Chapter 24

0Shares

ஆற்றங்கரையின் அருகினிலே….

அணைத்தவன்.. என்னைப் பிரியவில்லை…

காயத்ரி சென்ற பின்னாலும் அவள் பேசிய வார்த்தைகள் மித்ரனின் காதுகளில் எதிரொலித்துக் கொண்டிருந்தன..

“உங்கள் வாயிலிருந்து வரும் வார்த்தைதான் எனக்கு வேதம்.. நான் அதன்படி நடப்பேன்.. வாழச் சொல்கிறீங்களா.. உங்களுடன் வாழ்கிறேன். சாகச் சொல்கிறீங்களா.. உங்கள் கையில்…”

அவள் போய் விட்டாள்.. லலிதா மித்ரனைப் பார்த்தாள். அவன் மௌனமாக அவனுடைய உடைகளை சேகரித்து மடித்து அவனுடைய பைகளில் அடுக்க ஆரம்பித்தான். லலிதா நிம்மதியுடன் சமைக்கப் போனாள்.

மதிய உணவுக்கு கந்தசாமியின் வீட்டிலிருந்து அழைப்பு வந்தது. இரவு விருந்திற்கு வருவதாக பதில் சொல்லி அனுப்பி விட்டாள் லலிதா. மாலையில் விஸ்வம் மித்ரனைத் தேடி வந்த போது.. அவன் வெளியில் போய் விட்டதாகச் சொல்லி அவனையும் அனுப்பி விட்டாள்.

“கட்டாயம் நீங்க எல்லோரும் மித்ரனுடன் பங்சனுக்கு வந்துவிட வேண்டும் ஆன்ட்டி..”

விஸ்வம் வருந்தி வருந்தி அழைத்து விட்டுப் போய் விட்டான். சிவப்பிரகாசம் நேரத்துடன் வீட்டுக்கு வந்து விட்டார். குழந்தைகளைத் தயார் பண்ணி வைத்திருந்த லலிதா “நீங்க.. அத்தை மாமாவையும்.. பிள்ளைகளையும் கூப்பிட்டுக் கொண்டு முன்னால் போங்க. நான் மித்ரனுடன் ஆற்றங்கரை அரச மரத்தடி பிள்ளையாருக்கு விளக்குப் போட்டுவிட்டு பின்னாலேயே வந்து விடுகிறேன்..” என்று சொல்லி.. எல்லோரையும் கந்தசாமியின் வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டாள்…

மாலை மயங்கி இருள் சூழ்ந்த நேரத்தில் ஊர் மக்கள் – ஊர் பண்ணையாரின் வீட்டில் கூடியிருக்க..

மித்ரன் பைகளுடன் வீட்டை விட்டு வெளியேறினான். லலிதா – யாரும் அவர்களைப் பார்க்கிறார்களா.. என்று சுற்று முற்றும் பார்த்தபடி.. அவனைப் பின் தொடர்ந்தாள்.

“விஸ்வம் என்னைத் தப்பாக நினைத்துக் கொள்வானா சித்தி..?”

“நினைத்துக் கொள்ளலாம். அதற்கு நாம் என்ன பண்ணமுடியும்..? பெண்ணை விட்டுக் கொடுக்கலாம். உன் பெண்டாட்டியாய் வாழ்பவளை எப்படி விட்டுக் கொடுப்பது..?”

அவர்கள் ஆற்றங்கரையை அடைந்து விட்டார்கள். படித்துறையில் படகுடன் ராமையா காத்திருந்தான். லலிதா அவனைக் கண்டதும் ஆச்சரியப்பட்டுப் போனாள்.

“நீ எப்படி ராமையா இந்நேரம் பார்த்து.. கரெக்டாக இங்கே இருக்கே..?”

“தேவிப் பொண்ணுக்கு பரிசம் போடப் போகிறதா ஊரில் பேசிக்கிட்டாங்கம்மா.. பரிசம் போடப் போகிறது உங்க அக்கா மகன் இல்லைன்னு தெரிஞ்சதும்.. அடுத்து என்ன நடக்கும்ன்னு யூகிச்சுட்டேன். தேவிப் பொண்ணை சிறுசுல இருந்து எனக்குத் தெரியும்மா.. உங்க அக்கா மகனோடு.. அது எப்படி பழகுச்சுன்னு தெரிஞ்ச பின்னாலும்.. அது வேறு ஒருத்தனுக்கு கழுத்தை நீட்டும்ன்னு என்னால் நினைக்க முடியுங்களா…?”

‘இவன் வெறும் படகோட்டி மட்டும்தானா..?’ மித்ரன் வியந்து போனான்.

அவன் கண்ட ராமையாவின் மறுபக்கம்.. அவனை ஆச்சரியப்பட வைத்தது..

தூரத்தில் கொலுசுசொலி கேட்டது. அவர்கள் மூவரும் பரபரப்பானார்கள்.

“மித்ரா.. தேவி வருகிறாள்டா..” லலிதா கூறினாள்.

காயத்ரி.. புடவையில் இருந்தாள்.. காதில் சிறு தோடும்.. கைகளில் இரண்டு வளையல்களும்.. கழுத்தில்  மெல்லிய செயினுடனும் இருந்தாள்.

“நல்லவேளை.. நீ தகதகன்னு.. தங்க வேட்டையில் வருகிறது போல் வரவில்லை..” என்று நிம்மதியாகச் சொன்னான் மித்ரன்.

“அப்படி வந்திருந்தால் என்ன பண்ணியிருப்பீங்க..?” என்று கேட்டாள் காயத்ரி.

“உன் நகைகளை அவிழ்த்து சித்தியிடம் கொடுத்து – உன் வீட்டில் கொடுத்து விடச் சொல்லியிருப்பேன்..” என்றான் மித்ரன்.

“எனக்கு உங்களைத் தெரியும். அதனால்தான்.. அத்தைக்கு அந்தச் சிரமத்தைக் கொடுக்கக் கூடாதுன்னு.. நானே நகைகளை வீட்டில் கழட்டி வைத்து வந்தேன்..” என்றாள் தேவி.

“சரி.. சரி.. பேச நேரமில்லை. வா.. கிளம்பலாம்..” மித்ரன் அவள் கைபிடித்த போது தயங்கி நின்று.. அவன் முகம் பார்த்தாள் காயத்ரி.

“என்ன தேவி..” மித்ரனுக்கு ஒன்றும் புரியவில்லை.

“இந்த ஆற்றைத் தாண்டி  – இந்த புன்னை வனத்தைச் சேர்ந்த பெண்கள் யாரும் போகும் போது கழுத்தில் தாலியோடுதான் போயிருக்கிறாங்க.. உங்களுடன் நான் வெறும் கழுத்தோடு வந்தால் என்னை ‘ஓடிப் போனவள்..’ன்னு  தான் இந்த ஊர் சொல்லும். அதுவே.. கழுத்தில் நீங்கள் கட்டிய தாலியோடு இந்த ஆற்றைக் கடந்தால், பெத்தவங்களுக்குத் தெரியாமல் கல்யாணம் பண்ணிக்கிட்டு போய் விட்டாள்ன்னு சொல்லும்..”

“இப்போ.. தாலிக்கு நான் எங்கேடி போவேன்..?”

“எங்கேயும் போகவேண்டாம். அரச மரத்தின் மேல் வேண்டிக் கொண்டு.. நான் கட்டிய தாலிக் கயிறு.. அதோ அந்தக் கிளையில்தான் இருக்கிறது. எனக்கு அது போதும்.”

புன்னை வனத்தின் – ஊர் பண்ணையாரின் ஓரே மகள்.. அரச மரத்தடி பிள்ளையாரின் முன்னால் ராமையாவையும்.. லலிதாவையும் சாட்சியாக வைத்து மித்ரன் கட்டிய.. மஞ்சள் கயிறை.. தன் கழுத்தை நீட்டி வாங்கிக் கொண்டாள்.

“சித்தி.. நீங்க எப்படி.. தனியாக..” மித்ரன் தயங்கினான்.

“நான் பார்த்துக் கொள்கிறேன் மித்ரா.. நீ தேவியைப் பத்திரமாய் கூப்பிட்டுக் கொண்டு போ.. எனக்கும் உன் சித்தப்பாவிடம் உரிமை இருக்கிறது. என் உரிமையை இன்றைக்காவது நிலைநாட்டி என் பக்க நியாயத்தைப் புரிய வைப்பேன். நீ போய் வா…” லலிதா விடை கொடுத்தாள்.

ஆற்றங்கரை அருகினிலே அமைந்த அந்த புன்னைவனத்து கிராமத்தை விட்டு படகு – ஆற்று நீரில் வேகமாக விரைந்து நகர்ந்தது.

…முற்றும்…

0Shares

Reviews — Aatrangarai Arukinilze / ஆற்றங்கரை அருகினிலே..!

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link