் பறந்திருவானோ..’

குதிரை மறைந்திருக்கிறதா என்று பார்வையால் துழாவினாள் ப்ரீதி… பறவைகள்தான் இருந்தன.. அப்போதைக்கு அந்தப் பக்கம் விலங்குகள் வர வேண்டாமென்று முடிவு கட்டி வைத்திருந்தன போல.. வேறு விலங்குகளைக் காணோம்.. 

“என்ன.. ஓடிப் போன பறவைகள் தேடி வந்திருக்கே.. மறுபடி அதை ஓட்ட என்ன வழின்னு தீவிரமா பிளான் பண்றதைப் போல இருக்கு..?”

லேசாக உதட்டை வளைத்தபடி வினவினான் அவன்..

‘ஐயா என்னைக் கிண்டல் பண்றாராமாம்…’ ப்ரீதி பதிலுக்கு லேசாக இல்லாமல் தெளிவாக உதட்டை வளைத்தாள்.. அதில் அவனது புருவங்கள் உயர்ந்து இறங்கி அவளைக் கிறங்கடித்தன..

‘நிஜமாவே இவன் அழகாய் இருந்து தொலைக்கிறானே..’

எங்கே உன் குதிரை என்று ஏறிப் போய் விடலாமா என்றுகூட அவளுக்குத் தோன்றித் தொலைத்து விட்டது.. கம்பீரமும் முகலட்சணமுமாக இப்படியும் ஓர் ஆணழகன் இருப்பானா..?

‘வசீகரன்..!’ அவள் மனம் ஜொள்ளியது..

“இதுவரைக்கும் அப்படியாப்பட்ட பிளான் எதுவும் இல்லை சார்… இப்போ சார் பிளான் போட்டுக் கொடுத்துட்டிங்க.. கையை ஆட்டிக் குதியாட்டம் போட்டு இதுகளை கலைத்து விட்டுத்தான் வேறு வேலை பார்க்கிறதாய் இருக்கேன்..”

“ஓ.. அப்படியா.. நான் ஒருத்தன் இங்கே இருக்கிறதை மறந்துட்டு ஸ்கெட்ச் போடுவியா..? எங்க காட்டுக்கு வந்து என் முன்னாடியே பறவைகள் கூட்டத்தைக் கலைக்கப் போகிறதாய் சவால் விடறியே.. உனக்கு எவ்வளவு தைரியம்..!”

“அப்படியெல்லாம் அவசரப்பட்டு என்னை தைரியசாலின்னு முடிவு கட்டி விடாதீங்க சார்.. ஒரு நிழல் அசைஞ்சாக்கூட நான் அம்பேல்..”

“நம்ப முடியலையே..”

அவனது பார்வை அவள் சொல்வதை நம்பலாமா, வேண்டாமா என்பதைப் போல அவளை பாதாதிகேசம் பார்த்து வைத்து சோதித்தது..

‘டேய்.. நீ சும்மா பார்த்தாலே நான் க்ளீன் போல்டாகிருவேன்.. இதில வேற ஆராய்ச்சிப் பார்வை பார்த்து வைக்கறியேடா.. அடுக்குமா..? உனக்கு ஆணழகன்ங்கிற ஆணவம்டா..’

ப்ரீதிக்கு என்னென்னவோ ஆகித் தொலைத்தது.. பூனாவை விட்டுக் கிளம்பும் போது காடும், காடு சார்ந்த இடமும்ன்னு சுற்றிப் பார்த்து விட்டு வரலாம் என்ற உல்லாச மனதோடுதான் அவள் கிளம்பி வந்தாள்.. இங்கே என்னடாவென்றால் காட்டுக்குள் கால் பதித்தவுடன் கந்தர்வன் ஒருவன் வந்து நிற்கிறானே..

“நம்புங்க சார்.. நம்பிக்கைதான் வாழ்க்கைன்னு நம்ம தேவர் மகன் சொல்லியிருக்கார்..”

“ஹீ இஸ் தட்..?”

“வேறு யார்..? எல்லாம் நம்ம பிரபு சார்தான்..”

“பிரபு சாரா..?”

“போச்சுடா.. இவரையும் தெரியலையா..? இவரைத் தெரியாம எப்படி நீங்க வால்பாறை பக்கத்தில வாழ்ந்துக்கிட்டு இருக்கீங்க..?”

ப்ரீதி கை குவித்து கேள்வி கேட்டதை அவன் ரசனையோடு பார்த்தான்.. மின்னல் போல அந்த ரசனை வந்து போய் விட்டது என்பது வேறு விசயம்.. துடிப்பான யுவதி ஒருத்தியை சந்தித்திருக்கும் சந்தோசம் அவனிடம் மெலிதாக தெரிந்தது..

“வால்பாறைக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்..?”

“வால்பாறைக்கும் சினிமாவுக்கும் சம்பந்தம் இருக்கில்ல.. இங்கே நிறைய சினிமா ஷீட்டிங் நடக்குமாமே.. நம்ம மால்குடி சுபா வால்பாறை வட்டப்பாறைன்னு செமத்தியா ஒரு பாட்டு பாடியிருக்காங்களே.. வாவ்.. எப்பேற்பட்ட பாட்டு தெரியுமா அது.. சச் எ லவ்லி சாங்..!”

“லவ்வ்வ்….லி சாங்..”

அவன் ‘லவ்’வை மட்டும் அழுத்தி உச்சரித்தான்.. அவளை ஊன்றிப் பார்க்க வேறு செய்தான்.. ப்ரீதியின் முகம் முதன் முறையாக சிவந்தது.. அவன் கண்களிலும் முதல் முறையாக வெளிப்படையான மின்னல் வந்தது..

ப்ரீதி தடுமாறினாள்.. அதை மறைக்கக் கோர்வையாகப் பேசினாள்.

“யெஸ் சார்.. அந்த சாங் படு சூப்பரா இருக்கும்..”

“ம்ம்ம்.. இத்தனை இன்பர்மேசனுக்கும் நீ கேட்ட கேள்விக்கும் என்ன கனெக்சன்..?”

“சார்.. நடிகர் திலகம் சார் நடித்த படம் தேவர் மகன்.. சினிமாவில அந்த தேவரோட மகன் கமலஹாசன்.. நிஜ லைஃபில அவரோட மகன் பிரபு சார்.. அதனால அப்படிச் சொன்னேன்..”

“நல்லாத்தான் பேசற..”

அவனது பார்வை அவள் மீது ஊர்ந்து.. ‘நல்லாவும் இருக்கிற..’ என்று சொல்லாமல் சொன்னது.. ப்ரீதிக்கோ இன்று வந்த இந்த மயக்கம் என்னை எங்கெங்கோ கொண்டு செல்லுதம்மா என்று பாடி ஆட வேண்டும் போல இருந்தது..

“ஆமாம்.. இவ்வளவு பெரிய தைரியசாலி.. இந்தக் காட்டைப் பார்த்து பயப்படாம செல்போனில் படம் பிடிச்சுக்கிட்டு இருக்கிற.. இது எப்படி..?”

“கூட நீங்க இருக்கீங்களே சார்.. உங்க பக்கத்தில் இருக்கும் போது பயம் என்னிடம் வர பயப்படுமே..”

“ஓ…”

கண்கள் இடுங்க.. உதடுகளைக் குவித்து ஒரு மார்க்கமாக அவன் ‘ஓ’ போட்ட அழகிற்கு.. அந்த அழகான ஆரண்யத்தை அவனுக்கே அவனுக்கென்று எழுதிக் கொடுத்து விடலாம் போல இருந்தது.. அதை அவனிடம் சொன்னால் என் ஆரண்யத்தை எனக்குப் பட்டாப் போட்டுக் கொடுப்பதற்கு நீ யார் என்று கேட்டாலும் கேட்பான்.. அவளைப் பார்த்த நொடியிலேயே ‘யார் நீ’ என்று கேட்டவன் தானே அவன்.. அவனது கேள்விக்கு இந்த மணித்துளி வரை அவள் யாதொரு பதிலும் தரவில்லை.. அதை அவன் பொருட்படுத்தியதாகவும் தெரியவில்லை..

அவளும் அவனைப் பார்த்து ‘யாரு நீங்க..’ என்று வியந்தாள்.. நான் யாரென்று உனக்குத் தெரியுமா என்று கேட்டவனும் அவன் யாரென்று சொல்லவில்லை.. தாங்கள் சொன்னால் கேட்டுக் கொள்கிறேன் என்று பவ்யம் காட்டியவளும் அதுபற்றி அறிய ஆர்வம் காட்டவில்லை..

அது எப்படி என்று ப்ரீதிக்குப் புரியவில்லை.. அத்துவானக் காட்டில் அறிமுகமில்லாத இளைஞனுடன் நெடு நாள்கள் பழகியதைப் போல எப்படி வெகு இயல்பாகப் பேசத் தோன்றுகிறது..? அவனுடன் பேசுவது இனிமையாக இருப்பதெப்படி..?

‘என்ன, என்ன’ என்பதற்குப் பதிலாக ‘எப்படி, எப்படி..’ என்ற வினாக்கள் அடுக்டுக்காக வந்தன.. அதைப் பற்றித் துளியும் கவலைப்படாமல் இதழ் வளைத்துக் கள்ளச் சிரிப்பொன்றை சிந்தியபடி அவன் முகத்தைப் பார்த்தும் பார்க்காமல் வாயடித்துக் கொண்டிருந்தாள் ப்ரீதி.. அவன் யாரோவாகவே இருந்து விட்டுப் போகட்டுமே.. அதுவரை அவள் பார்த்திராத ஹீரோ ஒருவனைப் பார்த்திருக்கிறாள்.. மறுபடியம் பார்ப்பாளோ என்னவோ தெரியவில்லை.. அவனுடன் பேச அவளுக்குப் பிடித்திருக்கிறது என்றால் பேசி விட்டுப் போக வேண்டியதுதானே..

‘இவன் யாரோ.. இவன் யாரோ..

வந்தது எதற்காக..?’

மனது பாடியது.. இதை அவன் பாடவேண்டும் என்று அறிவு இடித்துரைத்தது.. அவள்தான் அவன் இருக்கும் இடத்திற்கு வந்திருக்கிறாள்.. அவன் ஒன்றும் பூனாவிற்கு வந்து நிற்கவில்லை..

அறிவும் மனதும் என்றுமே எதிரெதிர் துருவங்களாக இருப்பதற்கான தாத்பர்யம் யாதென்று பிடிபடவில்லை.. மனது எப்போதுமே அறிவு சொல்வதைக் கேட்காமல் தன் போக்கில் பயணிப்பதையே விரும்புகிறது.. இரும்பினால் செய்யப் பட்டதல்ல நம் இதயம்.. இயந்திரம் போல வாழ முடியாதே.. அதிலும் பெண் மனம் மென் மனம் அல்லவா..

“கெட்டிக்காரர் சார் நீங்க.. கடைசி வரைக்கும் நீங்க யார்ன்னு சொல்லவே இல்லையே..”

ப்ரீதி புறப்படத் தயாரானாள்.. தாமதித்தால் ஆதவன் அவளைத் தேடி வந்து விடக் கூடும்.. அறிமுகமில்லாத வாலிபன் ஒருவனுடன் அவள் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு விட்டால் காண்டாகி விடச் சாத்தியக் கூறுகள் உள்ளன.. அத்தை மகனான அவனருகில் அமர்வதை 

அவள் தவிர்த்து விட்டாள்.. அந்தக் காண்டில் இருப்பவனுக்கு இந்தக் காண்டும் சேர்ந்து விட்டால் கட்டுப் படுத்துவது என்பது மிகவும் கடினம்.. கங்காதரனுக்கு செல்போனில் செய்தி போகும்.. அவர் மகளை கடிந்து பேசி விடுவார்..

‘அந்தத் துன்பம் எதற்கு..?’

அவளது துன்பம் புரியாமல் அவன் மரத்தை விட்டு விலகி நின்று தாடையைத் தடவியபடியே அவளைப் பார்த்தான்..

‘இந்த போஸ் கூட நல்லாத்தான் இருக்கு.. இவன் மரத்தில் ஒற்றைக் காலை ஊன்றி விவேகானந்தர் கைகளைக் கட்டியிருப்பதைப் போலக் கைகளை முன்பக்கமாக மடித்துக் கட்டியிருந்தாலும் நல்லாத்தான் இருக்கான்.. இப்படித் தாடையைத் தடவிக்கிட்டே உத்துப் பார்த்தாலும் நல்லாத்தான் இருக்கான்.. டேய்.. யாருடா நீ.. சின்னப் பொண்ணு மனசை சலனப் படுத்தறயேடா..’

“கடைசி வரைக்கும்ன்னா..?” அவனது கேள்வியில் அரண்டு விட்டாள்..

“அந்தக் கடைசியை சொல்லலை சார்.. நான் ரொம்பச் சின்னப் பொண்ணு..” அவசரமாக அவள் சொல்ல அவன்..

“ஆமாமாம்..” என்று அவளை ஊன்றிப் பார்த்து முகம் சிவக்க வைத்தான்..

“இன்னும் ரொம்ப வருசம் நான் வாழனும் சார்..”

“தோராயமா எத்தனை வருசம்..?”

“ஒரு நூற்றைம்பது வருசம் சார்..”

“போதுமா..?”

“இன்னும் கிடைத்தாலும் ஓகேதான் சார்..”

“ஹா.. ஹா..”

முதன் முறையாக அவன் வாய் விட்டுச் சிரித்தான்.. அவன் சிரிக்கும் போது அவனது கவர்ச்சி கூடியதில் ப்ரீதி தான் என்ன சொல்கிறோம் என்பதை மறந்து போனவளாக..

“சூப்பரா இருக்கீங்க சார்.. இப்படியே சிரித்துக்கிட்டே இருந்தால்தான் என்ன..? உம்மணாம் மூஞ்சியா இருக்கனுமா..?” என்று சொல்லி விட்டாள்..

அவனது சிரிப்பு நின்று விட்டாலும் முகத்தில் மென்மை படறக் கனிவுடன் அவளைப் பார்த்தான்..

அழகான மலர் ஒன்றைப் பார்க்கும் மிருதுவான பார்வை அது..

0Shares

Reviews – aaranyam azhakanathu / ஆரண்யம் அழகானது

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • X (Twitter)
  • Email
  • Copy Link
Copy link