Chapter 26

0Shares

சுந்தர காண்டத்தை விட சுந்தரமானது..

ஆரண்ய காண்டம் அழகானது..

“அதுதான் புலிப்பள்ளத்தாக்கு..”

சித்தார்த்தன் சுட்டிக் காட்ட  அவன் தோள் வளைவில் கைகோர்த்து.. தலைசாய்த்து.. என அவன் மீது படர்ந்து சரிந்திருந்த ப்ரீதி ஒப்புக்கு எட்டிப் பார்த்து விட்டுக் கிடுகிடு பள்ளத்தாக்கில் பயந்து போனவளாக அவனை அப்பிக் கொண்டாள்..

அவனுக்கு அதுதான் வேண்டும்.. வால்பாறையின் மலைப் பகுதியில் அவள் பார்க்காத இடங்களுக்கு அழைத்துச் சென்றுச் சுற்றிக் காட்டி.. அவள் பயந்து அவனுடன் ஒட்டிக் கொள்ளும் சுகத்தை அனுபவிக்கும் சுகத்திற்கு ஈரேழு உலகங்களையும் எழுதி வைத்து விடலாமே..

இதை அவளிடம் சொன்ன போது..

“நினைப்புத்தான்..” என்று நொடித்தாள்..

“கண்டு பிடிச்சுட்டியே.. கள்ளிடி நீ.. இருபத்திநாலு மணி நேரமும் உன் நினைப்புத்தாண்டி..” கள்ளூரும் பார்வை பார்த்தான் அவன்..

“சான்ஸ் கிடைச்சாப் போதுமே.. ஜொள்ளுவிட ஆரம்பிச்சுருவீங்களே.. நான் இந்த நினைப்பைச் சொல்லலைங்க மச்சான்..”

கொங்கு தமிழில் அவள் பேச போதையேறியது அவனுக்கு..

“வேற எந்த நினப்பச் சொன்னீக அம்மணி..?” என்று கொஞ்சினான்..

“என்ற மச்சான் கானவயல் ஜமின் மட்டும்தானுங்க.. ஈரோழு லோகத்துக்கும் ராஜா இல்லைங் மச்சான்..”

“அட.. அம்மணி அதச் சொல்றீகளாக்கும்..”

“ஆமாங்.. மச்சான்..”

அவள் உதட்டைச் சுழித்து அவனை சரசமாகப் பார்த்த பார்வையில் உடல் சூடேற அவன் ஒரு மார்க்கமாக அவளைப்  பார்த்த வேட்கைப் பார்வையில் அரண்டு போனவளைப் போல நடித்தவள்.. இமைகளைக் கொட்டி..

“அப்புடிப் பாக்காதீங்க மச்சான்..” என்றாள்..

“என்ற பொஞ்சாதிய நான் பார்க்காம வேற எவன் பார்ப்பான்டி..?”

“எவனும் கிட்டக்கூட வரமாட்டானுங்க.. இந்த ப்ரீதி சித்தார்த்தனோட பொஞ்சாதியாகி மாசம் ஒன்று ஓடிப் போயிருச்சில்லங்க.. இந்த சுத்து வட்டாரத்தையே கலக்கி கல்யாணம் வைச்சு.. என்ற மச்சான், என்ற கழுத்தில் தாலி கட்டியிருக்கீங்க.. உலகம் முழுசும் தெரிஞ்ச சங்கதியிங்க இது.. சித்தார்த்தனோட பொஞ்சாதிய ஏறெடுத்தும் பாக்கற தில்லு யாருக்கு இருங்குங்க மச்சான்..?”

“உன்ற புருசனுக்கு இருக்குது அம்மணி..”

சித்தார்த்தன் வேட்கையுடன் அவளைத் தொட்டுக் கட்டிக் கொண்டான்.. உரிமையான தழுவல் அது.. அவள் அவனது மனைவி.. ஆதவனை வேண்டாம் என்று மறுத்து விட்டு சித்தார்த்தனைக் காதலித்துக் கல்யாணம் பண்ணிக் கொண்டவள்.. அதில் சித்தார்த்தனின் மனதிலிருந்த ஆறாத மனரணம் ஆறி விட்டது..

குளிர் மழையில் விறைத்துப் போயிருந்தவளைச் சித்தார்த்தன் தூக்கிக் கொண்டு வந்தபோது 

நன்றாக இருந்தவள்.. அரண்மனைக்குள் வந்ததும் குளிர் காய்ச்சலில் விழுந்த விட்டாள்.. ஜன்னியில் அரற்றிக் கொண்டிருந்தவளின் மீது விசாகாவும், ஆதவனும் குற்றப் பத்திரிக்கை வாசித்துக் கொண்டிருக்க.. சித்தார்த்தன் எதையும் கண்டு கொள்ளாமல் மருத்துவர்களை அரண்மனைக்கே வரவழைத்த வேகத்தில் கங்காதரன் யோசிக்க ஆரம்பித்தார்.. இதுபோன்ற கவனிப்பு மாறனிடமிருந்து விசாகாவிற்குக் கிடைத்ததில்லை.. ஏன்.. ஆதித்தனும் மாறனின் பிம்பமாக இருந்தான்.. காய்ச்சல் வேகத்தில் கண் திறக்காமல் கிடந்த மகளிடம் தங்கை காட்டிய துவேசம் அவரை பாதித்தது.. அவரின் கோபத்தையும், ஆட்சேபனையையும் பொருட்படுத்தாமல் சித்தார்த்தன் ப்ரீதியின் பக்கத்திலேயே இரவு முழுவதும் கண்விழித்து உட்கார்ந்திருந்தது அவரை யோசிக்க வைத்தது.. ப்ரீதி குணமானதும் சித்தார்த்தன் தொண்டைமானை அழைத்துக் கொண்டு வந்து கங்காதரனிடம் பெண் கேட்க வைத்தான்..

“அன்றைக்கு என் மகள் செய்த தவறை என் பேரனும் செய்கிறான்.. தடுக்க முடியலை.. என்ன ஒன்று.. என் பெண் தவறான ஒருத்தனை தன் வாழ்க்கைத் துணையா தேர்ந்தெடுத்துட்டா.. என் பேரன் அப்படியில்லை.. சிறப்பான ஒரு பெண்ணை தன் வாழ்க்கைத் துணையா தேர்ந்தெடுத்திருக்கிறான்.. நானே சல்லடை போட்டுத் தேடினாலும்.. என் பேரன் மீது இவ்வளவு பிரியத்தைக் காண்பிக்கிற பெண்ணைத் தேர்ந்தெடுத்திருக்க முடியாது.. உங்க பெண்ணை என் பேரனுக்குக் கொடுங்க.. வாய் வார்த்தைக்காக இல்லாமல் நிஜமாகவே அவள் இந்த அரண்மனையின் மகாராணியாக இருப்பாள்.. என்ன சொல்கிறீங்க..?”

கங்காதரன் என்ன சொல்வார்..? தொண்டைமான் பேச்சை ஆரம்பித்த விதம் தலைக்கனமானதாக இருந்தாலும்.. அவர் பேச்சை முடித்த விதம் அருமையானதாக இருந்தது.. ப்ரீதி சித்தார்த்தனின் மீது உயிரையே வைத்திருக்கும் போது அவர் மறுக்க முடியுமா..?

“அதற்கென்னங்க.. கொல்கத்தாவிலிருந்து என் வொய்பையும் மகனையும் நேரே இங்கே வந்து விடச் சொல்கிறேன்.. நீங்க குறிக்கும் முகூர்த்தத்தில் கல்யாணம் நடக்கட்டும்..” என்று சொல்லி விட்டார்..

ஆதவனால் தன் காதுகளையே நம்ப முடியவில்லை.. கங்காதரன் சித்தார்த்தனுக்குப் பெண் கொடுக்க மறுத்து விடுவார் என்று வெகு உறுதியாக அவன் நம்பியிருந்தான்.. மகளின் விருப்பம்.. அது இது என்று ஆதவனுக்கு வேண்டுமானால் மறுப்புச் சொல்லலாம்.. ஆனால் நிச்சயமாக சித்தார்த்தனுக்குச் சம்மதம் சொல்ல மாட்டார் என்று நினைத்திருந்தான்.. அவனது நம்பிக்கையிலும், நினைவிலும் மண் விழுந்து விட்டது.. கங்காதரன் மகளை சித்தார்த்தனுக்கு மணம் முடித்து வைக்கக் கிளம்பி விட்டார்.. இந்த படுதோல்வியை ஆதவனால் சகித்துக் கொள்ள முடியவில்லை..

“அம்மா..”

விசாகாவை முடுக்கி விட்டான்.. அவள் கண்களில் அணை கட்டியிருந்த கண்ணீரை திறந்து விட்டு ஜலதரங்க கச்சேரியை நடத்தினாள்.. விக்கி விக்கி அவள் அழுது நினைவுபடுத்திய பாசமலர் கதைகளை புறம் தள்ளிய கங்காதரன் அவரது முடிவில் எவ்வித மாற்றமுமில்லை என்று அறிவித்து விட்டார்..

அதற்குப் பின்னால் நடந்ததுதான் நன்றி கெட்டதனத்தின் உச்சகட்டம்.. திருமணத்தில் தானும், தன் பிள்ளைகளும் கலந்து கொள்ள மாட்டோம் என்று விசாகா அறிவித்து விட்டாள்.. மாறன் கலந்து கொள்வது அவரது விருப்பம் என்று சொல்லி விட்டாள்..

“தேவையில்லை..” ஒற்றை வார்த்தையில் அவரை ஒதுக்கி வைத்து விட்டான் சித்தார்த்தன்..

“என் அம்மாவும், பாட்டியுமே இல்லை.. மத்தவங்க இருந்தா என்ன.. போனால் என்ன.. என் கல்யாணத்தில் பெத்தவங்க நிற்க வேண்டிய இடத்தில் என்னோட ஒன்று விட்ட சித்தப்பாவும், சித்தியும் நிற்பாங்க.. நாத்தனார் முடிச்சை அவங்களோட பெண் போடுவா..”

“இல்லை மாப்பிள்ளை..”

சித்தார்த்தனை முதல் முறையாக ‘மாப்பிள்ளை’ என்று உரிமையுடன் அழைத்தார் கங்காதரன்.. அதில் சித்தார்த்தனின் விழிகள் மின்னின.. ப்ரீதி ஆனந்தப் பரவசப்பட்டுப் போனாள்..

“உங்க சித்தப்பாவும், சித்தியும் பெத்தவங்களா கல்யாணத்தில் நிற்கட்டும்.. அதில் எனக்கு ஆட்சேபணையில்லை.. என் தங்கையும் அவளோட கணவரும் நின்றா உங்க அம்மாவின் ஆத்மா சாந்தியடையாது.. ஆனா.. நாத்தனார் முடிச்சை ஆர்த்திதான் போடனும்.. அவ என் வீட்டுக்கு மருமகளாய் வரப் போகிறவ.. ப்ரீதியும், அவளும் ஒருவர் முகத்தில் ஒருவர் விழித்துத்தான் ஆகனும்.. பிரசாத்தை கல்யாணம் பண்ணிக்கனும்ங்கிறனும் என்கிற எண்ணமிருந்தா ஆர்த்தி கல்யாணத்தில் கலந்துக்கிட்டு நாத்தனார் முடிச்சைப் போடட்டும்.. இல்லை.. அம்மா, அண்ணன் பேச்சைக் கேட்டுக்கிட்டு தள்ளி நிற்கிறதா இருந்தா பிரசாத்தை மறந்து விடட்டும்..” கங்காதரன் உறுதிபட தெரிவித்து விட்டார்..

“பிரசாத் இல்லைன்னா என்ன..? உனக்கு அவனைவிட பெட்டரா ஆயிரம் மாப்பிள்ளைகளைப் பார்ப்பேன்.. நீ கை காட்டு.. நான் உன் கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன்..” ஆதவன் குதித்தான்..

“எப்படி நடத்தி வைப்ப அண்ணா..? சித்து அண்ணன் பணத்திலதான நடத்தி வைப்ப..” நிதானமாக ஆர்த்தி கேட்டபோது ஆதவனுக்கு முகத்தை எங்கே வைத்துக் கொள்வது என்று தெரியவில்லை..

‘சபாஷ் ஆர்த்தி..’ ப்ரீதிக்கு கைதட்ட வேண்டும் போல இருந்தது..

அவளது நியாயவாதியான தோழி மீண்டு விட்டாள்.. சித்தார்த்தனிடம் பாரபட்சம் காட்டிய ஆர்த்தி நேர்வழிக்குத் திரும்பி விட்டாள்.. ப்ரீதி ஆர்த்தியைக் கட்டிக் கொண்டாள்..

“நீ என் தங்கை ஆர்த்தி..”

“சித்து அண்ணாவுக்கும் நான் தங்கை.. அதை மறந்து விட்டாயா..?” ஆர்த்தியும் நினைவுறுத்தினாள்..

“நம்மை மனிதர்களாகவே இவன் நினைத்ததில்லை..”

“அதை நாம் கண்டு கொண்டதே இல்லை.. அண்ணாவோட செல்வத்தில் வாழ்ந்துக்கிட்டு இருக்கோம்.. நீயும் நானும் உடுத்திக்கிட்டு இருக்கிற டிரஸ்.. சாப்பிட்ட, சாப்பிடும் சாப்பாடு.. இருக்கும் அரண்மனை.. படித்த படிப்பு.. ஆளுக்கொரு கார்.. உன் பெயரிலும், என் பெயரிலும், ஏன் அம்மா பெயரில் கூட வாங்கப் பட்டிருக்கிற சொத்துக்கள்.. நீ தொழில் தொடங்கப் போகிறதுக்கான பணம்.. என் கல்யாணத்துக்கான தாய் வீட்டுச் சீதனம்.. இத்தனையும் அண்ணன் நமக்குக் கொடுத்தது.. இதையெல்லாம் எந்த உரிமையில் அனுபவித்துக்கிட்டு இருக்கோம் அண்ணா..? எனக்குத்தான் விவரம் தெரியாது.. எட்டு வயது குழந்தை.. உனக்கு பதினைந்து வயது.. இங்கே வர மாட்டேன்னு நீ சொல்லியிருக்கலாமே.. என்னையும் கைபிடியில் நிறுத்தியிருக்கலாமே.. நாம கான வயலுக்கு வராமல் பூனாவிலேயே இருந்திருந்தால் மாமா நம்மை வளர்க்க மாட்டேன்னு சொல்லியிருப்பாரா..? ரோசக்காரன்தானே நீ..? ஏன் வந்த..? இதெல்லாம் நம் அப்பாவோட சொத்து சுகமில்லைன்னு தெரிந்தும் எந்த உரிமையில் ராஜ வாழ்க்கை வாழ ஆரம்பித்த..?”

ஆர்த்தியின் கேள்விகளில் முகம் சிறுத்துப் போன ஆதித்தன் பிரசாத்தின் மீது இருக்கும் மோகம் ஆர்த்தியின் கண்களை மறைக்கிறது.. பெற்ற தாயையும், உடன் பிறந்த அண்ணனையும் அவமானப்படுத்தத் துணிந்து விட்டாள் என்று ஆர்த்தியைத் தூற்றினான்.. விசாகா மகளுக்கு சாபங்களை அள்ளி வழங்கினாள்.. எத்தனை துவேசத்தை மனதில் வைத்துக் கொண்டு சித்தார்த்தனின் அரண்மனையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறாள் என்பதில் ப்ரீதிக்கு அருவெறுப்பாக இருந்தது.. அவள் நேசித்த அத்தையா இவள்..? பிரியத்தைக் கொட்டிய அத்தையா இவள்..? கள்ளம் கபடமில்லாத.. சூது வாது தெரியாத பச்சை மண் என்று தங்கையைப் பற்றிச் சொல்லி கங்காதரன் கண் கலங்குவாரே.. அந்த மாசில்லாத மாணிக்கமா இவள்..?

சித்தார்த்தனின் திருமண நிகழ்வுகளில் பங்கெடுத்துக் கொள்ள மாட்டோம் என்று புறக்கணித்து விசாகாவும், ஆதவனும் பெங்களூருக்குக் கிளம்பி விட்டார்கள்.. ஆதவன் பூனாவில் ஆரம்பிப்பதாக இருந்த கம்பெனியை பெங்களூரில் ஆரம்பிக்கப் போகிறானாம்.. அதற்காக ஒரு வாரத்துக்கு முன்புதான் கம்பெனிக்கான கட்டிடத்தையும்.. ஒர் பங்களாவையும் விலைபேசி முடித்துப் பத்திரப் பதிவு செய்திருக்கிறானாம்.. என்னவோ தன் வீட்டுப் பணம் 

போல கெத்தாக அவன் முகத்தை வைத்துக் கொண்ட பேசியதில்..

“எவர் வீட்டுப் பணம்..?” என்று கேட்டு விட்டாள் ஆர்த்தி..

“விடு ஆர்த்தி..” சித்தார்த்தன் தடுத்து விட்டான்..

“இல்லை அண்ணா.. இந்த அரண்மனைக்குள் ரணகளம் நடந்துக்கிட்டு இருக்கு.. ப்ரீதி வந்த நாள் முதல்.. இந்த நாள் வரை தினமும் போராட்டத்தை உண்டு பண்ணிக்கிட்டு இருக்கான் இவன்.. இந்தப் பக்கம் உங்களுக்கு எதிரா உங்க அரண்மனைக்குள்ளேயே சூழ்ச்சி, போராட்டம்.. இன்னொரு பக்கம் கோடிக்கணக்கில் உங்களிடமே பணம் வாங்கி இவன் பெயரில் பெங்களூரில் சொத்துக்களை வாங்கிக் கொள்வது.. என்னவொரு நன்றி கெட்டத்தனம்..!”

நீ சொன்னால் சொல்லிக்கொள்.. எனக்கொன்று மில்லை என்று ஆதவனும், விசாகாவும் பெங்களூருக்கு மூட்டை கட்டி விட்டார்கள்.. இனி கானவயல் அரண்மனைக்கும் அவர்களுக்கும் யாதொரு சம்பந்தமு மில்லை என்று அவள் சொன்னபோது ஆர்த்தி கேலியாக சிரித்தாள்..

“வாங்க வேண்டியதையெல்லாம் வாங்கிக்கிட்ட பின்னால் இந்த அரண்மனையில் உங்களுக்கென்னம்மா வேலை..?”

விசாகா மகளை முறைத்தாள்.. மாறன் எப்போதும் போல விசாகாவைப் பின்தொடர்ந்தார்.. அதில் விசாகா ஓர் வெற்றிப் பார்வையை சித்தார்த்தனின் மீது செழுத்தினாள்.. அதைக் கவனித்துப் பல்லைக் கடித்த ப்ரீதி.. சித்தார்த்தனுடன் ஒட்டி நின்று அவனது கரத்தை வளைத்துத் தோளில் தலை சாய்த்தாள்.. இப்போது சித்தார்த்தன் ஆதவனை ஓர் பார்வை பார்த்தான்.. ஆதவனின் முகம் விழுந்து விட்டது.. விசாகாவிற்கு முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வது என்றே தெரியவில்லை..

பெற்றவர்களும்.. கூடப் பிறந்தவனும் செய்த நன்றி கெட்டதனத்திற்கு ஈடு செய்வதைப் போல ஆர்த்தி அரண்மனையிலேயே இருந்தாள்.. திருமணம் முடிந்ததும் பெங்களூருக்குப் போய் விடுவாளா என்ற கேள்விக்கு ‘இல்லை’ என்று தலையசைத்தாள்..

“நானை வளர்ந்ததும், படித்ததும் சித்தார்த்தன் அண்ணாவின் பணத்தில் தான்.. இருந்ததும் இருப்பதும் அவருடைய அரண்மனையில்தான்.. மாற்றாந்தாயின் மகள்தான் நான்.. வேறு வேறு தாயின் வயிற்றில் பிறந்தாலும் மாறனின் பிள்ளைகள்தானே நாங்கள்.. பெங்களூருக்குப் போவேன்.. விருந்தாளியாக.. எனக்குத் தாய்வீடு கானவயல் அரண்மனைதான்.. தாய், தகப்பன்.. ப்ரீதியும் சித்தார்த்தன் அண்ணாவும்தான்..”

ஆர்த்தி தெளிவாகச் சொல்லி விட்டாள்… அவள் எங்கிருந்தாலும் அவளுக்குச் செய்ய வேண்டிய சீர்வரிசையை சித்தார்த்தன் செய்வான் என்று அவளுக்குத் தெரியும்.. ஆதவனுக்குக் கொடுத்ததைப் போல அவள் பெயரிலும் சொத்துக்களை வாங்கிக் கொடுப்பான் என்றும் அவளுக்குத் தெரியும்.. ஏற்கனெவே அவள் பெயரில் சொத்துக்களை வாங்கிக் கொடுத்திருப்பவன்தானே..

இருந்தும் ஆர்த்தி கானவயலில் தேங்கி நின்றாள்.. மாற்றாந்தாயின் மகனாக இருந்தாலும்.. வெறுப்புடன் ஒதுங்கியிருந்தாலும்.. தன் தகப்பனுக்குப் பிறந்து விட்டாள் என்பதற்காக தமையனின் பொறுப்பைத் தட்டிக் கழிக்காமல் தன் செல்வத்திலிருந்து சிறிதளவைக் கொடுத்த நன்றிக் கடனுக்காக கடைசிவரை அவன் தரும் நிழல் மட்டுமே தன் தாய்வீடு என்று நின்று விட்டாள்..

சித்தார்த்தனின் திருமணம் வெகு விமரிசையாக நடந்தது.. ஜெய்ப்பூர் ராஜ வம்சத்தினர் சாருலதாதேவியின் தாய் தந்த சீதனமாக வைரங்களை பரிசளித்துத் திருமணத்தை நடத்திக் கொடுக்க வந்து நின்றார்கள்.. ஆதவனுக்குப் பெண் கொடுக்க முடியவில்லையே என்ற வருத்தம் கங்காதரனின் மனதில் ஓர் ஓரமாக இருந்தது.. பார்கவிக்கும், பிரசாத்திற்கும் அந்த துளியளவு எண்ணம் 

கூட இல்லை.. சித்தார்த்தனை அவர்களுக்கே மிகவும் பிடித்திருந்தது..

தேநிலவிற்குக் கிளம்புவதற்கு முன்னால் ஆர்த்தி, பிரசாத்தின் திருமணத்தை நடத்தி வைத்து விட்டான் சித்தார்த்தன்..

“கல்யாண வயசில் தங்கை இருக்கிறப்ப நான் ஹனிமூன் கொண்டாடக் கிளம்பிப் போனால் நன்றாகத்தான் இருக்கும்..” என்றான்..

ஆதவன் இதைச் சொல்வானா என்ற நினைவில்..

“அண்ணா..” என்று அவன் பாதம் பணிந்தாள் ஆர்த்தி.

தடுத்துத் தூக்கித் தன் தோளில் சாய்த்துக் கொண்டவனின் மனதில் பாசம் கொப்பளித்தது.. அத்தனை காலமாக அந்த அரண்மனையில்தான் ஆர்த்தி வளர்ந்தாள்.. ‘அண்ணா’ என்று பாசமாக அழைத்ததில்லை..

‘இவ வந்தா.. என் வறண்டு கிடந்த வாழ்வில் பாச நீருற்றிப் பயிராக்கி விட்டுட்டா..’ ப்ரீதியை காதலுடன் பார்த்தான்..

பிரசாந்தையும், ஆர்த்தியையும் சுவிட்சர்லாந்திற்கு தேநிலவு கொண்டாட அனுப்பி வைத்து விட்டு.. ப்ரீதியிடம்..

“இப்பச் சொல்லுடி.. நாம ஹனிமூனைக் கொண்டாட எங்கே போகலாம்..? வெர்ல்டு டூர் போகலாமா..?” என்று காதலுடன் கேட்டான்..

ப்ரீதி அவனை நெருங்கி அப்பிக் கொண்டு அவன் விரலோடு விரல் பிணைத்தாள்..

“நமக்குக் கல்யாணமானவுடன் அடுத்த முகூர்த்தத்திலேயே அண்ணா, ஆர்த்திக்குக் கல்யாணம் பிக்ஸ் பண்ணிட்டிங்க.. இருபது நாளாச்சு.. இன்னும் பத்து நாள் இங்கேயே சுற்றி வரலாம்.. அதுக்கப்புறம் உலகத்தைச் சுற்றப் போகலாம்..”

“ஏண்டி..?”

“இந்தக் காட்டில்தான் உங்களை முதன் முதலா பார்த்தேன்.. இந்தக் காடுதான் உங்களையும் என்னையும் சேர்த்து வைத்தது.. உரிமையில்லாதவளா உங்களுடன் சுற்றி வந்த இந்தக் காட்டை.. உரிமையுள்ளவளா… உங்க வொஃய்பா உங்களுடன் சுற்றிப் பார்க்கனும்னு ஆசைப்படறேன் சித்து..”

அவளது விருப்பப்படி அவர்கள் ஊரைச் சுற்றி வந்தார்க்ள.. அதன்பின் உலகைச் சுற்றி வரக் கிளம்பிய போது மலைப்பாதையின் சரிவில் தெரிந்த கானகத்தை அவள் பார்த்தாள்.. அது மரங்களின் கிளைகளை அசைத்து வாழ்த்துச் சொல்வதைப் போல இருந்தது..

ஆரண்யம்தான் எவ்வளவு அழகானது..! அருவிகளையும், ஆறுகளையும் உள்ளடக்கியது.. பறவைகளுக்கும்.. விலங்குகளுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் அடைக்கலம் கொடுப்பது.. நம் வாழ்வும் ஓர்வகையில் ஆரண்யம்தான்.. ரசிக்கத் தெரிந்தால்.. நம் வாழ்வு இனிக்கும்..

– முற்றும் –

0Shares

Reviews – aaranyam azhakanathu / ஆரண்யம் அழகானது

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • X (Twitter)
  • Email
  • Copy Link
Copy link