Chapter 03
கண்ணன் மனநிலையை…
கண்டு சொல்ல யாருமில்லை…
இரண்டு நாள்களுக்கு முன்வரை இப்படி ஒரு பிரயாணத்தை அவன் திட்டமிடவில்லை. ஏன்.. இதைப் பற்றி நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. இன்று இரண்டு டிராவல் பேக்குகளோடு புன்னை வனத்திற்கு கிளம்பி விட்டான்.
மித்ரனின் அப்பா சோமசுந்தரம்.. மகனின் திடீர் பயணத்தைப் பற்றிக் கேள்விப்பட்டதும் வியப்புடன் மனைவியைப் பார்த்தார்.
“என்னடி அன்னபூரணி. திடீர்ன்னு இவன் லலிதாவின் வீட்டில் போய் ஒரு மாதம் இருந்து விட்டு வருகிறேன்கிறானே.. உனக்கு இது பற்றி முன்பே தெரியுமா..?”
“எனக்கெதுவும் தெரியாது.. லலிதா எதுவும்.. ஃபோன் போட்டுச் சொன்னாளோ.. என்னவோன்னு அவளிடம் கேட்டேன். அவள்.. ‘அப்படியா..? மித்ரன் எங்க வீட்டுக்கு வருகிறானா..?’ன்னு சந்தோசமாய் என்னிடமே கேட்கிறாள். ஏண்டி மைதிலி.. உன்னிடம் அண்ணன் இதைப்பற்றிச் சொன்னானா…?”
“ஊஹூம்.. அண்ணன் சரியான அமுக்குளிம்மா.. எல்லாத்தையும் மனசுக்குள்ளேயே போட்டு பூட்டி வைத்துக் கொள்ளும். வெளியே மூச்சுவிடாது. அது மனசுல இன்னும் என்னென்ன இருக்கோ…”
இன்ஜினீயரிங் காலேஜில் கடைசி வருடத்தில் படித்துக் கொண்டிருந்த தங்கை பேசுவதைக் கேட்டுக் கொண்டே வீட்டுக்குள் வந்த மித்ரன், ஷூவைக் கழற்றியவாறே தங்கையைப் பார்த்தான்.
“என் மனது இரும்பு லாக்கர் பாரு. நான் அதைப் பூட்டி வைத்துக் கொண்டிருக்கிறேன். நீ பொக்கிசத்தை திறந்து பார்க்க சாவியில்லை. இன்ஜினீயரிங் படிக்கிறாயா..? தமிழ் லிட்டரேச்சர் படிக்கிறாயா…?”
“என்னை வம்புக்கு இழுக்காதேண்ணா.. அம்மா கேட்டாங்க. நான் பதில் சொன்னேன். நீ எது பேசினாலும் அம்மாவிடமே பேசு. என்னை விடு…”
சோமசுந்தரம்.. டிவியில் செய்தி பார்ப்பது போல் பாவனை செய்து கொண்டே மனைவியிடம் ஜாடை காட்ட.. அன்னபூரணி மகனின் அருகே சென்று அமர்ந்தாள்.
“அதுக்கில்லைடா மித்ரா.. திடீர்ன்னு நீ உன் சித்தியின் ஊருக்குப் போகிறேன்னு சொல்கிறாயே.. ஒரு நாள்கூட லீவை வேஸ்ட் பண்ணாதவன். ஒருமாதம் லீவில் போகிறேன்னு சொல்கிறாயே.. அடுத்த வீட்டில் ஐந்து நிமிடம் இருந்தால் கூட உனக்கு சகிக்காது. சித்தியின் வீட்டில் போய் ஒரு மாதம் இருக்கிறேன்னு சொல்கிறாயே.. அதைத்தான் மைதிலியிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். அவளும் பதில் சொன்னாள். நீ தப்பாக எடுத்துக் கொள்ளாதே…”
‘இந்த விஸ்வம் பண்ணிய வேலையினால் என் வீட்டில் மண்டையைப் போட்டு குழப்பிக்கிறாங்க. இதற்கு என்ன விளக்கத்தைச் சொல்வது…’
அவன் அன்னபூரணியை நிமிர்ந்து பார்த்தான். அவள் முகத்தில் சன்னமான கவலை படர்ந்திருப்பது மித்ரனுக்குப் புரிந்தது. அவளுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பேச வேண்டிய அவசியத்தை அவன் உணர்ந்தான்.
“அம்மா! வேலையை கன்டினியுஸாக பார்த்து மூளை சூடாகியிருக்கிறது.” என்று அவன் பேச்சை ஆரம்பிக்க..
“எத்தனை டிகிரி சூடாகியிருக்கிறது அண்ணா..? தெர்மா மீட்டரை வைத்துப் பார்த்தாயா..?” என்று கொக்கி போட்டாள் மைதிலி.
‘ம்ஹூம். இவள் இவ்வளவு புத்திசாலியாய் இருந்து தொலைக்கக் கூடாது…’
வெறுத்துப் போனவனாக மித்ரன்.. தங்கையை ஓரப்பார்வை பார்த்து வைத்தான்.
“ஓகே.. ஓகே. நீ இப்படி சந்யாசி வேசம் போடாதே.. உன் இஷ்டத்திற்கு அம்மாவிடம் கதை சொல்லு. நான் குறுக்கே வரமாட்டேன்..” என்று ஜகா வாங்கிக் கொண்டாள் மைதிலி.
“அவள் கிடக்கிறாடா தம்பி.. நீ சொல்லு..” என்று மகனின் தலைமுடியை ஆதரவாகக் கோதி விட்டாள் அன்னபூரணி.
“எனக்கு அடிக்கடி தலைவலிக்கிறதும்மா..” என்று மித்ரன் தன்நெஞ்சறிய பொய்யுரைக்க..
“ஐயோ… இது எப்போதிருந்துடா…” என்று பதறிவிட்டாள் அன்ன பூரணி.
டிவியைப் பார்ப்பதைப் போல.. பாவனை செய்து கொண்டிருந்த சோமசுந்தரம் தன் நடிப்பைக் கைவிட்டவராக திடுக்கிட்டு நிமிர்ந்தார்.
“ஆர் யு ஆல்ரைட் மித்ரா…?”
“நத்திங் டு வொர்ரி.. டாடி.. அதிக வேலைப் பளுவினால்.. டெப்ரசன் ஏற்படுகிறது.. மாறுதலாக இருக்குமேன்னு டாக்டர் சொன்னார்… எனக்கு உடனே சித்தியின் ஊர்தான் நினைவுக்கு வந்தது. வருசா வருசம் மே வெகேசனுக்கு பிள்ளைகளுடன் சித்தி இங்கே வரும் போதெல்லாம் என்கூட சண்டை போடுவாங்க. அவங்க ஊருக்கு நான் போனதேயில்லைன்னு அவங்களுக்கு ரொம்பக் கோபம். ஆறும் வயலும் இயற்கைக் காற்றுமாக அந்த ஊர் சிச்சுவேசன்.. எனக்கு மன அமைதியைத் தரும்ன்னு தோணுச்சு. ஒரு மாதம் லீவ் கேட்டேன். கம்பெனியில் கொடுத்துட்டாங்க. கிளம்பிட்டேன். நோ அதர் மேட்டர் டாடி..”
சோமசுந்தரம் புருவத்தை சுருக்கிக் கொண்டு.. மகனின் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கேட்டார்.
“எனக்கென்னவோ.. இந்தக் கதையைக் கேட்டால் நம்பத் தோன்றவில்லையே…” சந்தேகத்துடன் தமையனைப் பார்த்தாள் மைதிலி.
‘ஆரம்பித்து விட்டாயா..?’ என்று பல்லைக் கடித்தபடி.. வெளியே பரிவாக தங்கையைப் பார்த்தான் மித்ரன்.
“வேறு எப்படித் தோணுது மைதிலிக் குட்டி…?”
“ம்ம்.. நீ அப்பாவின் காதிலும்.. அம்மாவின் காதிலும்.. கூடை கூடையாய் பூவைச் சுற்றுகிறாய்ன்னு தோணுது..”
“அது உன் குண விசேசம் மைதிலி. ஊருக்கெல்லாம் ஒன்று தோன்றினால் உனக்கு வேறொன்று தோன்றும்…”
“சும்மா பூசி மெழுகாதே அண்ணா.. உனக்காவது.. தலைவலி வருவதாவது.. நீ ஊருக்கெல்லாம் தலைவலியை வர வைப்பாய். உனக்கெப்படி தலைவலி வரும்…?”
“வந்துவிட்டதே.. இதை யாரிடம் போய் சொல்ல..?”
“அம்மாவிடமும் அப்பாவிடமும் போய் சொல்லு… என்னிடம் சொல்லாதே…”
“நீ என் தங்கையாச்சே…!”
“அதனால்தான் எனக்கு உன்னைப் பற்றி தெரிகிறது..”
“இப்போது உன் சந்தேகம் தான் என்ன..? எனக்கு புன்னை வனத்தினில் ஒரு காதலி இருக்கிறாளா..? அவளைப் பார்த்துப் பேசிப் பழக.. நான் பயணப் படப் போகிறேனா…?”
சில நேரங்களில்.. நாம் பேசும் வார்த்தைகளை.. வானில் மேகங்களுக்கு ஊடே மறைந்து நின்று கேட்கும் தேவர்கள்…
‘ததாஸ்து…’ என்று சொல்லி ஆசிர்வதிப்பார்களாம்..
மித்ரனின் நாவிலிருந்து ஏன் அந்த வார்த்தைகள் வெளிப்பட்டன என்பதை அறியாமலே… அவன் அதைச் சொன்னான்.
“நீயாவது.. காதலிப்பதாவது…” என்று மைதிலி சிரித்தாள்.
“இதில் சிரிக்க என்ன இருக்கிறது..”
“நீ ராப்பகலாய் கம்ப்யூட்டரைக் கட்டிக் கொண்டு இருப்பவன். பேசாமல் நீ கம்ப்யூட்டரையே காதலித்து விடு. அதுதான் உனக்கு லாயக்கு..”
“நீ சொல்வதை நானும் யோசிக்கிறேன்..”
“இப்போ.. நான் ஒன்றை யோசிக்கிறேனே.. அதற்குப் பதிலைச் சொல்லி விட்டுப் போ…”
‘நீ சும்மா கேள்வி கேட்டாலே ஆபத்து. இதில் யோசித்து வேறு.. கேள்வி கேட்கப் போகிறாயா…?’
மனதிற்குள் நொந்து கொண்டே வேறு வழியில்லாமல்-
“கேளு…” என்றான் மித்ரன்..
“அப்பா பேங்க் மேனேஜர்.. அம்மா ஸ்கூல் ஹெட்மிஸ்ட்ரஸ்.. இவங்க இரண்டு பேருக்கும் இல்லாத வொர்க் லோடா உனக்கு இருக்கிறது…? இவங்களுக்கு தலைவலி வரவில்லை. உனக்கெப்படி வந்தது…?”
“அதை.. அந்த தலைவலியிடம் தான் கேட்க வேண்டும்…”
“தலைவலிக்கு மருந்து.. ஆற்றங்கரையோர கிராமத்துக்கு விருந்தாளியாய் போவதா…?”
“அதை நான் சொல்லவில்லை. டாக்டர் சொன்னார்.”
“நான் வேண்டுமானால்.. உன் தலைவலிக்கு ஒரு மருந்தைச் சொல்லட்டுமா..?”
“அதற்கு முன்னால், நான் ஒரு கவிதை சொல்லட்டுமா…?”
“தலைவலியோடு கவிதை சொல்லப் போகிறாயா..?”
“இது தலைவலியைப் பற்றிய கவிதைதான் மைதிலி..”
“சொல்லு.. அண்ணா.. சொல்லு…”
“ஒரு தலைவலியே…
தலைவலிக்கு…
மருந்து சொல்கிறதே…”
மைதிலி.. கோபத்துடன் மித்ரனை முறைத்தாள். அவன் சிரித்துக் கொண்டே.. ஊருக்குக் கிளம்பும் வேலையில் இறங்கினான்.
“லலிதாவிற்கு ஃபோனில் எல்லா விவரமும் சொல்லியிருக்கிறேன். மித்ரா.. நீ ஊருக்குப் போனதும் எங்களுக்கு ஃபோன் பண்ணு.. உடம்பு சரியானதும் கிளம்பி வந்து விடு. ஒரு மாதம் அங்கே இருக்கணும்னு அவசியமில்லை..”
“ஆகட்டும்மா…”
“சிவப்பிரகாசம் நல்லவன்தான். இருந்தாலும்.. அவன் நமக்கு சொந்தமில்லை. லலிதா தான் நமக்கு சொந்தம். நீ வேறுபாடாய் எதையாவது ஃபீல் பண்ணினால்
உடனே கிளம்பி வந்து விடு. ஓய்வெடுக்க.. ஊட்டி, கொடைக்கானலில் ரிஸார்ட்டை ரிஸர்வ் பண்ணித் தருகிறேன்..”
“கவலைப்பட வேண்டாம் டாடி. நான் மேனேஜ் பண்ணிக் கொள்கிறேன்…”
“அட்ஜஸ்ட் பண்ணிக் கொண்டு நீ அடுத்த வீட்டில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை மித்ரா..”
“எனக்குப் பிடிக்கலைன்னா.. நீங்க சொன்னபடி உடனே கிளம்பி வந்து விடுகிறேன் டாடி..”
சோமசுந்தரம் அன்னபூரணியும் முழுதாக ஒரு மாதம் – மகன் வெளியூருக்குப் போகிறானே என்று கவலைப்பட்டனர். மைதிலி கூட மித்ரனைச் சுற்றிச் சுற்றி வந்தாள்.
“நீ இல்லாமல் எனக்கு.. போரடிக்கும் அண்ணா…”
“பொய் சொல்லாதே.. நானில்லாவிட்டால் ஜாலியாக இருப்பாய்ன்னு சொல்லு…”
“வம்பிழுக்க எனக்கு ஆள் இருக்காதே..”
“அம்மாவிடம் வம்பிழு..”
“அப்பா திட்டுவாரே…”
“வாங்கிக் கொள்…”
குடும்பத்தினருக்கு டாட்டா சொல்லி விட்டு ரெயிலேறியவன்,
‘உன்னாலே.. எனக்கு எத்தனை அலைச்சல்டா விஸ்வம்…!’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.
“பெண்ணின் அப்பாவிடம் புரியவை மித்ரா.. நீ தினமும் அவரிடம் பேசிப் பழகு. கிளம்பி வரும்போது எனக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பமில்லைன்னு அவரிடம் சொல்லி விடு.. என் அப்பா.. அம்மாதான்.. இந்தக் கல்யாணத்தை விரும்புகிறாங்க.. நான் விரும்ப வில்லைன்னு அவரிடம் எடுத்துச் சொல்லு.. பிடிக்கலைன்னு சொல்பவனுக்கு பெண் கொடுக்க.. பெண்ணைப் பெற்றவர்.. கட்டாயம் யோசிப்பார். முடிந்தால் அந்தப் பெண்ணிடமும் இதைச் சொல்லிவிடு..” விஸ்வம் வேண்டுகோள் வைத்த போது..
“இந்த விளையாட்டுக்கே நான் வரவில்லை.. அந்தப் பெண்ணிடம் பேசும் வேலையை எனக்குக் கொடுக்காதே..” என்று தான் மறுத்தான் மித்ரன்.
ஆனால்.. அந்தப் பெண்ணிடம் பேசாமல் அவனால் இருக்க முடிந்ததா…?
Reviews — Aatrangarai Arukinilze / ஆற்றங்கரை அருகினிலே..!
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.