Chapter 11

0Shares

யாரென்ன சொன்ன போதும்..

நீ மட்டும்..

என் வாழ்விற்குப் போதும்..

சித்தார்த்தனின் காரை தொலைவில் கண்டதும் மாளிகையின் காம்பவுண்டு கேட்டுக்கள் திறக்கப்பட்டன.. காருக்குள் ப்ரீதியும் இருந்ததில் செக்யூரிட்டியின் முகத்தில் மாற்றம் வந்ததைப் போல இருந்தது.. இந்த வீட்டில் சித்தார்த்தன் யார் என்று யோசித்தாள் ப்ரீதி.. இவ்வளவு நேரமும் அவனுடன்தான் பேசிக் கொண்டிருந்தாள்.. இது பற்றிக் கேட்கவில்லையே..

“வீட்டில் ஓர் பெரியவர் இருக்கிறாரே.. கெண்டை மீனோ என்னவோ..” அவசரமாக அவள் ஆரம்பிக்க..

“அவர் பெயர் தொண்டைமான்.. கெண்டை மீனில்லை.. இனியொரு தடவை இப்படிச் சொல்லாதே.. நான் பொறுத்துக் கொண்டு தன்மையாக பதில் சொல்லிக் கொண்டிருக்க மாட்டேன்..” கடுமையாகச் சொன்னான் சித்தார்த்தன்..

‘அந்த மனிதரைச் சொன்னால் இவனுக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகிறது..?’

காரணம் எதுவாக இருந்தாலும் சித்தார்த்தனின் கோபத்திற்கு ஆளாக அவள் விரும்பவில்லை..

“ஸாரி..” இறங்கிய குரலில் சொன்னாள்..

“ம்ம்ம்..” அதற்கு மேல் அவன் பேசவில்லை..

“அவர் யார்..?”

அவன் திரும்பி அவளை உன்னிப்பாக பார்த்து விட்டு..

“உன் அத்தையிடம் கேள்..” என்றான்..

போர்டிகோவில் கார் நின்றது.. சித்தார்த்தன் இறங்கி அவள் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்காமல் அவள் யாரோ, அவன் யாரோ என்பதைப் போல படியேற.. ப்ரீதியின் உள்ளங்கை அவனது முத்தத்தின் ஈரத்தை நினைவு படுத்தியது..

“அம்மா..”

காரை ஓட்டிக் கொண்டு போய் வரிசை கட்டி நின்றிருந்த மற்ற கார்களுக்கு இடையில் நிறுத்திப் பூட்டி விட்டு வருதற்காக காத்திருந்த வேலையாள் தயக்கத்துடன் அழைத்தான்.. ப்ரீதி காரை விட்டு இறங்கினாள்.. தோட்டத்திலிருந்து வந்த ஆர்த்தி..

“ப்ரீதி..” என்று பதட்டமாக அழைத்தாள்.

“என்னடி..?”

“எங்கேடி போன..? அரண்மனை முழுக்க உன்னைத் தேடியாச்சு.. தோட்டதிலும் இல்லை.. இப்ப என்னடான்னா காரில் வந்து இறங்குகிற.. இவரை எங்கே பார்த்த..?”

“நான் பார்க்கலை.. அவர்தான் என்னைப் பார்த்தார்..”

“எங்கே..?”

“காட்டைச் சுற்றிப் பார்க்க போயிருந்தேனா..? அங்கே இவர் வந்தார்.. ஆமாம்.. இவர் யாருடி..? உங்க வீட்டில் இருக்காரே..”

ஆர்த்தியின் உதடுகள் துடித்தன.. எதையோ சொல்ல வந்தவள் சுற்றுமுற்றும் பார்த்து விட்டு..

“இனி இப்படிக் கேட்காதே ப்ரீதி..” என்றாள்..

“ஏண்டி..?”

“அது அப்படித்தான்.. கேள்விகளை அவாய்டு பண்ணு..”

அவர்கள் வீட்டுக்குள் போன போது ஆதவன் கோபமாக காத்திருந்தான்.. ப்ரீதியைக் கண்டதும் வீட்டை விட்டுக் காதலனுடன் ஓடிப் போய் திரும்பி வந்திருப்பவளைப் பார்ப்பதைப் போல கனல் கக்கப் பார்த்தான்..

‘ஒரு வாக்கிங் போனது குற்றமாடா..’ ப்ரீதி பல்லைக் கடித்தாள்..

“எங்கே போன..?”

ஆர்த்தியும் இதே கேள்வியைத்தான் கேட்டாள்.. ஆனால் அவள் கேட்ட தொனி வேறு.. ப்ரீதியைக் காணோமே என்ற பதட்டம் அதில் தெரிந்தது.. அறியாத ஊரில் தனியாக எங்கே போய் விட்டாய்.. உன்னைக் காணாமல் நாங்கள் தவித்து விட்டோமே.. நல்லவேளை.. திரும்பி வந்து விட்டாய் என்ற உணர்வுகளை உள்ளடக்கி அவள் கேட்டாள்.. இவனோ அடிமையை விசாரிப்பதைப் போல விசாரிக்கிறான்.

“வாக்கிங்..”

ஒற்றை வார்த்தையில் ரத்தின சுருக்கமாக பதில் சொல்லிவிட்டு மாடியேறப் போனாள் ப்ரீதி.. அவளுடைய நைட்டியையும், கலைந்திருந்த முடியையும் உறுத்துப் பார்த்த ஆதவன்..

“காலையில் எழுந்தவுடன் வெளியே ஓடிட்ட.. அவனை மீட் பண்ண அவ்வளவு அவசரம்.. ம்ம்ம்..?” என்று பல்லிடுக்கில் வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான்.

“அத்தான்..” அலறி விட்டாள் ப்ரீதி..

அவள் சித்தார்த்தனைக் காட்டில் பார்த்தது உண்மைதான்.. அது தற்செயலாக நிகழ்ந்த சந்திப்பு.. திட்டமிட்டு.. பேசிவைத்து சந்தித்த சந்திப்பல்ல.. இவன் வீட்டுக்கு விருந்தாளியாக வந்தால் எதை வேண்டுமானாலும் சொல்லி விடுவானா..?

“நீ என் வீட்டுக்கு வந்திருக்கிறாய்.. நினைவில் இருக்கட்டும்.. உன் அப்பா என்னை நம்பி உன்னை அனுப்பி வைத்திருக்கிறார்.. அதுவும் நினைவில் இருக்கட்டும்.. உன் அப்பாவுக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது..” ஆதவன் கத்தினான்..

“பொறுமையாப் பேசுடா..” விசாகா மன்றாடினாள்..

“வீட்டில் இருக்கிறவங்க காதுகளில் விழுந்து விடப் போகுது..”

“விழட்டும் அம்மா.. அதற்காகத்தான் சத்தம் போடுகிறேன்.. அடுத்தவரின் உறவை உரிமை கொண்டாடுவதே இவர்களுக்கு வழக்கமாகப் போய் விட்டது.”

“ஆதவா..”

விசாகா வாய் பொத்தி பின்வாங்கினாள்.. அச்சம், கோபம், ஆற்றாமை என்று பலதரப்பட்ட உணர்ச்சிக் கலவைகளில் கலங்கிப் போயிருந்தது அவளது முகம்..

ஆர்த்தி தலையில் அடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்து விட்டாள்.. பேப்பரும் கையுமாக இருந்த மாறன் ஓர் ஆழ்ந்த பெருமூச்சுடன் மகனைப் பார்த்து..

“இப்போது என்ன ஆகிவிட்டது ஆதவா..? ப்ரீதி ஜஸ்ட் எ வால்க் போயிருக்கிறாள்.. இதையேன் பெரிது படுத்துகிறாய்..?” என்று நிதானமாக கேட்டார்..

இந்த மனிதர் ஏன் இவ்வளவு நிதானமாக இருக்கிறார் என்றிருந்தது ப்ரீதிக்கு.. அவளுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து மாறன் இப்படித்தான் இருந்தார்.. எதற்கும் பதட்டம் கொள்ளாமல் படு நிதானமாக.. ஓர் யோகியைப் போல..

‘தவம் செய்ய வேண்டிய இடத்தில் தவம் செய்ய வேண்டும்.. யுத்த களத்தில் தவம் செய்யலாமோ..?’

“வாக்கிங் போனவள் அவனுடன் காரில் திரும்பி வந்திருக்கிறாள்.. வசதியாக அதை மறந்துவிட்டு, மறைத்து விட்டுப் பேசுகிறீங்களே அப்பா.. அதுதானே… மறைப்பது உங்களுக்குப் புதிதா என்ன..? பதினாறு வருசங்களாக வீட்டின் சூழ்நிலை சரியில்லைன்னு கட்டின பெண்டாடியையும் பெற்ற பிள்ளைகளையும் மைத்துனர் வீட்டில் விட்டுவிட்டு இந்தக் காட்டுக்குள் மறைந்திருந்தவர்தானே நீங்க..?” ஆதித்தன் போட்ட சத்தத்தில் மாறன் மௌனமாகி விட..

“ஆதவன்..” என்ற கம்பீரமான சித்தார்த்தனின் குரல் மாடிப்படியிலிருந்து கேட்டது..

மாடிக்குப் போனவன் ஆதவன் போட்ட சப்தத்தில் அப்படியே நின்றிருந்திருப்பான் போல.. அண்ணாந்து ப்ரீதி அவனைப் பார்த்த கண்ணீர் பார்வையில் அவனது விழிகளில் சினம் வந்தது.. காக்க வந்த ரட்சகனைப் பார்ப்பதைப் போலச் சித்தார்த்தனை அவள் பார்த்தாள்.. ஆதவன் பேசிய பேச்சில் அவள் துடித்துப் போயிருந்தாள்.. கடுமையான சித்தார்த்தனின் முகம் மேலும் கடுமையானது..

“எங்கே நின்று.. என்ன பேசிக் கொண்டிருக்கிறாய் என்பதை நினைவில் வைத்துப் பேசு.. அதை விட்டு விட்டு மற்றவர்களிடம் நினைவில் இருக்கட்டும்ன்னு குதிக்காதே..”

“ப்ரீதி மற்றவள்ங்கிறது உங்களுக்குத்தான்.. எனக்கு அவள் உற்றவள்.. தட் மீன்ஸ் ரிலேட்டிவ்..”

சித்தார்த்தனின் இமையோரம் துடித்ததைக் கண்டாள் ப்ரீதி.. அவனது கோபம் பெருகுவதில் விசாகா நடுக்கம் கொண்டாள்.. ஆர்த்தியோ தலையைப் பிடித்தபடி ஆதவனை முறைத்தாள்..

ஒன்றைக் கவனித்தாள் ப்ரீதி.. ஆதவனும், சித்தார்த்தனும் ஏறக்குறைய ஒரே வயதுடன்தான் இருந்தார்கள்.. சித்தார்த்தனிடம் இளமைப் பொழிவு அதிகமிருந்தது.. ஆனாலும் அவன் ஆதவனை ‘வா.. போ..’ என ஏகவசனத்தில் பேசினான்.. ஆதவனோ எண்ணையில் போட்ட கடுகாக துள்ளிக் குதித்தாலும் சித்தார்த்தனை ‘வாங்க… போங்க..’ என்று மரியாதையுடன்தான் அழைத்தான்..

“ஸோ.. வாட்..? அதற்காக நீ என்ன வேண்டுமானாலும் பேசுவாயா..? ஆர்த்தி உன் கூடப் பிறந்த தங்கை.. அவளைவிட ப்ரீதி உனக்கு நெருங்கிய உறவில்லை.. மாமன் மகள்தான்.. ஆர்த்தியிடம் இப்படிப் பேசி விடுவாயா..?”

‘நறுக்குன்னு கேட்கிறான்..’ ப்ரீதிக்கு திருப்தியாக இருந்தது..

இந்தக் கேள்வி அவள் மனதில் தத்தளித்துக் கொண்டுதான் இருந்தது.. கேட்கத்தான் முடியவில்லை.. அத்தை, ஆர்த்தி என உறவுகளின் மனங்கள் புண்பட்டு விடுமே என்று வாய்க்குப் பூட்டுப் போட்டிருந்தாள்..

“இந்த வீட்டுக்கு கெஸ்ட்டாக ப்ரீதி வந்திருந்தா நீ என்ன செய்திருக்கனும்..? ஊரைச் சுற்றிக் காட்டியிருக்கனும்.. அதை விட்டு விட்டு அரண்மனைக்குள்ளே அடைத்து வைத்திருந்தா சிட்டியில் பிறந்து வளர்ந்த பெண் என்ன செய்வா..? இயற்கையை ரசிக்கும் ஆசையில் தனியாக வாக்கிங் கிளம்பத்தான் செய்வா.. காட்டில் ஆபத்து வரலாம்.. தெரியாத ஊரில் தனியாகப் போகலாமான்னு பதட்டப் பட்டிருந்தா பாராட்டியிருக்கலாம்.. ஆனால் நீ..? கேட்கக் கூடாத கேள்விகளைக் கேட்கிற.. மைண்ட் யுவர் டங் ஆதவன்.. மாமன் மகளாக இருந்தாலும் மரியாதை கொடுக்கக் கற்றுக்கொள்.. அப்போதுதான் அது உனக்குத் திருப்பிக் கிடைக்கும்.. வெளிநாட்டில் போய் இதைத்தான் கற்றுக் கொண்டாயா..? இப்படிப் பேச உனக்கு வெட்கமாக இல்லை..?”

‘ஆஹா..’ ப்ரீதிக்கு ஆனந்தமாகி விட்டது..

எப்படியெல்லாம் போட்டுத் தாக்குகிறான்.. ப்ரீதியின் முன்னால் வாங்கிக் கட்டிக் கொண்டிருப்பதில் ஆதவனின் முகம் சிறுத்துப்போய் விட்டது.. அதை ஓரக்கண்ணால் ரசித்துப் பார்த்தாள் ப்ரீதி..

“அது என்ன..? ப்ரீதி உன் வீட்டுக்கு வந்திருக்கிறாளா..?”

சித்தார்த்தனின் அழுத்தமான கேள்வியில் ஆதவன் மட்டுமல்ல.. விசாகாவும் ஆர்த்தியும் சேர்ந்து தலை குனிந்தார்கள்.. ஏன் என்றுதான் ப்ரீதிக்கு பிடிபடவில்லை..

‘என்னவாக இருக்கும்..?’

“அடுத்தவரின் உறவை உரிமை கொண்டாட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.. ப்ரீதி தனி மனுஷி.. யாரிடம் பேச வேண்டும், பழக வேண்டும் என்பதை அவள்தான் முடிவு செய்ய வேண்டும்.. காட்டில் தனியாக இருந்தாள்.. வீட்டுக்கு வரும் வழியில் பார்த்தேன்.. மழை.. அவளைக் காரில் கூப்பிட்டுக் கொண்டு வந்தேன்.. அதற்கு இவ்வளவு பெரிய ரகளை செய்வாயா..? இந்த வீட்டில் வேலை செய்யும் வேலையாள்கள் என்ன நினைத்துக் கொள்வார்கள்..? இதையெல்லாம் நினைத்துப் பார்க்க மாட்டாயா..? ராஜ வாழ்க்கை வாழ்ந்தால் மட்டும் போதாது.. அதற்குத் தகுந்தாற்போல பிஹேவியரும் இருக்கனும்.. மைண்ட் இட்..”

ஆதவன் குன்றிப் போய் விட்டான்… மாறன் பேப்பரிலிருந்து பார்வையைத் திருப்பவே இல்லை.. வீட்டு நடப்பை விட நாட்டு நடப்பில் அப்படி என்னதான் இருக்கிறதோ என்று ப்ரீதிக்குக் கோபம் கூட வந்தது.. என்னதான் யோகியாக இருந்தாலும் பெற்ற மகனை ஒருவன் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கும் போது காதிருந்தும் செவிடாக பேப்பர் படித்துக் கொண்டிருக்கக் கூடாது..

“ப்ரீதியை நான் மீட் பண்ணனும்னு நினைத்தா மறைவாக ஏன் மீட் பண்ணனும்..? சொல்லி அடிப்பவன் நான்.. மறைவுக்கும் எனக்கும் சரி வராது.. என் அம்மாவின் வளர்ப்பு அப்படி.. நீ என்ன செய்வ..? உன் உடம்பில் ஓடும் உன் அப்பாவின் ரத்தம் இப்படி பேச வைக்குது.. கணவன் என்ன செய்தாலும் தட்டிக் கேட்காத உன் அம்மாவின் வளர்ப்பு இப்படி.. இப்போக் கேட்டுக்க.. ப்ரீதி உன் வீட்டுக்கு வரலை.. இந்த ஊருக்கு விருந்தாளியாக வந்திருக்கிறா.. அவளுக்கு ஊரைச் சுற்றக் காட்டுவேன்.. எஸ்டேட்டைச் சுற்றிக் காட்டுவேன்.. பேசிப் பழகுவேன்.. இதில் ஒளிவு மறைவுக்கு அவசியமில்லை.. இனியொரு முறை இதைப் பற்றி யாராவது ஓர் வார்த்தை பேசினீங்க.. நடக்கிறதே வேற..”

சித்தார்த்தன் ஒற்றை விரலை உயர்த்தி எச்சரித்து விட்டுப் போய் விட்டான்.. குண்டூசி விழுந்தாலும் கேட்கும் அளவிற்கு அமைதி அங்கு நிலவியது.. விசாகாவின் துயரம், ஆர்த்தியின் வருத்தம், ஆதவனின் குன்றல், மாறனின் மௌனம் என்று எதையும் கவனத்தில் கொள்ளாமல் மாடிப் படிகளை பார்த்தபடி ப்ரீதி பேசினாள்.. அவள் பேச நினைப்பதை பேசித்தான் தீரவேண்டும்.. மற்றவர்களுக்காக என்று மௌனமாக இருந்தால் இதுவே தொடர்கதையாகி விடும்.. அத்துடன் அவளுக்காக சித்தார்த்தன் குரல் கொடுக்கும் போது அவள் மட்டும் பேசாமல் இருந்தால் எப்படி..?

“அத்தை.. நான் அத்தான் வீட்டுக்கு விருந்தாட வரலை.. அத்தை வீட்டுக்கு வந்திருக்கிறேன்.. எனக்கு நீங்கதான் பொறுப்பு.. அத்தான் இல்லை.. அப்பாவுக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பும் உங்களுக்குத்தான்.. அத்தானுக்கு இல்லை.. இனி எது கேட்பதாக இருந்தாலும் நீங்க கேளுங்க.. நான் பதில் சொல்கிறேன்.. அத்தான் கேட்கக் கூடாது..”

ஆணித்தரமாக அவள் அறிவுறுத்தியதில் வெகுண்டு தலை நிமிர்ந்தான் ஆதவன்..

“ஏன் கேட்கக் கூடாது..? எனக்கு அந்த உரிமையிருக்கு..” என்று சீறினான்..

“இல்லை அத்தான்.. உங்களுக்கு அந்த உரிமையில்லை…”

அதற்கு மேலும் அங்கே நின்று வாதிட்டுக் கொண்டிருக்க முடியாமல் பசி வயிற்றைக் கிள்ளியதில் ப்ரீதி மாடிக்குச் செல்லப் படியேறி விட்டாள்.. கீழே

“கேட்டிங்களாம்மா.. அவ பேசறதை..” என்று ஆதவன் கத்துவதும்..

“விடுடா.. மெதுவாப் பேசிக்கலாம்..” என்று விசாகா மகனைச் சமாதானப் படுத்துவதும் காதில் விழுந்தது..

‘மெதுவாக என்ன பேசுவாங்க..?’

ப்ரீதிக்கு அலுப்பாக இருந்தது.. அத்தையின் வீட்டுக்கு வந்திருக்கும் உற்சாகம் காணாமல் போயிருந்தது.. பூனாவுக்குத் திரும்பி விடலாமா என்று யோசித்தபடி படியேறியவள்..

“அவனுடன் சரிக்குச் சரியாக நின்று நீ பேசியது தவறு சித்தார்த்தா.. அந்தப் பெண்ணுடன் நீ காரில் வந்து இறங்கியதும் தவறுதான்.. உன் உயரம் என்ன சித்தார்த்தா..? உன் அம்மா அதை மறந்ததினால் வந்த விளைவுகளைப் பார்த்தவன்தானே நீ.. பாரம்பர்யம்ன்னு ஒன்று இருக்கிறது சித்தார்த்தா.. மதன்பூர் ராஜவம்சத்தில் உனக்காக பெண் கொடுக்கக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.. தகுதியில்லாத சாதாரணப் பெண்ணிடம் நீ பேசிப் பழகுவதை நான் விரும்பவில்லை..” என்ற தொண்டைமானின் கடுமையான பேச்சுக் காதில் விழுந்ததில்.. அப்படியே நின்று விட்டாள்..

0Shares

Reviews – aaranyam azhakanathu / ஆரண்யம் அழகானது

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • X (Twitter)
  • Email
  • Copy Link
Copy link