Chapter 15
அது ஏன் என்று கௌசல்யாவிற்குப் புரியத்தான் இல்லை.. அவர்களின் தந்தையும்.. தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்த வீடு தான்.. அவளும் வைதேகியும் பிறந்து .. தவழ்ந்து.. தளிர்நடை போட்டு வளர்ந்ததும் இந்த வீடுதான்..
‘நம்;மாத்து கொடியில பூத்த முல்லைடி…’
நேற்றுப் போல் இருக்கிறது.. வைதேகி.. அவர்களின் வீட்டு முல்லைக் கொடியில் பூத்த மலர்களைக் கன்டு சந்தோசமாய் ஆரவாரம் செய்தது..
அந்த முல்லைக் கொடி இன்றளவும் அவர்களின் வீட்டுத் தோட்டத்தில் பந்தலில் பரவிப் படர்ந்து மணம் பரப்பிக் கொண்டிருக்கிறது..
அந்த வீட்டில் பிறந்த பெண் மட்டும் திருமணம் என்ற பெயரால் அந்த வீட்டிலிருந்து பிரிக்கப் பட்டு விட்டாள் என்றால் இது கொடுமையில்லையா..?
‘ஆத்துக்கு போகலாமா..?”
சோர்வுடன் கேட்ட வைதேகி.. ‘நம்மாத்துக்கு.. ‘ என்று சொல்லவில்லை என்பதை மனதுக்குள் குறித்துக் கொண்டாள் கௌசல்யா..
இருவரும் திரும்பும் போது கோவில் வாசலில் எதிர்பட்ட பங்கஜ வள்ளி..
‘யாரது.. வைதேகியா? எப்போ வந்தேடி?” என்று விசாரித்தாள்..
‘இரண்டு நாளாச்சு மாமி..”
‘உன் ஆம்படையானும் வந்திருக்கிறாரா..?”
‘இல்லை மாமி.. தனியாத்தான் வந்தேன்..”
‘ஓN’h…”
பங்கஜம் மாமி சொன்ன அந்த ஒற்றை வார்த்தையில் ஓராயிரம் கேள்விகள் இருந்தன..
‘விசாரிக்க ஆரம்பிச்சுட்டா.. ” மெதுவாக நடந்தபடி கூறினாள் வைதேகி..
‘விசாரிக்கட்டுமேடி.. நீ யென்ன கொலையா பண்ணிட்ட..?”
‘அவாளைக் கூட விட்டுருவா போல இருக்கு.. என்னைப் போல நொந்து போயி பிறந்தாத்துக்கு வருகிறவாளைத்தான் தூண்டி துருவி.. துளைச்செடுப்பா..”
‘விட்டுத் தள்ளுடி.. இதையெல்லாம் காதில் போட்டுக்கக் கூடாதுன்னு எனக்குச் சொல்லி கொடுத்தவளே நீதானே.. இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுடு.. பெருமாள் இதுக்குத்தானே நமக்கு இரண்டு காதை கொடுத்து வச்சிருக்கிறார்?”
‘த்சு..”
‘என்ன ‘த்சு.. ‘? எனக்கு இதைச் சொன்னதும் நீதான்..”
வைதேகி மௌனமானாள்.. அவளையே பார்த்தபடி கூட நடந்த கௌசல்யாவிற்கு.. செந்திலைக் கோவிலில் பார்த்த பின்பு வைதேகி ஏன்.. மொட்டைமாடியின் இருளில் தனிமையில் அமர்ந்து அழுதாள் என்று புரிந்தது..
தெரு முனையில் வண்டியில் அவித்த நிலக்கடலையை விற்று கொண்டிருந்தான் ஒருவன்..
கை வண்டியிலிருந்த எப்.எம். ரேடியோ பாடியது..
‘ஒரு நாள் சிரித்தேன்..
மறுநாள் வெறுத்தேன்…
உன்னை நான கொல்லாமல்
கொன்று புதைத்தேனே ….
மன்னிப்பாயா..? மன்னிப்பாயா..?
மன்னிப்பாயா..? மன்னிப்பாயா..?”
வைதேகியின் மெதுவான நடை மிக மெதுவானது.. அந்தப பாடலில் தெரிந்த உருக்கம் அவளை உருக்கியது..
‘எனக்கொரு n’ல்ப் பண்ணுவியா கௌசி..?” அவள் திடீரென்று கேட்டாள்..
‘சொல்லுடி..”
‘என்னைக்காச்சும் ஒருநாள் நீ செந்திலைப் பார்த்தால் அவனிடம் நான் மன்னிப்புக் கேட்டேன்னு சொல்லுவியா..?”
கண்கள் கலங்க வைதேகி கேட்ட அந்தக் கோலம் வெகுநாள்கள் வரை கௌசல்யாவின் இதயத்தில் பதிந்திருந்தது..
சொன்னாள்.. வைதேகி இற்நது விட்ட செய்தியறிந்து செந்தில் பித்துப் பிடித்தவனைப் போல மலேசியாவிலிருந்து ஓடி வந்து அழுது புரண்ட போது.. அவனைத் தனியாக சந்தித்து கௌசல்யா இதை அவனிடம் சொன்னாள்..
அவன் திக் பிரமை பிடித்து நின்று விட்டான்..
‘என்ன சொல்கிற கௌசி..?”
‘வைதேகி உங்களைக் காதலித்திருக்கிறாள் செந்தில்.. கல்யாணம் கூடிவந்த பின்னாலதான் இது அவளுக்கு உறைச்சிருக்கு.. அதுக்குப் பின்னால சொல்ல முடியாம மனசுக்குள்ள புதைச்சுக்கிட்டு கல்யாணம் பண்ணிண்டு போயிட்டா..
‘ஒரு வார்த்தை போதுமே கௌசி.. அவளை நான் சிறையெடுத்திருப்பேனே.. வார்த்தை கூட வேண்டாம்.. பார்வை போதுமே.. என்னை வெறுக்கிறாப்புல நடிச்சு என் உயிரைக் குடித்து விட்டாளே..”
‘அதுக்குத்தான் உங்களாண்டை அவ மன்னிப்புக் கேட்டதாகச் சொல்ல சொன்னா..”
‘அதை உயிரோட இருந்து அவ வாயால கேட்டிருக்கலாமே கௌசி.. ஏன் உயிரை விட்டா..?”
‘ஏன்.. ஏன்..ஏன்..?
விடை தெரியாத பல கேள்விகளை நம் முன் வைக்கும் வாழ்க்கையிடம் இந்தக் கேள்வியை யார் கேட்பது..?
‘ஆண்டவனும் கோவிலில்
தூங்கி விடும் போது…
யாரிடத்தில் கேள்வி கேட்பது.. ?
ஏழைகளின் ஆசையும்
கோவில் மணியோசையும்
வேறுபட்டால் என்ன செய்வது?
தர்மமே மாறுபட்டால்
எங்கு செல்வது..?”
வைதேகியை எரித்து விட்டு திரும்பி வரும் போது எங்கிருந்தோ இந்தப் பாடல் ஒலித்தது..
‘கடவுள் இருக்கிறார்’ என்ற நம்பிக்கைதானே மனித ஜீவன்களை வழி நடத்துகிறது..?
இயலாத மனிதர்களின் அடைக்கலம் அவன் பாதம்தானே.. அது இல்லையென்றாகி விட்டால்.. அந்த நம்பிக்கை பொய்த்து விட்டால் .. ஆதரவில்லாத மனித ஜீவன்கள் எங்கே போவார்கள்..?
வைதேகி நம்பிக்கை வைத்தாளே..
‘பெருமாள்டி…’ நண்பனைப் போல அந்தக் கடவுளைக் கொண்டாடினாளே…
கண்ணன் வந்தான் – அங்கே
கண்ணன் வந்தான்..
ஏழைக் கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்..
இந்தப் பாடலை எங்கே கேட்டாலும் அவள் கண்களில் நீர் தளும்பி விடுமே… பக்திப் பரவசத்துடன் அந்தப் பரந்தாமனுடன் ஒன்றிப் போய் விடுவாளே..
அந்த வைதேகி கதறி அழுதபோது காப்பாற்ற ஏன் கண்ணன் ஓடி வரவில்லை..?
ஒரு முறையல்ல.. பல முறை அவள் தோற்று நின்றாளே.. அந்தத் தோல்வியின் பிடியிலிருந்து ஏன் கண்ணன் அவளை விடுவிக்கவில்லை..?
தூங்காத இரவுகளில்.. தலையணையை கண்ணீர் நனைக்க.. பல முறை இந்த வினாக்களை தனக்குள் வினவிக் கொண்டாள் கௌசல்யா..
வழக்கம் போல விடைதான் கிடைக்கவில்லை..
செந்திலிடம் மன்னிப்புக் கேட்கச் சொல்லி.. தங்கையிடம் கேட்டுத் கொள்வதற்காகவும்.. கடைசியாக அவனைச் சந்தித்த இடத்தை பார்த்துக் கொள்வதற்காகவும்தான் வைதேகி பிறந்த வீட்டுக்கு வந்தாளோ என்று அதன்பின் பலமுறை கௌசல்யா நினைத்துக் கொண்டிருக்கிறாள்..
‘அசட்டுப் பிசட்டுன்னு பேசாதேன்னு சொன்னேனோ இல்லியோ.. இப்ப நோக்கு என்ன வேனும்..? செந்திலாண்ட மன்னிப்பு கேட்கனும்.. அவ்வளவுதானே.. அதை நீயே அவனை நேரில் பார்க்கிறப்போ கேட்டுட்டா போச்சு.. மனசை போட்டு அலட்டிக்காதேடி வைதேகி..”
‘அவனை நேரில் பார்ப்பேனா? நானா? நடக்காததை கனவு காணதே கௌசி…”
‘எல்லாம் நடக்கும்.. நான் நடத்திக் காண்பிக்கிறேன்.. நீ இங்கேதானே இருக்கப் போகிற.. அந்தத் தகவலை அவனுக்குத் தெரியப்படுத்தினா.. அடுத்த நிமிசம் அவன் பறந்து வந்திருவான்..”
அவன் பறந்து தான் வந்தான்.. வைதேகி போய் விட்ட செய்தியை அவனுக்கு தெரியப் படுத்த வேண்டியது தன் கடமையென்று கௌசல்யா நினைத்தாள்..
அப்போதாவது வைதேகியின் ஆத்மா சாந்தியடையாதா என்ற பரிதவிப்பு அவளுக்கு..
செந்திலின் வீட்டில் அவனுடைய விலாசத்தையும் செல் போன் நம்பரையும் வாங்கி அவனுக்கு தகவல் கொடுத்தாள்..
அடுத்த நிமிடத்தில் அவன் பறந்துதான் வந்தான்.. ஆனால்.. அவனை நேரில் பார்ப்பேனா என்று நிச்சயமாய் கேட்டவளோ புகைப்படத்தின் சட்டத்திற்குள் அடைந்து போயிருந்தாள்..
‘உனக்கு அப்பவே தெரிஞ்சிருக்குடி…’
தெரிந்திருக்க வேண்டும்.. யட்சிணிபோல மற்றவர்கள் மனதில் நினைப்பதை சொல்லிச் சிரித்தவளுக்கு தன் வாழ்வில் நடக்கப் போவது தெரிந்திருக்க வேண்டும்..
அதனால்தான் அன்று அப்படிச் சொன்னாளோ…
‘இங்கேயே என்னை இருக்க விட்டுடுவாளா கௌசி? நேக்கென்னவோ நம்பிக்கையில்லை…”
அவள் சொல்லி வாய் மூடு முன்னால்.. வீட்டு வாசலில்; நின்றிருந்த கார் அவர்களின் கண்களில் பட்டது..
‘நம்மாத்து வாசலிலே கார் நிக்குதே.. யார் வந்திருப்பா..?”
‘மாப்பிள்ளை வந்திருக்கிறார்டி..” வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த ஆண்டாள் தான் பரபரப்பாக சொன்னாள்..
புதட்டத்துடன் கௌசல்யா வைதேகியை பார்த்தாள்.. அவள் பெருமூச்சுடன் நின்று விட்டாள்.. அவளது முகத்தில் சோக மேகங்களின் நிழல் படிந்தது..
‘கௌசி..” அவள் குரல் நடுங்கியது..
‘ஏன் பயப்படறே? வர முடியாதுன்னு கட் அண்ட ரைட்டா சொல்லிடு..”
வரமுடியாதென்று மனோஜிடம் வைதேகி சொல்ல வேண்டிய தேiவியல்லாமல் ராமாமிர்தம் செய்து விட்டார்..
போக முடியாதென்று அவரிடம் தான் வைதேகி மன்றாட வேண்டியதாகி விட்டது.
‘உன்னை அழைச்சுண்டு போக.. மாப்பிள்ளையே நம் ஆத்துக்கு வந்திருக்கிறார்.. நீ போகமாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கிறது நன்னா இல்லை வைதேகி..”
‘அங்கே போனா நான் திரும்பி வரவே மாட்டேன்ப்பா..”
‘பரவாயில்லை.. நீ வராமல் போனாலும் நாங்க வருத்தப் பட மாட்டோம்.. உன் ஆம்படையானை அனுசரிச்சு நீ குடித்தனம் பண்ணினாலே போதும்..”
‘அனுசரித்து’ என்பதற்கான அர்த்தம் என்ன என்பதை இவர் அறிவாரா..?
ராமாமிர்தத்தை வெறித்துப் பார்த்த வைதேகியின் பார்வையில் நிராசை வந்திருந்தது..
‘போறேன்ப்பா..” அவள் கிளம்பி விட்டாள்..
‘நில் வைதேகி..” தடுத்துப் பேசப் போன கௌசல்யாவை
‘உஷ்…?” என்று வாயில் ஒற்றை விரலை வைத்து தடுத்து விட்டாள்..
பேசப்படவேண்டிய சமயத்தில்.. பேசப்படாத உண்மைகளால்.. வைதேகி ஒரு நாள் சாம்பலாகிப் போனாள்..
Reviews – Aarathanai / ஆராதனை
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.