Chapter 22

0Shares

விஸ்வநாதன் அதைத்தான் கவனித்தார்.. எந்தவித முகாந்திரமும் இல்லாமல் ரகுவரன் பூர்ணிமாவைப் பெண் கேட்டு வந்துவிட மாட்டான் என்று அவர் யூகித்தார்.. ரகுவரனின் மீது ‘ரௌடி..’ என்ற முத்திரை குத்தப்பட்டிருந்தாலும் மற்றவர்களைத் துன்புறுத்தும் ரௌடியாகவோ.. பெண்களிடம் மரியாதை குறைவாக நடந்து கொள்ளும் ரௌடியாகவோ அவன் சித்தரிக்கப் பட்டிருக்கவில்லை..

மாறாக வேலைக்காரப் பெண்ணைக் காப்பாற்றி, அவளிடம் வாலாட்டியவனை மிதி, மிதியென மிதித்துத் துவைத்துப் பிழிந்திருந்தான்.. அதற்காக எது வந்தாலும் எதிர்த்து நிற்பேன் 

என சவால் விட்டான்.

நியாயத்துக்காக குரல் உயர்த்துபவன் ரகுவரன்.. மற்றவர்கள் செய்வது தவறு என்று தோன்றிவிட்டால் தட்டிக் கேட்காமல் இருக்க மாட்டான்.. மற்றபடி மற்றவர்களின் விவகாரங்களில் அனாவசியமாக மூக்கை நுழைக்காதவன்.. அதி முக்கியமாக பெண்களை ஏறெடுத்தும் பார்க்காதவன்..

அந்த ரகுவரன் பூ, பழத் தட்டோடு பூர்ணிமாவைப் பெண் கேட்க வந்திருக்கிறான் என்றால் அதன் பிண்ணனி எதுவாக இருக்கக்கூடும் என்று புரிந்து கொள்ள முடியாத முட்டாளா விஸ்வநாதன்..?

‘என் மகளா..?’ அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது..

‘மென்மையே உருவான பூர்ணிமா வன்மையின் வடிவமான ரகுவரனைக் காதலிக்கிறாளா..?’

அவர் மகளின் மனதில் காதல் வரும்.. அதுவும் முரட்டு ரகுவரனின் மீது வந்து தொலைக்கும் என்பதை நம்ப முடியாமல் திகைத்து நின்று விட்டார்..

“பொறு பூபாலா..”

தந்தையின் அதட்டலில் தேங்கி நின்ற பூபாலனின் பார்வையில் கொலைவெறி இருந்தது.. அவனுடைய தங்கையை ரகுவரன் பெண் கேட்டு வந்து விட்டானே என்ற கோபக்கனல் தெறித்தது..

ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக ரகுவரன் வெகு அமைதியாக நின்றருந்தான்.. பூர்ணிமாவின் மன்றாடலான பார்வைக்கு இமைகளை மூடித் தான் எதுவும் செய்ய மாட்டேனென்ற உத்திரவாதத்தை அளித்துக் கொண்டிருந்தான்..

“இத்தனை நாளா நம்ம வீடு இருக்கிற திசைப்பக்கம்கூடத் திரும்பாத ஒருத்தன் திடிர்ன்னு பெண் கேட்டு வந்திருக்கான்னா என்ன அர்த்தம்ன்னு நீ யோசிச்சுப் பார்க்கனும்டா..”

விஸ்வநாதன் அறிவுறுத்தியதில் பூபாலன் கொதித்து விட்டான்..

“எவனோ ஒருத்தன்.. வழியில போகிற வழிப்போக்கன்.. என்  தங்கச்சியைப் போகிறப்ப வாறப்ப பார்த்துட்டு ஆசைப்பட்டுப் பெண் கேட்க வந்துட்டா என்ன அர்த்தம்ன்னு நான் யோசிச்சுப் பார்க்கனுமாப்பா..? இவனுக்குத் திமிர்ன்னு அர்த்தம்ப்பா.. இவன் ஆடற ஆட்டத்தை எதிர்த்த அபார்ட்மெண்ட்காரங்க வேணும்ன்னா விரலை சுவைத்துக்கிட்டு வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கலாம்.. நான் அப்படி இருக்க மாட்டேன்.. துவைச்சுப் பிழிஞ்சு தோரணம் கட்டித் தொங்க விட்டிருவேன்..”

“ஊஹீம்.. அவசரப்படாதே.. அதுக்கு முன்னாலே பூர்ணிமாகிட்ட ஒருவார்த்தை கேளு.. அதான் நியாயம்..”

“என்னப்பா பேசறிங்க..? எவனோ ஒருத்தன் வீடு வரைக்கும் பெண் கேட்டு வந்திட்டான்னு என் தங்கைகிட்ட நான் கேள்வி கேட்கனுமா..? அவ பத்தரைமாத்துத் தங்கம்ப்பா..”

“இல்லேன்னு நான் சொல்லலையே.. காதலிச்சா பத்தரை மாத்துத் தங்கம், பித்தளையா மாறிராது பூபாலா.. இவ்வளவு பிரச்னையும் பூர்ணிமாவோட கண் முன்னாலேதானே நடந்துக்கிட்டு இருக்கு..? இத்தனை நாளா யாரோ, எவரோன்னு இருந்தவன், இன்னைக்கு ஏன் விடிந்தும் விடியாத இந்தக் காலை நேரத்தில் பெண் கேட்டு வந்திருக்கான்..? ஒன்றை நினைவில் வை பூபாலா.. சாயங்காலம் பூர்ணிமாவைப் பெண் பார்க்க நம்ம சொந்தக்காரங்க வர்றதா இருக்காங்க..”

“அப்பா..?”

தந்தை, மகனின் பார்வைகள் சந்தித்துக் கொண்டன.. பூர்ணிமாதான் அந்தத் தகவலைச் சொல்லி ரகுவரனை வரச் சொல்லியிருக்கக் கூடும் என்ற செய்தியை விஸ்வநாதனின் பார்வையில் கண்டான் பூபாலன்.. அப்படியும் இருக்குமோ என்ற மகனின் திடுக்கிடலுக்கு ‘ஆம்’ என்று பதில் சொல்லும் விதமாக இமைகளை மூடித் திறந்தார் விஸ்வநாதன்..

பூர்ணிமாவின் பக்கம் திரும்பினான் பூபாலன்.. சிவந்திருந்த தமையனின் விழிகளைப் பார்க்க முடியாமல் நடுநடுங்கி விட்டாள் பூர்ணிமா.. அனிச்சையாக அவளது விழிகள் கண்ணிரைச் சுரந்தன.. தாரை தாரையாக வழிந்த கண்ணீர் கோடுகள் கன்னங்களை நனைத்ததில் முகம் ழுழுவதும் ஈரமாக இரு கரங்களையும் குவித்து விட்ட பூர்ணிமா..

“என்னை மன்னிச்சிருண்ணா..” என்று கதறி அழுதாள்..

பூபாலனின் அதிர்ந்த தோற்றத்தை அவளால் கண் கொண்டு பார்க்க முடியவில்லை.. என் தங்கையா காதலித்திருக்கிறாள்..? என்ற தமையனின் அதிர்ச்சியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மாடிப்படியில் சரிந்து உட்கார்ந்து உள்ளங்கையில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்..

“என்னால நம்ப முடியலையேப்பா..” பூபாலன் அரற்றினான்..

“என்னால் மட்டும் நம்ப முடியுதா..?” வேதனையுடன் கேட்டார் விஸ்வநாதன்..

ஆஷாவைத் தோளில் சாய்ந்தபடி நாத்தனாரின் பக்கத்தில் போய் உட்கார்ந்த ஆனந்தியின் கரம் பூர்ணிமாவின் தோளின் மீது ஆதரவாகப் படிந்தது.. நடுங்கிக் கொண்டிருந்த பூர்ணிமா அண்ணியின் மடி சாய்ந்தாள்.

கண்கள் நிலை குத்த உள்ளங்கையால் வாயைப் பொத்தியபடி சுவரில் சாய்ந்து நின்று விட்டாள் பாகீரதி.. மகளைப் பெண் கேட்டுப் பெரிய இடத்துச் சம்பந்தம் வந்திருக்கிறது என்ற மகிழ்வில் இருந்தவளின் தலையில் இடி இறங்கியதைப் போல இருந்தது.. மனதுக்குள் குமுறினாள்.. மகளைத் திட்டவும் முடியாமல்.. ரகுவரன் பெண் கேட்டு வந்திருப்பதை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் திண்டாடினாள்..

சூழலைப் பார்த்த பூபாலன் தன்னை நிதானப் படுத்திக் கொண்டு ரகுவரனை முறைத்தான் வாசலை நோக்கிக் கைகாட்டி..

“போய் விடு..” என்றான்..

“எனக்கு ஒரு பதிலைச் சொல்லுங்க பூபாலன்.. அதுவரைக்கும் இந்த வீட்டைவிட்டுப் போக மாட்டேன்..” உறுதியாகச் சொன்னான் ரகுவரன்..

“டேய்ய்.. அறியாப் பெண்ணின் மனசைக் கலைச் சிட்டோம்ங்கிற ஆணவத்தில பேசறியா..? அவ பச்சை மண்ணுடா.. அவளைப் போலவே எல்லோரும் நல்லவங்களா இருப்பாங்கன்னு நம்பறவ.. சூது, வாது தெரியாதவ..”

“நான் கெட்டவனாவே இருந்துட்டுப் போறேன்.. சூதுவாது தெரிஞ்சவனா இருந்தாத்தான் சூது வாதில இருந்து தப்பிக்க முடியும்..”

“டேய்ய்.. நீ எப்படியோ இருந்துட்டுப் போ.. எனக்கென்ன வந்துச்சு..? என் தங்கையை உனக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுக்க முடியாது.. என் பதில் இதுதான்.. நீ கேட்டதுக்குப் பதில் கிடைச்சிருச்சுல்ல..? இப்ப வெளியே போ..”

“ஊஹீம்..” தீர்க்கமான பார்வையுடன் தலையசைத்தான் ரகுவரன்..

“பூர்ணிமாவை என்கூட அனுப்பி வையுங்க.. போகிறேன்.. உங்க தங்கை இல்லாம கிளம்ப மாட்டேன்..”

“என்னது..?”

பூபாலன் மறுபடியும் ரகுவரனின் மீது பாய.. பாகீரதி முகத்தில் அடித்துக் கொண்டு அழுக ஆரம்பித்தாள்.. பயந்து போன பூர்ணிமா பாய்ந்து ரகுவரனை மறைத்து நின்று கண்ணீர் வழியும் விழிகளுடன் தமையனிடம் கெஞ்சினாள்..

“அண்ணா.. வேண்டாம்.. எனக்காக விட்டிரு..”

“நீ விலகு, சொல்றேன்..”

“வேணாம்ன்னா.. அவரை நீயடிச்சா எனக்குத்தான் வலிக்கும்..”

இடிந்து போய் விட்டான் பூபாலன்.. தங்கை இப்படிச் சொல்லி விட்டாளே என்று மனம் புண்ணாக ரகுவரனை வெறித்தான்.. ரகுவரனின் விழிகளில் வெற்றிக் குறியீடு இல்லை.. மன்னிப்பை யாசிக்கும் பார்வைதான் இருந்தது..

“மெக்கானிக்கல் என்ஜினியரிங்கை முடிச்சிருக்கேன் பூபாலன்.. சொந்த பிஸினெஸ் இருக்கு.. பணக்காரன்.. என் மனச்சாட்சிக்கும் கடவுளுக்கும் நேர்மையானவன்.. உங்க தங்கையைக் கல்யாணம் பண்ணிக் கொடுங்க.. கண்ணுக்குள்ளே வைச்சுப் பார்த்துக்கறேன்..”

“அதுக்கு இவ கழுத்தை நெறிச்சுக் கொன்று போட்டிரலாம்..”

“பூபாலன்..” முதன் முறையாக ரகுவரனின் குரல் உயர்ந்தது..

“பூர்ணிமாவின் மேல் விரல் பட்டாக்கூட நான் சும்மாயிருக்க மாட்டேன்.. சட்டப்படி நாங்க மேஜர்.. முறைப்படி பெண் கேட்டேன்.. நீங்க கொடுக்க மாட்டேங்கறிங்க..”

“அதுக்கு..? என்னடா பண்ணுவ..?”

“உங்க தங்கையும் நானும் ரெஜிஸ்ட்ரர் மேரேஜ் பண்ணி கோவிலில் தாலி கட்டிக்கிட்டா என்ன பண்ணுவீங்க..?”

ரகுவரனின் கேள்வியில் பூபாலனின் நரம்புகள் புடைத்தன..

“கூப்பிட்டுப் பாருடா..” உறுமினான்..

பூர்ணிமாவுக்குக் கண்களை இருட்டிக் கொண்டு வந்தது.. காதலிப்பது சுகமாகத்தான் இருந்தது.. அந்தக் காதலுக்கான எதிர்ப்பு ரணமாக இருந்தது..

காதலுக்காக உயிரை விடலாம்.. குடும்பத்தை விடலாமா..?

0Shares

Reviews — Akalvizhku / அகல் விளக்கு

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link