Chapter 12
எனைத் தேடும் உன் பார்வை..
எனக்கான உன் நேசத்தை
நீ ஒளித்து வைத்தாலும்
வெளிச்சம் போட்டுக் காட்டிக்
கொடுப்பதென்ன..?
“இவர்தான் கார்வர் மார்ஷ்”
ஆர்த்தி சுட்டிக் காட்டினாள்.. ஸ்வெட்டரை மீறித் துளைத்த பனியில் வெடவெடத்தபடி பார்த்தாள் ப்ரீதி.. வெண்மையான ஐஸ்கிரிம் சிதறல்கள் போலக் கொட்டும் பனிக்குள் சிலை தெரிந்தது.. பனிக்கு அஞ்சாத ஓர் சிங்கமென நிமிர்ந்து நின்று தான் உருவாக்கிய ஊரை கர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார் அந்த வெள்ளைக்காரர்.. உண்மையிலேயே ஓர் ஆங்கிலேயர் நிற்பதைப் போலத் தெரிந்ததில் மெய்சிலிர்த்துப் பின் வாங்கினாள் அவள்..
அச்சம் கூட மெய்சிலிர்க்க வைக்குமா..?
“பயந்தாங்குளி.. சிலையைப் பார்த்தாப் பயப்படுவ..?” கேலி செய்தாள் ஆர்த்தி..
“உனக்கென்ன.. உன் ஊர் இது..”
“என் ஊரா..?”
ஆர்த்தியின் துயரம் தோய்ந்த பார்வை தொலைதூர மலை முகடுகளில் எதையோ தேடி அலைந்தது.. ப்ரீதி துணுக்குற்றாள்.. அவள் ஏதும் தவறாய் சொல்லி விடவில்லையே.. உள்ளதைத்தானே சொன்னாள்..
“ஆர்த்தி..?”
ப்ரீதியின் குரலில் ஆர்த்தி புன்னகைத்தாள்.. உயிர்ப்பில்லாத புன்னகை.. ஆர்த்தி அப்படிச் சிரிக்க மாட்டாள்.. மனம் விட்டுச் சிரிப்பாள்.. அவளது சிரிப்பு மற்றவர்களையும் தொற்றிக் கொள்ளும்..
இரண்டு நாள்களாக யாரும் உயிர்ப்புடன் இல்லை.. கடமைக்காக பேசி நடமாடிக் கொண்டிருப்பதைப் போல இருந்தது.. அதனால்தான் ப்ரீதி தான் பூனாவுக்குத் திரும்பிவிட உத்தேசித்திருப்பதை உடனடியாகச் சொல்ல முடியவில்லை.. ஆதவன் அவளைப் பேசியதுகூட அவளை அவ்வளவு பாதிக்கவில்லை.. அதற்குப் பதில் கொடுத்துப் போட்டுத் தாக்கி விட்டானே சித்தார்த்தன்.. பதில் சொல்ல வேண்டிய வேலையை ப்ரீதிக்கு அவன் கொடுக்கவே இல்லையே.. மிச்சம், சொச்சம் இல்லாமல் வைத்துச் செய்து விட்டானே.. அதற்கு மேலும் ப்ரீதி தன் பங்குக்குச் சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டாள்..
‘ஆனால்.. அந்தப் பெரியவர்.. தொண்டைமான் பேசியது..?’
ஆதவன் பேசியதற்குக் கொடுத்துக் கட்டிய சித்தார்த்தன் அந்தப் பெரியவரின் பேச்சுக்கு ஏன் எதிர் பேச்சைப் பேசவில்லை..? அமைதி காத்தானே.. அந்த அமைதியில் ப்ரீதி உடைந்து போனாளே.. சித்தார்த்தன் என்ன பெரிய இவனா..? அவனுடன் சரிக்குச் சரியாக உரையாடக்கூட அவளுக்குத் தகுதியில்லையா..?
‘சாதாரணப் பெண்..’ தொண்டைமானின் குரல் அவளைத் துரத்தியது.. காதுகளைப் பொத்திக் கொண்டு பூனாவுக்குப் பறந்துவிட வேண்டும் போல இருந்தது..
பெண் என்பவள் வேறு எப்படி இருக்க வேண்டுமாம்..?
தொண்டைமானும் சித்தார்த்தனும் பேசியபடியே மாடி பால்கனிக்குப் போய் விட்டார்கள்.. அதுவரை மூச்சை அடக்கிச் சுவரோடு சுவராக பதிந்திருந்த ப்ரீதி அவளுக்குக் கொடுக்கப் பட்டிருந்த அறைக்குப் பாய்ந்தாள்.. அறையை மூடித் தாழிட்டவுடன் படுக்கையில் விழுந்து கண்களை மூடியவள் எழுந்து கொள்ள ஒருமணி நேரத்திற்கும் மேல் ஆனது.. பசி மறந்து போயிருந்தது..
அடுத்த இரண்டு நாட்களும் ப்ரீதி சித்தார்த்தனின் கண்களில் பட்டுவிடாமல் ஒளிந்து மறைந்து இருந்தாள்.. அவ்வளவு பெரிய அரண்மனையில் ஒருவன் கண்களில் படாமல் ஒளிந்து மறைந்திருப்பது ஒன்றும் சிரமமானதாக இல்லை.. விசாகாவும் அதைத்தான் சொன்னாள்.. எதையோ தொலைத்து விட்ட ஏக்கத்துடன் அண்ணன் மகளிடம் இறைஞ்சினாள்..
“ப்ரீதி.. அவன் கூடப் பேசாதே..”
“எவன் கூட அத்தை..?”
விசாகா ஆதவனைத்தான் சொல்கிறாள் என்று நினைத்தாள் ப்ரீதி, மகன் பேசியதற்காக மனம் வருந்திய அண்ணன் மகளிடம் ஆதவனுடன் பேசாதே என்று ஆறுதல் சொல்கிறாள் என்று நினைத்தாள்.. இல்லை.. அப்படி இல்லை..
“சித்தார்த்தனுடன் பேசாதே..” என்று விசாகா சொன்னாள்..
“அத்தை..”
“ஆதவன் பேசிய தொனி வேண்டுமானால் தவறாக இருக்கலாம்.. அவனுடைய கோபத்தில் தவறில்லை.. நீ என்னுடைய அண்ணனின் மகள்.. நான் இருக்குமிடத்திற்கு விருந்தாளியாக வந்திருக்கிறாய்.. உனக்கு ஆதவன்தான் முக்கியமானவனாக இருக்க வேண்டும்..”
அவளுடைய விசாகா அத்தையா இப்படிப் பேசுவது..? அவள் நியாயவாதி ஆயிற்றே..
“வாழ்வின் போராட்டத்தில் நியாய, அநியாயங்கள் மாறிவிடும் ப்ரீதி..” ஆர்த்தி சொன்னாள்..
இரண்டு நாள்களாக அறையை விட்டு வெளிவராமல் அறைக்குள்ளேயே அடைந்து கிடந்த ப்ரீதியை..
“வா.. வெளியே போய்விட்டு வரலாம்..” என்று இழுத்துக் கொண்டு வந்தது ஆர்த்திதான்..
ப்ரீதிக்கும் அது தேவையாக இருந்தது.. பனியும், மழையும் பொழிவதைக் கண்ணாடிக் கதவுகள் வழியே பார்த்தபடி அறைக்குள் முடங்கியிருப்பது கொடுமையிலும் கொடுமை..
“ம்ம்ம்..”
ப்ரீதி ஆர்த்தியுடன் வெளியே வந்திருந்தாள். அது, இது என ஆர்த்தி பேசிக் கொண்டேதான் வந்தாள்.. ஆர்த்தியினால் பேசாமல் இருக்க முடியாது.. ஆனால்.. இந்தப் பேச்சு ஆர்த்தி பேசும் பேச்சைப் போல ஜீவனுள்ளதாக இல்லையே.. ஏன்..? விசாகாவைப் போலவே ஆர்த்தியும் எதையோ தொலைத்து விட்டதைப் போன்ற வெறுமை நிரம்பிய பேச்சைப் பேசினாள்..
“அவரவர்க்கு அவர் நியாயம்.. அதைத் தவறுன்னு சொல்ல முடியாது ப்ரீதி.. ஆதவனுக்கு நீ அவனோட மாமன் மகள்ங்கிற உரிமை கலந்த நியாயம்.. அம்மாவுக்கு நீ அவங்களோட அண்ணன் மகள், அதனால அவங்க மகனுக்குத்தான் இம்பார்ட்டன்ஸ் கொடுக்கனும் என்கிற நியாயம்..”
“நான் அத்தானுக்கு இம்பார்ட்டன்ஸ் கொடுக்காமல் இல்லையே.. வாட் இஸ் தி மீனிங் ஆஃப் தி இம்பார்ட்டன்ஸ் ஆர்த்தி..? அடிமையைப் போல கைகட்டி வாய் பொத்தி நிற்பதா..? ஆதவன் அத்தான் என்னைக் கம்மாண்ட் பண்ணனும்னு நினைக்கிறார்..”
“நீ அவனோட வுட்-பி ங்கிறதினால அப்படி நினைக்கிறானோ என்னவோ.. அவனோட பாயிண்ட் ஆஃப் வியூவில் அது சரியாப் படுதோ என்னவோ..”
ப்ரீதி அதிர்ந்து போனாள்.. ஆர்த்தி ஆதவனை ஆதரிக்கிறாளா..? ப்ரீதி ஆதவனுக்கு வருங்கால மனைவியா..? அதை ப்ரீதி முடிவு செய்ய வேண்டாமா..? விசாகாவின் குடும்பத்தினர்தான் முடிவு செய்வார்களா..?
கங்காதரன் கூடப் பரவாயில்லை.. தன் விருப்பத்தை அவர் மகள்மீது திணிக்கவில்லை.. கான வயலுக்குப் போ.. ஆதவனுடன் பேசிப் பழகிப்பார்.. அதற்கு மேலும் உனக்கு அவனைப் பிடிக்கவில்லையென்றால் நான் உன்னை வற்புறுத்த மாட்டேன் என்று சொல்லித்தானே அனுப்பி வைத்திருக்கிறார்..
“எனக்குன்னு ஓர் மனசு இருக்கு ஆர்த்தி..”
கடினமாகச் சொல்லி விட்டாள் ப்ரீதி.. வேறு வழியில்லை.. ஓர் சிறுவார்த்தையில் கூட ஆதவனின் வருங்கால மனைவி என்ற வார்த்தையை அவள் அங்கீகரித்து விடக்கூடாது.. இவர்கள் அதையே பிடித்துக் கொள்வார்கள்..
‘பூனாவுக்கு இம்மீடியட்டா ரிட்டர்ன் ஆகிரனும்..’
எப்போதும் மிதமான வானிலை கொண்ட வால்பாறையை அவள் ஏக்கத்துடன் பார்த்தாள்.. இன்னும் சில நாள்கள் இங்கு இருக்க முடியவில்லையே..
“உனக்குன்னு ஒர் மனசு இருக்குதான்.. ஷ்யூர்.. ஐ அக்ரி வித் தட்.. பட் ப்ரீதி.. உன் மனதில் ஆதவனுக்கு ஏன் நீ இடம் கொடுக்கக் கூடாது..?”
ப்ரீதியிடம் இதைப்பற்றிப் பேசு என்று விசாகாவும் ஆதவனும் சொல்லி அனுப்பியிருக்கக் கூடும் என்று யூகித்தாள் ப்ரீதி.. இல்லாவிட்டால் ஆர்த்தி சுற்றிச்சுற்றி ஆதவனை ப்ரீதி நினைத்துப் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டிருக்க மாட்டாள்.. வீட்டை விட்டுக் கிளம்பியதிலிருந்து ஆர்த்தி எதைப் பற்றிப் பேசினாலும் அந்தப் பேச்சு ஆதவனிடம்தான் வந்து நிற்கிறது..
‘ஆர்த்தி மாறி விட்டாளா..?’
ப்ரீதிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.. இழுத்த இழுப்பிற்கு வளைந்து கொடுக்கக் கூடியதா நம் மனம்..? ஒருவர் மனதில் இடம் பெறுவதும் பெறாததும் தன்னியல்பாய் நடக்கும் நிகழ்வு.. திட்டம் போட்டு ஒருவரை மனதில் திணித்து விட முடியுமா..?
ஆர்த்திக்கும் அவளுக்கும் இடையில் ஓர் நூல்வேலி விழுந்து விட்டதைப் போல உணர்ந்தாள் ப்ரீதி.. துயரமாக இருந்தது.. ஆர்த்தி அவளுக்குச் சிறுவயதிலிருந்து தோழி என்பதினால் மட்டுமல்ல.. ப்ரீதியின் அண்ணன் பிரசாத் ஆர்த்தியை விரும்புகிறான்.. ப்ரீதியின் திருமணம் முடிந்ததும் ஆர்த்தி – பிரசாத்தின் திருமணத்தை நடத்தி விடலாம் என்று கங்காதரனும் விசாகாவும் பேசி முடிவு செய்திருக்கிறார்கள்.. பிறந்தவீடு என்பது அண்ணி என்பவளின் வரவுக்கு முன், வரவுக்குப் பின் என்று மாறி விடும் இயல்புடையது.. பிரசாத்தின் பாசம் முழுமையாகக் கிட்ட வேண்டுமென்றால் அவனுடைய மனைவிக்கும் ப்ரீதிக்கும் இடையே நல்லுறவு நிலைக்க வேண்டும்..
அந்தப் பிரச்னையே தனக்கு இல்லை.. அண்ணியாக வருபவள் ஆர்த்திதானே என்று இலகுவாக நினைத்திருந்தாள் ப்ரீதி.. அந்த நம்பிக்கை ஆட்டம் காண ஆரம்பித்திருக்கிறது..
‘ஒருவேளை.. என் மேரேஜ் லேட்டாச்சுன்னா.. இவளும் பிரசாத்தும் காத்திருக்கனும்னு நினைக்கிறாளோ..’
அதுவாகத்தான் இருக்க வேண்டுமென்ற உறுதியில் ப்ரீதியின் மனம் லேசானது.. அவளுக்காக ஆர்த்தி தன் திருமணத்தைத் தள்ளிப் போட வேண்டிய அவசியமில்லை என்பதைச் சொல்லி விட்டால் ஆர்த்தி பழைய ஆர்த்தியாக மாறி விட மாட்டாளா..?
“டோன்ட் வொர்ரி ஆர்த்தி.. நான் அப்பாவிடம் பேசுகிறேன்.. என் மேரேஜ் முடிவதற்காக நீயும் அண்ணாவும் வெயிட் பண்ண வேண்டாம்.. உங்க மேரேஜை முதலில் நடத்திவிடச் சொல்கிறேன்..”
அவசரமாகச் சொன்னாள்.. நிமிர்ந்து அவளைப் பார்த்த ஆர்த்தியின் பார்வையிலிருந்த கோபம் அவளை திகைக்கச் செய்தது.. இது என்ன.. அவள் எதைச் செய்தாலும் இவர்கள் கோபப் படுகிறார்கள்..?
“ஆர்த்தி..?”
“முட்டாளாடி நீ..? நான் எதைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.. நீ எதைச் சொல்கிறாய்..? நாம் ஆதவனைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம் ப்ரீதி.. அண்ணா உன் மீது ஆசைப்படுகிறான்.. அதை நீ கன்சிடர் பண்ணனும்..”
“ஆர்டரா..?”
ஒரு தினுசான குரலில் வினவினாள் ப்ரீதி.. புயலை உள்ளடக்கியிருக்கும் அவளது குரலில் ஆர்த்தி பெருமூச்சு விட்டாள்..
“உனக்கு எப்படிச் சொல்லிப் புரிய வைக்கிறதுன்னே தெரியலை ப்ரீதி.. உனக்கும் அண்ணாவுக்கும் மேரேஜ் நடந்தாகனும்.. இது அம்மாவுக்கும், அண்ணனுக்குமான தன்மானப் பிரச்னை..”
“ஏண்டி.. உனக்கு என்னைப் பார்த்தால் எப்படித் தெரியுது..? இந்தக் கேள்வியை ஆதவன் அத்தான்தான் கேட்க வைப்பார்.. வழக்கத்துக்கு மாறா நீ கேட்க வைக்கறியேடி.. கம்மாண்ட் பண்ணினா எனக்குப் பிடிக்காது ஆர்த்தி.. இது உனக்கே தெரியும்.. இருந்தும் எப்படிடீ கம்மாண்டிங் டோனில பேசற.. என்னை உரிமை கொண்டாடி அத்தையும் அத்தானும் தன்மானப் பிரச்னையை கொண்டு வருகிறதுக்கு நானென்ன புராப்பர்ட்டீயா ஆர்த்தி..? மனுஷிடி.. தனி மனுஷி.. எனக்கும் உணர்வுகள் இருக்கு..”
“நீ இப்படித்தான் பேசுவன்னு எனக்குத் தெரியும் ப்ரீதி..”
“அத்தைக்கும் அத்தானுக்கும் இது தெரியவை..”
“தெரிய வைத்து என்ன பிரயோசனம்..? இரண்டு நாள்களுக்கு முன்வரை உன்னை விட்டு விலகுவது அண்ணனுக்கு ஈஸியா இருந்திருக்கலாம்.. அம்மாவுக்கும் அது சரின்னு தோணியிருக்கலாம்.. விருப்பமில்லைன்னு சொல்கிற பெண்ணைக் கட்டாயப்படுத்தக் கூடாதுன்னு நானும் உன் பக்கம் நின்றிருக்கலாம்.. இப்ப கதையே மாறிப் போச்சேடி.. சொல்லி அடிப்பவன் நான் அப்படின்னு சொல்லிட்டாரேடி..”
ஆர்த்தி ‘அவர்..’ என்று சொன்னது சித்தார்த்தனை என்பதில் ப்ரீதி புருவங்களை உயர்த்தினாள்.. ஆதவனை ஆர்த்தி அவன், இவன் என்றுதான் குறிப்பிடுவாள்.. அவர், இவர் என்பது சித்தார்த்தனை மட்டும்தான்..
“உன்னிடம் அண்ணா தனிப்பட்ட உரிமை கொண்டாட முடியாது.. உனக்கு அவர் ஊரைச் சுற்றிக் காட்டுவார்.. பேசிப் பழகுவார்.. அதில் ஒளிவு மறைவு கிடையாதுன்னு அவர் சொல்லிட்டாரே ப்ரீதி..”
“அதுக்கு..?”
“இது எப்பேற்பட்ட சவால்ன்னு உனக்குத் தெரியாது ப்ரீதி.. இதில் அண்ணன் தோற்றுவிடக் கூடாதுன்னு அம்மா நினைக்கிறாங்க.. உனக்கு அம்மாவின் குணம் தெரியும் ப்ரீதி.. அவங்க யாரையும் ஃபோர்ஸ் பண்ண மாட்டாங்க.. இன்னும் சொல்லப் போனா அண்ணாவா, ப்ரீதியான்னு கொஸ்டின் வந்தா அம்மா உன்பக்கம்தான் நிற்பாங்க.. ஆதவனுக்கு வேறு பெண்ணைத் தேடுவாங்க.. இப்போ அப்படியில்லைடி.. நீ அண்ணாவை மேரேஜ் பண்ணியே ஆகனும்னு அம்மா பிடிவாதமா இருக்காங்கடி..”
“அவங்க பிடிவாதமா இருந்தா எனக்கென்ன வந்தது ஆர்த்தி..?”
“அவங்க சூசைட் பண்ணிக்கிட்டா உனக்கொன்றும் இல்லையா ப்ரீதி..?”
ஆழ்ந்த குரலில் ஆர்த்தி கேட்டதில் அதிர்ந்து போனாள் ப்ரீதி.. இது என்ன..? பிளாக் மெயிலா..? அத்தையின் குடும்பம் அவளை பிளாக் மெயில் செய்கிறதா..? ஆர்த்தியும் சேர்ந்து கொண்டாளா..?
ப்ரீதியின் அதிர்ந்த பார்வையில் கண்கலங்கினாள் ஆர்த்தி..
“இப்படிப் பார்க்காதேடி..” மாமன் மகளின் கைகளைப் பிடித்துக் கொண்டாள்..
மௌனமாகக் கைகளை விடுவித்துக் கொண்ட ப்ரீதி காரை நோக்கி நடந்தாள்.. அதற்கு மேலும் ஊரைச் சுற்றிப் பார்க்க முடியுமா..? அதற்கான மனநிலை வேண்டாமா..?
பனியும், மழையும் நிற்காமல் பொழிந்து கொண்டிருக்கும் அந்தக் குளிர் பிரதேசத்தின் மிதமான சீதோஷ்ணம் ப்ரீதியின் மன வெம்மையை தணித்து விடுமா..?
டிரைவர் காரைக் கிளப்பினான், கிளப்பினான், கிளப்பிக் கொண்டே இருந்தான்.. கார் முரட்டுக் குதிரையாக சண்டித்தனம் செய்து இருந்த இடத்தை விட்டு நகர மறுத்தது..
“இங்கே இப்படித்தான்.. தினமும் ஓர் தடவை ஸ்டார்ட் செய்து வைத்தாகனும்.. இல்லேன்னா இப்படித்தான் மக்கர் பண்ணும்..”
ஆர்த்தி சொல்வது காதில் விழாமல் ப்ரீதி மலை முகடுகளை வெறித்துக் கொண்டிருந்தாள்.. மாமன் மகளின் அதிர்ச்சியை ஆர்த்தியால் புரிந்து கொள்ள முடிந்தது.. இதுபோல ஆர்த்தி பேசியிருக்கக் கூடாதுதான்.. வாழ்வின் சுழல்கள் விளைவிக்கும் நிர்பந்தங்களை ப்ரீதியால் புரிந்து கொள்ள முடியாது.. அவளைப் போன்ற வாழ்க்கை ஆர்த்திக்கும் ஆதவனுக்கும் கிடைக்கவில்லையே..
“என்ன ஆச்சு..?”
கம்பீரமான சித்தார்த்தனின் குரலில் ப்ரீதியின் உள்ளம் அணையுடைத்த வெள்ளமாகத் துள்ள ஆர்த்தியின் முகம் மாறியது..
Reviews – aaranyam azhakanathu / ஆரண்யம் அழகானது
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.