Chapter 10

0Shares

தீர ஒரு சொல்.. நீயும் சொல்லிவிடு..

நான் வாழ்வதா.. இல்லை.. மாள்வதா..?

லலிதா மித்ரனிடம் பேசிக் கொண்டிருந்தாலும்.. அவள் கை வினாடிப் பொழுது கூட சும்மாயிருக்கவில்லை. வேலை… வேலையாக இருக்க.. அவளுடைய வாய் மட்டும் பேசிக் கொண்டிருந்தது.

“கல்யாணம் என்பது ஒரு கோட்டை மித்ரா.. அந்தக் கோட்டையைப் பிடித்து.. கொடியை நாட்டுவதுதான்.. பெரும்பாலான இந்தியப் பெண்களின் கனவு.. ஆனால் கோட்டைக்குப் பின்னால் காத்திருப்பது.. சொர்க்கமா.. இல்லை நரகமான்னு எந்தப் பெண்ணுக்கும் தெரியாது..”

“ஆண்களுக்கும் அப்படித்தானே சித்தி…?”

“ஆண்களுக்கு ஆயிரம் வடிகால் இருக்கிறதே.. இப்போது இந்த ஆற்றங்கரையையே எடுத்துக் கொள். இந்த ஊரை ஒட்டித்தான் ஆறு போய்க் கொண்டிருக்கிறது. இந்த ஆற்றங்கரையில் போய் உட்கார்ந்து விட்டு வர உனக்கும்.. உன் சித்தாப்பாவிற்கும் சுதந்திரம் இருக்கிறது.. எனக்கு அது இருக்கிறதா…?”

“நீங்கள் போவதை யார் தடுத்தார்கள்…”

“யார் தடுத்தார்கள்..? ம்ஹூம்.. கேள்வி கேட்பது சுலபம்.. பதில் சொல்வதுதான் கஷ்டம்.. எங்களின் நிலையை நீ புரிந்து கொள்ள முடியாது. அதற்கு பெண்ணாகப் பிறந்திருக்க வேண்டும்.. நீ ஆண்.. உனக்குப் புரிந்து கொள்வது கஷ்டம்..”

“ஹ.. இப்படிச் சொல்லி நீங்கள் தப்பிக்க பார்க்கறீங்க.. எனக்குப் புரியும்படி சொல்ல உங்களால் முடியவில்லைன்னு சொல்லுங்க..”

“காலம்காலமாய்.. எங்களின் கால்கள்.. கண்ணுக்கு தெரியாத விலங்கால் பிணைக்கப்பட்டிருக்கிறது மித்ரா.. நாங்கள் சுதந்திரமாய்.. ஒரு அடி எடுத்து வைக்க முடியாது.. இப்போது அத்தையைப் பற்றிச் சொன்னாயே.. அவங்களும் என் வயதில் இப்படி அடுக்களையில் வெந்துதான் இருப்பாங்க. இது ஓய்வெடுக்கும் வயது.. அதனால் திண்ணையில் போய் உட்கார்ந்து இருக்காங்க.. 

ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக் கொள் மித்ரா. அவங்களுடைய சுதந்திரத்தின் எல்லையும்.. அந்த திண்ணைவரையில்தான்.”

“ஓய்வெடுக்கும் வயதா..? யு மீன் ரிட்டயர்மென்ட்.?”

“ரிட்டயர்மென்ட் எல்லாம் ஆண்களுக்குத்தான். பெண்களுக்கு கடைசிவரை வீட்டுப் பொறுப்புக்களில் இருந்து ரிட்டயர்மென்ட் கிடையாது. அவள் கண்மூடும் வரை கரண்டி பிடிக்க வேண்டியவள்தான்.. உன் அம்மாவையே எடுத்துக்கொள். அது வேலைக்குப் போகிற பெண்தானே.. நாளைக்கு அது ரிட்டயர் ஆகிவிட்டால். ஓய்வாக ஈஸி சேரில் சாய்ந்து உட்கார்ந்து பேப்பர் படிக்க முடியுமா..? உன் அப்பா ரிட்டயரானால் அதைச் செய்யலாம். என் அக்கா ரிட்டயரானாலும் அதுக்கு.. வீட்டு வேலைகளில் இருந்து ரிட்டயர்மென்ட் இல்லை…”

“உங்களுக்கு வேலைகளில் இருந்து விடுபட்டு.. வாழ்க்கையை ரசிக்கத் தெரியவில்லைன்னு சொல்லுங்க..”

“வெறும் ரசனையால் என்ன பிரயோசனம்..? உனக்கே தெரியும் மித்ரா.. எனக்கு வீணை வாசிக்கத் தெரியும். வீணையை எடுத்து மீட்டி பாட ஆரம்பித்தால்.. நேரம் போவதே தெரியாது…”

லலிதாவின் விழிகள்.. அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த குழம்பில்.. காணாமல் போன தன் கடந்த காலத்தைத் தேடுவது போல.. வெறித்தன.

“நானே இதை உங்களிடம் கேட்க வேண்டுமென்று நினைத்தேன் சித்தி.. உங்க வீணை எங்கே…?”

“நான் வாசிப்பதை விட்டு விட்டேன்..”

லலிதாவின் வார்த்தைகளில் துயரம் தோய்ந்திருந்தது. அவளது இமையோரமாக நீர்த்துளிகள் அரும்பின. அவை கீழே விழுந்து விடாமலிருக்கும் பொருட்டு.. அவள் விழி சிமிட்டி தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.

“ஏன் சித்தி…?”

“ஒரு நாள் உன் சித்தப்பா.. ‘குடும்பப் பொம்பளையாய் லட்சணமாய் உனக்கு இருக்கத் தெரியாதா’ன்னு.. என்னை பார்த்து கேட்டுவிட்டார்..”

“சித்தி…”

“வீணை வாசிப்பதற்கு மட்டும் இதை அவர் சொல்லவில்லை மித்ரா.. நான் ஆற்றங்கரையின் அழகை ரசிக்க அடிக்கடி படித்துறைக்குப் போவேன்..”

“அது ஒன்றும் தப்பில்லையே..”

“உன் சித்தப்பாவிற்கு அது தப்பாகத் தெரிந்து விட்டதே..”

மித்ரன் திகைத்து விட்டான். அவனுக்கு லலிதாவின் மனம் படும் வேதனையைப் புரிந்து கொள்ள முடிந்தது.

எப்பேர்பட்ட ஆயுதம் இது..? எதனாலும் வெட்டிச் சாய்க்க முடியாத வலிமை வாய்ந்த பெண் மனதை.. தன் சுடு நாக்கிலிருந்து வெளிப்படும் வார்த்தைக் கோடாரியால் வெட்டிச் சாய்க்கும் வன்முறை இது..

‘குடும்பப் பெண் இதைச் செய்ய மாட்டாள்..’

இதற்கு என்ன அர்த்தம்..? இதைச் செய்யும் நீ குடும்பப் பெண்ணில்லையென்று அர்த்தம். இப்படி ஒரு வார்த்தையைக் கேட்ட பின்.. எந்தப் பெண்ணாவது.. இதைச் சொல்பவர்கள் தடுப்பதை செய்து விடுவாளா…?

சமூகத்தில் நடக்கும் வன்முறையை விடக் கொடுமையானது ஒரு வீட்டுக்குள் பெண்ணுக்கு நடக்கும் வன்முறை.. அதை அவளால் யாரிடம் போய் சொல்ல முடியும்…? அவள் படும் மனக்காயத்துக்கு – புரையோடிப் போன நினைவு ரணங்களுக்கு மருந்து ஏது…?

வீட்டுக்கு வெளியில் மதிக்கப்படுவதற்காக வீட்டுக்குள் தினந்தோறும் அவமதிப்பைச் சந்திக்கும் பெண்களின் துயரத்தை வார்த்தைகளால் வடித்து விடமுடியுமா..? மற்றவர்கள் தரும் மரியாதைக்காக.. வீட்டுக்குள் அவமரியாதையைச் சகித்துக் கொண்டு வாழும் பெண்களின் மன வேதனையை சொல்லுக்குள் கொண்டு வந்து விட முடியுமா…?

லலிதா மித்ரனைப் பார்த்துக் கேட்டாளே… ஒரு கேள்வி.. ‘நீ பெண்ணாக இருந்தால்தான் என் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியும். உன்னால் என் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியுமா…!’ என்று.

மித்ரனால் புரிந்து கொள்ள முடிந்தாலும்.. அவன் முழுமையாக லலிதாவின் உணர்வுகளைப் புரிந்து கொண்டானா என்று அவனிடம் கேட்டால், அவனுக்குப் பதில் சொல்லத் தெரியாதுதான்.

இதுதான் பெண் குலம். ஆயிரம் சட்டங்கள் வந்தாலும் குடும்பத்துக்குள் வாழும் பெண்ணிற்கு அது பாதுகாப்பைத் தந்து விடாது.. எந்தச்சட்டமும் பெயரளவில்தான் இருக்க முடியும். ஏனென்றால்.. அதை உபயோகப் படுத்திக் கொள்ள.. ‘குடும்பப் பெண்’ முன்வரமாட்டாளே..

0Shares

Reviews — Aatrangarai Arukinilze / ஆற்றங்கரை அருகினிலே..!

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link