Chapter 11

0Shares

பலராமன் பல்ப் வாங்கி விட்ட சந்தோசத்தில் உற்சாகம் கரை புரள மழை நாளின் கதையைக் கலக்கலாகச் சொல்லிக் கலக்க ஆரம்பித்தான் பிரசன்னா..

“கொட்டற மழையில நனையாம இருக்கிறதுக்குத்தான் மரத்தடி யூஸாகும்..”

“இப்ப இதை ஏன் சொல்லற..?”

“காரணம் இருக்குடா.. கோடை மழை தனியாவா வரும்..? துணைக்கு இடி மின்னலைக் கூப்பிட்டுக்கிட்டு வருமா, வராதா..?”

“வரும்தான்..”

“டுமீர்ன்னு இடி இடிச்சது.. பக்கத்தில நின்னவ இடிச்சத்தத்துக்கு பயந்து இறுக்கிக் கட்டிப் புடிச்சுக்கிட்டா..”

“எதைடா..? மரத்தையா..?”

என்ஜினைக் குடைந்து கொண்டே கேட்டான் ரகுவரன்.. ஷெட்டிலிருந்த மற்ற மூவரும் பலமாக சிரித்து பிரசன்னாவின் பிளட் பிரசரை எகிற வைத்தார்கள்..

‘இவனுக சிரிக்காம இருந்தாத்தான் என்னன்னு யோசிக்கனும்.. சிரிக்கிறதுக்கு காரணம் கிடைக்காதான்னு எப்போ, எப்போன்னு காத்துக்கிட்டு இருக்கிறவனுக சான்ஸ் கிடைச்சா கபால்ன்னு பாய்ஞ்சு அமுக்கிற மாட்டானுகளா..?’

அது தெரிந்தும் ஏதும் அறியாதவனைப் போல அவர்களுக்கு வாய்ப்பை அள்ளிக் கொடுத்த ரகுவரனை மௌனப்பார்வை பார்த்தவன்..

“உனக்கு என்னடா நான் கெடுதல் செய்தேன்..? அவ பக்கத்தில மரம் மட்டுமாடா நின்னுச்சு..? நானும்தானேடா நின்னுக்கிட்டு இருந்தேன்..? என்னை விட்டுட்டு மரத்தைத்தான் கட்டிப் புடிப்பான்னு ஆணித்தரமா அடிச்சுச் சொல்றயேடா.. எம்புட்டு நம்பிக்கைடா உனக்கு..?” என்று அழமாட்டாத குறையாகக் கேட்டான்..

சிரிப்பு சப்தம் வலுத்தது.. என்ஜினிலிருந்து தலையைத் தூக்கிய ரகுவரன்..

“ஸாரிடா மச்சான்.. நான் அந்த ஆங்கிளில யோசிச்சே பார்க்கலைடா..” என்று வருத்தமில்லாமல் சொன்னான்..

“நீயேன் யோசிக்கப் போற..? என்கிட்ட இல்லாத எது மரத்துக்கிட்ட இருக்குன்னு நினைச்சு நீ அந்த வார்த்தையை விட்ட..?” பிரசன்னா விடுவதாக இல்லை..

“அதை விடு.. அந்தப் பொண்ணு மரத்தைக் கட்டிப் பிடிக்காம உன்னையா கட்டிப் பிடிச்சா..?”

படு ஆச்சரியமாக ரகுவரன் கேட்டதில் பலமாக சிரித்துக் கொண்டிருந்த மூவரும் உருண்டு புரண்டு இன்னும் அதிகமான சிரிப்பை வெளிப்படுத்தினார்கள்..

“இந்த லட்சணத்தில கேட்கிறதுக்கு.. நீ சந்தேகம் கேட்காமலே இருந்திருக்கலாம்..” முறைத்தான் பிரசன்னா..

“என்னவோ போடா.. பசி வந்தாத்தான் பத்தும் பறந்து போகும்ன்னு சொல்வாங்க.. இங்கே பயம் வந்தா பத்தும் பறந்து போகுது பாரேன்..” தத்துவம் பேசினான் ரகுவரன்..

“இப்ப என்ன அலுவலுக்கு இந்தப் பழமொழியை அள்ளி விடற..?” கடுப்பானான் பிரசன்னா..

“ஏதோ தோணுச்சு சொன்னேன்.. விடுவியா..?”

“எப்பப் பார்த்தாலும் என்னைத்தான் விடச் சொல்வியா.. என்னவோ மிகப் பெரிய நகைச்சுவையை கேட்டுட்டதைப் போல ஷெட்டுப் பூராவும் உருண்டு புரண்டு சிரிக்கறேன் பேர்வழின்னு கூட்டிப் பெருக்கிக்கிட்டு இருக்கானுகளே.. இவனுகளைச் சொல்ல மாட்டியா..?”

“ஏய்ய்.. சிரிக்காதீங்கப்பா.. சொல்லிட்டேண்டா..”

“இதுக்கு நீ சொல்லாமலே இருந்திருக்கலாம்.. என்னவோ ஆட்டுக்குட்டியைத் தடவிக் கொடுக்கிறதைப் போலச் செல்லமா சொன்னா எவன்டா கேப்பான்..?”

“என்னவோ என்னவோன்னு எதுக்குடா ராகம் போடற..? இதைக் கேட்காமலே இருந்திருக்கலாம், சொல்லாமலே இருந்திருக்கலாம்ன்னு சொல்ற..? என்ன..? உன்னோட 

இடி, மின்னல் கதையைக் கேட்கனும்ங்கிறதுக்காக இத்தனை நொட்டனைகளையும் நான் வாங்கிக் கட்டிக்கனுமா..?” ரகுவரன் குரலை உயர்த்த..

“ஐயையோ..” என்று சரண்டர் ஆனான் பிரசன்னா.

“உனக்கே இது நியாயமா இருக்காடா ரகு..? அவனுகளை அதட்டினா மட்டும் காதலியை அதட்டறதைப் போல ஹஸ்கி வாய்ஸில கொஞ்சறதைப் போல அதட்டற.. என்னை மட்டும் எட்டுக் கட்டைத் தொண்டையில வில்லனை அதட்டற மாதிரி அதட்டி வைக்கிற..”

“காதலிகிட்ட ஹஸ்கி வாய்ஸில் பேசறதைப் போல பேசறேனா..? காதலிக்கே வழியைக் காணோம்.. இதில ஹஸ்கி வாய்ஸீக்கு எங்கே போறது..?”

“இப்படி முறைச்சுக்கிட்டு இருந்தா எந்தக் காதலி உன்னைத் தேடி வருவா..?”

“என்னைத் தேடி வர்றது இருக்கட்டும்.. உன்னைக் கட்டிப் புடிச்சவ எங்கே போனா..? அவளை விட்டுட்டு அடுத்த தெரு பைங்கிளிக்கு நூல்விட்டு அவ அண்ணன் காரன்கிட்ட நீ ஏன் மாத்து வாங்கற..?”

“அந்தக் கொடுமையை ஏண்டாக் கேட்கிற..? இப்படி ஒருத்தி கொட்டற மழையில கட்டிப் பிடிப்பான்னு நான கனவாடா கண்டேன்..? அப்புடியே ஷாக் ஆகி நின்னுத் தொலைச் சிட்டேன்டா..”

“இதைக் கேக்கிற எங்களுக்கே ஷாக் ஆகுது.. உனக்கு ஷாக் ஆகாதா..?”

ரகுவரன் சொல்ல, முதலாளி ‘எங்களுக்கே’ என்று தங்களையும் கூட்டுச் சேர்த்துக் கொண்டதில் மற்ற மூவரும் பயமின்றி சிரித்தார்கள்.. அதில் கதிர்வேலன் யோசனையுடன் நெற்றியில் ஒற்றை விரலால் தட்டியபடி..

“இந்த சீனை ஏதோ ஒரு பழைய படத்தில பார்த்திருக்கேண்டா பலராமா..” என்றான்..

“‘அவளுக்கென்று ஒரு மனம்’ங்கிற படம்டா.. ஜெமினி கணேசனை.. காஞ்சனா கட்டிப் பிடிப்பாங்க.. ” உடனடியாக பதிலைச் சொன்னான் பலராமன்..

“ஆயிரம் கனவுன்னு பாட்டுக்கூடப் பாடுவாரே..” விரல் சொடுக்கி உற்சாகமானான் லோகநாதன்..

“பாட்டி காலத்துப் படத்தை இப்போ நடக்கறது கூடக் கம்பேர் பண்றானுக பாரு.. எல்லாம் நீ கொடுக்கிற இடம்டா ரகு..” பிரசன்னா கோபமானான்..

ரகுவரன் எதையோ சொல்ல வாய்திறக்க.. கையமர்த்தி அவனைத் தடுத்தவன்..

“விடுடான்னுதானே சொல்லப் போற..? இதைக் கேட்டுக் கேட்டு காது ஜவ்வே அறுந்து போச்சு.. நானே விட்டுட்டு கதையைக் கண்டினியூ பண்றேன்.. நீ அலட்டிக்காதே..” என்று கடுப்புடன் சொன்னான்..

ரகுவரனுக்குச் சிரிப்பு வந்து விட்டது.. நண்பனைக் கட்டிப் பிடித்துக் கொண்டான்.. பிரசன்னாவின் முகம் மென்மையானது..

“காதலியைக் கட்டிப் பிடிக்கிறதை விட்டுட்டு பிரண்டைக் கட்டிப் பிடிக்கிறயேடா..” என்றான்..

“காதலியை கொண்டு வந்து நிறுத்திட்டுப் பேசுடா.. மழைக்கு பயந்த ஒருத்திக் கட்டிப்பிடிச்சா ஆஹான்னு பதிலுக்குக் கட்டிப் பிடிப்பானா.. அதை விட்டுட்டு இல்லாத காதலியைக் கட்டிப் பிடிக்கச் சொல்றான்..”

“நேரம்டா மச்சான்.. ஷாக் ஆகி நின்னவன் ஆடாம அசையாம எம்புட்டு நேரம் நின்னேனோ.. எனக்கே தெரியலை.. அவ் வாகாக் கட்டிப் புடிச்சிருந்தா.. தன்னுணர்வுக்கு வந்தவன் அவளை இறுக்கி அணைச்சுக் கலாம்ன்னு கையைத்தாண்டா அசைச்சேன்..”

“இறுக்கி அணைச்சு ஒரு உம்மா கொடுக்கனும்னு நினைச்சியா..? ஹா.. ஹா..”

“ம்ப்ச்.. நினைத்ததை நடத்தி முடிக்கிறதெல்லாம் மக்கள் திலகம்தான் செய்வாரு.. எனக்கெங்கே அது முடியுது..? நான் ஷாக் ஆகி நின்னப்ப கொட்டின மழை.. தன்னுணர்வுக்கு வந்து கையை அசைச்ச அடுத்த செகண்டே யாரோ சொல்லிக் கொடுத்ததைப் போல டக்குன்னு நின்னுருச்சுடா மச்சான்..”

“அதனால என்ன..? நீ கட்டிப் பிடிச்சிருக்க வேண்டியது தானே..? அதுக்கும் மழைக்கும் என்னடா சம்பந்தம்..?”

“யாதொரு சம்பந்தமும் இல்லைதான்.. ஆனா மழைக்குப் பயந்து கட்டிப் பிடிச்சவ, மழை நின்னதும் கட்டிப் பிடிச்ச நன்றியை மறந்திட்டு என் முகத்தையும் பார்க்காம, அவ முகத்தையும் காட்டாம ஓடியே போயிட்டாடா மச்சி..”

“என்னது..?”

ரகுவரன் சிரித்த சிரிப்பில் ஷெட்டே அதிர்ந்தது..

“தாங்கலைடா பிரசன்னா.. இப்படியாடா கதை சொல்வ..?”

“உனக்குக் கதை.. எனக்கு வதை.. ம்ஹீம்.. அவளாவது இன்னும் கொஞ்ச நேரம் இருந்திருக்கலாம்..”

பிரசன்னா ஏங்கி முடிப்பதற்குள்..

“இன்னும் கொஞ்சநேரம்

இருந்தாத்தான் என்ன..?”

என்ற பாட்டுச் சத்தம் கேட்டு நின்றது..

“யாருடா பாடினது..?” என்ற பிரசன்னாவின் காட்டுக் கத்தலுக்குப் பதிலே இல்லை..

0Shares

Reviews — Akalvizhku / அகல் விளக்கு

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link