Chapter 05

0Shares

செந்திலுக்கு வைதேகியின் மீது ஒரு கண் உண்டு.. அவளது துடிப்பான பேச்சும்.. பார்வையும் அவனை ஈர்க்க.. அவளது துடுக்குத்தனத்திற்கு அவன் ரசிகன் ஆகிவிட்டான்.

என்ன ஒன்று.. அவள் மீது கண் வைக்கும்  அவன் மீது பரிதாபம் கொண்டு.. பதிலுக்கு கண் கலந்து.. கண்ணோடு கண் பேச வைதேகி முன் வரவில்லை..

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனாக அவன் வைதேகியின் பார்வையை தன் பக்கம் திருப்ப தினமும் பார்வைக் கணைகளை அவள் மீது தொடுத்துப் போராடிக் கொண்டிருக்கும் போது.. அவன் கண்ணெதிரிலேயே.. சக்திவேலும்.. கௌசல்யாவும்.. பார்வையோடு பார்வையைக் கலந்தால்.. பார்த்துக் கொண்டிருக்கும் செந்திலின் வயிறு எரியாதா?

 ‘ம்ம்’.. சாதுவாய்.. இந்தப் பூனையும் பால் குடிக்குமான்னு இருந்த தங்கை இந்தப் பார்வை பார்க்கிறாள்.. எல்லாம் தெரிந்ததைப் போல வாயடிக்கும்  ‘என் ஆள்’ பார்வையை என் பக்கம் திருப்புவேனான்னு என்னை இப்படிச் சோதிக்கிறாளே…

செந்தில் மனம் கடுகடுக்க நகர முயன்றபோது சக்திவேல் அவனைத் தடுத்தான்.

‘நில்லேண்டா..”

‘எதுக்கு நிற்கச் சொல்கிற..?”

‘கீழே போய் என்னத்தை வெட்டி முறிக்கப் போகிற..?”

‘அதுக்காக வேலையத்துப் போய்.. நீ பக்கத்து வீட்டுப் பொண்ணுக்கு நூல் விடுகிறதை வேடிக்கை பார்த்துக்கிட்டு இங்கேயே நிற்கச் சொல்கிறாயா..?”

‘கண்டு பிடித்து விட்டாயே…”

‘ஆமாண்டா.. இது பெரிய பிரம்ம சூத்திரம் பாரு.. நான் கண்டு பிடித்து விட்டேன்னு மகிழ்ந்து போகிறதுக்கு.. அதுதான் பௌர்ணமி நிலா வெளிச்சம் போலப் பளிச்சுன்னு தெரியறதே..”

செந்திலின் பொறுமலைக் கேட்ட சக்திவேல் அவனுக்குப் பதில் சொல்லாமல் கௌசல்யாவை விழுங்கி  விடுவதைப் போலப் பார்த்து வைத்தான்..

அவனது பார்வையைக் கண்ட அவள் முகம் சிவந்தாள்.

 ‘பார்வையைப் பார்.. அப்படியே ஆளைத் தூக்கி சாப்பிட்டு விடுவதைப் போலப் பார்க்கிறானே..  பக்கத்தில் அக்கா இருக்கும் நினைப்பு வேண்டாமா..?”

அவள் கணிப்பை அடுத்த நொடியில் உண்மையாக்கினாள் வைதேகி..

‘என்னடி கௌசி.. பக்கத்துவீட்டுக்காரன் உன்னை இப்படிப் பருகு பருகுன்னு பார்க்கிறானே.. என்னவாம்..?” என்று அக்கறையாக விசாரித்தாள் அவள்..

‘என்கிட்ட கேட்டா.. நேக்கென்ன தெரியும்..?” கௌசல்யா தமக்கையை முறைத்தாள்..

‘உன்கிட்டக் கேட்காமல்.. தோ.. தெருவில் போகிறான் பாரு.. எதுத்த வீட்டுக் கடன்காரன்.. நடையை அங்கே வைச்சிக்கிட்டு.. முழியை இங்கே வைச்சுக்கிட்டு.. அவன்கிட்டேயா போய் கேட்பாங்க..?”

வைதேகியின் பார்வை தெருவிற்குத் தாவ.. அக்கா.. தங்கை இருவரையும் ஒரு சேரப் பார்ததபடி.. நடந்து வந்து கொண்டிருந்த ரமேஷ்.. தடுமாறி விழப் போனான்..

‘ஏண்டா பிரம்ம’த்தி.. நோக்கென்ன முதுகிலயா கண் இருக்குது..?” 

அவனுக்கு எதிரே வந்த கோமளம் பாட்டி திட்டி விட்டுப் போக.. அவன் அதை சட்டையே பண்ணிக் கொள்ளாமல்.. அண்ணாந்து மாடியைப் பார்க்க ஆரம்பித்து  விட்டான்..

‘அடிப்பாவி.. ஒரே நேரத்தில் இத்தனை பேரையும் பார்த்து வெச்சா.. அவா என்ன பண்ணுவான்னு.. கொஞ்சமாவது யோசிச்சுப் பாரேண்டி.. பாவம்.. உன்னால அவன் கோடி வீட்டுப் பாட்டிக்கிட்ட திட்டு வாங்கறான்..”

‘அவனை யாருடி.. காணாதiத்க கண்டதைப் போல.. ‘ஆ’ ன்னு  அண்ணாந்து பார்க்கச் சொன்னது..? அவன் கதையை விடு.. உன் கதைக்கு வா..”

‘என் கதையென்ன..?”

சக்திவேலின் பக்கம் திருட்டுத்தனமாய் பார்த்தபடி கௌசல்யா ஒன்றும் அறியாத மழலை போல முகத்தை வைத்துக் கொண்டு கேட்டாள்..

அதைப் பார்த்த வைதேகி ஆச்சரியப்பட்டுப் போனாள்..

‘அது எப்படிடீ.. இப்படி.. ஒன்னும் தெரியாத சின்னப் பாப்பாவைப் போல போஸ் கொடுக்கிற..?”

‘பாப்பான்னு  சொன்னே.. நடக்கிறதே வேற..”

‘என்னடி செய்வே..? நீ தான் அம்மாவுக்கு செல்லப் பொண்ணாச்சே.. போய்.. கோள் சொல்லப் போகிறாயா..? போ.. போய் சொல்லு.. நீ போகலைன்னா.. நான் இப்பக் கீழே போவேன்..”

‘போயி…?”

‘அம்மாகிட்டச் சொல்லுவேன்..”

‘என்னன்னு…”

‘அம்மா.. அம்மா.. உன் சின்னப் பொண்ணுக்கு காதல் வந்துடுச்சுன்னு சொல்வேன்..”

சட்டென்று வைதேகியின் வாயை கௌசல்யா மூட.. அதை ரசித்துப் பார்த்துக்  கொண்டிருந்த சக்திவேல்.. பக்கத்தில் நின்று கொண்டிருந்த செந்திலிடம்..

‘நிஜம்தாண்டா..” என்றான்..

‘எதுடா நிஜம்..?” அவன் பல்லைக் கடித்தான்..

‘அவ பௌர்ணமி நிலா வெளிச்சம் போலத்தான் இருக்கிறா..”

‘எவ.. அவ..?”

‘நிச்சயமாய் உன் ஆளிலில்லை…”

சக்திவேல் கௌசல்யாவின் பக்கம் பார்த்த பார்வையைத் திரும்பாமல் பதில் சொல்ல.. செந்திலுக்கு தூக்கி வாரிப் போட்டது..

‘என்னடா சொல்கிற…?”

‘ஏன் இந்த முழி முழிக்கிற..? நான் என்ன சொல்கிறேன்னு உண்மையிலேயே உனக்குத் தெரியாதா..?”

‘எப்படிடா..?”

‘நீயெப்படி.. என் பார்வையை வைத்து ஆளைக் கண்டுபிடித்தாயோ.. அப்படித்தான் நானும் கண்டு பிடித்தேன்னு வைத்துக்யேன்..”

‘என்னமோ.. போடா.. உன் பார்வைக்கு.. என் பார்வையை இணை கூட்டாதே…”

‘ஏண்டா..?”

‘உன் ஆள் உன்னோட பார்வைக்கு அல்வாப் பார்வையை பதிலுக்கு தருகிறா.. அதுவே பெரியவளைப் பாரேன்.. அவ தாவணி போட்ட காலத்திலிருந்தே நூல் விடுகிறேன்.. அசைஞ்கு கொடுக் மாட்டேன்னு அடம் பிடிக்கிறாளே…”

‘ஐயோ பாவம்.. த்சு..த்சு..”

சக்திவேல் பரிதாப்பட.. செந்தில் அவனை அக்கினிப் பர்ர்வை பார்த்தான்..

‘எதுக்கு இப்ப பார்வையால் சுடற..?”

‘நீ எதுக்கு இப்ப பல்லியைப் போல சவுண்டு கொடுத்த..?”

‘இரக்கம்டா..”

‘திமிரு..? ம்’Pம்.. உனக்கு அவளுகளைப் பற்றி தெரியாது.. தெரிஞ்சா.. இவ்வளவு தெனாவெட்டாய் இரக்கப்பட மாட்ட..”

‘ஏன்.. அவர்களுக்கு என்ன..? அன்புச் சகோதரிகளாச்சே..”

‘சரியான வம்புச் சகோதரிகள்டா.. அதுவும் மூத்தது இருக்கே..”

‘யார்..? உன் ஆளா..?”

‘அவளேதான்.. சரியான சண்டிக் குதிரை..”

செந்திலின்  பார்வையால்.. அடக்க முடியாத  அந்த அரேபியக் குதிரையை அடக்கி விட வேண்டும் என்ற தாபம் அப்பட்டமாகத் தெரிய.. சக்திவேல் அவன் தோள்மீது கை போட்டான்..

‘பேசிப் பார்த்தாயா..?”

‘அதெல்லாம் வேலைக்கு ஆகாதுடா..”

‘ஏண்டா..”

‘அவ நின்னு என் பேச்சை கேட்கிற பிறவியில்லை..”

‘அப்ப.. அவ நினைப்பை விட்டுவிட வேண்டியதானே..”

‘முடியலைடா..”

செந்திலின் பார்வை.. வைதேகியின் மீது அதே தாபத்தோடு படிய..  அவள் அலட்சியமாய் முகம் திருப்பிக் கொண்டாள்..

‘காணாததைக் கண்டதைப் போல.. முழிக்கிறதைப் பாரேன்..”

‘யாரைச் சொல்கிற..?” கௌசல்யா குழம்பினாள்..

‘எல்லாம் பக்கத்து வீட்டில் நிற்கிற.. அந்தத் தடியனைத்தான் சொன்னேன்..”

 ‘இவள் சக்திவேலைச் சொல்கிறாளா..?’  கௌசல்யா கவலையுடன் அங்கே பார்க்க.. சக்திவேல் உற்சாகமாகிப் போனான்..

கள்வெறி கொண்டவனாய் அவன் ஜாடையாக்ப பார்ப்பதை விட்டு.. நேராக அவளைப் பார்க்க ஆரம்பிக்க.. கௌசல்யா அரண்டு போய் திரும்பி நின்று கொண்டாள்..

 ‘ஊம்.. இவன் என்னைத்தான் பார்க்கிறான்..’

அவள் நிம்மதியுடன் நினைத்துக் கொண்ட போது…

‘ஏண்டி.. அவன் சும்மாவே உன்னை ஒரு மார்ககமா பார்த்துக்கிட்டிருக்கான்.. நீ வேற.. அவனை நேராய் பார்த்து வைக்கிறாயே.. நோக்கு அறிவே இல்லைடி கௌசி.. பாரு.. நீ தூண்டி விட்டதும் அவன் ஊடால இருக்கிற கைப்பிடிச் சுவரை தாண்டிக்கிட்டு வரலாமான்னு  யோசிக்க ஆரம்பிச்சுட்டான்..”, என்றாள் வைதேகி..

‘ச்சீ.. சும்மாயிருடி..”

‘நான் சும்மாதான் இருக்கிறேன்.. நீதான் கொஞ்ச நாளா.. ஒரு மார்க்கமா இருக்கிற.. என்னடி.. லவ்வா..?

‘வைதேகி..”

கௌசல்யாவின் முகம் அந்தி வானத்தை விட அதிகமாகச் சிவந்து விட.. அதை விசித்திரமாகப் பார்த்தாள் வைதேகி..

‘நிசமாவே நோக்கு லவ் வந்துடுத்தா கௌசி..?”

‘த்சு.. செத்த சும்மா இரேன்..”

‘என்னவோ போ கௌசி.. எனக்கு இந்த லவ்வில் எல்லாம் நம்பிக்கையே இல்லை.. தோ.. அந்தப் பக்கமாய் நின்னுக்கிட்டு.. இத்தனை நாழியும் கனகாரியமா என்னை சைட் அடிச்சுக்கிட்டு நிற்கிறானே அந்த செந்தில் கடன்காரன்.. அவனும் தான் என்னை நினைவு தெரிந்த நாளிலிருந்து சைட் அடிக்கிறான்.. நான் அவனைத் திரும்பிப் பார்த்திருப்பேனா..? நீ மட்டும் எப்படிடீ.. இப்படி விவரமில்லாமல் கவிழ்ந்தே…”

‘நீ அடி வாங்கப் போகிற வைதேகி.. அவனைத் திரும்பிப் பார்க்காமல்.. அவன் காணாததைக் கணடதைப் போல உன்னைப் பார்வையிட்டுக்கிட்டு இருக்கிறான்னு எப்படிச் சொன்ன..?

‘அது.. அது.. வந்து..”

‘ம்ம்.. சொல்லு..”

‘யதார்த்தமாய் பார்த்தேன்.. போதுமா.. போடி.. பெரிய இவளாட்டம் குறுக்கு விசாரணை பண்ண வந்துட்டா'”

‘ஆ.. ஆ.. அப்படி ஈஸியா தப்பிக்க முடியுமா? இப்பத்தானே சொன்னே..?”

‘என்னடி சொன்னேன்..?”

‘விவரம் தெரிஞ்ச நாளிலிருந்து அவன் உன்னை சைட் அடிக்கிறான்னு சொன்னியா இல்லையா..?”

‘ஆமாம்.. அதுக்கென்னடி இப்ப..?”

‘அவன் உன்னை சைட் அடித்தது உனக்கெப்படித் தெரியும்..?”

கௌசல்யாவின்  இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் வெற்றிகரமாய் பின் வாங்கினாள் வைதேகி..

‘இதுக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது.. கீழே அம்மா கூப்பிடுகிறா.. போறேன்..”

‘பொறேண்டி.. நானும் வரேன்..”

‘நீதானே.. வந்து கிழித்த.. உன்னைப் பார்த்தால் இப்போதைக்கு கீழே வருகிற ஆளைப் போலத் தெரியலை.. நான் போறேன்.. நாழியாச்சுன்னு அம்மா என்னனைத்தான் திட்டுவா.. நீதான் அவளோட செல்லப் பெண்ணாச்சே..”

வைதேகி இறங்கிப் போய் விட.. ஏமாற்றத்துடன் செந்திலும் நகர முற்பட்டான்..

‘என்னடா செந்தில்.. கிளம்பிட்டியா..?”

‘ஏன்.. வேணாம்ன்னு சொல்லப் போகிறாயா..?”

‘அது எப்படி.. அப்படிச் சொல்லுவேன்.. உனக்கு ஆயிரம் வேலையிருக்கும்..”

‘அது இப்போதான் உனக்கு நினைவில் வந்ததா..? நடத்து.. நடத்து..”

செந்திலும் போய்விட.. சக்திவேல்.. கௌசல்யாவைப் பார்த்தபடி கைப்பிடிச் சுவரின் அருகே நெருங்கி வந்தான்..

அவனது ஊடுறுவும் பார்வையை உணர்நதவளின் மனம் படபடவென்று அடித்துக் கொண்டது.. ஓடி விட வேண்டும் என்று மனம் கூற.. உடல் அதற்கு ஒத்துழைக்க மறுத்தது..

மாலை மயங்கி இருள் சூழ்ந்து விட்ட அந்த வேளையில்.. இருட்டுக்குள் நிழலோவியமாக நின்று கொண்டிருந்த கௌசல்யாவைப் பார்த்தபடி.. ஊடே இருந்த  சுவரைத் தாண்டி விட்டான் சக்திவேல்..

அதை உணர்ந்த கௌசல்யா.. யாரும் வந்துவிட்டால் என்ன செய்வது என்று அதிர்ந்து நிற்கையில்.. அவள் எதிர்பாராத அடுத்த அதிர்ச்சியை அவளுக்குத் தந்தான் சக்திவேல்..

அவளின் தோள் தொட்டு அருகே இபுத்தவன்.. அவளின் இதழ் மீது இதழ் பதிக்க.. கௌசல்யா நிற்க முடியாமல் தொய்ந்து அவன் மார்பில் முகம் புதைத்தாள்.. அவள் மனதை வென்றுவிட்ட சக்திவேலின் கரங்கள் அவளைத் தழுவிக் கொண்டன…

0Shares

Reviews – Aarathanai / ஆராதனை

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link