Chapter 14
‘நோக்குத் தெரியாதது ஒன்றுமில்லை வைதேகி.. உன் கல்யாணத்துக்கு அப்பா எவ்வளவு சிரமப்பட்டேன்னு நோக்கே நன்னாத் தெரியும்..”
சாப்பிட்டுக் கொண்டிருந்த வைதேகியின் எதிலே வந்து அமர்ந்த ராமாமிர்தம் பேச்சை ஆரம்பித்தார்..
வாயருகே கொண்டு போன உணவை மீண்டும் தட்டில் போட்டு விட்ட வைதேகியை கவலையுடன் பார்த்தாள் கௌசல்யா..
‘இந்த அப்பா.. இவ சாப்பிட்டு முடிச்ச பின்னால பேச ஆரம்பித்திருக்கக் கூடாதோ..?’
இதை ராமாமிர்தத்திடம் யார் சொல்வது..? ஆண்டாளை அடக்க முடிந்த கௌசலயாவினால் ராமாமிர்தத்தை கண்டிக்க முடியவில்லை..
ஆனாலும் அவள் மனது கேட்கவில்லை..
‘அவ சாப்பிடட்டும்ப்பா.. ” என்று சொல்லி விட்டாள்..
ராமாமிர்தத்தின் கூர்மையான பார்வை இளைய மகளின் மீது பாய்ந்தது..
‘சாப்பிடட்டும்.. தாராளமா சாப்பிடட்டும்.. சாப்பிட்டுக்கிட்டே இந்த பெற்றவன் பேசறதைக் கேட்கலாமே.. அதிலொண்னும் தப்பில்லையே..”
இப்படிக் கேட்கிறவரிடம் எப்படி வாய் மூடச் சொல்வது..? ஆற்றாமையுடன் வைதேகியைப் பார்த்தாள் கௌசல்யா..
‘நான் அங்கே எத்தனை சிறுமை பட்டுண்டு இருக்கேன்னு நோக்குத் தெரியுமாப்பா..?”
வைதேகியின் தீனமான வார்த்தைகளைக் கேட்ட ராமாமிர்தம் ஒரு நொடி கண் மூடித் திறந்தார்;..
கையிலிருக்கும் கடைசி பைசா வரை செலவளித்து.. தங்கம் போல வளர்த்த மகளைத் திருமணம் செய்;து கொடுத்து அனுப்பினாரே.. எதற்காக..? இந்த வார்த்தைகளை பெற்ற மகளின் வாயிலிருந்து கேட்பதற்காகவா..?
‘நீ நினைச்சா அவாளை சரி பண்ணிட முடியாதா வைதேகி?”
‘முடியலையேப்பா.. சரி பண்ண எங்ககிட்ட என்ன தப்பிருக்குன்னு கேட்கிறாளேப்பா..”
‘அவா சொல்றதிலயும் ஒரு நியாயம் இருக்கலாமில்லையா..?”
‘அநியாயமே உருவமா இருக்கிறாளேப்பா.. கடுகளாவது நியாயம் அவா பக்கம் இருக்காதான்னு நானும் தேடிச் சோர்ந்துட்டேன்ப்பா.. இல்லையே.. துளிக்கூட நியாயமில்லாத ராட்சஸ பிறவியாயில்ல இருக்கிறா..”
‘பொம்மனாட்டி நினைச்சா முடியாத காரியம் எதுவுமில்லம்மா”
வைதேகி தாள முடியாத வேதனையுடன் தகப்பனாரைப் பார்த்தாள்.. பாலைவனத்தின் சுடு மணலில் கால்கள் கொப்புளிக்க நடந்து வந்த களைப்பு அவள் கண்களில் தெரிந்தது..
அந்தப் பார்வையில் தெரிந்த ஆயாசத்தைக் கண்ட ராமாமிர்தத்தின் முதுகுத் தண்டு ஜில்லிட்டது..
‘ஏன் இவ இப்படிப் பார்க்கிறா..?’
‘வைதேகி..”
‘அப்பா.. ” சாப்பிட்டுக் கொண்டிருந்ததை மறந்து குமுறி அழ ஆரம்பித்தாள் வைதேகி..
‘முடியலைப்பா.. போராட எனக்குச் சக்தியில்ல.. போராட என்னை அவா அனுமதிக்கவும் இல்ல.. என்னை ஒரு மனுஷியா அவா பார்த்தால்தானே நான் போராட முடியும்..? என் மனசு செத்துப் போச்சுப்பா.. உங்க காலடியைத் தேடி வந்திருக்கேன்.. கடைசி வரை இந்தாத்தில உங்க பொண்ணா ஒரு மூலையில பிழைச்சுக் கிடந்துண்டு போகிறேன்ப்பா.. என்னைப் போக மட்டும் சொல்லிடாதீங்க..”
இந்த வார்த்தைகள்தான்.. இதே வார்த்தைகள்தான் வைதேகி தீயில் கருகி பிணமாகக் கிடந்த போது ராமாமிர்தத்தின் காதினில் திரும்பத் திரும்ப ஒலித்தன.. அவரை குற்றம் சாட்டின…
‘ஐயோ வைதேகி.. நானே உன்னைக் கொன்னுட்டேன்னே.. ” என்றி கதறி அழுதார்..
‘நான் பாவி.. ” தலையில் அடித்துக் கொண்டார்..
‘என் பொண்ணு கேட்டாளே.. அப்பா.. நான் கடைசிவரைக்கும் உங்க பொண்ணா பிறந்தாத்துலேயே இருந்துக்கிறேன்னு கெஞ்சினாளே.. நான் காதில் போட்டுக்கலையே.. போக மாட்டேன்னு சொன்னவளை வலுக்கட்டாயமாக் கொண்டு வந்து இந்த நரகத்தில் தள்ளினேனே.. இப்ப நான் பூவா வளர்த்த என் மக பொசுங்கிப் போய் கிடக்கிறாளே.. இந்தக் கொடுமையை யார் கிட்டப் போய் சொல்லுவேன்..?”
அவர் சொன்னாலும் கேட்க ஆளில்லை.. அன்று வைதேகி சொன்னவைகளை காது கொடுத்து அவர் கேட்க மறுத்ததைப் போல.. அவர் கதறியவைகளைக் காது கொடுத்துக் கேட்க காவல்துறையினர் மறுத்தனர்..
‘பெரியவரே.. நீங்க பொண்ணு போன துக்கத்திலே அழுது புலம்பறீங்க.. எங்களுக்கும் வருத்தமாத்தான் இருக்கு.. இது போக வேண்டிய வயசில்லைதான்.. ஆனாலும் நாங்க என்ன பண்ண முடியும் சொல்லுங்க..? உங்க பொண்ணு கிளியரா இது தற்கொலைதான்னு தன் கைப்பட எழுதி வைச்சுட்டு செத்துப் போயிருக்கு.. இதில யார் மேல நாங்க கை வைக்க முடியும்?”
‘தற்கொலைக்கு தூண்டியது மகா பாதகம் இல்லையா..?”
‘பாதகம் தான்.. அதையும் உங்க பொண்ணு எழுதி வைச்சியிருக்கனுமா.. இல்லையா..? தாங்க முடியாத வயிற்று வலியில் சாகிறேன்னு எழுதிவைச்சா.. நாங்க என்னத்தைப் பண்ணித் தொலைக்கிறது.. நீங்களே ஒரு நியாயத்தை சொல்லுங்க..”
‘அவன் கொலைகாரன் .. அந்தக் குடும்பமே கொலைகாரக் குடும்பம்..”
‘வாஸதவம்தான்.. அது உங்களுக்கும் தெரியுது.. எங்களுக்கும் தெரியுது.. ஆனா சட்டத்திற்கு தெரியனுமே.. அதுக்குத் தேவை உண்மையில்லை.. சாட்சி.. அது நம்மகிட்ட இல்லையே.. “
காவல்துறையே கையை விரித்த போது.. தன்னிடம் இருந்த ஆதாரங்களை அவர்கள் கையில் ஒப்படைக்கலாமா என்று கௌசல்யா யோசித்தாள்..
‘இது என் அந்தரங்கம் கௌசி.. நம்மைப் பெத்தவாளுக்குக் கூட இது தெரியக் கூடாது’
வைதேகியின் வேண்டுகோள் அவள் கைகளைக் கட்டிப் போட்டது..
ராமாமிர்தம் கேட்ட போது வுட வைதேகி பொங்கி அழுதாளே தவிர.. தான் பட்ட அவமானங்களையும்.. ரணங்களையும் கூறவில்லை..
பொதுவாக தன் துயரத்தை எடுத்துச் சொன்னாளே தவிர தன் மனதிலும்.. உடலிலும் பட்ட காயங்களை வெளிப்படுத்தவில்லை..
‘வேண்டாம்ப்பா..” என்று கையெடுத்துக் கும்பிட்டாள்..
‘என்னைப் போகச் சொல்லாதீங்கப்பா …” என்று கதறினாள்..
அவளின் கண்ணீர் ராமாமிர்தத்தைச் பேசவிடாமல் செய்தது.. ஆண்டாள் திகிலடைந்து போனாள்.. அந்த வீட்டில் அமானுஷ்ய அமைதி நிலவ.. அதன் பின்னால் வைதேகியை யாரும்.. எதுவும் சொல்லவில்லை..
‘கோவிலுக்குப் போகலாம்.. வா.. வைதேகி..”
கௌசல்யா அழைத்ததும் மறுக்காமல் கூட வந்தாள். பிரகாரத்தை சுற்றி வந்த போது.. ஒரு இடத்தில் அசையாமல் நின்று விட்டாள்..
‘என்ன வைதேகி..? கௌசல்யா புரியாமல் கேட்டபோது..
‘இந்த இடத்தில்தானே செந்தில் வழி மறிச்சான்..?” என்று பதிலுக்கு கேட்டாள்..
கௌசல்யாவிற்கு அவளைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.. அவளுக்கும் சக்திவேலுக்கும் இடையிலாவது வேறு வேறு ஜாதி என்ற பிரிவினை இருந்தது..
வைதேகிக்கும்.. செந்திலுக்கும் அந்தப் பிரச்சனையே இல்லை.. இருவரும் ஒரே ஜாதி.. இன்னும் சொல்லப் போனால் செந்தில் அவளுக்கு தூரத்து உறவினன்..
‘இப்ப ஏண்டி அவனைப் பத்தி பேசற..?”
‘பேசக் கூடாது தான்.. பேச எனக்கு அருகதையில்லைதான்.. வரம் கிடைத்தும் தவற விட்டேன் கௌசி.. என்னைப் போல ஒருத்தி இந்த உலகத்தில் இருப்பாளா..?”
‘போதும்டி.. அசடாட்டம் பினாத்தாதே..”
‘நான் அசடு தான் கௌசி.. இல்லைன்னா என் பின்னாலே சுற்றிச் சுற்றி வந்த போது அவனைக் காதலித்துத் தொலைக்காதவள்.. எனக்கு கல்யாணம் நிச்சயமானவுடனே காதலித்து தொலைப்பேனா..? நான் அசடில்லாமல் வேறென்ன..?”
‘என்னடி சொல்ற..?”
‘ஆமாம் கௌசி.. நிச்சயதார்த்தம் நெருங்குது.. அப்பப் பார்த்து எனக்கு இவன் மேல் மனசுகுள்ள காதல் பொங்கித் தொலைக்குது..”
‘என்னிடம் சொல்லியிருக்கலாமேடி..”
‘சொல்லி என்ன பிரயோசனம் ? பெண் பார்க்க வந்தப்போ அப்பா என் விருப்பத்துக்கு மரியாதை கொடுத்துக் கேட்டார்.. நானும்.. நேக்குப் பிடிச்சிருக்குப்பான்னு சொல்லித் தொலைச்சிட்டேன்.. என் வார்த்தையை நம்பி பத்திரிக்கை அடித்து நிச்சயதார்த்தம் வரைக்கும் போயிட்டார்.. அதுக்குப் பின்னால் நான் வாயைத் திறக்க முடியுமா கௌசி..?”
‘ஏன் சொன்னால் என்ன..?”
‘அப்பாவால் தலை நிமிர்ந்து நடந்திருக்க முடியாதுடி..”
‘இப்ப நீ நிலைகுலைஞ்சு நிற்கறியேடி.. இப்ப மட்டும் உன்னால அப்பாவுக்கு நிம்மதியை கொடுக் முடிஞ்சுதா..?”
வைதேகி வானத்தை வெறித்துப் பார்த்தபடி யோசனையுடன் நின்றாள்.. அவளின் அந்த நிதானத்தைக் கண்டு கௌசல்யாவின் மனம் வலித்தது..
‘எப்படி இருந்தவள்.. இப்படி ஆகி விட்டாளே…’
திருமணத்திற்கு முன்னாலிருந்த வைதேகி எங்கே தொலைந்து போனாள்..?
அவளுக்கு ஒரு இடத்தில் அடங்கி நிற்கப் பிடிக்காது.. உட்காரப் பிடிக்காது.. மௌனம் பிடிக்காது..
எப்போதும் சளசளவென்று கொட்டுகிற நீர்விழ்ச்சியைப் போலப் பேசிக் கொண்டு.. மான் போல துள்ளி விளையாடிக் கொண்டு.. சிட்டுக்குருவியைப் போல.. சிறகடித்து கொண்டு இருந்த அந்த வைதேகி எங்கே..?
கண்களில் உயிரில்லாமல்.. பிறந்து விட்ட கடமைக்காக வாழ்கின்றவளைப் போல.. பற்றில்லாமல் இப்படிப் பார்த்துக் கொண்டு நிற்கும் இந்த வைதேகியாய் எப்போது அவள் உருமாறினாள்..?
‘வைதேகி..” தாள முடியாமல் கௌசல்யா அவள் தோள் தொட்டாள்..
லேசான சலனம் கண்களில் வந்து போக.. பார்வையை திருப்பிக் கொண்ட வைதேகியின் கண்களில் நீ ர் மல்கியது..
‘வரக் கூடாதுன்னுதான் நான் நினைச்சேன் கௌசி.. அது முடியாமல் போயிடுத்து.. இல்லைன்னா.. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இப்படிப்பட்ட மனக் கஷ்டத்தை நான் தந்திருக்க மாட்டேன்.. பிறந்தாத்துக்கு வந்து போக புக்காத்தில் விடாட்;டியும் பரவாயில்லை.. எங்க மூத்த பொண்ணு ஆம்படையான் அகத்துல சந்தோசமா வாழறான்னு அவா நினைச்சுண்டு இருந்தாளே.. அந்த நினைப்புல மண் விழுக நான் விட்டிருக்க மாட்டேன்.. முடியலடி கௌசி.. அது முடியாமப் போகவும் தான் கிளம்பி வந்துட்டேன்..”
திருமணமாகி போன பின்னால் பிறந்த வீடு பெண்களுக்கு சொந்தமில்லையா.. ? வைதேகி இந்த அளவுக்கு தந்நிலை விளக்கம் சொல்லித்தான் ஆக வேண்டுமா..?
Reviews – Aarathanai / ஆராதனை
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.