Chapter 23

0Shares

“பாருடா இவ முகத்தை.. திருட்டுத் தாலி கட்டிக்கிற முகமாடா இது..? தெரியாத்தனமா உன்மேல பிரியம் வைச்சுட்டாங் கிறதுக்காக நீ எது வேண்டும்னாலும் சொல்லிருவியா..? குடும்பத்தை மீறுற பொண்ணில்லடா என் தங்கை.. அறியாம பிரியம் வைச்சுட்டா.. நாங்க எடுத்துக் சொன்னாக் கேட்டுக்குவா.. நீ அதிகமா உரிமை கொண்டாதே..”

“இவ என் காதலி பூபாலன்..”

“கூடவே என் தங்கையும் இவதாண்டா.. எங்க குடும்பத்தோட அகல் விளக்கு..! எங்க சொத்து, சுகம், எல்லாமே இவதான்.. இந்த வீட்டுப்படியை இவ தாண்டினா கூடவே எங்க மானம் மரியாதையும் தாண்டிப் போயிரும்ன்னு தெரிஞ்சவடா என் தங்கை..”

விதிர்த்துப் போன பூர்ணிமாவின் விழிகளில் தெரிந்த குற்றஉணர்வில் மறுகிப் போனான் ரகுவரன்.. அதட்டினால் மிரட்டலாம்.. ஆணையிட்டால் உடைக்கலாம்.. எதிர்த்து நின்றால் யுத்தம் புரியலாம்.. இவை எதையும் செய்யாமல் பாசத்தால் பூவேலி போடுகிறவனை என்ன செய்ய முடியும்..? எந்தப் போர்முறையில் வெல்ல முடியும்..?

இரும்புச் சங்கிலியை அறுக்கலாம்.. அன்புச் சங்கிலியை அறுக்கும் வல்லமை இப்புவியில் பிறந்தோர்க்கு உள்ளதா..?

“கூப்பிட்டுப் பாருடா என் தங்கையை.. நீ ‘வா’ன்னு கூப்பிட்டால் எங்க வீட்டுப் பெண் உன் பின்னாலே வந்து விடுவாளா..? அப்படியாடா அவளை வளர்த்து வைத்திருக்கோம்..?”

சவால் விட்டான் பூபாலன்.. பூர்ணிமாவை ஏறிட்டான் ரகுவரன்.. அவள் பதறிப் போனாள்.. அழைத்து விடாதே என்று பார்வையில் மன்றாடினாள்..

“அழைக்காதே.. நினைக்காதே..

அவைதனிலே.. ஓ.. என் ராசா..

ஆருயிரே..! மறவேனே..”

சூழலுக்குத் தகுந்த பாடலை டி.வி. ஒலிபரப்பியது.. ரகுவரன் பெருமூச்சு விட்டான்.. தரையில் சிதறிக் கிடந்த பழங்களையும் பூவையும் பார்த்தான்.. போய் விட்டான்..

“ஒன்னும் சொல்லாம போயிட்டாரே…”

விழிகள் விரியச் சொன்னாள் ஆனந்தி.. அவளை வெட்டவா, குத்தவா என்பதைப் போல முறைத்துப் பார்த்தான் பூபாலன்.. கணவனின் முறைப்பில் நடுங்கிப் போனவள்..

“ரௌடின்னு சொல்றீங்க.. நம்ம பூர்ணிமாவைக் காதலிக்கிறவரு.. பூர்ணிமாவும் அவரைக் காதலிக்கிறா.. கலாட்டாப் பண்ணாம போயிட்டாரு பார்த்தீங்களா..? அதைச் சொன்னேங்க..” என்று விளக்கம் சொல்ல முற்பட்டாள்..

“வாயை மூடு..” பூபாலன் போட்ட சத்தத்தில் அடங்கிப் போனாள்..

பூர்ணிமா கண்ணீருடன் குனிந்தாள்.. தரையில் கிடந்த ரகுவரன் வாங்கி வந்திருந்த சில்வர் தட்டை எடுத்தாள்.. பழங்களையும், பூவையும் சேகரித்து அதில் அடுக்கி வைத்தாள்.. பூஜையறையில் தட்டை வைத்துவிட்டு சரிந்து உட்கார்ந்தாள்.. தெய்வத் திருவுருவங்களின் படங்களைப் பார்த்தபடி மௌனக் கண்ணீரை உகுக்க ஆரம்பித்தாள்..

இப்படி உட்கார்ந்திருப்பவளிடம் என்ன கேள்வியைக் கேட்க முடியும்..? விஸ்வநாதன் சோர்வாக சோபாவில் உட்கார்ந்தார்.. சுவரில் சாய்ந்து நின்றிருந்த பாகீரதி அப்படியே சரிந்து இருந்த இடத்தில் உட்கார்ந்து விட.. அன்றைக்கான சமையல் வேலை தனது தலையில் விழுந்து விட்டதைப் புரிந்து கொண்டாள் ஆனந்தி.. ஆஷாவை இறக்கி விட்டு விட்டு அவள் சமையலறைக்குள் பொறுப்பை எடுத்துக் கொள்ளப் போய் விட்டாள்.. பூபாலன்..

“அப்பா..” என்றான்..

“சொல்லு..” என்றார் விஸ்வநாதன்..

“குடும்பத் தலைவர் நீங்க.. இப்படி இடிஞ்சு போய் உட்கார்ந்துட்டா எப்படிப்பா..?”

“வேற என்னத்தைடா செய்யச் சொல்ற..?”

“ஆகிற வேலையைப் பார்ப்போம்..”

மகன் சொல்ல வருவதைப் புரிந்து கொண்ட விஸ்வநாதன் பூஜையறையில் உட்கார்ந்திருந்த பூர்ணிமாவைப் பார்த்தார்.. சோகச் சித்திரமாய் அசையாமல் மௌனக் கண்ணீருடன் அமர்ந்திருந்தாள் அவள்.. மகளை அந்தக் கோலத்தில் பார்த்திராத பெற்றவரின் மனம் வலித்தது..

‘பெண் பார்க்க வருகிறவங்க முன்னாலே இந்த மனநிலையோட இவளை நிற்க வைப்பது பாவம்..’

ஒரு முடிவோடு மகனைப் பார்த்தவர்..

“வேண்டாம்டா..” என்று மறுப்பாக தலையசைத்தார்..

“என்னப்பா பேசறிங்க.. அவங்களை வரச் சொல்லி நாமதான் சொன்னோம்..” படபடத்தான் பூபாலன்..

“இப்ப வரவேணாம்ன்னு நாமளே சொல்லிருவோம்..”

“அப்பா..?”

“உன் நம்பிக்கைக்குக் கட்டுப்பட்டு உன் தங்கை வீட்டுக்குள்ளேயே நின்னுட்டா.. அவ பார்வைக்கு கட்டுப்பட்டு அந்த ரகுவரன் வந்த வழியிலேயே திரும்பிப் போயிட்டான்.. இதுக்கு மேலே இப்ப எதுவும் செய்ய வேணாம் பூபாலா.. எல்லாத்தையும் நிறுத்து..”

“நிறுத்திட்டு..?”

பூபாலனின் கோபத்தில் எதுவும் பேசாமல் ஓர் நொடி மௌனமாக இருந்தார் விஸ்வநாதன்..

“சொல்லுங்கப்பா..” என்ற பூபாலனின் சத்தத்தில்..

“என்னத்தைடா சொல்லச் சொல்ற..?” என்று எரிந்து விழுந்தார்..

“என்மேல எரிச்சல்பட்டா என்னப்பா அர்த்தம்..?”

“வேற யார் மேல எரிச்சல் படச் சொல்ற..? உன் தங்கை மேலேயா..? அதனால நமக்கு என்ன ஆகப்போகுது..? ஆறப் போடு பூபாலா.. இப்போதைக்கு அதுதான் நல்லது..”

“மாப்பிள்ளை வீட்டுக்கு என்ன காரணத்தைச் சொல்றது..?”

“எதையாச்சும் சொல்லு.. ஆனா அவங்க நம்ம வீட்டுக்குப் பெண் பார்க்க வரக் கூடாது..”

வீட்டில் நிசப்தம் நிலவியது.. பெண் பார்க்கக் கிளம்பிக் கொண்டிருந்த மாப்பிள்ளை வீட்டாரிடம் அது, இது என எதையோ காரணம் சொல்லி வரவேண்டாம் என்று சொல்லி விட்டான் பூபாலன்.. மகளின் மனதிலும் காதல் எனும் கருமாயம் புகுந்து விட்டதே என்று தலைமீது கை வைத்துச் சுவரோடு சுவராக சாய்ந்து உட்கார்ந்து விட்டாள் பாகீரதி.. இருக்கும் துன்பம் போதாது என்று வாயில் வைக்க முடியாத வகையில் சமையலைச் செய்து அதைச் சாப்பிட்டாக வேண்டும் என்று குடும்பத்தினரைக் கட்டாயப்படுத்தி ஒருவழி பண்ணினாள் ஆனந்தி.. அத்தைக்கு மனது சரியில்லை என்று புரிந்து கொண்டதைப் போல ஆஷா பூர்ணிமாவுடன் ஒட்டிக் கொண்டிருந்ததில் மனம் நெகிழ்ந்து குழந்தையைத் தூக்கிக் கொண்டு மாடிக்குப் போய் விட்டாள் பூர்ணிமா..

தோழியைப் பெண் பார்க்க வருகிறார்கள் என்பதினால் கல்லூரிக்கு கடுக்காய் கொடுத்து விட்டு..

“கட்டடிப்போம் கட்டடிப்போம்..

காலேஜீக்கு..”

என்று பாட்டுப் பாடியபடி பூர்ணிமாவின் வீட்டுக்குள் வந்த சுபா வீட்டில் நிலவிய நிசப்தத்தில் திகைத்துப் போய் விட்டாள்..

“என்ன அண்ணி இது..?” என்று ஆனந்தியைக் கேட்டாள்..

“உஷ்ஷ்..” என்று வாயின் மீது ஒற்றைவிரலை வைத்து பயமுறுத்திய ஆனந்தி மாடிப்பக்கம் கைகாட்டி..

“உன் பிரண்டு அங்கேதான் இருக்கிறா.. போய் கேளு..” என்றாள்..

“அங்கிளும் ஆண்டியும் ஏன் இப்படி இருக்கிறாங்க..?”

“அதையும் உன் பிரண்டே சொல்வா.. கேட்டுக்க.. காபி சாப்பிடறயா..?”

“ஆண்ட்டி இப்படி உட்கார்ந்திருக்காங்களே.. காபியை யார் கலந்து கொடுப்பாங்களாம்..?”

“இன்னைக்குச் சமையல் நான்தான்..”

“அப்பக் காபியே வேணாம் அண்ணி.. ஆளை விடுங்க..”

அங்கே நொடிப்பொழுது தாமதித்தாலும் ஆனந்தி காபித் தம்ளரைக் கையில் திணித்து விடுவாள் என்று பயந்து போன சுபா நாலுகால் பாய்ச்சலில் மாடிப்படிகளில் தவழ்ந்தோடி விட்டாள்..

‘ஊரே என் சமையலைக் கண்டு நடுங்குது..’ ஆனந்தி பல்லைக் கடித்தபடி சமையலறைக்குத் திரும்பி விட்டாள்..

ஆஷாவுடன் மாடி பால்கனியில் தஞ்சமடைந்திருந்தாள் பூர்ணிமா… அவள் பார்வை ரகுவரனின் பிளாட்டின் மீது படிந்திருந்தது..

“இங்கே என்னடி பண்ற..? ஏன் உன் வீடே டல்லடிக்குது..? பெண் பார்க்க வர்றாங்கன்னு சொன்னாங்க.. இப்படி உக்காந்திருக்க..?”

பூர்ணிமா உதட்டைக் கடித்தபடி தோழியைப் பார்த்தாள்.. அவளது கண்களில் கண்ணீர் திரையிட்டிருந்தது.. எதிர்த்த பிளாட்டின் பால்கனியில் ரகுவரன் வந்து நின்றான்.. பூர்ணிமா விழிகள் பளபளக்க ரகுவரனைப் பார்த்தாள்.. சுபா திகைத்துப் போனாள்..

“அவனையேண்டி பார்க்கிற..?”

“அவரைப் பார்க்காம வேறு யாரைப் பார்ப்பா..?” ஆனந்தியின் குரல் கேட்டது..

“என்ன அண்ணி சொல்றீங்க..?” புரியாமல் திரும்பிப் பார்த்த சுபா ஆனந்தியின் கையிலிருந்த காபிக் கப்பைக் கண்டதும் அரண்டு போனாள்..

“அண்ணி.. இப்பத்தான் காபி குடிச்சுட்டு வந்தேன்.. வேணாம் அண்ணி..”

“அந்தக் கதையே இங்கே வேணாம்.. நீ காபி குடிக்கிறதா இருந்தா நான் விவரம் சொல்றேன்..”

ஆனந்தியின் நிபந்தனையை ஒப்புக் கொள்வதைத் தவிர வேறு மார்க்கம் ஏதும் தென்படாததினால் அழமாட்டாத குறையாக காபியை வாங்கிக் குடித்த சுபாவுக்கு வயிற்றைப் பிரட்டி வாந்தி வருவதைப் போல இருந்தது.. ஆனந்தி சொன்ன பூர்ணிமாவின் காதல்கதை அனைத்து அவஸ்தைகளையும் மறக்கடித்து விட்டதில் அவள் சொட்டுக்கூட மீதம் வைக்காமல் காபியை குடித்து விட்டாள்..

“உங்களால்தான்..”

சுட்டு விரலை நீட்டி ரகுவரனைக் குற்றம் சாட்டினான் சுபா.. 

“அமைதியான என் பூர்ணிமாவோட வாழ்க்கையில புயலை வீச வைத்திருக்கிறது நீங்கள்தான்.. உங்களால்தான் அவள் அமைதியில்லாம தவிக்கிறா.. உங்களுக்கு காதலிக்க என் பிரண்ட்தான் கிடைத்தாளா..?”

“அவளுக்குக் காதலிக்க நான்தான் கிடைத்திருக்கேங்க.. அதுதான் உண்மை.. முள்ளை மலர் காதலிக்கிறது முள்ளுக்கான வரம்..! அது முள்ளுன்னு மத்தவங்க ஒதுக்கி வைக்கிறதினாலே மலரோடு சேர முடியாம அது தனித்து நிக்கிறது சாபம்..! வரமும், சாபமும் ஒன்னோடொன்னு ஒட்டிக்கிட்டு வந்திருக்குங்க.. நான் துரதிர்ஷ்டசாலி..”

ரகுவரனின் வேதனையில் வாயடைத்துப் போனாள் சுபா.. மனதுக்குள் அவன்மீது மதிப்பும், மரியாதையும் கொண்டவள் அவள்.. அதை வெளியில் காட்டிக் கொள்ள மாட்டாள்.. தீரம் மிகுந்த ரகுவரனின் மனதுக்குள் மண்டிக் கிடந்த துயரை அவன் வார்தைகளில் வெளிப்படுத்திய போது அவள் மனம் நோவு கொண்டது..

“நிம்மதிக்கு உத்தரவாதமில்லாத வாழ்வை சுமையாக என் தலையில் விதி ஏற்றி வைத்து விட்டதுங்க.. அதுக்கு எந்த விதத்திலும் நான் பிணையாக முடியாதுங்க.. உண்மையில் நான் ஊர் எல்லையில் தனித்து நிற்கும் ஒற்றைப் பனை..! எங்கும், எவராலும் புரியப்படாதது எனதன்புங்க.. காலம் என்னைத் தனிமைப் படுத்தியிருச்சுங்க.. மனசார நான் யாருக்கும் கெடுதல் செய்ததில்லை.. நல்லதுதான் செய்திருக்கிறேன்.. இதை பூர்ணிமாவோட குடும்பத்தார்கிட்ட யார் சொல்கிறது..?”

சுபா சொன்னாள்.. ரகுவரனின் மனநிலையைப் பூபாலனிடம் எடுத்துரைத்தாள்.. பூர்ணிமா காதலை முன் வைத்துக் கோடு போட்டு விட்டாள்.. ஊருக்கு ரௌடியாக தோற்றமளிக்கும் ரகுவரன் காதலி போட்டு வைத்திருக்கும் கோட்டை ஒர்நாளும் தாண்ட மாட்டான் என்பதை தெளிவு படுத்தினாள்.. எவருடனும் பேசாமல் தனக்குள்ளே ஒடுங்கி மாடியை விட்டுக் கீழே இறங்காமல் தன்னைத்தானே சிறைபடுத்தியிருக்கும் பூர்ணிமாவின் துயரத்தைச் சுட்டிக் காட்டினாள்..

“அகல்விளக்கு தரம் பிரிச்சுப் பார்க்காதுண்ணா.. மாட மாளிகை, கூட கோபுரம்ன்னு உயரத்தை நினைக்காது.. ஏழை குடிசையிலும் வெளிச்சத்தைப் பரப்பும்.. பூர்ணிமா அகல் விளக்குண்ணா.. அவ மனசில இருக்கிற பிரியம் வெளிச்சத்தைக் கொடுக்கிற பிரியம்.. நீங்க காட்டற மாப்பிள்ளைக்கு அவ கழுத்தை நீட்டிருவான்னா நினைக்கறிங்க..? அப்படிக் கழுத்தை நீட்டறவ இல்லண்ணா அவ.. மனசார ரகுவரனைக் காதலிச்சுட்டா.. வேற ஒருத்தரை நினைக்கக்கூட அவளால் முடியாது.. நீங்க மனுசங்களை அவங்களோட வெளித் தோற்றத்தை வைச்சு எடை போட்டிங்க.. அவ மனசை வைச்சு எடைபோட்டுட்டா.. ஒன்னு மட்டும் நிச்சயம்ண்ணா.. ரகுவரன் பார்க்கிறதுக்கு வேணும்னா முரட்டுத்தனமான மனுசனா இருக்கலாம்.. மனசுக்குள்ள இரக்க குணம் கொண்டவரு.. நேர்மையானவரு.. தப்புன்னு தெரிஞ்சா தட்டிக் கேட்கிற தைரியசாலி.. அவரோட இந்த அஞ்சாமையைத்தானே நீங்க ரௌடியிசம்ன்னு முத்திரை குத்தறிங்க..? உங்க மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்க.. ரகுவரன் மேல உங்களுக்கு நல்ல அபிப்ராயமே இல்லையா..?”

பூபாலன் பதில் சொல்ல முடியாமல் திணறினான்.. ரகுவரன் நல்லவன்தான்.. ஆனாலும் முழுமனதாய் அவனை ஏற்றுக் கொள்ள முடியாமல் ஏதோ ஒன்று அவனைத் தடுக்கிறதே..

சுபா ஒருபுறம் கரைக்க.. பிரசன்னா மறுபுறம் பூபாலனிடம் பேச்சு வார்த்தைக்கு வந்தான்..

“ரகு ஆலமரம் சார்.. அவனோட நிழலில ஆளானவங்க நிறையப்பேர்.. அனாதையா நின்னுட்டோமேன்னு நாலு அநாதைப் பிள்ளைகளுக்கான முழுச் செலவையும் ஏத்துக்கிட்டு படிக்க வைச்சுக்கிட்டு இருக்கான்.. இவன்தான் ஸ்பான்சர்ன்னு அந்தப் பிள்ளைகளுக்குத் தெரியாது.. அவன்கிட்ட வேலை பார்க்கிறவங்களுக்கு மத்தவங்களைவிட இரண்டு மடங்கு அதிகமாச் சம்பளம் கொடுப்பான்.. கஷ்டத்தில துணை நிற்பான்.. அவங்க சந்தோசத்தைக் கொண்டாடுவான்.. அவன் கர்ண பிரபு சார்.. கொடுத்துப் பழக்கப்பட்டவன்.. அவனுக்குன்னு எதையும் கேட்டதில்லை.. அவனுக்குன்னு இருந்த அவனோட அப்பாம்மாவை தட்டிப் பறிச்சுக்கிட்ட கடவுள் பதிலுக்கு உங்க தங்கையின் காதலை அனுப்பி வைச்சிருக்கிறதா நினைக்கிறான்.. கொடுக்க மாட்டேன்னு சொல்லிராதீங்க.. பணத்திலயும், குணத்திலயும் உயர்ந்தவன்.. உங்க தங்கையின் குணத்துக்கு இவனை விடப் பொருத்தமான மாப்பிள்ளை கிடைக்கவே மாட்டான் சார்..”

மன்றாடிய பிரசன்னாவிடம் நீயெல்லாம் பெண் கேட்டு வந்து விட்டாய் என்பதைப் போல முறைத்துப் பார்த்து அனுப்பி விட்டான் பூபாலன்.. அடி மனதில் நிரடிய நிரடலை ஒதுக்கி வைத்துவிட்டு பூர்ணிமாவின் மனம் போல திருமணத்தை நடத்தி வைக்க அவனால்  முடியவில்லை..

சரியான தூக்கம், சாப்பாடு, அமைதி இல்லாமல் பூர்ணிமா காய்ச்சலில் விழுந்தாள்.. கண் திறக்காமல் கிடந்தவளை மருத்துவ மனையில் சேர்த்தார்கள்.. பாகீரதி அழுது புலம்பினாள்.. விஸ்வநாதனின் கண்கள் கசிந்தன.. பூபாலனை ஏறிட்டுப் பார்த்தவர்.

“அவனைச் வரச் சொல்லுடா..” என்று குரல் கம்மச் சொன்னார்.

“அப்பா..?”

“ரௌடின்னு பேர் வாங்கினவனுக்குப் பெண் கொடுக்க உன் போலிஸ் புத்தி யோசிக்குது.. உன் தயக்கத்துக்கு இதுதான் காரணம்.. அவன் நல்லவன்னு ஊரே சொல்லும்போது நீ ஏண்டா தயங்கனும்..? உன் தயக்கத்தை உடைச்சு எறிடா..”

“ஆனாலும் அப்பா..”

“வேண்டாம் பூபாலா.. இனியும் ஆனா, ஆவன்னான்னு நாம பேசிக்கிட்டிருக்க வேணாம்.. உன் தங்கையைப் பாருடா.. பறிச்சுப் போட்டக் கொடி போலக் கிடக்கிறா.. உயிருக்குப் போராடிக்கிட்டு இருக்கா.. இவளோட உயிர் அவன்தாண்டா..”

“அப்பா..”

பூபாலன் கண்ணீர் விட்டான்.. பூர்ணிமாவின் பக்கத்தில் உட்கார்ந்து அவள் தலையைக் கோதி விட்டான்.. அண்ணா.. ரகுவரனை நான் காதலிக்கிறேன்.. அவனுக்கே என்னைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்துவிடு என்று கேட்காமல்.. என் காதலைத் தடுக்கிறாயே என்று குற்றம் சாட்டாமல் தவசி போல நடமாடி நோயில் விழுந்து விட்டத் தங்கையின் முகத்தைப் பார்த்தவனுக்குள் குற்றஉணர்வு வந்தது..

“உன் தங்கை அகல் விளக்குடா.. நாம அப்படித்தான் இவளைச் சொல்லுவோம்.. அமைதியானவ.. மத்தவங்களுக்கு அமைதியைக் கொடுக்கிறவ.. அகல்விளக்கு மத்தவங்களுக்கு அமைதியைக் கொடுக்கனும்.. அமைதியிழந்து தவிக்கக் கூடாது.. பூர்ணிமா வாழனும்டா பூபாலா.. இவளோட வாழ்க்கை ரகுவரன்தாண்டா..”

அதற்கு மேலும் தாமதிக்காமல் ரகுவரனுக்குப் போன் போட்டான் பூபாலன்.. செய்தியைக் கேட்டவுடன் பறந்து கொண்டு வந்தான் ரகுவரன்.. மருத்துவமனையில் கண் திறக்காமல் கிடந்த பூர்ணிமாவைக் கண்டதும் அவன் விழிகள் கலங்கிச் சிவந்து விட்டன..

அவனுக்காக அனைத்தையும் தவிர்த்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவளின் கைவிரல்களைப் பற்றினான்.. அசைவில்லாமல் கிடந்த விரல்கள் அவனது விரல் பட்ட ஸ்பரிசத்தில் நடுங்கித் துடித்தன..

“பூர்ணிமா..” கரகரத்த அவன் குரலில் அவள் கண்விழித்தாள்.

“வந்துட்டிங்களா..?” ஈனஸ்வரத்தில் கேட்டாள்..

“ஏன் இப்படி உன் ஆரோக்கியத்தைக் கெடுத்துக்கிட்ட பூர்ணி..?”

“எனக்கென்ன ஆச்சு..? ஒன்னும் ஆகலை.. உங்களை நான்தான் காதலிச்சேன்.. உயிராய் நினைச்சேன்.. நிம்மதியாய் உங்க வாழ்க்கையை வாழ்ந்துக்கிட்டு இருந்தீங்க.. காதல்ன்னு ஊடே வந்தேன்.. உங்க நிம்மதியைப் பறிச்சேன்.. எப்பேற்பட்ட மனுசன் நீங்க.. என்னால அவமானப்பட்டிங்களே..”

“என்ன பேசற..? இது அவமானமா..? பெத்தவங்களும் கூடப் பிறந்தவரும் உன்னை அப்படியே தூக்கி என் கையிலே கொடுத்துருவாங்களா..? அவங்க பார்வையிலே நான் ரௌடிதானே..? உன் வாழ்க்கையைப் பத்தின கவலையும், பொறுப்பும் அவங்களுக்கு இருக்கு பூர்ணிமா.. அதைக் குறை சொல்லக் கூடாது..”

பூர்ணிமா நெகிழ்ந்தாள்.. விழிகளில் கண்ணீர் மல்க தன் குடும்பத்தாரைப் பார்த்தாள்.. கேட்டுக் கொள்ளுங்கள்.. இவன் நியாயவான்.. என்று சொன்னது அவள் பார்வை..

“எனக்கும் தெரியும்ங்க.. அதனாலதான் எதிர்த்துப் பேசாம, உங்க பின்னாலே வராம வீட்டுக்குள்ளே முடங்கிட்டேன்.. ஆனா ஒன்னுங்க.. நீங்கதான் எனக்கு எல்லாமும்.. இதை உங்ககிட்ட சொல்லிரனும்னுதான் உயிரைக் கையிலே பிடிச்சுக்கிட்டு இருந்தேன்.. என் வீட்டார் முன்னாலே இதை உங்ககிட்டச் சொல்லிட்டேன்.. இது எனக்குப் போதும்..”

நீயே எனக்குச் சகலமும் என்ற வார்த்தைகளில் ஆறி விடுகின்றன அனைத்து மன ரணங்களும்..

பூர்ணிமா அதைச் செய்தாள்.. அவள் உயிராய் நினைத்தவனிடம் நீயே எனக்குச் சகலமும் என்று சொன்னாள்.. அதையும் அவளது குடும்பத்தாரின் முன்னிலையில் சொன்னாள்..

அநாதையாய் நின்ற அந்த ஆபத்பாந்தவனின் புண்ணாகியிருந்த உள்ளம் ஆறி விட்டது.. காதலியின் கரங்களைப் பிடித்துக் கண்களின் மீது வைத்து ஒற்றிக் கொண்டான்.

மழையுமில்லாத வெயிலுமில்லாத இதமான சீதோஷ்ணம் கொண்ட சுபயோக சுபதினத்தில் பூர்ணிமாவின் கழுத்தில் மூன்று முடிச்சுக்களைப் போட்டுத் தன் மனையாட்டிக்கிக் கொண்டான் ரகுவரன்.. பெரிய திருமண மண்டபத்தில் பிரம்மாண்டமாக நடந்த அவர்களது திருமணத்திற்கு ஊரே திரண்டு வந்து கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியது.

ஹனிமூனுக்கு சிம்லா.. மறுவீட்டு விருந்துக்கு எதிர்வீட்டு விருந்து என திருமணத்தை ஒட்டி நடந்த இனிப்பான நிகழ்வுகளுக்குப் பின்னால் ரகுவரனின் பிளாட்டில் அவனுடன் குடும்பம் நடத்த ஆரம்பித்தாள் பூர்ணிமா..

இப்போதும் அபார்ட்மெண்டில் சண்டைகள் வருகின்றனதான்.. ரகுவரன் சட்டையை மடித்துக் கொண்டு சண்டைக்குப் போகிறான் தான்.. ஆனால் அவனை ரௌடி என்று சொல்லாமல் அபார்ட்மெண்டின் செக்கரட்டரி என்று சொல்லி அனைவரும் அவனிடம் அனுசரித்துப் போகிறார்கள்..

அன்பான அகல்விளக்கு ஒளி கொடுக்க வாழ்வில் வந்து விட்டால் அனைத்து நிகழ்வுகளும் நலமாகத்தானே அமையும்..?

– சுபம் –

0Shares

Reviews — Akalvizhku / அகல் விளக்கு

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link