Chapter 06

0Shares

‘உன்னை நினைத்ததில்லை…

ஊனுருக நின்றதில்லை…

காத்திருந்து சோர்ந்ததில்லை…

காத்திருக்க வைத்ததில்லை..

நொடிப் பொழுதில் என் மனதைவென்று..

என்னுயிரில் நீ கலந்த பின்பு…

நீயில்லாத ஒரு வாழ்வை…

நினைத்திடவே முடியவில்லை’

ரகசியமான கவிதையை.. ரகசியமாக தன் டைரியில் எழுதிவிட்டு சத்தமில்லாமல் கண்ணீர் சிந்தினாள் கௌசல்யா..

அந்தக் கண்ணீருக்கான காரணத்தை அவளாலேயே அறிய முடியவில்லை.. ஏன் அழுகிறோம் என்று தெரியாமலேயே தலையணையை நனைத்தாள் அவள்..

‘ராத்திரி  பூராவும் ஏண்டி அழுது தொலைச்சே..?”

காலையில் ஈரத்துணிகளை மொட்டை மாடியில் உலர்த்தியபடி வினவினாள் வைதேகி..

‘இல்லியே..” அவள் முகம் பார்க்காமல் பதில் சொன்னாள் கௌசல்யா..

வைதேகி அவள் முகத்தை தன் பக்கம் திரும்பி.. அவள் விழிகளுக்குள் பார்த்தாள்..

‘வைதேகி..” கௌசல்யாவின் குரல் நடுங்கியத..

‘இந்த எழவுக்குத்தான் அந்தக் கருமம் பிடிச்ச காதலை நான் நினைச்சுக்கூட பார்க்கிறதில்லை.. உன்னை விட வயசில் பெரியவ சொன்னா.. நீ காதில் வாங்கிக்கிறியா.. மாட்டேன்னு அடம்பிடிச்சுக்கிட்டு.. இப்ப நீயா ரோதனையை இழுத்து விட்டுக்கிட்டு உட்கார்ந்திருக்கியே.. உன்னை என்ன செய்தால் தேவலாம்டி கௌசி..”

கௌசல்யா விசும்பலுடன் தமக்கையின் தோளில் சாய்ந்தாள்.. ஆதரவாய் அவள் தோள் தட்டி கண்ணீரைத் துடைத்து விட்டு புன்னகைத்தாள் வைதேகி..

‘அழாதேடி அசடு.. இப்ப என்ன நடந்துடுத்துன்னு நீ இப்படி அழுது மாயறே..?”

‘இல்லைடி வைதேகி.. அவர்.. என்னை.. என்னை…”

‘கட்டிப் பிடிச்சு முத்தம் கொடுத்துட்டான்.. அதுதானே?”

வைதேகி இலகுவாக வினவ.. கௌசல்யா விழி விரித்தாள்..

‘வைதேகி..?”

‘எதுக்கு இந்தப் பார்வை பார்க்கிற..? நேக்கு எப்படித் தெரியும்ன்னு பார்க்கிறியா..? நேத்து சாயங்காலம் நான் மொட்டை மாடியை விட்டு 

கீழே இறங்கி வந்ததுமே.. அம்மா உன்னைக் கூப்பிட்டுக்கிட்டு வரச் சொன்னா.. நானும் வந்து பார்த்தா..”

வைதேகி வார்த்தைகளை முடிக்காமல் கண் சிமிட்ட.. கௌசல்யா கைகளில் முகம் புதைத்துக் கொண்டாள்..

அவளைக் கனிவுடன் பார்த்த வைதேகியின் முகத்தில் கவலை மேகம் சூழ்ந்தது..

‘இந்த அறியாப் பெண்ணின் காதல் நிறைவேறுமா..?’

கௌசல்யா கரம் விலக்கி.. அவளைப் பார்ப்பதை உணர்ந்ததும்.. நொடிப் பொழுதில் கலலையை மறைத்துக் கொண்டு சிரித்தாள் வைதேகி..

‘என்னைப் பார்த்து ஏண்டி கௌசி வெட்கப்படறே? தோ.. உன் ஆளே வந்துகிட்டு இருக்கான்.. அவனைப் பார்த்து வெட்கபட்டேன்னு வை.. அதில் ஒரு அர்ததம் இருக்கும்..”

சட்டென்று திரும்பி ஆவலுடன் சக்திவேலைப் பார்த்த கௌசல்யாவின் விழிகள் மின்னின..

அந்த மின்னலைக் கவனித்துக் கொண்டே.. கையிலிருந்த புத்தகத்தை விரித்துப் படிப்பதைப் போலப் பாவனை செய்து கொண்டு ஊடே இருந்த குறுக்கு சுவரில் அமர்ந்தான் சக்திவேல்..

‘பூஜை வேளை கரடி போல.. நான் எதுக்குடி கௌசி.. நான் கீழே போறேன்..”

‘இரு வைதேகி.. நானும் வர்றேன்..”

‘இந்த பாவ்லாதானே வேணாம்கிறது.. இங்கே உன் ஆள் தலைகீழாய் புத்தகத்தைப் பிடித்துக்கிட்டு போஸ் கொடுத்துக்கிட்டு உட்கார்ந்திருக்கச்சே.. கீழே வர உனக்கு கால் வருமா..?”

‘அம்மா தேடுவாளே..”

இப்ப நீ என்னதாண்டி சொல்ல வர்றே.. உன்னை அம்மா தேடக் கூடாது.. அவ்வளவுதானே..  அதுக்கு நானாச்சு.. கவலையை விடு..” 

வைதேகி.. தோழமைக் கரம் நீட்டினாள்.. அவள் போன பின்னால்.. தயங்கி நின்ற கௌசல்யாவின் அருகில் வந்த சக்திவேல்..

‘ஏன் இவ்வளவு நேரம்..?” என்று கேட்டான்..

‘எதைச் சொல்கிறேள்..?” கௌசல்யா புரியாமல் விழித்தாள்..

‘மொட்டை மாடிக்கு வரத்தான்.. வேறு எதைச் சொல்வேன்..?

‘இப்பத்தானே விடிஞ்சிருக்கு?”

‘நான்.. எப்படா விடியும்ன்னு.. வானத்தைப் பார்த்துக்கிட்டு படுத்துட்டேன் தெரியுமா..?”

‘இங்கேயா படுத்திருந்தேள்…?”

‘ம்ம்.. தெரிந்திருந்தால்.. ராத்திரியே நீ வந்திருப்பாயா..?”

‘சீச்சி..”

அவள் முகம் சிவக்க ஓட முயன்ற போது.. அவள் கரம் பிடித்து  தடுத்து நிறுத்தினான் சக்திவேல்..

‘உன்னைப் பார்க்கனுமே..”

‘அதுதான் தினமும் பார்க்கிறேனே..”

‘தனியாப் பார்க்கனும்..”

‘நேத்து தனியாவும் பார்த்தேளே…”

முதல் நாளின் முன்னிரவின் நினைவில் அவள் மனம் மயங்கினாள்.. அவளது மயக்கம் அவனையும் தொற்றிக் கொள்ள.. அவன் கிளர்ச்சியுடன் நெருங்கினான்..

‘ஸ்ஸ். யாராச்சும் பார்த்துவிடப் போகிறாங்க..” அவள் பயத்துடன் பின்னால் நகர்ந்தாள்..

‘இதுக்குத்தான் தனியாய் வான்னு சொல்கிறேன்..” அவன் தடைபட்ட காதல் உணர்வுகளால் எரிச்சலுற்றான்..

‘இதுக்குத்தானா..?” கௌசல்யா தயக்கத்துடன் கேட்டாள்..

அவளையே இமைக்காமல் பார்த்தான் சக்திவேல்.. அவனது பார்வையின் வேகம் தாளாமல்.. தலை கவிழ்ந்தாள் கௌசல்யா..

அவன் உதடுகளை மடித்துக் கடித்துக் கொண்டான்..

‘கௌசி..”

‘ம்ம்ம்..”

‘எப்போதும் உன்னைத் தொட்டு ஆளும் ஆசையில் நான் அலையவில்லை.. நீ இதைப் புரிஞ்சுக்கனும்… “

அவனது  வார்த்தைகளை கேட்டு அவள் சட்டென்று முகம் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்..

அவளுக்கு எதுவோ புரிவதைப் போல இருந்தது..

‘எனக்கு உன் மேலிருப்பது காதல்.. காமமில்லை..”

‘நான் அப்படிச் சொன்னேனா..”

‘நீ சொன்னேன்னு நானும் சொன்னேனா..? இதைப் போல பல கேள்வி.. பதில்களை நாம் பேசியாகனும்.. அது இந்த மொட்டை  மாடியில் முடியாது.. இங்கே நான் உன்னை சைட் அடிக்கலாம்.. சந்தர்ப்பம் கிடைத்தால்.. ஒரு அவசர முத்தம் கொடுக்கலாம்.. ஆனால் எனக்கு அது மட்டும் போதாது..”

‘வேறென்ன வேண்டுமாம்..?’ கௌசல்யாவிற்கு புரிவதைப் போல இருந்தது.. புரியாமல் போனது.

அவள் விழிகளில் அவளது குழப்பத்தைக் கண்டு கொண்ட சக்திவேல் மென்மையாகப் பேசினான்..

‘இன்னும் நிறைய இருக்கும்மா.. நீ என்னைப் புரிந்துக்கனும்.. நான் உன்னைப் புரிந்துக்கனும்.. அதற்கு நாம் தனியாய் சந்தித்தாகனும்..”

‘எங்கே சந்திக்கிறது..?” அவள் குழந்தையாய் கேட்டாள்..

‘எங்கே வேனும்னாலும்.. நீ கூப்பிடுகிற இடத்துக்கு நான் வருகிறேன்.. நீயே இடத்தைச் சொல்லு..”

‘நான் தனியாய் எங்கேயும் போகிறதில்லையே..”

‘காலேஜீக்குப் போகிறாயே..”

‘அது காலேஜுக்கு..”

‘அப்படியே என்னைத் தனியாய் பார்க்க வரலாமே..”

‘அது எப்படி..? அம்மாவும்.. அப்பாவும் .. நான் காலேஜீக்குப் போகிறேனில்ல நினைச்சுண்டிருப்பா..”

‘ஊ'{ம் .. நீ தேற மாட்ட..”

சக்திவேல் சலிப்புடன் கூறியபடி திரும்ப முற்பட்டான்..

‘போகிறானே..’ கௌசல்யா தவித்துப் போனாள்..

‘நில்லுங்கோ..” அவசரமாக.. அவனது கரம் பற்றித் தடுத்தாள்.. 

அவளது மென்மையான ஸ்பரிசத்தை உணர்ந்தவன் நின்றான்.. அவள் முகம் பார்த்தான்.. அவள் விழிகளில் தெரிந்த தவிப்பு அவனை உருக்கியது..

‘என்ன கௌசி..” ஆவலுடன் வினவினான்..

‘ நான் வருகிறேன்..”

‘எங்கே..?”

‘எங்கேன்னு நீங்களே சொல்லுங்கோ.. எனக்கு காலேஜ் தெரியும்.. வீடு தெரியும்.. இது ரெண்டுக்கும் அடுத்தபடி கோவில் தெரியும்..” 

‘ஓகே.. கோவிலுக்குப் போகலாம்..”

‘கோவிலா..?” கௌசல்யா தயங்கினாள்..

‘நான் முதலிலேயே சொல்லிட்டேன் .. எனக்கு உன்மேல் இருக்கிறது காதல்ன்னு.. இதுக்கு மேலேயும் இப்படிக் கேட்கறியே..”

‘ஸாரி..ஸாரி…”

‘இருந்தாலும் நான் கையடக்கி இருக்க மாட்டேன்தான்..”

சக்திவேலின் பார்வை அவள் மேல் தாகத்துடன் படற.. இப்போது உதட்டைக் கடித்துக் கொள்வது அவளின் முறையாகிப் போனது..

‘அதனால் என்ன..? முதல் சந்திப்பு கோவிலில் இருந்தே ஆரம்பிக்கட்டுமே.. “

மருதமலை முருகன் கோவிலுக்கு போகும் வழியில் அவள் நின்றிருக்க.. தன் இரு சக்கர வாகனத்தை அவளருகில் நிறுத்தி “ஏறிக்க..” என்றான் சக்திவேல்..

அவள் பதட்டத்துடன் சுற்றும் முற்றும் பார்த்து வைக்க.. சக்திவேல் முகம் கருத்தது..

‘இயல்பாய் இரு கௌசி..”

‘யாராச்சும்  பார்த்துட்டா…?

‘த்ச்சு.. என்ன இது கௌசி..? இது மொட்டை மாடியில்லை.. கோயம்புத்தூரின் மெயின் ரோடு.. இங்கே உன்னையும் என்னையும் பார்க்கிறதை வி ட முக்கியமான வேலை ஜனங்களுக்கு இருக்கு.. வண்டியில் ஏறு..”

தயக்கத்துடன் அவள் ஏறிக் கொண்டதும். வண்டியைக் கிளப்பினான் சக்திவேல்..

மருதமலைக்கு போகும் ரோட்டில்.. விவசாயக் கல்லூக்கு அருகில் வேறு ஒரு சாலையில் வண்டி திரும்பியதும் .. “எங்கே போகிறேள்..” என்று பதட்டமாக கேட்டாள் கௌவல்யா..

‘ஷஊம்.. உன்னைக் கடத்திக்கிட்டுப் போகிறேன்..”

அவன் விளையாட்டாய் சிரித்தபடி.. விஷ்ணு துர்க்கையின் போவிலருகே வண்டியை நிறுத்தினான்..

‘மலையிலிருக்கிற  மகனைப் பார்க்கப் போகிறதுக்கு முன்னாடி அடிவாரத்திலிருக்கிற அவரோட அம்மாவைப் பார்க்க வேண்டாமா..?”

‘இது குவார்ட்டர்ஸ் போல இருக்கே..”

அந்தக் கோவில் அமைந்திருந்த அரசு ஊழியர்களின் குடியிருப்பை பார்த்தபடி வினவினாள் கௌசல்யா..

‘ஆமாம்..  இது ஜிளாடி குவார்ட்டர்ஸ்.. வா.. அம்மனைக் கும்பிடலாம்..”

விஷ்ணு  துர்க்கையை வணங்கி.. நவகிரகங்களை சுற்றிவிட்டு கோவிலில் அமர்ந்தபோது கௌசல்யாவின் மனதிலிருந்த கொஞ்சநஞ்ச தயக்கமும் பறந்தோடி விட்டது..

அவள் இயல்பாக.. அவனருகில் அமர்ந்து கொண்டாள்.. அதே இயல்புடன்.. அவன் பின்னால் வண்டியிலும் ஏறிக்கொண்டாள்..

மருதமலை அடிவாரத்தில் வண்டியை நிறுத்தி விட்டு.. அவர்கள் படியேறிய போது.. கௌசல்யாவிற்கு.. அவன் யாரோ.. என்று தோன்றவில்லை..

ஏழேழு ஜென்மங்களாக கூடி வாழ்ந்த உணர்வுடன்.. அவள் அவனிடம் கதை பேசியபடி படியேறினாள்..

‘அப்பா கண்டிப்பா இருக்கிறதைப் போல நடிப்பார்.. ஆனா.. கண்டிப்பா இருக்க மாட்டாள்.. அம்மா.. செல்லம் கொடுக்கிறதைப் போல நடிப்பா.. ஆனா.. கண்டிப்பா இருப்பா..”

‘பரவாயில்லலையே .. இந்த அளவுக்கு மனுசங்க குணங்களைத் தெரிந்து வைத்திருக்கயே..”

‘அவங்க யாரோ வேத்து மனுஷா இல்லை.. என்னைப் பெத்தவா..”

‘நானென்ன.. மத்தவான்னா சொன்னேன்..”  

‘பார்த்தேளா.. எங்க பேச்சு வழக்கத்தை கேலி பண்றேள்..”

‘இனிப் பண்ணலை.. ஆமாம்.. வைதேகி எப்படி..?”

‘அவளைப் பற்றி நீங்க ஏன் கேட்கறீங்க..?” அவள் சந்தேகமாய் கேட்கவும் அவனுக்கு சிரிப்பு வந்து விட்டது…

‘அதுக்குள்ள சந்தேகமா..? உங்க அக்காவை சைட் அடிக்கிற உத்தேசமெல்லாம் எனக்கில்லைம்மா.. சும்மா சொல்லு..”

‘வைதேகி வாயாடிதான்.. ஆனா ரொம்ப நல்லவ..”

அவர்கள் முருகனை வணங்கி விட்டு.. சித்தரை வேண்டி விட்டு.. மலையை விட்டு இறங்கும் போது.. மனத்தால் ஒன்றிப் போயிருந்தார்கள்..

0Shares

Reviews – Aarathanai / ஆராதனை

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link