Chapter 13

0Shares

நீ வேண்டாம் என்ற போதும்..

விட்டு விலகும் நிலை வந்தபோதும்..

உனைத்தானே என் மனம் தேடும்..

தப்பியோட வழியில்லாமல் மாட்டிக் கொண்டதைப் போல விழித்தாள் ப்ரீதி.. சித்தார்த்தனைப் பார்ப்பதைத் தவிர்த்து அறைக்குள் அடைந்து கிடந்தாளே.. ஒரே மாளிகையில்தான் இருவரும் இருந்தார்கள்.. ஆனாலும் அவன் பார்வையில் படாமல் அவளால் தப்பிக்க முடிந்தது.. இப்போதோ மாளிகைக்கு வெளியில் இருக்கிறாள்.. அவன் பார்வையில் பட்டு விட்டாளே..

கேள்வி ஆர்த்தியிடம்.. பார்வையென்னவோ ப்ரீதியின் மேல்.. அவனது துளைக்கும் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தவித்துப் போனாள் ப்ரீதி.. மனது குறுகுறுத்தது.

“கார் மக்கர் பண்ணுது..” தழைந்த குரலில் சொன்னாள் ஆர்த்தி..

சித்தார்த்தன் டிரைவரிடம் ஏதோ சொன்னான்.. அவர்கள் பக்கம் திரும்பி.. 

“கட்டபொம்மன் காரை சரி பண்ணி எடுத்து வரட்டும்.. நீங்க என் காரில் வாங்க..” என்று கட்டளையிடும் குரலில் சொன்னான்..

அவன் வரச் சொல்லி அழைக்கவில்லை… கட்டளையிட்டான் என்பதைக் கவனித்தாள் ப்ரீதி… அவனுடன் செல்வதில் ஆர்த்திக்குத் தயக்கம் இருந்ததை ப்ரீதியால் உணர முடிந்தது.. அதை மறைத்து அவள் காரை விட்டு இறங்கியது ஏன் என்றுதான் புரியவில்லை.. சித்தார்த்தன் யார்..? அவன் பேச்சுக்கு இவர்கள் எல்லாம் எதற்காக கட்டுப்படுகிறார்கள்..? மாளிகைக்குள்ளே 

வந்து ஆதவனைச் சப்தம் போட்டு அடக்கும் அளவுக்கு சித்தார்த்தனுக்கு அதிகாரம் இருக்கிறதே… எப்படி..? தொண்டைமான் யார்..? மற்றவர்களை சித்தார்த்தன் கட்டுப் படுத்தினால்… அவர் சித்தார்த்தனையே கட்டுப் படுத்துகிறாரே.. எதனால் அந்த அதிகாரத்தை சித்தார்த்தன் அவருக்குக் கொடுத்திருக்கிறான்..? அவனுடைய தாத்தா என்பதினாலா..?

கேள்விகள்.. கேள்விகள்.. கேள்விகள்..

விடைதான் தெரியவில்லை.. அதைச் சொல்லாமல் ஆளாளுக்கு எதையெதையோ சொல்லி அவர்களின் மனவோட்டப்படி அவளை திசை திருப்ப முற்படுகிறார்கள்.

“ஆர்த்தி.. நாம் சுற்றிப் பார்க்கத்தான் வந்தோம்.. கார் மக்கர் பண்ணினா என்ன..? பக்கத்திலே சுற்றிக்கிட்டு இருக்கலாம்.. கார் சரியானதும் போகலாம்..” சித்தார்த்தனின் முகம் பார்க்காமல் சொன்னாள் ப்ரீதி..

அவனுடன் போகாமல் மறுத்துப் பேச அவளுக்குச் சிரமமாகத்தான் இருந்தது.. இரண்டு முறை அவனுடன் கானகத்தில் தனித்து நின்று பேசியிருக்கிறாள்.. அதில் ஓர்முறை காரில் அவனுடன் தனித்துப் பயணித்திருக்கிறாள்.. இரண்டு தருணங்களும் அற்புதமான தருணங்கள்.. ஆழ்ந்த அறிவுடன் அவன் பேசிய பேச்சுக்களும்.. மின்னல் கீற்றுக்களாக அவன் பார்த்த பார்வைகளும்.. அவள் மனதில் பதிந்திருந்தன.. கூடவே அவளது உள்ளங்கை உணர்ந்த அவனது இதழ்களின் ஈர முத்தம்..!

இவற்றையெல்லாம் அவள் மறந்துதான் ஆக வேண்டும்.. அவன் யாரோ எவரோ.. தொண்டைமான் கேட்டாரே.. அவனது உயரத்தை அவன் மறந்து விட்டானா என்று..

அப்படியென்ன அவன் அவளால் தொடமுடியாத தொடுவானைப் போன்ற உயரத்தில் இருப்பவனா..? அப்படியே இருந்தாலும் அவளுக்கு அது முக்கியமில்லையே.. அவன் தனித்துத் தெரிந்தான்.. பெண்களின் மனம் கவரும் வசீகரனாக இருந்தான்.. ஈர்க்கப்பட்ட பெண் மனம்.. நின்று பேசி விட்டது.. அது பெரும் குற்றமா..?

“தகுதியில்லாத சாதாரணப் பெண்ணிடம் நீ பேசிப் பழகுவதை நான் விரும்பவில்லை..” தொண்டைமானின் குரல் அவளது செவிப்பறையில் அறைந்தது..

‘ஆமாம்.. நான் சாதாரணப் பெண்தான்.. ஆனால் சுயமரியாதையை உயிராய் நினைக்கும் பெண்.. இந்த சித்தார்த்தனிடம் பேசிப்பழக விரும்பவில்லை.. நீங்கள் இவனைப் பிடித்து வைத்துக் கொள்ளுங்கள்..’ ப்ரீதியின் முகம் கலங்கிச் சிவந்தது..

அவன் பக்கத்தில் நிற்பது சவாலாக இருந்தது.. அணையுடைந்த வெள்ளமாக ஆர்ப்பரிக்கும் மனதை அடக்க வெகுவாக பிரயத்தனப் பட்டாள் ப்ரீதி.. ஓடி விடவேண்டும்.. என்று மனது துடித்தது.. கால் நகர மறுத்தது..

ப்ரீதி சொன்னதைக் கேட்ட ஆர்த்தியின் முகம் மலர்ந்து விட்டது..

“அதுவும் சரிதான்..” அவள் குதூகலத்துடன் சொன்னாள்..

“எது சரி..?” ப்ரீதியை உறுத்துப் பார்த்தபடி கடுமையாகக் கேட்டான் சித்தார்த்தன்..

“அது.. வந்து..” ஆர்த்தி தடுமாறினாள்..

ப்ரீதிக்கு சினம் பொங்கியது.. தொண்டைமான் சொல்வதை மறுத்துப் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தவன் எந்த உரிமையில் அவளை அதட்டுகிறான்..? சொந்த அத்தையின் மகனுக்கே அவள் அந்த அதிகாரத்தைக் கொடுத்ததில்லை.. இவன் யார் அவளை அதட்ட..?

“நாம் ஊர் சுற்றிப் பார்க்க நினைப்பது சரின்னு சொல்லு ஆர்த்தி..” அவன் முகம் பார்க்காமல் பதிலடி கொடுத்தாள்..

“ஊர் சுற்றிப் பார்க்க ஏறிவந்த கார்தான் மக்கர் பண்ணுதே..”

“மக்கர் பண்ணினா சரி பண்ணிக்கலாம்ன்னு சொல்லு ஆர்த்தி..”

“அதுக்கு நேரமாகும்..”

“ஆனா ஆகட்டும் ஆர்த்தி.. ஊர் சுற்றிப் பார்க்க கிளம்பி வந்தவளுக்குத் திரும்பிப் போக வழி தெரியும்ன்னு சொல்லு ஆர்த்தி..”

“ஊஹீம்..?”

சித்தார்த்தனின் சிவந்த கண்களில் பயம் கொண்ட ஆர்த்தி..

“வால்பாறை சந்தையை இவள் பார்க்கனும்னு ஆசைப்பட்டா.. அதை இவளுக்குக் காட்டி விட்டுக் காய்கறிகளும் கொஞ்சம் மளிகை ஜாமானும் வாங்கிக்கிட்டு வர்றதா அம்மாவிடம் சொல்லி விட்டு வந்தேன்.. அதனால கார் சரியானதும் நாங்க வந்துக்கிறோம்.. நீங்க போங்க..” என்றாள்..

“இதை நீதான் சொல்வியா..? உன் மாமன்மகள் என்னிடம் பேச மாட்டாளா..?” கோபமாக கேட்டான் சித்தார்த்தன்..

ஆர்த்தி மௌனித்தாள்.. ப்ரீதி சித்தார்த்தனுக்கு நேரடியாகப் பதில் சொல்லாததில் அவள் சந்தோச மடைந்திருந்ததை மற்ற இருவரும் உணர்ந்தார்கள்.. சினம் கொண்ட சித்தார்த்தனின் பார்வையை சந்திப்பதைத் தவிர்த்தாள் ப்ரீதி.. ஆத்திரத்துடன் காலடியில் இருந்த கல்லை அவன் ஓங்கி உதைத்ததில் கல்லானது மலைச் சரிவில் கடகடவென உருண்டோடியது.. கார்க்கதவை ஓங்கி அவன் சாத்தியதில் அவனது கோபத்தின் பரிணாமம் வெளிப்பட்டது.. சீறிப் பாய்ந்த காரின் வேகத்தைப் பார்க்க முடியாமல் ப்ரீதி விழிகளை மூடிக் கொண்டாள்..

“அண்ணா.. கேட்டாயா..?” ஆர்த்தி செல்போனில் ஆதவனிடம் நடந்த நிகழ்வைப் பற்றி உற்சாகமாக விவரிக்கத் தொடங்கினாள்..

ப்ரீதியின் மனம் கனத்தது.. எதையோ இழந்து விட்டதைப் போலத் தோன்றியது.. சரிவில் தெரிந்த கானகம் அவளை ‘வா’ வென அழைத்தது.. இறங்கி ஓடி, மரங்களுக்குள் புகுந்து, மரத்தின் மீது சாய்ந்து ஓவென அழுதால் நன்றாக இருக்கும்..

‘பூனாவுக்குப் போய் விடவேண்டும்..’

“எவ்வளவு நேரம்டி கையை நீட்டிக் கொண்டிருப்பது..?”

ஆர்த்தியின் சிணுங்கலில் சிந்தனை கலைந்தவள்..

“என்ன..?” என்று விழித்தாள்..

“என்னவா..? எந்தக் கோட்டையைப் பிடிக்க இவ்வளவு யோசனை யோசிக்கிற..? அம்மா லைனில் இருக்காங்க.. உன்னிடம் பேசனுமாம்..”

அப்போதுதான் ஆர்த்தியின் கையில் இருந்த செல்போனை கவனித்தாள் ப்ரீதி.. வாங்கி காதுக்குக் கொடுத்தாள்..

“ப்ரீதி.. என் கண்ணே.. என் மனசே நிறைஞ்சு போயிருச்சு தங்கம்.. என் அண்ணன் மகள்ங்கிறதை புரூவ் பண்ணிட்ட.. ப்ரீதிக்கு ஊரைச் சுற்றிக் காட்டுவேன்.. எஸ்டேட்டைச் சுற்றிக் காட்டுவேன்.. உங்களால் என்ன செய்ய முடியும்ன்னு சவால் விட்டானே.. சித்தார்த்தன்.. இப்ப மூஞ்சியை எங்கே கொண்டு போய் வைத்துக்குவான்..”

இதே ரீதியில் விசாகா பேசிக் கொண்டேபோக.. அந்தக் கொடுமையைக் கேட்கச் சகிக்காமல்..

“யார் இந்த சித்தார்த்தன்..? உங்களுக்கும் அவருக்கும் என்ன சண்டை..? அவர் ஏன் உங்க வீட்டில் இருக்கிறார்..?” என்று கேட்டு விட்டாள் ப்ரீதி..

அவளுக்குத் தெரியும்.. அவளுடைய கேள்விகளுக்குப் பதில் கிடைக்காது என்று.. அவளும் வந்ததில் இருந்து ஆர்த்தியிடமும் விசாகாவிடமும் எப்படியெப்படியோ கேட்டு விட்டாள்.. பதில்தான் கிடைக்கவில்லை.. இப்போதும் அப்படித்தான்.. விசாகா பதில் சொல்லாமல் போனைத் துண்டித்து விட்டாள்..

‘அப்பாடி..’ காதுகளில் குருதி கொட்டுகிறதா என்று பரிசோதித்துப் பார்த்தாள் ப்ரீதி.. ‘ஙொய்’ என்ற சப்தம்தான் வந்தது.. வேறு சேதம் இல்லை..

“நானும் ப்ரீதியும் இப்படியே பொடி நடையா நடந்து வால்பாறை சந்தைக்குப் போகிறோம்.. நீங்க காரை சரி பண்ணிக் கிளப்பிக்கிட்டு அங்கே வந்து எங்களை பிக்-அப் பண்ணிக்கங்க..”

ஆர்த்தி கட்டபொம்மனிடம் சொல்லிவிட்டு ப்ரீதியின் கையைப் பிடித்துக் கதைகள் பேசியபடி நடக்க ஆரம்பித்தாள்.. சுற்றிலும் தேயிலை பாத்திகள்.. ப்ரீதிக்குத்தான் அவற்றின் அழகில் மனம் லயிக்கவில்லை.. மனம் முழுவதும் கோபமாகப் போன சித்தார்த்தனின் 

மீதே இருந்தது..

‘இது கூடாதே..’ அவள் அரண்டு போனாள்..

இந்த ஏக்கத்தை வளர விடக் கூடாது.. முளைக்கும் போதே கிள்ளி எறிந்துவிட வேண்டும்.. அதற்கு அவள் கானவயலில் இருக்கக் கூடாது.. பூனாவுக்கு ஓடிவிட வேண்டும்..

“ஆர்த்தி..”

“சொல்லுடி..”

“நான் பூனாவுக்குப் போகனும்..”

“பாருடா.. பாப்பாவுக்கு வீட்டு நினைவு வந்திருச்சு.. இப்படியாடி அம்மா கோண்டாய் இருப்ப.. வந்து ஒரு வாரம்தான் ஆகுது.. அதுக்குள்ளே பூனாவுக்கு போகனுமாம்.. உனக்கெல்லாம் எதுக்குடி ஊர் சுத்திப் பார்க்கிற ஆசை..?”

“ஏதோ தெரியாத்தனமாய் ஆசைப்பட்டுட்டேன்..”

தொண்டை அடைக்கப் பார்த்தது.. சமாளித்துக் கொண்டு பிசிறில்லாமல் தெளிவாகச் சொல்லி விட்டாள் ப்ரீதி.. மரங்களையும், செடிகளையும், கொடிகளையும், பனிப்புகை மறைக்கும் சாலைகளையும், மேகங்கள் சூழ்ந்த மலை முகடுகளையும், சரிவில் தெரியும் தேயிலைத் தோட்டங்களையும் விரக்தியுடன் பார்த்தாள்.. இவற்றுடன் கொஞ்சி மகிழ்ந்து, பனியில் நனைந்து, மழையில் ஆடி, அருவியில் குளித்து, பறவைகளிடம் கதை பேசி என்று காலம் கழிக்க எவ்வளவு ஆசையாசையாய் ஓடி வந்தாள்.. எதையும் நிறைவேற்றாமல் வந்த ஒரு வாரத்திலேயே ஓடுகிறாளே..

“விடுடி.. ஆதவனுக்கே இந்த ஊர் பிடிக்காது.. பூனாவில் செட்டில் ஆகனும்னு பிளான் பண்ணிக்கிட்டு இருக்கான்.. நானும் உன் வீட்டுக்கு மருமகளா வந்து விடுவேன்.. நாம அங்கே லூட்டி அடிக்கலாம்டி.. ஆதவன் உனக்காக பூனாவில் மாளிகை கட்டித் தருவான்..”

ப்ரீதி ஆதவைன மணக்கச் சம்மதித்து விட்டாள் என்ற தினுசிலேயே பேசித் தள்ளினாள் ஆர்த்தி.. ப்ரீதிக்கு தலையை வலித்தது.. இல்லை என்று கூவ வேண்டும் போல வெறிவெறியாக இருந்தது.. ‘ப்ளீஸ்’ என்று கத்த வாய் திறந்தவள் தன்னை அடக்கிக் கொண்டு..

“அங்கே என்னடி..? திருவிழாக் கூட்டமா இருக்கே..” என்று கைகாட்டினாள்..

“அதுதான் வால்பாறை சந்தைடி..”

பேச்சு திசை மாறியது.. ப்ரீதி நிம்மதியானாள்.. 

‘பூனாவுக்குப் போனதும் அப்பாவிடம் கட் அண்ட் ரைட்டா எனக்கு ஆதவன் அத்தானை மேரேஜ் பண்ணிக்க விருப்பமில்லைன்னு சொல்லி விடனும்..’ மனதுக்குள் தீர்மானித்தாள்..

இவர்களிடம் அவளது முடிவைச் சொல்ல முடியாது.. வீண் வாக்குவாதம் கிளம்பும்.. விசாகா அழுவாள்.. ஆதவன் கத்துவான்.. ஆர்த்தி கெஞ்சுவாள்.. இவற்றில் இருந்து தப்பிப் பிழைக்க வேண்டுமென்றால் இவள் எதுவும் பேசாமல் பூனாவுக்கு ஓடிவிட வேண்டும்.. அங்கே கங்காதரன் இருக்கிறார்.. மகளது விருப்பத்திற்கு மறுப்புச் சொல்ல மாட்டார்.. அவள் ஆதவனைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்த மாட்டார்.. விசாகா குடும்பத்தினர் வற்புறுத்துவதை அனுமதிக்கவும் மாட்டார்..

“எப்படி.. ஜேஜேன்னு திருவிழா போல இருக்குதில்ல..” ஆர்த்தி சிரித்தாள்..

வால்பாறை சந்தை அப்படித்தான் இருந்தது.. காய்கறிக் கடைகளும், மளிகைப் பொருள்கள் விற்கும் கடைகளுமாக களை கட்டியிருந்தது.. ஆர்த்தி வேண்டிய காய்கறிகளையும் மளிகை பொருள்களையும் வாங்கிக் கொண்டிருந்த போதே கார் வந்து விட்டது.. அவர்கள் காரில் ஏறி அமர்ந்ததும்..

“ஐயா போன் பண்ணினாரும்மா..” என்றான் கட்டபொம்மன்..

‘சித்தார்த்தன் போன் பண்ணியிருக்கிறான்..’ பெண்கள் இருவரும் இறுக்கமானார்கள்..

“நீங்க சந்தைக்குப் போயிருக்கிறதாச் சொன்னேன்.. கார் ரெடியாகிருச்சுன்னு சொன்னேன்.. சரின்னு சொல்லிட்டு கட் பண்ணிட்டார்..”

அவன் கோபமாகப் போனாலும் பெண்கள் இருவரும் தனியாக இருக்கிறார்களே என்ற பொறுப்புணர்வில் அவர்களைப் பற்றி விசாரித்திருக்கிறான் என்பதில் ப்ரீதியின் மனதில் இதம் பரவியது..

‘இதுவே ஆதவனா இருந்திருக்கனும்.. எனக்கென்னன்னு இருந்திருப்பான்..’ வெறுப்பு வந்தது..

அரண்மனையின் மேல்படியில் சித்தார்த்தன் நின்றிருந்தான்.. கால்கள் பின்னப் படியேறியவள் அவனை கடந்து போகும் போது லேசாகப் பார்த்தாள்.. கண்கள் இடுங்கத் தீர்க்கமாக அவன் பார்த்த பார்வையின் தீட்சண்யத்தில் அவளது இதயம் நடுங்கியது..

‘ஏன் இப்படிப் பார்க்கிறான்..?’

0Shares

Reviews – aaranyam azhakanathu / ஆரண்யம் அழகானது

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • X (Twitter)
  • Email
  • Copy Link
Copy link