Chapter 18
மரங்கள் அடர்ந்த சாலையின் ஓரத்தில் உதிர்ந்த பூக்கள் சிதறிக் கிடந்தன.. பூக்களின் நிறம் ஆரஞ்சா இல்லை சிவப்பா என்று அறுதியிட்டுக் கூற முடியவில்லை.. ஆழ்ந்த அவனது
பார்வை.. அவளை வசியம் செய்வதைப் போல இருந்ததில் நாணப் பட்டவள் பூக்களைப் பார்த்தாள்.. ஏனோ.. திரைப்படங்களில் வரும் டூயட் பாடல் காட்சியை அந்தப் பூக்கள் நினைவு படுத்தின.. ஒரு நொடி அவளும் ரகுவரனும் அந்த மரங்களைச் சுற்றி வந்து ஆடிப் பாடுவதைப் போலக் கற்பனை செய்து பார்த்தாள்.. நினைக்கும் போதே மனது இனித்தது.. அவளையுமறியாமல் பாடலுடன் இசைந்து பாடினாள்..
“மயங்கினேன்.. சொல்லத் தயங்கினேன்..
உன்னை விரும்பினேன் உயிரே..!
தினம் தினம் உந்தன் தரிசனம்..
பெறத் தவிக்குதே மனமே..!
இங்கே நீயில்லாத
வாழ்வும் வாழ்வா..? ஹோய்..”
அவன் முகத்தைப் பார்த்துப் பாடியவளின் விரல்களைப் பற்றினான் ரகுவரன்.. நடுக்கத்துடன் விரல்களை உறுவிக் கொண்டாள் பூர்ணிமா.. ரகுவரன் மீண்டும் அவளது விரல் தொட முனையவில்லை.. அவளது நடுக்கத்திற்கு மதிப்புக் கொடுத்து..
“பூர்ணிமா..” என்று மென்மையாக அழைத்தான்..
“ம்ம்ம்..” கண்மூடி முணுமுணுத்தாள் அவள்..
“இதைக் கேட்டா சினிமாப்பாட்டுப் போலவே தோணலை.. நீ பாடறதைப் போலவே இருக்கு..”
இயல்பான ஒருமை அழைப்பு அவனுக்கு கை வந்து விட்டது.. எப்படியென்று தெரியவில்லை.. அவளை ‘நீ’ என்று சொல்லி விட்டான்..
அதில் பூரித்துப் போனாள் பூர்ணிமா.. அவன் முகத்தை மறைந்திருந்து பார்ப்பதற்காக தவம் கிடந்தவளுக்கு அவனது பிரியமே கிடைத்து விட்டதை நம்ப முடியாமல் கண் கலங்கி தடுமாறினாள்..
“நான்.. வந்து..”
சொல்ல நினைப்பதை சொல்ல முடியாமல் அவள் திக்கித் திணறியதில் பரிவு கொண்ட ரகுவரன்..
“எனக்குத் தெரியும்..” என்று இதமாகச் சொன்னான்..
“தெரியுமா..? எப்படி..?” விழி விரித்தாள் பூர்ணிமா..
“எப்படியோ தெரியும்.. அதைத் தெரிந்துக்கிட்டு என்ன செய்யப் போற..? ம்ம்ம்..?” அதட்டல் போல கேட்டான்..
“இல்லை.. என் மனசுக்குள்ள இருந்ததை நீங்க எப்படித் தெரிஞ்சுக்கிட்டிங்கன்னு..” மென்று விழுங்கினாள் அவள்..
“உன் மனசுதான் வந்து சொல்லுச்சு.. போதுமா..?” கண் சிமிட்டி சிரித்தான் அவன்..
“கண்ணடிக்கிறிங்களே..” இமை கொட்டினாள்..
“ஆமாம்.. அதுக்கு இப்ப என்ன..?”
சட்டையின் கைப்பகுதியை அவன் மடித்து விட.. ‘ரௌடி..’ என்று மனதுக்குள் செல்லமாக கொஞ்சினாள்..
சடசடவென மழை தூறியது.. அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே மழை வலுத்தது.. பூர்ணிமாவின் விழிகளில் பயம் வந்தது..
“வீட்டுக்குப் போகனுமா..?” அவளது மனம் அறிந்தவனாக வினவினான் ரகுவரன்..
“ம்ம்ம்..” குழந்தை போல தலையசைத்தாள் பூர்ணிமா..
அவளின் தலையசைவு வசீகரித்ததில் தன் வயமிழந்து அவளை முத்தமிட மோகித்தான் அவன்.. கொட்டும் மழையும் காரின் தனிமையும் மனதுக்குப் பிடித்தவளின் அருகாமையும் அவனுக்குள் கிளர்ச்சியைத் தோற்றுவித்தன.. அவளைத் தொட்டு விடத் துடித்த கரங்களைக் கட்டுப் படுத்திக் கொண்டு காரைக் கிளப்பி விட்டான்..
‘ஊஹீம்.. இது கூடாது..’
அவன் மனதில் உறுதி பிறந்தது.. அவள் மலரைப் போன்றவள்.. பார்க்கும் பார்வையைக் கூடத் தாங்க முடியாத அனிச்ச மலர்..! அவன் மீதுள்ள காதலினால் நம்பி அவன் காரில் ஏறியிருக்கிறாள்.. அந்த நம்பிக்கையை அவன் சிதைத்து விடக் கூடாது..
அவர்களின் வீடுகள் இருக்கும் தெருவை நெருங்கும் போது மழை நின்று விட்டது.. அடுத்த தெருவிலேயே காரை நிறுத்தி விட்டான் ரகுவரன்.. அவள் சொல்லாமலே அவளது மனமறிந்து முதல் தெருவிலேயே அவன் காரை நிறுத்தி விட்டதில் நன்றியுடன் அவனைப் பார்த்த பூர்ணிமா..
“தேங்க்ஸ்..” என்றாள்..
அவன் முகம் கடுகடுத்தது.. என்ன தவறு செய்தோம் என்று புரியாமல் அவள் திகைத்தாள்..
“என்னாச்சு..?” என்று மலங்க மலங்க விழித்தாள்.
“கைக்கு வாய் தேங்க்ஸ் சொல்றதில்லை..” முறைத்தான் ரகுவரன்..
“இவ்வளவுதானா..? நான் என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன்..” முகம் மலர்ந்தாள் பூர்ணிமா..
அவனது கோபத்தைத் தாங்க மாட்டாமல் அவள் திகைத்து விழித்ததில் கோபம் குறைந்தவன்..
“இனிமே இதுபோல மூனாம் மனுசங்ககிட்ட பேசற மாதிரி தேங்க்ஸ் சொல்லக் கூடாது..” என்று கண்டித்தான்..
“தப்புத்தான் சாமி.. கன்னத்தில போட்டுக்கறேன்..”
பூர்ணிமா தன் கன்னங்களில் நிஜமாகவே கைகளால் தட்டியதில் அவன் முகத்தில் கடுமை மறைந்து சிரிப்பு பரவியது..
“தாஜா பண்றதில கெட்டிக்காரிதான்..” என்று சிரித்தான்..
“நீங்க தாஜா பண்ண வைக்கறதில கெட்டிக்காரராய் இருக்கீங்க..” குறைபட்டுக் கொள்வது போல அவளும் முறுவலித்தாள்..
சிரிக்கும்போது விழிகளும் சிரிக்க சிரித்த அவளது அழகில் சிரிப்பை நிறுத்திவிட்டு அவளையே அவன் பார்க்க முகம் சிவந்து விரல்களைப் பார்த்தாள்..
“சிரிக்கும் போது நீ ரொம்பவும் அழகா இருக்கே பூர்ணி..”
அவளது பெயரைச் சுருக்கி ‘பூர்ணி..’ என அவன் அழைத்ததில் சொக்கிப் போனாள் பூர்ணிமா.. அவளது வீட்டினரும் அவள் பெயரைச் சுருக்கி அழைப்பதுண்டு.. அப்போதெல்லாம் தோன்றாத ஒரு சந்தோசம் இப்போது அவளுக்குள் உண்டானது..
“மத்த நேரங்களில் நான் அழகா இல்லேன்னு சொல்லிக் காட்டறிங்களா..?” வம்புக்கு இழுத்தாள்..
“பாருடா.. ஊமை போல வேசம் போட்டியா..? இந்தத் தாக்குத் தாக்கற..” உல்லாசமாக அவன் கண்சிமிட்டினான்..
“எதுக்கெடுத்தாலும் கண்ணடிப்பீங்களா..?” காரை விட்டு இறங்கினாள் பூர்ணிமா..
“நாளைக்கு வருவதானே..?” எதிர்பார்ப்புடன் கேட்டான் ரகுவரன்..
“வரலைன்னா என் ஸ்கூட்டியை லவட்டிக்கலாம்ன்னு ஐடியா பண்ணியிருக்கீங்களா..?” தலையை ஒருபுறமாக சரித்து அவனை உரிமையுடன் பார்த்தபடி அவனைப் போலவே புருவங்களை உயர்த்தி இறங்கினாள் பூர்ணிமா..
“ஏய்ய்.. இது நீதானா..?” வியந்து போனான் அவன்..
“நானேதான் சார்.. என்னை நல்லாப் பார்த்துக்கங்க..”
அவள் சொன்னதுதான் சாக்கென்று அவளைக் கடித்துத் தின்று விடுவதைப் போல அவன் பார்த்து வைக்க..
“இப்படிப் பார்க்கச் சொல்லலை..” என்று வெட்கத்துடன் உதட்டைக் கடித்தாள் பூர்ணிமா..
“நீதானே பார்க்கச் சொன்ன..?” அவன் நியாயம் கேட்டான்..
“ஐயா சாமி.. ஆளை விடுங்க.. நான் அடையாளம் பார்த்துக்கச் சொன்னேன்..” பூர்ணிமா உதட்டைச் சுழித்தாள்..
“ஆக.. உன்னை அடையாளம் பார்த்துத்தான் என் நினைப்பில வைச்சுக்கனும்னு சொல்ற..?” அவன் குரல் மாறிவிட்டது..
பூர்ணிமா பதறிப் போனாள்.. அவனது குரல் மாறுபாட்டை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை..
“நான் விளையாட்டுக்குத்தான் சொன்னேன்..”
“இதிலென்ன விளையாட்டு..?”
“என் ஸ்கூட்டியை எடுக்க வாறப்ப கொடுக்க மாட்டேன்னு சொல்லிராதீங்க.. அடையாளம் பார்த்துக்கங்கன்னு சொல்ல வந்தேன்.. நீங்க தப்பாப் புரிஞ்சுக்கிட்டிங்க..”
“நீ என்னைச் சரியாப் புரிஞ்சுக்கலை..”
“ரகு..”
அவளது தழதழப்பான அழைப்பில் அவன் பேசுவதை நிறுத்தி விட்டு இமைக்காமல் அவளையே பார்த்தான்.. மிரட்சியுடன் அவள் விழித்ததில் மென்மையானவன்..
“இனிமே இதுபோல பேசாதே..” என்றான்..
“ம்ம்ம்..” குழந்தையாக அவள் தலையை ஆட்டினாள்..
“போயிட்டு வா பூர்ணிமா.. நீ என்னை நினைவில் வைத்துக்கறியோ இல்லையோ.. நான் உன்னை என் நினைப்பில இருக்கிப் பிடிச்சு வைச்சிருப்பேன்.. மறக்க மாட்டேன்.. என்
காதல் உன்னைத் துன்பப் படுத்தாது.. தொந்தரவு தராது.. ஆனா.. எங்கேயும் எப்போதும் உன்னைக் காதலிக்கும்.. உன்னை மட்டும் காதலிக்கும்..”
அழுத்தம் திருத்தமாக ஒவ்வொரு வார்த்தையையும் நிறுத்தி நிதானித்து மந்திரம் போலச் சொன்னான் அவன்.. பிரமித்து போய் நின்றிருந்தாள் பூர்ணிமா..
Reviews — Akalvizhku / அகல் விளக்கு
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.