Chapter 05
எனைத் தொலைப்பது நீயெனில்..
ஆரண்யத்தில் தொலைதலும் எனக்குச் சுகமே..
அந்த நொடியில் அந்த நினைவு ஏன் வந்தது.. புயல் போல வந்து சென்றவன் எவனோ.. பூனாவிற்குத் திரும்புவதற்கு முன்னால் அவளால் அவனைச் சந்திக்க முடியுமோ என்னவோ.. ஆரண்யத்தின் அரசனைப் போல வந்து சென்றவன் சொல்லி விட்டுப் போன வார்த்தைகளின் பொருள் தேடுவது நேர விரயம்..
“அங்கே என்ன பண்ணற..?”
சாலையிலிருந்து ஆதவன் கையாட்டி அழைத்தான்.. நல்லவேளை.. அவன் போய் விட்டான் என்று ஆறுதலானாள் ப்ரீதி.. இல்லாவிட்டால் எவனோ ஒருவனிடம் உனக்கென்ன பேச்சு என்று பாட்டு வாங்க வேண்டியிருக்கும்.. அவனைக் காட்டினில் சந்தித்தாள் என்று தெரிந்து விட்டால் அவ்வளவுதான்.. பூனாவுக்குப் போன் செய்தி பறக்கும்..
ஆதவனின் முகம் சிடுசிடுவென இருந்தது.. அவன் அழகானவன்.. விசாகாவின் சிகப்பு நிறத்தைக் கொண்டிருப்பவன்.. அவன் மீது ஏன் அவளுக்கு ஆசை வரவில்லை..? அவனது கோபத்திற்கான காரணமும் இதுதானே..
ப்ரீதி சரிவிலிருந்து சாலைக்குச் செல்ல மேட்டுப் பகுதியில் ஏறினாள்.. கை கொடுத்து அவளைச் சாலையில் ஏற்றிவிட கை நீட்டினான் ஆதவன்.. நாசுக்காக அவள் அதைத் தவிர்த்ததில் அவனது முகம் சிறுத்து விட்டது.. அருகில் மெக்கானிக் இருக்கிறான் என்ற நினைவில் பல்லைக் கடித்தான்.. அவனது கோபத்தைக் கவனிக்காததைப் போல ப்ரீதி தானாக சாலையில் ஏறி விட்டாள்..
“உன்னை இங்கேதானே இருக்கச் சொன்னேன்.. காட்டுப் பக்கம் ஏன் போன..?” குற்றவாளியை விசாரிப்பதைப் போல அதட்டினான் ஆதவன்..
ப்ரீதியின் முகம் சிவந்து விட்டது.. வேற்று மனிதனை அருகில் வைத்துக் கொண்டு ஆதவன் அவளை அதட்டிய தொனி அவளை பாதித்தது..
“ஜஸ்ட் எ வால்க்..” முணுமுணுத்தாள்..
“தனியாப் போகலாமா..?” ஆதவன் விடுவதாக இல்லை..
அவன் நீட்டிய கையை இறுக்கிப் பிடிக்காத குற்றத்திற்காக அவளை தாளித்துக் கொட்டுவதிலேயே குறியாக இருந்தான்..
“ஐயய்யே.. என்ன சார் நீங்க..? வால்பாறைப் பக்கம் வர்றவங்க அட்டகட்டி காட்டோட அழகை ரசிக்காம இருப்பாங்களா வெளியூரில இருந்து வந்திருக்கிற விருந்தாளி.. நம்ம ஊர் காட்டைச் சுத்திப் பாக்க ஆசைப்பட்டா அதை ஒரு குத்தம் போலப் பேசிக்கிட்டு இருக்கீங்களே.. அம்மணிக்கு நம்ம பக்க காடுகளைச் சுத்திக் காட்டுவிகளா.. அத விட்டுட்டு கோபப்படறிக..”
மெக்கானிக் பரிந்து கொண்டு வந்தான்..
‘கொடுமை..’ ப்ரீதிக்குத் தலையில் அடித்துக் கொள்ளலாம் போல இருந்தது..
‘அப்பா சொன்னார்ன்னு இங்கே வந்ததுக்கு வழியிலேயே நல்ல பரிசு கிடைக்குது.. அவரோட தங்கை மகன் காய்ச்சுகிற காய்ச்சலுக்கு மெக்கானிக்கெல்லாம் சப்போர்ட்டுக்கு வர்றான்..’
“காட்டைச் சுத்திக் காட்டறதா..?” ஆதவன் முகம் சுளித்தான்..
‘அதானே.. இவனே ரசனை கெட்டவன்.. தேயிலை தோட்டத்தோட பசுமையில் வாழறதை விட்டு விட்டு ஐ.டிக் கம்பெனியைக் கட்டிக்கிட்டு அழப் போகிறவன்.. இவனுக்கு வனத்தோட அருமையைப் பத்தி என்ன தெரியும்..?’
ஆரண்யத்தின் அழகைத் தெரிந்தவனை நினைத்துப் பார்த்தாள்.. சுகமாக இருந்தது.. அவனைப் பார்க்க வேண்டும் போல ஏக்கம் மனதில் எழுந்தது..
மாமன் மகள் மனதில் எழுந்துள்ள மயக்கம் பற்றி அறியாமல் காட்டைப் பற்றி வழக்கடித்துக் கொண்டிருந்தான் ஆதவன்..
“இந்தக் காட்டில இருந்து தப்பிச்சு ஓடறதுக்கு நாள் குறிச்சுக்கிட்டு இருக்கேன்.. நீ என்னடான்னா இவளுக்கு காட்டைச் சுற்றிக் காட்டச் சொல்கிற.. மனுசன் போவானா அந்தப் பக்கம்..? செடியும், கொடியும், அருவியும், ஆறுமா நசநசன்னு இருக்கும்.. சிட்டி லைஃபில இருந்தவங்களுக்கு காடுன்னா போர்.. உன் ஃபீஸ் என்னன்னு சொல்லி வாங்கிக்கிட்டு போய்க்கிட்டே இரு.. தேவையில்லாம பேசாதே..”
‘எனக்கு காடுன்னா ரொம்ப இஷ்டம்..’
ப்ரீதி காரில் ஏறி சாய்ந்து ஜன்னல் கண்ணாடிக்கு அப்பால் தெரிந்த வனப் பகுதியில் அவளது மனம் கவர்ந்த வனராஜன் இருக்கிறானா என்று பார்த்தாள்.. கார் நகர்ந்தது.. அவன் எதிர்பார்த்த மயக்கத்தை ப்ரீதி பிரதிபலிக்காத கோபத்தில் வேகம் கூட்டிப் பறந்தான் ஆதவன்.. அவனது ஹீரோயிசத்தைக் காட்டுகிறானாம்.. ப்ரீதி பயப்பட வேண்டுமாம்..
‘போடா..’ என்று ஜன்னல் கண்ணாடியின் மீது சாய்ந்து கொண்டாள் ப்ரீதி..
‘இவன் காட்டறது ஹீரோயிசமாம்.. ஹீரோவோட ரேஞ்சே வேறடா..’
மரத்தின் மீது தோரணையாக ஒரு காலை மடித்து ஊன்றி சாய்ந்து நின்றிருந்தவனின் கம்பீரம் நினைவுக்கு வந்தது..
‘அவனில்ல ரியல் ஹீரோ..’
மலைப் பாதையில் கார் ஏறியது.. தொலைவில் தெரிந்த வெள்ளை மாளிகையை அவள் வேடிக்கை பார்த்தாள்.. பச்சைப் பசேலென்ற மரங்களுக்கு நடுவில் வெண்ணிற கடைசலாகத் தெரிந்த அந்த மாளிகை பார்ப்பதற்கு வெகு அழகாக இருந்தது.. அரச வம்சத்தினரின் அரண்மனையைப் போல அது செருக்குடன் நின்றதில் ப்ரீதி ஆவலுடன் ஆதவனுக்கு அதைக் காட்டினாள்..
“வாவ்..! மலைமேல் அரண்மனையா..? ராஜாக்களோட மாளிகை போலவே இருக்கில்ல அத்தான்..?”
அவளது கேள்விக்குப் பதில் சொல்லாமல் காரை ஒடித்துத் திருப்பினான் ஆதவன்.. சிவந்த அவனது முகம் கருத்து விட்டது..
‘இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு உர்ருன்னு ஆகிட்டான்..’
ப்ரீதிக்கு ஏன்தான் அங்கு வந்தோமோ என்று ஆகிவிட்டது..
‘காட்டைக் காட்டினாலும் பிடிக்கலைங்கிறான்.. பேலஸைக் காட்டினாலும் பேஸ்தடிக்கிறான்.. மியுஸியத்தில் இருக்க வேண்டிய பிறவி.. இவனுடன் நான் பழகிப் பார்க்கனுமாம்.. அப்பா சொல்கிறார்.. பழகுகிற மாதிரியா இவன் இருக்கான்..?’
ஆதவன் சின்ன வயதிலிருந்தே அப்படித்தான்.. சிடுசிடுவென இருப்பான்.. தகப்பன் வீட்டில் வளராமல் தாய்மாமன் வீட்டில் வளர வேண்டிய நிலைமை அவனுக்குக் கோபத்தைக் கொடுத்திருந்தது என்பதை வளர்ந்த பின்னால் புரிந்து கொண்டாள் ப்ரீதி.. சிறு வயதில் ஆதவனை சிடுமூஞ்சி அத்தான் என்றுதான் கூப்பிடுவாள்.
“இது என்ன பேலஸ் அத்தான்.. டூரிஸ்ட் ஸ்பாட்டா..?”
“கொஞ்சம் வாயை மூடிக்கிட்டு வர்றியா..?”
“எதுக்கு அத்தான் சண்டைக்கு வர்றிங்க..? உங்களுக்கு காட்டைத்தானே பிடிக்காது..? அரண்மனையையுமா பிடிக்காது..?”
ஆதவன் திரும்பிப் பார்த்து முறைத்ததில் ப்ரீதிக்கு பயம் வந்து விட்டது.. கண்கள் இரண்டும் ரத்தம் போல ஜிவுஜிவுத்திருந்தது..
‘இவன் ஏன் இப்படியிருக்கான்..?’
அவனது கோபத்துக்கு பயந்து வாயை மூடிக் கொண்டு இருக்கக் கூடாது என்று தீர்மானித்தாள் ப்ரீதி.. அது என்ன அவள் எதைக் கேட்டாலும் முறைப்பது..? அவன் இருக்கும் இடத்திற்கு அவள் வந்திருக்கிறாள் என்ற ஆணவமா..? இப்போதுதானே இங்கு இருக்கிறான்..? அவனுடைய பதினைந்து வயது வரை எங்கு இருந்தானாம்..? அவளுடன் பூனாவில் ஒரே வீட்டில் வளர்ந்தவன்தானே அவன்.. புதிதாக என்ன அதிகாரம் வேண்டியிருக்கிறது..?
“எனக்கு அந்த அரண்மனையைப் பார்க்கனும் அத்தான்..”
“பார்த்து என்ன செய்யப் போகிற..? விலைக்கு வாங்கப் போகிறாயா..?”
“ஏனாம்.. நான் கேட்டால் அந்த பேலஸை விலைக்கு வாங்கிக் கொடுக்க மாட்டிங்களா..?”
விளையாட்டாகத்தான் கேட்டாள் ப்ரீதி.. அத்தை மகன் என்ற உரிமையுணர்வில் சீண்டிப் பார்க்கத்தான் கேட்டாள்.. அதுபோல அவனிடம் அவள் பேசியதுண்டு.. புதிதாக வந்த பணக்கார வாழ்வில் அவன் பந்தாக் காட்டும் போது..
“மைசூர் அரண்மனையை எனக்கு வாங்கித் தந்தா நீங்க படா பிக் மேன்னு நான் ஒப்புக்குவேன்..” என்று கிண்டலடிப்பாள்..
அதுபோல இதையும் நினைத்துக் கேட்டு விட்டாள்..
“உன்னை வாயை மூடுன்னு சொன்னேன்..”
உரத்த குரலில் கத்தியபடி காரை நிறுத்தி விட்டான் ஆதவன்.. அவளைத் திரும்பிப் பார்த்தவனின் முகத்தில் கட்டுக்கடங்காத ஆத்திரம் தெரிந்தது..
“அந்த அரண்மனையைப் போல ஒரு அரண்மனையைக் கட்டிக் கொள்ள என்னால் முடியும்.. நான் கேட்டால் பணம் கிடைக்கும்.. ஆனால் நீ கை காட்டற அந்த அரண்மனையை மட்டும் என்னால் வாங்க முடியாது… இது பரம்பரை அரண்மனையாம்.. இதுக்கு உரிமை கொண்டாடறவன்
இந்த அரண்மனையை ஆண்ட அரச வம்சத்தில் பிறந்ததிருக்கனுமாம்.. எங்கப்பாவும் ராஜ வம்சமில்ல.. எங்கம்மாவும் ராஜவம்சமில்ல.. நான் எப்படி அந்த அரண்மனைக்குச் சொந்தக்காரனாக முடியும்..?”
“இதுக்கு ஏன் இவ்வளவு சீரியஸாகிட்டிங்க..? மைசூர் அரண்மனையைப் பார்க்கத்தான் முடியும்.. விலைக்கு வாங்க முடியுமா..? அதைப் போலதானே இதுவும்.. விளையாட்டாக் கேட்டேன் அத்தான்..”
“விளையாட்டுக்குக் கூட இனி இப்படிப் பேசாதே..”
ஆதவன் கோபம் குறையாமல் காரைக் கிளப்பினான்.. அடுத்த பிளைட்டைப் பிடித்து பூனாவிற்குத் திரும்பி விட வேண்டும் என்ற முடிவிற்குப் ப்ரீதி வந்தாள்.. இப்படி எந்த நேரம் எதற்காக கோபப் படுவான் என்று பிடிபடாத குணத்துடன் இருப்பவனிடம் என்னத்தைப் பழகிப் பார்ப்பது..?
‘அது என்ன தேவைக்கு..?’
ப்ரீதிக்கு மூச்சு முட்டுவதைப் போல இருந்தது.. ஒரே காரில் அவன் முன் சீட், இவள் பின் சீட் என்று ஒரு மணி நேரம் பயணிக்க முடியவில்லை.. வாழ்க்கைப் பாதையில் எப்படி சேர்ந்து பயணிக்க முடியும்..?
வந்ததுதான் வந்தோம்.. அத்தையைப் பார்த்து அவள் மடியில் படுத்து செல்லம் கொஞ்சி விட்டு.. ஆர்த்தியைப் பார்த்துத் துரத்திப் பிடித்து விளையாடி விட்டுக்கிளம்பி விடலாம்.. அவள் அவர்களைப் பார்க்கத்தானே வந்திருக்கிறாள்.. ஆதவனுடன் பேசிப் பழகவா வந்திருக்கிறாள்..?
வேகமாக சென்ற கார் ப்ரீதி சுட்டிக் காட்டிய அரண்மனையை அணுகியது.. வெள்ளை மாளிகையைப் போல அது ஆளை மயக்கியதில்.. உள்ளே போய்த்தான் பார்க்கக் கொடுப்பினை இல்லை.. வெளியில் இருந்தாவது ஆசை தீரப் பார்த்துக் கொள்ளலாம் என்று கண்கள் விரியப் பார்த்தாள் ப்ரீதி.. அவள் பார்த்துக் கொண்டிருந்த போதே அரண்மனையின் கோட்டைக் கதவுகளைப் போல உயர்ந்திருந்த கேட் இரண்டும் திறந்தன.. பெரிய இரும்புக் கேட் தங்க வர்ணம் பூசப்பட்டு தகதகத்தன.. கேட்டின் அருகே சிறிய ரூம்.. உள்ளே நாற்காலி, மின்விசிறி என்று உட்கார்ந்திருந்த செக்யூரிட்டிகள்தான் ஓடி வந்து கதவைத் திறந்து விட்டார்கள்.. அரண்மனையை நோக்கிப் போன சலவைக்கற்கள் பதிக்கப்பட்ட சாலையில் கார் ஓடியதில் ப்ரீதி சிலையாக சமைந்து போனாள்..
‘அத்தானுக்குத்தான் இந்த அரண்மனைக்கு வரப் பிடிக்கலையே.. எனக்காக வந்தாரா..?’
அவள் நெகிழ்ந்து போனாள்.. அவளுக்காக ஆதவன் விட்டுக் கொடுக்கிறானா..? அது எதற்கு..? அவன் மனதை நோகடித்து அந்த மாளிகையை அவள் சுற்றிப் பார்க்கத்தான் வேண்டுமா..?
“வேண்டாம் அத்தான்..” உறுதியுடன் மறுத்தாள்.
“என்ன.. வேண்டாம்..?” விசித்திரமாக அவளைப் பார்த்தான் ஆதவன்..
“உங்களை ஏதோ ஓர் விதத்தில் இந்த பேலஸ் டிஸ்டர்ப் பண்ணுதுன்னு நினைக்கிறேன் அத்தான்.. எனக்காக இந்த பேலஸை சுத்திக் காட்டத்தானே கூப்பிட்டுக்கிட்டு வந்திருக்கீங்க.. வேண்டாம்.. உங்க மனதைக் கஷ்டப்படுத்திக்கிட்டு இந்த பேலஸை சுற்றிக்காட்ட வேண்டாம்.. வாங்க போகலாம்..”
“எங்கே..?”
“அத்தை இருக்கிற வீட்டுக்கு..”
“கொஞ்சம் உளராம முன்னாடி பார்க்கிறயா.. உன் அத்தை இங்கேதான் இருக்காங்க..”
வெறுப்புடன் கை காட்டினான் ஆதவன்.. அங்கே வெள்ளை மாளிகையின் பளிங்குப் படிகளில் இறங்கி ஓடி வருவது யார்..? விசாகாவும், ஆர்த்தியுமா..?
நம்ப முடியாமல் இமைகளைக் கொட்டி விழித்தாள் ப்ரீதி.. வெள்ளை மாளிகையின் முன்னால் இருந்த போர்டிகோவே மாளிகையைப் போலதான் இருந்தது.. நூறு கார்கள் வரிசை கட்டி நிற்கலாம்.. அவ்வளவு பெரிய போர்டிகோ.. கரும்பச்சை வண்ண சலவைக் கற்களும்.. கடைசலுடன் கூடிய பெரிய பெரிய தூண்களுமாக பிரமிக்க வைத்தது..
“அ..அ..அ..அத்தை..” ப்ரீதி தந்தியடித்தாள்..
“நான் அப்போதே சொன்னேனில்ல.. அண்ணனை ஏரோடிராமுக்கு அனுப்பாதீங்க.. இங்கே வருவதற்குள் ப்ரீதியை அரள வைச்சிருவான்னு.. பாருங்க.. இவ பே.. பே.. பேங்கிறா.. ஏன் அண்ணா.. இவளை என்ன சொல்லி மிரள வைச்சே..?” ஆர்த்தி இடுப்பில் கை வைத்து ஆதவனிடம் சண்டைக்குப் போனாள்..
“உன் மாமன் மகள் அரளுகிற ஆளா..? நான் அரளாமல் உருப்படியாய் வீடு வந்து சேர்ந்தேனேன்னு சந்தோசப்படு..”
அங்கு வந்த வேலையாளிடம் கார் சாவியை விட்டெரிந்து விட்டு படிகளில் வேகமாக தாவியேறினான் ஆதவன்.. காரின் பின்சீட்டில் இருந்த ப்ரீதியின் பெட்டிகளை வேறு இரு வேளையாள்கள் தூக்கிக் கொண்டு போனார்கள்.. ஆச்சரியத்தில் வாய் பிளந்து விடாமல் இருக்க வெகுவாக பிரயத்தனப்பட்டாள் ப்ரீதி… பூனாவில் கங்காதரன் வசதியானவர்தான்.. சொந்தபங்களா, கார், வீட்டு வேலைக்கு வேலையாள்கள்.. அவருடைய டிபார்ட்மெண்டல் ஸ்டோர்.. ஆட்டோமொபைல் ஷாப் இதுதான் அவர்களது வாழ்க்கை.. அந்த அரண்மனையின் போர்டிகோவில் பாதியளவுகூட அவர்களின் வீடு இருக்காது..
‘அத்தை இவ்வளவு பெரிய அரண்மனையில் ராஜவாழ்வு வாழ்கிறாங்கன்னு ஏன் அப்பா என்னிடம் சொல்லலை..?’
ப்ரீதிக்கு எதுவும் புரியவில்லை… புதிர் போல இருந்தது.. அந்த புதிருக்கே அயர்ந்து போய் நிற்கிறவளுக்கு அடுத்தடுத்த புதிர்களை வாழ்க்கை தரப்போகிறது என்பது அப்போது தெரியாது..
Reviews – aaranyam azhakanathu / ஆரண்யம் அழகானது
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.