Chapter 19
அன்றிரவு முழுவதும் தூங்காமல் கொட்டக் கொட்ட விழித்திருந்தாள் பூர்ணிமா.. அவளது பிரமிப்பு அகலவேயில்லை.. இதைப் போன்ற காதலைப் பெற என்ன தவம் செய்தாள் என்று மலைப்பாக இருந்தது.. மாலையில் வீடு வந்த விஸ்வநாதன் மகளிடம் ஸ்கூட்டியை எந்த மெக்கானிக் ஷாப்பில் விட்டாள் என்று கேள்வி கேட்ட போதுதான் பதில் சொல்ல முடியாமல் தவித்துப் போனாள்..
‘ஸ்கூட்டர் ரிப்பேர்.. மெக்கானிக் ஷெட்டில் விட்டிருக்கிறேன்..’ என்று அவள் சொன்னதை பாகீரதி கேட்டுக் கொண்டாள்.. விஸ்வநாதன் கேட்டுக் கொள்ளவில்லை.. எந்தக் கேள்வியை அவள் கேட்டு விடுவாரோ என்று அவள் பயந்து நடுங்கினாளோ.. அந்தக் கேள்வியை அவர் கேட்டார்..
“எந்த மெக்கானிக் ஷெட்..?”
பூர்ணிமாவுக்கு உதறலெடுத்தது.. என்ன நடக்கப் போகிறதோ என்று திகிலாக இருந்தது.. உதடு உலர்ந்தது.. தொண்டை வறண்டது.. நாக்குப் புரளாமல் மேலன்னத்தில் ஒட்டிக் கொண்டது.. விழிகள் நிலைகுத்த மயக்கம் வருவதைப் போல இருந்தது..
ரகுவரனின் ஆரோ மெக்கானிக் ஷெட்டைச் சொல்லாமல் வேறு ஏதாவது ஒரு மெக்கானிக் ஷெட்டைச் சொல்லி விடலாம் தான்.. அது பொய்யாக இருக்கும்.. பூர்ணிமா பொய் சொல்ல மாட்டாள்..
வருவது வரட்டும் என்று தைரியத்தை ஒன்று திரட்டி அவள் பதில் சொல்ல வாய் திறந்தபோது விஸ்வநாதனின் செல் போன் ஒலித்தது..
“தசரதன் பேசறான்..”
அவர் அவசரமாக செல்போனை காதுக்குக் கொடுத்தபடி ஹாலுக்குப் போனார்.. தப்பித்து விட்ட நிம்மதியுடன் பூர்ணிமா நழுவி மாடிக்குப் போனாள்.. இரவு உணவுக்கு கீழே வந்த போது விஸ்வநாதன் இல்லை.. ஆனந்தி பரிமாற பூபாலன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.. என்னவோ தானே சமைத்துக் கணவனுக்குப் பரிமாறுவதைப் போல வக்கணையாக சமையல் வகைகளைச் சொல்லிப் பரிமாறிக் கொண்டிருந்த மருமகளை முறைத்தபடி வாய்க்குள் அவளைத் திட்டிக் கொண்டே ஆஷாவுக்கு ஊட்டிக் கொண்டிருந்த பாகீரதி, மகளைக் கண்டதும் தட்டைப் போட்டாள்..
“அப்பா எங்கேம்மா..?” தயக்கத்துடன் கேட்டாள் பூர்ணிமா..
“தசரத மகாராஜாகிட்ட இருந்து அழைப்பு வந்துருச்சுல்ல.. தம்பி கூப்பிட்டா குடும்பத்தைப் பத்தி நினைப்பு இருக்குமோ..? அவன் பிரச்னைக்கெல்லாம் தீர்வு சொல்லிட்டு ராக்கோழி கூவறப்ப வீடு வந்து சேர்வார்.. நான் கண் முழிச்சு கதவைத் திறந்து விட்டு பறிமாறனும்.. ம்ஹீம்.. ஒவ்வொருத்தருக்கும் எப்படியாப்பட்ட புருசன் வாய்க்கிறான்.. எனக்கும் வாய்ச்சிருக்கே..”
ஆனந்தியைப் பொறாமையுடன் பார்த்தபடி பொருமினாள் பாகீரதி.. அது தெரியாமல் ஆனந்தி வெள்ளையாய் சிரித்தாள்.. பாகீரதிக்கு என்னவோ போல ஆகி விட்டது..
“நீங்க ஏன் கண் முழிக்கனும்..? மாமா வர்ற வரைக்கும் நான் கண்முழிக்கிறேன் அத்தை.. பாவம் நீங்க.. ஏர்லி மார்னிங்கில இருந்து மிட்நைட் வரைக்கும் உழைச்சு ஓடாத் தேய்கறிங்க.. நைட்டாவது நிம்மதியாத் தூங்குங்க.. ஒருவேலையும் செய்யாம சும்மாதான் இருக்கேன்..? நான் பார்த்துக்கறேன் அத்தை..”
தானாக முன்வந்த மருமகளின் பொறுப்புணர்ச்சியில் பாகீரதியின் மனதிலிருந்த கோபமும், பொறாமையும் ஓடிவிட்டன.
“உனக்கெதுக்கும்மா சிரமம்..? அந்த மனுசன் ஆயிரம் நொனனாட்டியம் சொல்லுவார்.. உன்னால அவருக்குப் பதில் சொல்ல முடியாது.. நானே பார்த்துக்கறேன்.. நீ தூங்கப் போ..” என்று சொல்லி விட்டாள்..
பூர்ணிமாவின் மனதிலிருந்த பயம் அகன்றது.. தசரதன் சித்தப்பாவின் குடும்பப் பஞ்சாயத்து அத்தனை எளிதாகத் தீராது.. இரண்டு மூன்று சிட்டிங் அமர்ந்து கவுன்சிலிங் கொடுத்தாக வேண்டும்.. தொடர் ஓட்டம் போல தொடரும் பஞ்சாயத்தில் பூர்ணிமாதன் ஸ்கூட்டியை எந்த மெக்கானிக் ஷெட்டில் விட்டாள் என்ற கேள்வி பின்னுக்குத் தள்ளப்பட்டு மறந்து போய் விடும்.
‘ஹைய்யா.. தசரதன் சித்தப்பா வாழ்க.. அவரது குடும்பப் பஞ்சாயத்து வாழ்வாங்கு வாழ்க..’ பூர்ணிமாவின் மனம் குதூகலித்தது..
பாகீரதிக்கு மட்டும் இது தெரிந்தால் கரண்டியால் மகளின் தலையில் மொத்தியிருப்பாள்.. தசரதனின் மீது அவளுக்கிருக்கும் காண்டு கொஞ்ச நஞ்சமானதல்ல..
விஸ்வநாதனின் நான்கு விட்டச் சித்தப்பாவின் மகன் என்ற உறவு முறையைக் கொண்டவன் தசரதன்.. பூபாலனைவிட ஏழுவயது மூத்தவன்.. அண்ணா, அண்ணா என்று விஸ்வநாதனின் மீது உயிராக இருப்பான்.. விஸ்வநாதனுக்கு தம்பிமுறை வேண்டும் என்ற உறவுமுறை வரைபடத்தை வரைந்து பக்கத்து கிராமத்து பண்ணையார் வீட்டில் சம்பந்தம் செய்து விட்டார் தசரதனின் தந்தை.. மாப்பிள்ளைக்கு சென்னையில் வேலை என்பதில் மயங்கிப் போன பண்ணையார் பெண்ணைக் கொடுத்து விட்டார்.. திருமணம் முடிந்து பெண்ணை சென்னையில் குடித்தனம் வைக்க வந்தபோதுதான் தெரிந்தது.. தசரதன் கஸ்டம்ஸ் ஆபிசில்தான் வேலை செய்கிறான் கஸ்டம்ஸ் ஆபிசராக வேலை செய்யவில்லை என்பது.. கொதித்துப் போன பண்ணையார் பெண்ணைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு போய் விட்டார்.. பஞ்சாயத்து விஸ்வநாதனிடம் வந்து நின்றது.. மாதக் கணக்கில் நீண்ட பஞ்சாயத்தின் முடிவில் விஸ்வநாதனின் முகத் தாட்சண்யத்திற்காக பண்ணையார் தன் மகளை தசரதனுடன் வாழ்க்கை நடத்த அனுப்பி வைத்தார்.. அத்துடன் பிரச்னை தீரவில்லை..
அடைமழை நின்றாலும் செடி மழை நிற்காது என்ற கதையாக அவ்வப்போது தசரதன் வீட்டார் பொய் சொல்லிப் பெண் கேட்ட கதை சுட்டிக் காட்டப்படும்.. பிரச்னை வெடிக்கும்.. தசரதனின் மனைவி பிறந்த வீட்டுக்குப் போனைப் போடுவாள்.. பண்ணையார் படை பரிபாலனத்தோடு கிளம்பி வந்து விடுவார்.. மாமனாரின் படையை எதிர் கொள்ளும் திரானியற்றவனாக தசரதன் விஸ்வநாதனுக்குப் போனைப் போடுவார்.. ஒன்று விட்டத் தம்பியின் மீது இருக்கும் பாசத்தில் விஸ்வநாதனும் போட்டது போட்டபடி அனைத்து வேலைகளையும் ஏறக் கட்டி விட்டுத் தம்பி வீட்டுப் பஞ்சாயத்துக்கு ஓடிவிடுவார்..
இப்படிச் சொந்தக் குடும்பத்தை மறந்து தசரதனின் குடும்பப் பிரச்னையில் விஸ்வநாதன் உழல்வது பாகீரதிக்குப் பிடிக்காது.. மற்ற விசயங்களில் எல்லாம் மனைவி சொல்லே மந்திரம் என்று இருக்கும் விஸ்வநாதன் தசரதனின் விசயத்தில் மட்டும் மனைவியின் பேச்சைக் கேட்டுத் தள்ளி நிற்க மறுத்தார்..
“இவன் குடும்பப் பஞ்சாயத்தால எங்களுக்குள்ளதான் ஒற்றுமை போகுது..” பாகீரதி தலையைப் பிடிப்பாள்..
அந்தத் தசரதனையும், அவனது குடும்பப் பஞ்சாயத்தையும் வாழ்க என்று பூர்ணிமா மனதுக்குள் வாழ்த்துவதை அறிந்து விட்டாள் பாகீரதி சும்மா விட்டு விடுவாளா..?
மனதுக்குள் ‘லா, லா’ பாடியபடி இரவு டிபனை மொக்கி விட்டுத் தூங்கப் போய் விட்டாள் பூர்ணிமா.. தூக்கம் வராமல் விடியும்வரை புரண்டு விட்டு விடிந்தவுடன் குளியலறைக்குள் புகுந்து ஏழு மணிக்கெல்லாம் காலேஜ் கிளம்பத் தயாராகி விட்டாள்..
“அதுக்குள்ள காலேஜ் கிளம்பிட்டியா..?”
பாகீரதி மணியைப் பார்த்த போதுதான் தனது வேகத்தை உணர்ந்து நாக்கைக் கடித்துக் கொண்டாள் பூர்ணிமா..
“சீக்கிரமா விழிச்சுட்டேன்மா.. குளிச்சுத் தயாராகிட்டா டென்சன் இல்லாம காலேஜீக்குப் போகலாம் பாருங்க..” பொய் சொல்லாமல் விளக்கம் சொன்னாள்..
“அதுவும் சரிதான்.. ஸ்கூட்டியை எடுக்க மெக்கானிக் ஷெட்டுக்கு வேற போயாகனுமில்ல.. பணம் இருக்கா..? ரிப்பேருக்கு எவ்வளவு ஆகும்ன்னு கேட்டு வைச்சுக்கிட்டியா..?” மகளுக்காக தோசை வார்க்க ஆரம்பித்தாள் பாகீரதி..
“கேட்கலைம்மா..”
இப்போதும் உண்மையைத்தான் சொன்னாள் பூர்ணிமா.. ரகுவரனிடம் ரிப்பேருக்கான பணம் எவ்வளவு என்று அவளால் கேட்க முடியுமா..?
“நல்ல பொண்ணும்மா நீ.. இதையெல்லாம் கேட்டு வைச்சுக்க வேணாமா..? ஒன்றுக்கு இரண்டா அப்பா, அண்ணன்னு ஆம்பளைக இந்த வீட்டில இருந்து என்ன பிரயோசனம்..? என் பொண்ணு ஸ்கூட்டி ரிப்பேரானா தானா மெக்கானிக் ஷெட்டில விட்டு சரி பண்ணிக்க வேண்டியதா இருக்கு.. உன் அண்ணன் போலிஸ் ஆபிசர்ன்னு ஹோதாக் காட்டுவான்.. இன்னும் ஒரு மாசத்துக்கு உன் அப்பாவைக் கையில பிடிக்க முடியாது.. இருபத்தி நாலு
மணி நேரமும் தம்பி வீட்டுப் பஞ்சாயத்துதான் அவர் மனசில ஓடிக்கிட்டு இருக்கும்.. இதில மகளைப் பத்தி நினைக்க அவருக்கு நேரமிருக்கா..?”
‘அப்படியே இருக்கட்டும்மா.. நீங்க கிளப்பி விட்டிராதீங்க..’
மகளின் மனதில் ஓடிய எண்ணத்தை உணராமல் தன் போக்கில் புலம்பியபடி தோசைகளை தட்டில் வைத்துச் சட்னி, சாம்பார் கிண்ணங்களை பக்கத்தில் வைத்து விட்டு மகளின் மதிய உணவுக்காக ‘பிரைட் ரைஸ்..’ செய்ய ஆரம்பித்தாள் பாகீரதி..
தாயின் கவனிப்பில் மனம் நெகிழ தோசைகளைச் சாப்பிட ஆரம்பித்தாள் பூர்ணிமா.. ரகுவரனைப் பற்றிய இனிய நினைவுகளுடன் மிச்சம் மீதி வைக்காமல் அவள் சாப்பிட்டு முடித்து விட்டதில் தன் வயிறே நிறைந்து விட்டதைப் போல திருப்தி கொண்டாள் பாகீரதி.. மகளிடம் மதிய உணவு டப்பாவை நீட்டியவள்..
“மெக்கானிக் ஷெட்டுக்கு எப்படிப் போவ..? உன் அண்ணன் இன்னும் கிளம்பலையேம்மா.. உன் அப்பா கோழி கூப்பிடறதுக்கு முன்னாடியே தசரதன் வீட்டுப் பஞ்சாயத்தைப் பேச ஓடிப் போயிட்டாரே..” என்று கவலை கொண்டாள்..
“டோன்ட் ஒர்ரிம்மா.. ஆட்டோவில் போய்க்குவேன்.”
அதற்கு மேலும் அங்கே நிற்காமல் சிட்டுக்குருவியைப் போலப் பறந்து விட்டாள் பூர்ணிமா..
Reviews — Akalvizhku / அகல் விளக்கு
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.