Chapter 09

0Shares

இது இறைவனின் கட்டளைப்படி..

நம் இருவருக்குள்ளும் நடக்கும் விளையாட்டு..

பாடி முடித்தவள்.. ‘எப்படி..?’ என்ற கேள்வியை உணர்த்தும் பாவனையாக புருவங்களை உயர்த்தி.. விழிகளால் வினவ.. மித்ரன்..

“ஃபென்ட்டாஸ்டிக்..” என்றான்..

“இப்போதாவது என் பாட்டை குயிலின் பாட்டுன்னு ஒப்புக் கொள்கிறீங்களா.. பாகவதரே..”

“என் பெயரை பாகவதருன்னே முடிவு பண்ணிட்டிங்களா..?”

‘பின்னே உன் பெயரைச் சொல்லியா.. என்னால் கூப்பிட முடியும்..?’ காயத்ரி.. காதலுடன் நினைத்துக் கொண்டாள்..

“உங்க பெயர் பாகவதர்தானே..”

“ஊஹூம்.. நான் உங்கள் தோழன்..”

“தோழனா..?”

“தோழன்தான்.. மித்ரன்..”

“மித்ரன்..?”

“யெஸ்.. அதுதான் என் பெயர்.. மித்ரன் அப்படின்னா தோழன்னு அர்த்தம்..”

‘ஓ.. நீ காதலிப்பதற்கு முதல் படியாக, தோழமையைக் கொடுக்கிறாயா.. அதனால்தான் விஸ்வம் என்கிற உன் பெயரை விட்டு விட்டு நண்பன்னு 

அழைக்கச் சொல்கிறாயா.. ‘மித்ரன்..’ மித்ரன்னா  தோழனா..? சரி, நீ எனக்கு மித்ரனாகவே இருந்து விட்டுப் போ..’

காயத்ரியின் மனதில் தென்றல் தவழ்ந்தது.. நட்பை யாருக்குத்தான் பிடிக்காது..?

“அப்போ.. நான் உங்களை மித்ரா.. மித்ரா..ன்னு கூப்பிடலாம்..”

“ம்ஹூம்.. என் அம்மாகூட.. என் பெயரை இப்படி ஏலம் போட்டிருக்க மாட்டாங்க.. உங்களிடம் போய் என் பெயரைச் சொன்னேனே.. தேவைதான் எனக்கு..”

“எது தேவை..? என் குடமா..?”

“இதை வைத்து நான் என்ன செய்ய..?”

“என்னைக் கேட்டால் – எனக்கென்ன தெரியும்.. இது என் பாட்டி காலத்து பித்தளைக் குடம்.. இப்போது என்ன விலை போகுமோ..?”

“ஓ.. நீங்க அப்படி வருகிறீங்களா.. இந்தக் குடம் என் கையில் இருந்தால் விலைக்குத்தான் போடுவேன்னு எந்த ஒரு கணக்கில் சொல்கிறீங்க..?”

“உங்களுக்கு தம்ளரில் கூட ஒழுங்காக தண்ணீர் எடுத்துக் கொள்ளத் தெரியாது.. இந்தக் குடம் நிறைய தண்ணீரை நிரப்பி சுமக்க மாட்டிங்கங்கிற கணக்கில்தான் சொன்னேன்.. குடத்தை தருகிறீங்களா..?”

“இவ்வளவுக்குப் பின்னாலும்.. இந்தக் குடத்தை வைத்துக் கொண்டிருக்க.. எனக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கிறது..? இந்தாங்க.. உங்க குடம்.. உங்க பாட்டி காலத்து குடத்தை.. நீங்களே பத்திரமாகக் கொண்டு போங்க..”

மித்ரன் அவளிடம் குடத்தை நீட்ட.. தான் தவறாகப் பேசி விட்டோமோ என்று துணுக்குற்றாள் காயத்ரி..

குடத்தை வாங்கிக் கொண்டவள்.. போகாமல் அங்கேயே தயங்கி நிற்கவும்.. மித்ரன் ஆச்சரியத்துடன்..

“இன்னும் என்னங்க.. அதுதான் குடத்தைக் கொடுத்து விட்டேனே..” என்று கூறினான்..

“இல்லை.. வந்து.. நீங்க என் மேல் கோபமாய் இருக்கறீங்களா..?” காயத்ரியின் கண்கள் லேசாகக் கலங்கி விட்டன..

“கோபமா.. உங்கள் மீதா.. நான் ஏன்.. உங்கள் மேல் கோபப்படப் போகிறேன்..?” மித்ரனுக்கு ஆச்சரியம் அதிகமானது..

“என்மேல் கோபமில்லைதானே..?”

“இல்லவே.. இல்லை..”

“அப்பாடி..”

காயத்ரி.. நிம்மதிப் பெருமூச்சுடன்.. அவனைத் திரும்பிப் பார்த்தவாறே.. குடத்துடன் போய் விட்டாள்..

மாலை மயங்கி இருள் சூழ ஆரம்பித்த அந்த வேளையில் அவள் போவதையே பார்த்துக் கொண்டு நின்ற மித்ரனுக்கு அவள் கண்கலங்கியதை நினைத்து.. மனதை என்னவோ செய்தது..

‘இவ்வளவு நேரமும் வாயடித்துவிட்டு.. இப்போது கண்கலங்கிப் போகிறாளே.. இவளுக்கு இத்தனை பூஞ்சையான மனமா..’ அவன் யோசனையுடன் வீட்டை நோக்கி நடந்தான்..

வழக்கம்போல.. வாசல் திண்ணையில்.. பக்கத்து வீட்டுப் பெண்மணியுடன் கூட்டு மாநாடு போட்டுக் கொண்டிருந்தாள் கோதாவரி.. அவள் சொல்வதை மோவாயில் கைவைத்தபடி கேட்டுக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு கோமளம்,

“நிசமாலுமா..?” என்று கேட்டுக் கொண்டிருந்தாள்.

அவர்களைக் கடந்து வீட்டுக்குள் சென்ற மித்ரன், சமையலறையில் தஞ்சம் புகுந்திருந்த லலிதாவிடம்..

“எதை.. நிஜமாகவான்னு பக்கத்து வீட்டு ஆன்ட்டி.. நம் பாட்டியிடம் கேட்டுக் கொண்டிருக்கிறாங்க சித்தி..” என்று சிரித்தான்..

வாணலியில் எண்ணெயை ஊற்றியபடி அவனைத் திரும்பிப் பார்த்த லலிதா,

“கோமளாக்காதானே.. அவங்க.. அத்தை எதைச் சொன்னாலும் அப்படித்தான் கேட்பாங்க..” என்று சொன்னாள்..

“ஈஸிட்..? அப்போ.. பாட்டி சொல்வதெல்லாம் வெறும் கப்ஸாதானா..?” மித்ரன் கண் சிமிட்டினான்..

“போடா போக்கிரி.. அத்தை பேசுவதை.. கோமளாக்கா அப்படி சுவராஸ்யமாகக் கேட்கிறாங்களாம்..” வாணலியில் எண்ணெய் காய்ந்துவிட, காய்கறிகளைப் போட்டு வதக்கியபடி லலிதா கூறினாள்..

“ம்ஹூம்.. இப்படி.. இருபத்திநான்கு மணி நேரமும்.. சமையலறையே கதின்னு நீங்க இருந்தால்.. பாட்டியின் பேச்சு சுவராஸ்யமாகத்தான் இருக்கும்.. ஒருநாள் அவங்களை சமைக்கச் சொல்லி விட்டு நீங்க ரெஸ்ட் எடுங்க.. அப்போது இப்படி சுவராஸ்யமாகக் கதை சொல்ல முடிகிறதான்னு பார்க்கலாம்..” மித்ரன் லேசாகக் கோபப்பட்டான்..

அடுப்பின் அனலைக் குறைத்து வைத்தபடி.. அக்காள் மகனை நிமிர்ந்து பார்த்து.. பரிவுடன் சிரித்தாள் லலிதா..

“நான் மட்டுமில்லைடா மித்ரா.. நம் இந்தியப் பெண்களில் தொண்ணூறு சதவிகிதம் பெண்கள்.. கல்யாணமானவுடன் தொலைந்துதான் போய் விடுகிறோம்..” அவள் பேச்சில் வெறுமை தொனித்தது.

0Shares

Reviews — Aatrangarai Arukinilze / ஆற்றங்கரை அருகினிலே..!

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link