Chapter 06
களவு செய்யும் உன் காதல்..
கற்றுக் கொடுத்த பாடங்களில்
இற்று விழுந்ததடா என் நாணம்..
அண்ணாந்து பார்த்து.. கன்னங்கள் உப்ப.. விழிகள் விரிய.. உள்ளங்கைகளை விரித்து இரு கன்னங்களிலும் வைத்து..
“ப்ப்ப்..பா..” என்று பிரமிக்க வைக்கும் மாளிகை.. பிரமிக்க வைக்கும் அந்த மாளிகையில் வசிக்கும் உணர்வு துளியளவும் இல்லாமல் விட்டேற்றியாக ஆதவன் நின்ற விதம் ப்ரீதிக்கு ஆச்சரியத்தை அளித்தது..
ஆதவன் அப்படியொன்றும் தன்னடக்கம் கொண்டவனல்ல.. புதிதாக ஓர் உடையை உடுத்தினாலே கெத்து காண்பிப்பவன்.. கர்வி.. அப்பேற்பட்ட ஆட்டக்காரன் இப்பேற்பட்ட மாளிகையில் வசிப்பதைப் பற்றிப் பீற்றிக் கொள்ளாமல் இருப்பது பேராச்சிரியம் என்றால்.. இந்த மாளிகையை விட்டு வெளியேறி பூனாவில் காலை ஊன்ற விரும்புவது பேராச்சிரியத்திலும் பேராச்சிரியம்..
“என்னடி.. இப்படி மலைச்சுப் போய் நிற்கிற..?”
ப்ரீதியைக் கிள்ளி விட்டாள் ஆர்த்தி.. எட்டு வயது வரை ஒன்றாக வளர்ந்தவர்கள்.. ஆறுமாத இடைவெளியில் ஒரே வருடத்தில் பிறந்தவர்கள்.. ஒரே வயது, ஒன்று பட்ட சிந்தனையென்பதில் எட்டு வயதில் பிரிந்தாலும் வருட இறுதி விடுமுறை நாள்களில் சந்திக்கும் போது மாறாத அன்புடன் கை கோர்ப்பவர்கள்.. என்று வரிசைப்படுத்தப் படும் பல காரணங்களினால் ப்ரீதியும் ஆர்த்தியும் ஒருவரையொருவர் ‘வாடி, போடி..’ என்றுதான் அழைத்துக் கொள்வார்கள்..
“ஏய்ய்.. கற்பனையில் கூட இப்படிப்பட்ட பேலஸை நான் பார்த்தில்லை ஆர்த்தி..”
“நானும்தான் பார்த்ததில்லை.. எட்டு வயதுக்கு மேலேதானே இந்த ஊரும், மாளிகையும் எங்களை ‘வா’ன்னு அழைச்சது..?” இலகுவாகச் சொன்னாள் ஆர்த்தி..
“வெற்றிலை, பாக்கு வைத்து அழைக்கலை..” இறுக்கமான முகத்துடன் சொன்னான் படியில் நின்றிருந்த ஆதவன்..
“இவன் இருக்கானே..”
ப்ரீதி மனதில் நினைத்ததை வெளிப்படையாகச் சொல்லி.. ப்ரீதி மானசீகமாக தலையில் அடித்துக் கொள்ள நினைத்ததை வெளிப்படையாகச் செய்து ப்ரீதியின் அதீத.. ப்ரீதிக்கு ஆளானாள் ஆர்த்தி..
“தங்கம்டி நீ.. நான் நினைத்தேன்.. நீ சொல்லிட்ட.. எப்படிடீ..”
“ரொம்பவும் சீன் காட்டாதே.. இவன் இப்படித்தான்னு உனக்குத் தெரியாதாக்கும்.. வாடி உள்ளே..”
ஆர்த்தி ப்ரீதியின் கையைப் பிடித்து இழுத்தபடி வீட்டுக்குள் இல்லையில்லை.. அரண்மனைக்குள் அழைத்துச் சென்றாள்.. ஒரு பக்கம் விசாகா, இன்னொரு பக்கம் ஆர்த்தி, நடுவில் ப்ரீதி என்று மூவரும் ஹாலில் கால் வைத்தார்கள்..
“அதுவா அத்தை.. அது பெரிய கதை.. அம்மா உங்களிடம் போனில் சொல்லியிருப்பாங்கன்னுல்ல நினைச்சேன்..” பூனாவில் அவர்கள் இருந்த தெருவில் அக்கம் பக்கத்து வீட்டினரின் கதைகளை அள்ளி வீசியபடி உள்ளே வந்த ப்ரீதி ஹாலின் பிரம்மாண்டத்தில் மிரண்டு திரும்பி ஓடப் போனாள்..
“காமெடி பண்ணாதடி..” ஆர்த்தி ரகசியமாக கடிந்தபடி ப்ரீதியின் கையை இறுக்கிப் பிடித்து நிறுத்தி வைத்தாள்..
தரையில் விவரிக்கப்பட்டிருந்த காஷ்மீர் கம்பளம்.. அதன்மேல் போடப்பட்டிருந்த விலையுயர்ந்த சோபாக்கள்.. சுவரோர அலமாரிகளில் தெரிந்த வெங்கலச் (ப்ரிதீக்கு அது தங்கமாக இருக்குமோ என்ற சந்தேகம் இருந்தது..) சிலைகள்.. சுவரில் மிளிர்ந்த அழகு மிக்க ஓவியங்கள்.. ஹாலின் மேற்கூரையிலிருந்து தொங்கிய லஸ்தர் விளக்குகளின் அழகு என்று அரண்மனையின் வரவேற்பறை அவளை அயர வைத்தது..
‘இந்த மாளிகையில் அத்தையா..?’
இதுதான் அவளது மனதில் ஓடிய கேள்வி.. இவ்வளவு செல்வச் செழிப்பான மாளிகையில் தங்கை வசிக்கிறாள் என்று ஓர்நாளும் கங்காதரன் சொல்லிக் கொண்டதில்லையே.. பூனாவிற்கு வருடத்திற்கு ஓர்முறை வந்து போன அத்தையும், ஆர்த்தியும் இதைப்பற்றி மூச்சு விட்டதில்லையே.. இவ்வளவு ஏன்.. பிறக்கும் போதே தங்க ஸ்பூனைக் கவ்விக் கொண்டு பிறந்ததைப் போல அலட்டிக் கொள்ளும் ஆதவனும் வாய் திறந்ததில்லையே.. ஏன்..?
“வாம்மா ப்ரீதி..”
வரவேற்றபடி வந்த மாறன் அவ்வளவு பெரிய மாளிகையின் அதிபதியைப் போல இல்லாமல் வெகு எளிமையாக இருந்தார்.. எப்போதும் போல சாந்தம் தவளும் கண்கள்.. விட்டால் மலையில் இருக்கும் ஏதேனும் ஓர் பாறைமீது அமர்ந்து தவம் செய்ய ஆரம்பித்து விடுபவரைப் போன்ற தோற்றம்..
‘இருக்கிறதும் மலைப் பிரதேசம்தான்.. இவருக்கு எப்படி காதல் வந்தது..?’
இன்றுவரை ப்ரீதியின் மனதைக் குடைகிற சந்தேகம் இதுதான்.. தபஸ்வியைப் போல இருக்கும் மாறன் விசாகாவைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார் என்கிறார்களே.. அது உண்மையா..?
விசாகாவும் மாறனும் ஒரே கல்லூரியில் படித்தவர்களாம்..
“வால்பாறை பக்கத்திலே இருக்கிறவன் கோயம்பத்தூரில படிக்கிறதை விட்டு விட்டு பூனாவுக்கு ஏன் வந்து தொலைத்தான்..” என்று சமயம் கிடைக்கும் போதெல்லாம் மாறனை திட்டித் தீர்ப்பார் கங்காதரன்..
பூனாவில் படிக்க வந்தவர் காதலித்தார்.. சரிதான்.. காதலிக்கிற வயதில் காதல் வந்திருக்கிறது.. காதலித்து விட்டார்.. காதலித்த விசாகாவை முறைப்படி கோவிலில் வைத்துத் திருமணமும் செய்து கொண்டார்.. அதுவும் சரிதான்.. காதலுக்கு அடுத்து கல்யாணம்தானே.. இதுவரை சரியாகப் போய் கொண்டிருந்தது இடையில் ஏன் பிசகியது..?
அதுதான் ப்ரீதிக்கு இதுநாள்வரை தெரியாத ரகசியமாக இருந்தது.. காதலியைக் கைவிடாமல் முறைப்படி திருமணம் செய்து கொண்ட மாறன் எதற்காக மனைவியைத் தன்னுடன் அழைத்துச் செல்லாமல் மைத்துனரின் வீட்டில் விட்டார்.. இரண்டு குழந்தைகளுக்குத் தகப்பன் ஆன பின்பும் ஏன் வந்து வந்து போனார்.. இதனால் மனைவி எந்த அளவுக்கு மன உளைச்சலுக்கு ஆளாவாள் என்று புரிந்து கொள்ள முடியாத முட்டாளா அவர்..? மெத்தப் படித்தவர்.. மேதாவி.. சாந்த சொரூபி.. அந்த மகான் தன் மனைவிக்குச் செய்தது அநியாயம்.. என்னதான் திருமணமாகி பதினாறு வருடங்கள் கழித்து மனைவியைத் தன்னுடன் அழைத்துச் சென்றாலும் அவர் விசாகா அத்தைக்கு இழைத்தது அநீதிதானே..
அந்த வகையில் தன் அப்பாவின் கோபத்தில் நியாயம் இருப்பதாகவே ப்ரீதி நினைத்தாள்.. எந்த அண்ணன்தான் தங்கைக்கு அநியாயம் நடந்தால் பார்த்துக் கொண்டு இருப்பான்..?
சின்னஞ்சிறு வயதிலிருந்து பருவ வயதுக்கு மாறிய காலகட்டத்தில் ஆதவனின் பார்வையும் மாறத் தொடங்கி விட்டதைப் ப்ரீதியின் பெண்மைக்கே உரிய நுண்ணறிவு உணர்ந்து கொண்டது.. அதன்பின் ஆதவனிடம் அதிகமாக பேச மாட்டாள்.. அனைத்து அரட்டையும் ஆர்த்தியிடம்தான்.. அவளிடம் மாறனைப் பற்றி ப்ரீதி கேட்டிருக்கிறாள்.. ஏன் அவர் விசாகாவை அழைத்துச் செல்லாமல் பூனாவிலேயே இருக்க வைத்திருந்தார் என்று தூண்டித் துருவியிருக்கிறாள்.. ப்ரீதி எதைக் கேட்டாலும் பதில் சொல்லும் ஆர்த்தி அதற்கு மட்டும் பதில் சொல்ல மாட்டாள்.. மௌனமாகி விடுவாள்..
மௌனம் என்பது தப்பிக்க விரும்புபவர்க்கு பாதுகாப்பு கேடயமாகி வருகிறது.. மௌனத்தை உடைத்து உள்புகுதல் என்பது சிரமமான ஒன்று..
அந்த அரண்மனைக்குச் சற்றும் பொருந்தி வராத மாறன்தான் அரண்மனையின் அதிபதி என்பதை ஏற்றுக் கொள்வது ப்ரீதிக்குச் சிரமமான ஒன்றாக இருந்தது..
“விசாகா ப்ரீதிக்கு குடிக்க ஏதாவது குடுத்தாயா..? ஆர்த்தி உன் மாமா மகளுக்கு ரூமைக் காட்டும்மா.. ரெஸ்ட் எடுக்கட்டும்..”
அவ்வளவுதான்.. தன் வேலை முடிந்தது என்று கைகள் இரண்டையும் பின்பக்கமாக கோர்த்துப் பிடித்தபடி மாறன் மலையிறங்கி.. அதாவது படியிறங்கி விட்டார்.. அந்த அரண்மனைதான் குன்றின் மீது அமர்ந்திருப்பதைப் போல உயரமாக அமைந்திருக்கிறதே.. படியேறுவதற்குள் மூச்சு முட்டி விட்டதே..
“என்னடி.. அப்பாவையே பார்த்துக்கிட்டு நிற்கிற..?”
“ஆஹா..! என்னருமை மாமா இவ்வளவு நீளமாய் பேசிட்டாரேன்னு ‘ஷாக்’ ஆகிட்டேன் ஆர்த்தி..”
“ஜோக்கு..?”
“சிரிப்பு வரலையா..?”
“நிறைய வருது.. உன் ஊமை மாமா இவ்வளவு நீளமாப் பேசினா உனக்கு ஷாக் வரத்தான் செய்யும்..”
“தெரியுதில்ல..”
“ஊம் தெரியுது..”
“என்ன தெரியுது..?”
“உன் ஷாக்கும் தெரியுது.. வனிதாமணி கொண்டு வர்ற காப்பியும் தெரியுது.. குடி, குடி..”
“வனிதா மணியா..? அது யாருடி..?” திரும்பிய ப்ரீதியிடம்..
“ஹி.. ஹி.. நான்தாம்மா அது..” என்று வாய் நிறைய சிரித்தபடி காபி கப்பை நீட்டினாள் வனிதாமணி..
இதழின் இந்தக் கடைசியிலிருந்து அந்தக் கடைசி வரை ‘ஈ’யென சிரிக்கும் சிரிப்பைப் பார்த்து பயந்து போன ப்ரீதி ‘கப்-சிப்’ என அமைதியாகி கப்பைக் கைப்பற்றிக் கொண்டாள்.. வனிதாமணி அந்தப் பக்கம் நகர, இவள் இந்தப் பக்கம் ஆர்த்தியிடம் குனிந்து..
“யாருடி இவ..?” என்றாள்..
“இந்த மாளிகையில் சேவகி..”
“வேலை செய்கிற பெண்ணா..?”
“அஃதே..”
“இவ ஏண்டி இப்படிச் சிரிக்கிறா..? சரியான மணிபர்ஸ் வாய்..”
“அதுதான் அவளோட டிரேடு மார்க்.. வால்பாறையின் லேடி மதன்பாப்… எதுக்கெடுத்தாலும் சிரிப்பா..”
“கொடுமைடி..”
“நமக்குத்தான் கொடுமை.. அவளுக்கு என்ஜாய்மெண்ட்..”
விசாகா ஊர்க்கதைகளைக் கேட்க.. சோபாவில் கால் மடக்கி சம்மணம் போட்டு அமர்ந்தபடி சளைக்காமல் கதை பேசியபடி காபியைக் குடித்து முடித்தாள் ப்ரீதி..
“ஹி..ஹி.. காபிக் கப்பை.. ஹி.. ஹி.. தாங்க.. ஹி..ஹி..”
வனிதாமணியின் வரவில் ப்ரீதியின் கையிலிருந்த காபிகப் தவறி விழ இருந்து..
“இப்படிக் கொடு..” என்று ஆர்த்தி வாங்கிக் கொண்டதால் மயிரிழையில் உடையாமல் தப்பித்தது..
“அம்மா.. ஹி..ஹி.. யாருன்னு ஹி..ஹி..” வனிதாமணி நகர்வேனா என்று அடம் பிடித்தாள்..
“வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தாளியை முதல் நாளிலேயே ஓட வைத்து விடாதே வனிதா..”
“வனிதா மணிங்கம்மா.. ஹி ஹி..”
“இதையெல்லாம் மணிமணியாய் பேசு.. சிரிக்கிறதை மட்டும் நிப்பாட்டி விடாதே..”
“ஹி..ஹி.. என்னங்கம்மா.. ஹி..ஹி.. இப்படிச் சொல்கிறீங்க..”
“அதோ.. அங்கே வர்றது யாரு..? வண்டாற்குழலியா..?”
ஆர்த்தி கேட்டு வாய் மூடியிருக்க மாட்டாள்.. வனிதாமணி ‘டிஷ்’ என்று மாயமாய் மறைந்து விட்டாள்..
“என்னடி இவளைக் காணோம்..” ப்ரீதி சோபாவுக்கு அடியில் எல்லாம் குனிந்து பார்த்தாள்..
“வண்டாற்குழலி வர்றான்னு சொன்னதுமே இவ வண்டா மாறிப் பறந்து போயிருப்பா.. விட்டுத்தள்ளு..”
“வண்டாற்குழலியா..? யாருடி அது..?”
“நமக்குச் சமையல் வேலை செய்கிறவங்க.. நம்ம வனிதாமணிக்கோ அண்ணி.. எப்பவும் சிரிச்ச மூஞ்சியா இருக்கிற வனிதாமணியோட மூஞ்சிய அழுவாச்சி மூஞ்சியா ஆக்கற சக்தி நம்ம வண்டாற்குழலிகிட்ட மட்டும்தாண்டி இருக்கு..”
“வண்டாற்குழலி.. வனிதாமணி.. பெயரே அழகாய் இருக்கில்ல..”
“இதுகளும் அழகாய்த்தான் இருக்கும்ங்க.. மலைவாழ் ஜனங்க.. மனதில் இருக்கிற கோப தாபத்தை அப்படியே கொட்டித் தீர்த்து விடுவாங்க.. சூதுவாது இல்லாத மனது..”
ஆர்த்தி சொல்வதை உன்னிப்பாக செவி மடுத்தாள் ப்ரீதி..
“நானென்ன லெச்சராடி கொடுக்கிறேன்..?” ஆர்த்தி செல்லமாக கோபித்தாள்..
“இங்க இருக்கறவங்கதான் சூதுவாது இல்லாதவங்க.. பூனாவில் பிறந்து வளர்ந்த நாம எல்லாம் மனதில் சூது வாது வைத்திருக்கிறவங்க.. அப்படித்தானே..” நிஷ்டூரமாகக் கேட்டான் ஆதவன்..
“இவன் ஒருத்தன்.. யதார்த்தமாப் பேசினாக்கூட வில்லங்கமா எடுத்துக்கிட்டு சண்டைக்கு வருவான்..” அலுத்துக் கொண்ட ஆர்த்தி..
“ஏய்.. நீ வாடி.. உன் ரூமைக் காட்டறேன்.. ஏரோடிராமில இருந்து இவன்கூட காரில வந்திருக்கிற.. முறைச்சு முறைச்சு உன்னைக் கடுப்படிச்சுருப்பான்.. கடுப்புப் போக சுடுதண்ணீரில குளிச்சுட்டு தூங்கி எழுந்திரு.. பிரஷ்ஷாகிருவ..” என்றபடி ப்ரீதியை எழுப்பினாள்..
“களைப்பு போகத்தானே சுடு தண்ணியில் குளிப்பாங்க..?” விசாகாவிற்கு சந்தேகம் வந்து விட்டது..
“அது மத்தவங்களுக்கு.. உங்க மகன்கூட டிராவல் பண்ணினா கடுப்பு களைப்பை மிஞ்சிரும்..”
தாய்க்கு விளக்கம் கொடுத்து விட்டு ப்ரீதியுடன் பேசியபடி மாடிப் படிகளில் ஏறினாள் ஆர்த்தி.. ப்ரீதியின் பெட்டி ஏற்கனெவே வனிதாமணியின் கைவரிசையால் மாடியேறி விட்டதாம்.. கலகலத்துப் பேசியபடி ஏறிட்டுப் பார்த்த ஆர்த்தியின் பேச்சு நின்று விட்டது.. படு அமைதியாகி விட்ட அத்தைமகளை விசித்திரமாகப் பார்த்த ப்ரீதி தானும் ஏறிட்டாள்.. எதிரே கண்டிப்பான பார்வையும் கடுமையான முகமுமாக ஆஜானுபாகுவாக ஓர் மனிதர் இறங்கி வந்து கொண்டிருந்தார்.. எண்பது வயதிற்கு மேலிருக்கும்.. மலைவாழ் மக்களுக்கே உரிய உறுதியான உடல்வாகு.. ஓங்கி உயர்ந்த நெடுமரம் போன்ற உருவம்.. இவ்வளவு உயரமா என்று ஆச்சரியப்பட்டுப் போனாள் ப்ரீதி.. இவர் யார்..? எதற்காக ஆர்த்தி அவரைக் கண்டதும் அமைதியாகி விட்டாள்..?
Reviews – aaranyam azhakanathu / ஆரண்யம் அழகானது
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.