Chapter 09
உன் மன ஓரத்தில் எனைப்பற்றி
ஓர் துளி நினைவிருந்தால் போதும்..
என் ஜென்மம் சாபல்யமாகும்..
“ம்ஹா..”
உள்ளங்கைகளைத் தேய்த்துக் கன்னத்தில் வைத்து அதன் இதமான வெம்மையை அனுபவித்து இமைகளை மூடித் திறந்தாள் ப்ரீதி.. காலைப் பொழுதில் சாலைக்கு வந்து சூழ்ந்திருக்கும் பனிப் பொழிவில் நனைந்தபடி நடக்கும் நொடிகள் அற்புதமானவையென்று அவளுக்குத் தோன்றியது.
அவளும் விருந்தாளியாக வந்து இரண்டு நாள்களாகி விட்டன.. அரண்மனையின் தோட்டத்தைத் தாண்டி வெளியே செல்ல முடியவில்லை.. அரண்மனைத் தோட்டம் ஆரண்யத்தை விட அழகானதாக இருந்தது என்பது வேறு விசயம்.. பாறையின் மீது சின்னதாக அருவி கொட்டி வழிந்து நீரோடையாக ஓடிக் கொண்டிருந்தது.. அதன் இரு கரைகளிலும் மலர்ச்செடிகள்.. சின்னதாக ஒரு நீராளி மண்டபம்.. மண்டபத்தின் தூண்கள் நான்கிலும் படர்ந்திருக்கும் மலர்க் கொடிகள் அதை கொடி மண்டபமாக காண்பித்தன.. நீச்சல் குளத்தைக் கூடப் பொய்கை போல அமைத்திருந்தார்கள்.. இரண்டு நாளும் ப்ரீதி அந்த தோட்டத்தின் அழகில் மயங்கிச் சுற்றிச் சுற்றி வந்தாள் தான்.. திடிரென தான் இருப்பது அமைக்கப்பட்ட ஆரண்யம்.. உண்மையான ஆரண்யம் அரண்மனைக்கு வெளியே இருக்கிறது என்ற உண்மை அவள் மனதில் உறைத்து விட்டது..
அந்தக்காலத்தில் அந்தப்புர மாந்தர்கள் வெளியுலகைப் பார்க்க விரும்பி விடக் கூடாது என்று அவர்கள் விரும்பியதையெல்லாம் அரண்மனைக்-குள்ளேயேயே அமைத்துத் தந்து விடுவார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறாள்..
‘என்ன ஒரு தந்திரம்..! இதற்குப் பெயர்தான் ராஜ தந்திரம் என்பதுவோ..’
ப்ரீதி என்ன அந்தக்காலத்து அந்தப்புரத்து ராணியா..?
‘நெவர்..’
சூளுரைத்த ப்ரீதி காலையில் எழுந்து கொள்ளும் போதே முடிவு செய்து விட்டாள்.. வீட்டில் உள்ள மற்றவர்களின் கண்களில் படாமல் ஓர் உலாவலுக்குப் போய் வந்துவிட வேண்டும்..
போட்டு வைத்திருந்த உலாவல் திட்டப்படி இவள் பூனை போல சமையலறைக்குப் போனாள்.. பாலைக் காய்ச்சிக் கொண்டிருந்த வண்டாற்குழலி இவளைப் பார்த்ததும்..
“வாங்கம்மா.. வெள்ளன எழுந்துருச்சுட்டிங்களா..? வீட்டில எல்லோரும் மெதுவாத்தான் எந்திரிப்பாக.. அதனால டிக்காசனை இப்பத்தான் போட்டேன்.. காபி கலக்கித் தரட்டுங்களா..?” என்று பேசியபடி காபி கலக்கித் தந்தாள்..
படுவேகமாக காபியை உறிஞ்சிக் குடித்தவள் சூடான காலைக் காபிக்கு வண்டாற்குழலிக்கு நன்றி சொல்லி விட்டு வாசல் பக்கமாக வந்தால், அங்கே பெருக்கிக் கொண்டிருந்த வனிதாமணி..
“ஹி..ஹி..” என்று பிடித்துக் கொண்டாள்..
“வண்டாற்குழலி உன்னைக் கூப்பிடறாங்களே.. காதில் விழுகலையா வனிதா..” என அவளையும் பற்றி விட்டு, அவள்
“எங்கேம்மா..?” என்று சமையலறைக்கு ஓடியதும் இந்தப் பக்கமாக கேட்டை நோக்கி விரைந்து நடந்தாள்..
அரண்மனைக்கும் காம்பவுண்டு கேட்டிற்கும் இடையில் உள்ள பாதை பளிங்குக் கற்கள் பதிக்கப்பட்டு படுமென்மையாக இருந்தது..
‘ராஜ வாழ்க்கைன்னா இப்படித்தான் இருக்கும் போல..’
தூரத்தில் நான் கண்ட காம்பவுண்டு கேட் என்று பாடாத குறைதான்.. தூரமென்றால் தூரம்.. அவ்வளவு தூரம்.. அதையும் கடந்து வந்தால் கேட்டருகே இருந்த செக்யூரிட்டி வழி மறித்தான்.. வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லி அனுமதி வாங்கிய பின்னால்தான் ப்ரீதி கேட்டருகே வந்திருக்கிறாள் என்று சத்தியம் பண்ணாத குறையாக சொன்ன பின்னால்தான் கேட்டை திறந்து விட்டான்..
‘ம்ஹீம்.. அரண்மனை வாழ்க்கைங்கிறது சிறைதான் போல..’
இப்படி பல ‘போல’ களை சிந்தித்தபடி சாலையில் இறங்கி நடந்தவளுக்கு மனப்புகைச்சல் எல்லாம் மறைந்தோடி விட்டன.. மனித நடமாட்டம் இல்லாத சாலையில் பனியின் பொழிவில் நனைந்தபடி நடக்கும் அற்புதமானதொர் ஆனந்தத்தை அனுபவித்தபடி குதூகலமாக நடக்க ஆரம்பித்து விட்டாள் கைகளை முன்னால் கட்டினால் குளிர் குறைவதைப் போலவே இருந்தது.. ப்ரீதிக்கு சித்தார்த்தனை சந்தித்தபோது அவன் கைகளை முன்னால் மடித்துக் கட்டியிருந்தது நினைவுக்கு வந்தது.. அது என்ன மாயமோ தெரியவில்லை.. அவள் எதை நினைத்தாலும் அந்த நினைவைக் தொடர்ந்து சித்தார்த்தனின் நினைவும் வந்து விடுகிறது..
இருபுறமும் மரங்கள் அடர்ந்த சாலையில் நடக்கப் பயமாகக் கூட இருந்தது.. சின்னச் சின்ன சிற்றருவிகள் கண்களில் பட்டுக் கொண்டே இருந்ததில் பயம் மறந்து விட்டது. மனிதக் காலடிகள் படாத இடங்கள் சுத்தமானதாகவும் அழகு குறையாமலும் இருக்கின்றன.. எங்கு மனிதர்கள் கால் பதிக்கிறார்களோ அங்கே இயற்கை மாசடைந்து விடுகிறது என்றால் மனிதப்பிறவி என்பது எத்தனை மோசமான பிறவி..!
தானும் மனிதப் பிறவிதான் என்று நினைத்துச் சிரித்துக் கொண்டாள் ப்ரீதி.. இதோ அவளது காலடித் தடங்கள் பதியும் இடங்கள் இதற்கு முன் மாசுபடாமல் இருந்தது.. அவள் காலடி பட்டதில் மாசடைந்து விட்டது..
சற்றுத் தொலைவில் அடிவானம் தெரிந்தது.. தொடுவானம், தொட முடியாமல் தொலைந்து போகும் தூரம்.. வால்பாறையின் இயற்கை அழகில் அவளுக்கே தொலைந்து போக வேண்டும் போல இருந்தது.. சரிந்து சென்ற மலைப் பாதையை ஒட்டி இருந்த பெரிய பாறையொன்றின் மீது ஏறி நின்று கைகளை விரித்துத் தட்டாமாலை சுற்றிய ப்ரீதிக்குப் பாட வேண்டும் போல இருந்தது..
“வால் பாறை.. வட்டப் பாறை..
மயிலாடும் பாறை.. மஞ்சப்பாறை..
நந்திப்பாறை சந்திப்பாக – அவுக
என்னை மட்டும் சிந்திப்பாக..
பாறை.. என்ன பாறை..!
பாறை.. என்னைப் பாரேன்..”
சாலையில் வந்து கொண்டிருந்த காரிலிருந்த சித்தார்த்தன் அவளைப் பார்த்தான்.. அடர் சிகப்பில் பூப்போட்ட நைட்டி.. காப்பிக் கொட்டை வண்ணத்தில் ஸ்வெட்டர்.. தலைமுடி பின்னலிடப்பட்டிருந்தாலும் முன்புறம் முடி கற்றையாகப் பிரிந்து தொங்கிக் கொண்டிருந்தது.. தூங்கி எழுந்து வந்த தோற்றத்துடன் இருந்தாள்.. எவ்வித ஒப்பனையுமில்லாமல் அதைப் பற்றிய பிரக்ஞை துளியும் இல்லாமல் கைகளை விரித்துப் பாடிக் கொண்டிருந்தவள் தேவதையை நினைவு படுத்தினாள்.. சித்தார்த்தனுக்குப் ‘பூங்காற்று, புதிதானது..’ என்று பாடத் தோன்றியது.
‘யார் இவள்..? தேவதை..!’
பாறை போன்ற இறுக்கமான முகத்துடன் இருப்பவனின் முகம் கனிந்து மென்மையானது.. அவளைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போலத் தோன்றியதால் காரை மரத்தின் பின்னால் ஓரம் கட்டி நிறுத்தி விட்டு இறங்கினான்.. மரத்தின் மறைவில் நின்று அவளைப் பார்த்தான்.. அவள்தான் ‘பாறை.. என்னைப் பாரேன்..’ என்று அழைப்பு விடுக்கிறாளே.. பார்க்காமல் இருக்க முடியுமா..?
எட்டியிருக்கும் மரத்தின் பின்னால் நின்று அவன் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை அறியாமல் ஓடிக் கொண்டிருந்த நீரோடையின் மத்தியிலிருந்த கற்களில் கால் பதித்து புள்ளி மான் போலத் துள்ளி ஓடினாள் ப்ரீதி..
“எட்டிப் பார்த்து நிப்பாக..
ஏங்கி ஏங்கிப் பார்ப்பாக..
ஏரிக்கரை ஓரத்திலே காத்திருப்பாக..
ரெண்டு கன்னம் தேய்ப்பாக..
விண்டு விண்டு திம்பாக..
வால்பாறை வட்டப் பாறை..
மயிலாடும் பாறை.. மஞ்சப் பாறை..
பாறை.. என்னைப் பாரேன்..”
ஓடையில் ஓடிய தண்ணீரில் கைவைத்து அள்ளி வீசியவளின் கை ஜில்லிட்டுப் போனதில் இமைகளைச் சுருக்கி “ஸ்ஆ..” என்றாள்.. சித்தார்த்தனுக்கு அவளை இழுத்து நிறுத்திக் கன்னங்களைத் தேய்த்துச் சூடேற்றி விட வேண்டும் போல இருந்தது.. அவளை விண்டு தின்ன ஆசைதான்.. ஆனால்..?
பெருமூச்சுடன் அவளைப் பார்த்தான்.. அவனது மனவோட்டத்தை அறியாமல் நீரோட்டத்தில் கைவிட்டு நீரை அள்ளி வீசி விளையாடிக் கொண்டிருந்தாள் ப்ரீதி.. அவள் வீசிய நீர் சித்தார்த்தனின் முகத்தில் தெறித்ததில் அவனது முகம் மேலும் மென்மையானது..
“செம்பருத்தி நெஞ்சார
சம்மதத்தைக் கேப்பாக..
சாதி சனம் சேர்ந்திருக்க..
கைப்பிடிப்பாக..
வம்பளக்கும் ஊர் வாய
வாயடைக்க வைப்பாக..
வால்பாறை வட்டப் பாறை..
மயிலாடும்பாறை மஞ்சப்பாறை..
பாறை..! என்னைப் பாரேன்..”
சித்தார்த்தனன் இதழை மடித்துக் கடித்துக் கொண்டான்.. அவளை அவன் முதன் முதலாக இரு தினங்களுக்கு முன்னால் பார்த்த போதும் இப்படித்தான் இயற்கையைக் கொண்டாடிக் கொண்டிருந்தாள்.. இதுபோல காரில் போய்க் கொண்டிருந்தவன் தன்னந்த தனியாக ஓர் இளம்பெண் காட்டிற்குள் போவதைப் பார்த்து விட்டு யார் என்று அறிய காரை விட்டு இறங்கிப் பின் தொடர்ந்தான்.. வால்பாறை மக்கள் மற்றவர்களுக்கு மனதாலும் கெடுதல் நினைக்காதவர்கள்.. சுற்றுலா வாசிகளைப் பற்றி அப்படிச் சொல்லிவிட முடியாதே.. அவர்களில் நல்லவர்கள் அதிகமிருந்தாலும் கெட்டவர்கள் ஒன்றிரண்டு பேர் ஊடுறுவி இருக்கக் கூடுமே.. தனித்துச் செல்லும் பெண் ஆபத்தில் சிக்கிக் கொள்ள வாய்ப்பிருக்கிறதே.. அத்துடன் பழக்கமில்லாத கானகத்தில் வழி தெரியாமல் மாட்டிக் கொண்டால் என்ன செய்வது..?
இத்தனைக்கும் மேல் ஒன்றிருந்தது.. தனித்துச் செல்லும் பெண்ணின் மனதில் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் ஏதேனும் இருந்தால்..?
சித்தார்த்தன் இந்த நினைவில் அவளைப் பின் தொடர்ந்து கண்காணித்தான் என்பது மட்டும் ப்ரீதிக்குத் தெரியவேண்டும்..
‘அவ்வளவுதான்..’ அவன் முகம் விகசித்தது..
“தொட்டா மணப்பாக..
நெய்முறுக்கு கேப்பாக..
நெய் முறுக்கு சாக்கில
என் கை கடிப்பாக..
பாலிருக்கும் செம்பாக
பசிதாகம் தீர்ப்பாக..
வால்பாறை.. வட்டப்பாறை..
மயிலாடும் பாறை.. மஞ்சப்பாறை..
பாறை.. என்னைப் பாரேன்..”
பாடியபடி தாவிக் குதித்துக் கரையேறிய ப்ரீதி, மரத்தின் பின்னாலிருந்து வெளிப்பட்ட சித்தார்த்தனைக் கண்டதும் ஸ்தம்பித்து நின்று விட்டாள்.. பாறை போன்ற முகம் மிருதுவாக இருந்ததில் அவளது கண்கள் விரிந்தன.. இதழ் வளைத்து அவன் சிந்திய சின்னச் சிரிப்பில் அவளது கன்னி மனம் சிக்கித் தத்தளித்தது..
“எங்கே.. எனக்குக் கொஞ்சம் குடு..” அவன் கைநீட்டினான்..
“என்ன..?” அவளுக்கு ஒன்றும் புரியவில்லை..
“நெய்முறுக்கு..! இப்பப் பாட்டில சொன்னியே..”
அவளுக்கு வெட்கமாகி விட்டது.. யாருமில்லை-யென்ற சுதந்திர உணர்வோடு அவள் பாடிய பாடலை அவன் கேட்டு விட்டான் என்ற நினைவில் முகம் சிவந்தவள்..
“அது என்ன.. நான் எங்கே போனாலும் என்னை ஃபாலோ பண்றீங்க..?” என்று கேட்டாள்.
“அதை இப்படியும் சொல்லலாம்..”
“எப்படி..?”
“நான் எங்கே போனாலும் அங்கே நீ இருக்கிற..”
“ஆஹா..! இவர் போகிற இடமெல்லாம் எனக்கு எப்படித் தெரியுமாம்..? கண்டு பிடித்து வந்து நிற்கிறேனா..?”
“அது எனக்கு எப்படித் தெரியும்..? எப்படிக் கண்டு பிடிக்கிறாய் என்பதை நீதான் சொல்லனும்..”
‘இவன் இப்படியெல்லாம் கூட விளையாடுவானா..?’
ஆச்சரியமாக அவனைப் பார்த்தாள் ப்ரீதி.. கடுமை இல்லாத முகத்தைப் பார்க்க வெகு அழகாக இருந்தது.. அதை அவள் வாய் விட்டுச் சொல்லி விட்டதில் அவனது கண்கள் ஜொலித்தன.. இந்த முறை கண்களில் வந்த மின்னலை அவன் மறைக்க யத்தனிக்கவில்லை என்பதை கண்டு கொண்டாள் ப்ரீதி..
‘என்னடா இது..? ஒரு சிங்கம், மானிடம்
உறுமாம உருப்படியா உரையாடுது..’
“ஸோ.. நீ சைட் கூட அடிப்ப..”
அவன் உல்லாசமாக சிரித்ததில் அவளது மனம் ஊஞ்சல் கட்டி ஆட விழைந்தது.. அவனுடன் பேசிக் கொண்டிருப்பது பிடித்தமானதாக இருந்ததில் ப்ரீதி பாறையில் உட்கார்ந்து கால்களை ஆட்டியபடி..
“இப்பத்தான் காலேஜை முடிச்சு வெளியே வந்திருக்கிறேன் சார்.. சைட் அடிக்கிறதைப் பத்தி உங்களுக்கே டியூசன் எடுப்பேன்.. என்னை என்னன்னு நினைச்சீங்க..?” என்று உதட்டைச் சுழித்தாள்..
அவளது சுழித்த உதடுகளை ஒரு மார்க்கமாக பார்த்தபடி
“ஒன்றும் தெரியாத சின்னப் பெண்ணுன்னு நினைத்தேன்.” என்று விசமமாகச் சொன்னான் சித்தார்த்தன்.
“நினைப்பீங்க.. நினைப்பீங்க..”
அவள் தலையை ஆட்டி.. ஒற்றை விரலை உயர்த்தி அவனை எச்சரித்ததில் அவனது விழிகள் மறுபடியும் மின்னின..
அவன் யார் என்பதை அவள் அறிவாளா..?
Reviews – aaranyam azhakanathu / ஆரண்யம் அழகானது
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.