Chapter 10
வாழ்க்கை இப்படி அவனை வஞ்சித்துக் கொண்டே இருக்கக்கூடாது என்று மருகினான் பிரசன்னா..
‘இந்த முத்துலட்சுமி ராகவன் எழுதற கதையில எல்லாம் வாழ்க்கை யாரையும் வஞ்சிப்பதில்லைன்னு கொட்டை, கொட்டையாய் குண்டு எழுத்தில எழுதி வைச்சிடறாங்களே..
என் வாழ்க்கையைப் பத்தித் தெரிஞ்சிருந்தா அப்படி எழுதியிருப்பாங்களா..?’ என்று மூக்கைச் சிந்தியது அவன் மனம்..
அதிக நேரம் அவன் மூக்கைச் சிந்தக் கூடாதென்ற நல்ல மனதுடன் (?) அடுத்த கேள்வியைக் கேட்டான் ரகுவரன்..
“அவதான் சகிக்கலைன்னு சொல்லிட்டுப் போயிட்டாள்ல.. அப்புறமும் என்ன அலுவலுக்குப் போனைப் போட்டாளாம்..?”
நண்பன் ஆதரவாகத்தான் கேட்கிறான் என்று நம்பி உண்மையைக் கக்கி விட்டான் பிரசன்னா..
“இந்த சினிமாவில வர்ற டயலாக் வாழ்க்கையிலும் வொர்க்கவுட்டாகும்ன்னு நம்பி ஒரு மெஸேஜை தட்டி விட்டுட்டேண்டா மச்சி..”
“நீயெல்லாம் மெஸேஜ் சொல்ல ஆரம்பிச்சா நாடு விளங்கிரும்ங்கிற..?”
“நாடு எப்படிப் போனா நமக்கென்னடா..?”
“உனக்கென்னன்னு உன்னை மட்டும் சொல்லு.. என்னை இழுக்காதே.. எனக்கு என்னைவிட நாடுதான் முக்கியம்..”
கறாராகச் சொன்ன ரகுவரனை வெளிப்படையாக முறைத்துக் கொள்ள முடியாமல்.. இவன் மெக்கானிக்கல் என்ஜினியரா இல்லை ராணுவத்தின் கேப்டனா என்று மனதுக்குள் புழுங்கினான் பிரசன்னா..
“மனசுக்குள்ள என்னத்தைத் தாளிக்கற..?” என்று அதையும் தோண்டித் துருவினான் ரகுவரன்..
“நீ ராணுவத்தில சேவை செய்யப் போயிருக்க வேண்டியவன்.. பாவம்.. மெக்கானிக் ஷெட்டையும் ஆட்டோ மொபைல் ஷாப்பையும் கட்டிக்கிட்டு அழுகறன்னு நினைச்சேன்டா ரகு.. வேற ஒன்னும் நினைக்கலை..” மனம் தாளாமல் சொல்லி விட்டான் பிரசன்னா..
“நீ இம்புட்டு நினைச்சதே அதிகம்.. இதுக்கு மேலயும் நினைப்பியா..? ராணுவத்தில இருக்கிறவன்தான் நாட்டை நினைச்சுப் பார்க்கணும்.. மத்தவங்கள்ளாம் தங்களைப் பத்தி மட்டும்தான் நினைக்கனும்னா நாடு உருப்படுமாடா..?”
“இப்ப நான் என்னத்த சொல்லிட்டேன்னு நாட்டுப்பற்றை போதிக்கற..? நானே அனுப்பின எஸ்.எம்.எஸ் எக்குத்தப்பா வேலை செஞ்சிருக்கேன்னு அல்லாடிக்கிட்டு இருக்கேன்..”
“அப்படி என்னத்தை அனுப்பி வைச்சுத் தொலைச்ச..?”
“தப்பால்லாம் எதுவும் சொல்லலைடா.. என்னை மாதிரியான ஆளுகளையெல்லாம் பார்த்தவுடனே சகிக்கலைன்னுதான் சொல்லத் தோணும்ன்னு தட்டி விட்டேன்..”
“இதப் பாருடா..”
“அதைப் படிச்சுப் பார்த்த அவளோட அண்ணன் என்னைத் தட்டி வைக்கனும்னு முடிவு பண்ணிட்டானாம்டா..”
“முடிவே பண்ணிட்டானா..? நல்ல அண்ணன்..”
“இது தெரியாம நானு இவளோட போன் நம்பரைப் பார்த்ததும் எஸ்.எம்.எஸ் வொர்க்கவுட் ஆகிருச்சுன்னு மகிழ்ந்து போய் போனை அட்டெண்ட் பண்ணிட்டேன்.. அவளும் ஹலோன்னு கொஞ்சும் கிளியாத்தான் பேச்சை ஆரம்பிச்சா.. நான் வழிஞ்சதுக்கு ‘ச்ச்ச்ச்’சுன்னு சத்தம் கொடுத்தாளா.. முத்தம்தான் கொடுக்க வர்றான்னு நினைச்சுட்டேண்டா மச்சான்… அவ அண்ணனைக் கூப்பிட்டு போனை அவன் கைக்கு மாத்தி விட்டுட்டாங்கிற விவரம் அப்புறமாத்தாண்டா தெரிஞ்சது..”
“முகத்துக்குப் பக்கத்தில் வர்றான்னா முத்தம் கொடுக்கத்தான் வர்றான்னு நம்பி முகத்தைக் காட்டிறக் கூடாதுன்னு இதுக்குத்தான் சொல்றது.. பிறாண்டி விடவும் வரலாம்..”
“பிறாண்டறதும் பிறாண்டறா.. அவ பிறாண்டாக் கூடாதா..? துடைச்சுப் போட்டுட்டுப் போயிருப்பேனே..”
“அதுதான் உனக்குக் கை வந்த கலையாச்சே.. அடேய் பிரசன்னா.. சினிமாவில வர்ற ஹீரோ சொல்ற வசனத்தையெல்லாம் லைஃபில அப்ளை பண்ணினேன்னு வைய்யி.. கதை கந்தலாகிரும்.. சினிமாவில ஹீரோவைத்தான் ஹீரோயின் காதலிச்சாகனும்.. அவளுக்கு வேற வழியே இல்லை.. ரியல் லைஃபில அப்படியா..?”
“அதைச் சொல்லு..”
பிரசன்னா விட்ட பெருமூச்சில் அனல் பறந்தது.. சுட்டு விட்ட பாவனையில் கதிர்வேலன் கையை உதற லோகநாதன் நமட்டுச் சிரிப்பைச் சிரித்தான்.. பலராமன் அதைப் பங்கு போட மொத்தமாய் மூன்று பேரையும் சேர்த்து வைத்து மொத்தப் போவதாக பிரசன்னா ஆவேசம் கொண்டான்..
“விடுடா.. இதெல்லாம் ஒரு மேட்டரா..” என்று அதையும் விடச் சொல்லி விட்டு அடுத்த பேச்சிற்குத் தாவினான் ரகுவரன்..
“போனவாரம் மழை வந்தப்ப வேற ஒரு கதையைச் சொன்னியே.. அப்படியே அந்தி மழை பொழிகிறது ரேன்ஜீக்கு இருந்ததா கண்ணைச் சொக்கினியே..”
“அதையேண்டா கேட்கிற..”
“ஏண்டா.. கேட்கக் கூடாத அளவுக்கு மட்டக் கண்றாவிக் கதையாடா மச்சி..?”
“ஏண்டா நீ வேற.. கொடுமை கொடுமையாய் இருக்கும்டா.. அதைத்தான் சொன்னேன்..”
“நீ காதலிச்சாலே அது கொடுமைதாண்டா.. அதையும் சொல்லு.. கேக்கலாம்..”
ரகுவரன் சொல்ல மற்ற மூவரும் காதை தீட்டிக் கொண்டு கதை கேட்க ஆயத்தமானதில் கொலை வெறியானான் பிரசன்னா..
“ஏண்டா.. என் கொடுமையைக் கேக்கறதுக்கு இம்புட்டு இண்ட்ரெஸ்ட்டா..?”
“எதுவா இருந்தாலும் பகிர்ந்துக்கடா மச்சான்.. அப்பத்தான் உனக்கும் மனசு ஆறுதலா இருக்கும்.. எனக்கும் வேலை ஓடும்..”
“எனக்குன்னு சொல்லாதே.. எங்களுக்குன்னு சொல்லு..”
“உன்னை எத்தனை தரம்தான் விடுடான்னு சொல்றது.. மழைக்கு வாடா மச்சான்..”
“சொல்லித் தொலைக்கிறேன் கேளு.. போன வாரம் ஏரியாவைச் சுத்திட்டு வீட்டுக்கு திரும்பறப்ப மழை வந்திருச்சு.. வாக்கிங்குன்னு பேர் பண்ணிக்கிட்டு வீதியைச் சுத்திக்கிட்டு இருந்தவன் குடையையும் கையில பிடிக்கலை.. கொட்டற மழைக்கு தெருமுனை மரத்தடியில ஒதுங்கினா பக்கத்தில ஒரு பொண்ணு..”
“பொண்ணா..? மோகினியா..?”
“மோகினிப் பேய் கொழுசு போட்டிருக்குமா..?”
“மோகினிக்கும் எனக்கும் அவ்வளவா பரிச்சயம் இல்லை.. நான் பொண்ணைப் பாத்தா விண்ணைப் பார்க்கிற ஆளு.. நீதான் வீதி வீதியா உலா வர்றவன்.. உனக்குத்தான் கொழுசைப் பத்தின விவரம் தெரிஞ்சிருக்கும்..”
ரகுவரன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஊடே தலையிட்டு பலராமன் குரல் கொடுத்தான்..
“சார்.. அதுவே மோகினிப் பேய்.. அந்தரத்தில அலையும்.. காலே இருக்காது.. கொழுசை எங்கே சார் போடும்..”
“தகவலுக்கு நன்றி பலராமா..”
“தேங்க் யு சார்..”
“பட்.. ஒன் டவுட் பலராமா..”
“என்ன சார்..”
“காலே இல்லை.. கொழுசும் போடாது.. அப்புறம் எப்படி மோகினிப் பேய் வந்தா ஜல்ஜல்லுன்னு சத்தம் கேட்கும்ன்னு எல்லோரும் சொல்றாங்க..?”
“தெரியலையே சார்..”
பலராமன் ‘ஙே’ என்று விழித்தான்.. அகப்பட்டாயா என்பதை போல பார்த்த பிரசன்னா ஆள் காட்டி விரலை வாய் மீது வைத்து வேலையைப் பார் என்று சமிக்ஞை செய்தான்.. பலராமனின் முகம் விழுந்து விட்டது..
‘இந்த ஆளுக்கு முன்னாலே பல்ப் வாங்கிட்டேனே..’
ரகுவரனிடம் பல்ப் வாங்கி விட்ட வருத்தத்தை விட அந்த பல்பை பிரசன்னாவின் முன்னிலையில் வாங்கி விட்ட கொடுமைதான் பலராமனுக்கு அதிக வருத்தத்தை அளித்தது..
Reviews — Akalvizhku / அகல் விளக்கு
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.