Chapter 01
ஜன்னலைத் திறந்து விட்டான் ஆனந்தன்.. இதமான குளிர்காற்று முகத்தில் படிந்தது.. கைலியை மடித்துக் கட்டியபடி வாசலுக்கு வந்தான். தெருவில் நின்றிருந்த பால்காரன் ஆனந்தனைக் கண்டதும் சைக்கிளில் கட்டியிருந்த கேனிலிருந்து பாலை அளந்து ஆனந்தன் நீட்டிய பாத்திரத்தில் ஊற்றிக் குடுத்தான்.. திரும்பியபோது அவளைப் பார்த்தான்.. பாவாடை தாவணியில் பெண்மை மிளிர.. குளித்து முடித்து ஈரக் கூந்தலின் நுனியில் பின்னலிட்டு.. முனையில் நீர் சொட்டக் குனிந்து வாசலில் கோலமிட்டுக் கொண்டிருந்தாள்..
ஆனந்தனாகப் பிறப்பெடுத்தற்கு அவள் வீட்டின் வாசலாகப் பிறப்பெடுத்திருக்கலாமே என்ற ஏக்கம் அவன் மனதில் வந்தது. தினமும் அவளைத் தரிசிக்கும் வாய்ப்புக் கேட்காமலே கிடைத்திருக்குமல்லவா..?
அவள்.. கீதா..! இருபது வயதில் இருக்கும் யௌவன சுந்தரி..! அரசப்பட்டினம் என்று அழைக்கப் படும் அந்த ஊரின் சொப்பன சுந்தரி..! அந்த சொப்பன சுந்தரியை தினந்தோறும் தரிசிக்கும் பாக்கியத்தை ஆனந்தன் பெற்றதே தனிக்கதை..
பெயரில் மட்டுமே பட்டினத்தைத் தாங்கியிருந்த அரசபட்டினம் கிராமத்துக்குரிய சகலவிதமான சாமுத்திகா லட்சணங்களுடன் இருந்தது.. ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியும், அதனெதிரே இருந்த துணைத் தபால் நிலையமும் அதன் கிராமத்து முகவரியைச் சற்றே மாற்றி பட்டினத்தின் சாயலை கொண்டுவர முயன்று கொண்டிருந்தன..
சுற்று வட்டாரக் கிராமங்களில் உள்ள பிள்ளைகள் மேல்நிலைக் கல்விக்கு அரசபட்டினத்திற்குத்தான் வந்து போக வேண்டியிருந்தது.. அதன் பொருட்டு பக்கத்து டவுனிலிருந்து டவுன் பஸ்கள்.. அரச பட்டினத்திற்கு விடப் பட்டிருந்தன.
அரசபட்டினத்தின் அரசு மேல்நிலைப் பள்ளியின் முன்னால் இருக்கும் திறந்த வெளியில்தான் டவுன் பஸ் வந்து நின்று போகும்.. அதனால் ‘மந்தை..’ என்று அழைக்கப்பட்டு வந்த மைதானம் நாளடைவில் பெயர் மருவி ‘பஸ் ஸ்டாண்ட்’ ஆக உரு மாறியது..
அனைத்து ஒட்டுனர்களும் நடத்துனர்களும் செய்வதைப் போல அரச பட்டினத்திற்கு வரும் டவுன் பஸ்ஸின் ஒட்டுனர்களும் நடத்துனர்களும் பஸ் நின்றவுடன் பயணிகளுக்கு முன்னால் முதல் ஆளாக குதித்து இறங்கி அங்கே இயங்கிக் கொண்டிருக்கும் டீக்கடையில் அடைக்கலமாவார்கள்..
அங்கு வந்து போகும் பஸ்களை நம்பி ஆரம்பிக்கப் பட்டிருக்கும் டீக்கடையின் சொந்தக்காரர் நன்றியுணர்வு மாறாமல் சூடான வடைகளையும் டீயையும் இலவசமாக கடை பரப்புவார்.. அவற்றைச் சுவைத்தபடி நாட்டு நடப்பைப் பேசிக் கொண்டிருந்து விட்டு பதினைந்து நிமிடங்களில் பஸ்ஸிற்குள் தாவி பயணிகள் ஏறினாலும், ஏறாவிட்டாலும் பஸ்ஸைக் கிளப்பி அரசப்பட்டினத்தின் எல்லையைக் கடந்து ஓடோடி விடுவார்கள்..
பஸ்ஸிற்காக காத்திருக்கும் பயணிகளை நம்பி ஆரம்பிக்கப் பட்ட டீக்கடையில் அரசுப் பள்ளியின் ஆசிரியர்களும் ஊழியர்களும் நிரந்தர வாடிக்கையாளர்கள்… தபால் நிலையத்திற்கு வந்து போகிறவர்களும் அங்கே நின்று போவதுண்டு..
மொத்தத்தில் மொத்த ஊரின் ஆண்மக்களும் ஒட்டு மொத்த குத்தகைக்கு எடுத்து மீட்டிங் போட்டு அளவளாவும் டீக்கடை பெஞ்சுகளைக் கொண்ட அந்த டீக்கடைதான் அரச பட்டினத்தின் ஸ்டார் ஹோட்டல்..
தபால் அலுவலகம் இருக்கும் ஊரில் தங்கியிருக்கத் தோதான வீடு இருக்கிறதா என்று கவலை கொள்ளாமல் ஆனந்தனை அந்த ஊரின் சப் போஸ்ட் மாஸ்டராகத் தூக்கியடித்திருந்து தபால் துறை..!
அவனும் அந்த இளம் வயதிலேயே போஸ்ட் மாஸ்டராகப் போகிறோம் என்று புன்னகை மன்னனாக அந்த ஊரில் வலது காலை எடுத்து வைத்து பஸ்ஸிலிருந்து இறங்கி அலுவலகத்தில் நுழைந்தான்.
“வாங்க சார்.. நீங்கதான் புதுசா வந்திருக்கிற போஸ்ட் மாஸ்டரா..?”
ஐயோ பாவம் என்று வரவேற்ற அன்பழகன்தான் அங்கே போஸ்ட் மேனாக உருமாறும் ஈடி பேக்கராம்..
“என்னாச்சு சார்.. உங்களுக்கு வேண்டப்பட்டவங்க யாரும் டிபார்ட்மெண்டில இல்லையா..?”
அவன் துக்கம் விசாரித்ததில் ஆனந்தனின் உற்சாகம் புஸ்வாணம் போல காணாமல் போய் விட்டது.
“ஏம்ப்பா.. இப்படிக் கேக்கற..?”
“இல்ல.. செல்வாக்கு இல்லாதவங்கதான் இந்த ஆபிசில வந்து மாட்டிக்குவாங்க.. அதான் கேட்டேன்.. உட்காருங்க..”
அவன் காட்டிய நாற்காலி புதிதாக இருந்தது.. டேபிளும் அப்படியே… ‘கர் கர்’ எனச் சப்தம் போட்டு எப்போது வேண்டுமானாலும் உன் தலையில் விழுந்து விடுவேன் என்று பயமுறுத்திய மின்விசிறிக்கும் அந்த டேபிள் நாற்காலிக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது..
“நமக்காக இந்த செட்டப் இல்ல சார்.. எல்லாம் இதுக்காகத்தான்..”
அன்பழகன் சுட்டிக் காட்டிய இடத்தில் அரசிளங்குமரியைப் போல ஆரோகணித்திருந்தது புத்தம் புதிய கம்யூட்டர்..!
“அரச பட்டினத்துக்காரனுக இதில சினிமாத் தெரியுதான்னு எட்டிப் பார்க்கிறானுக.. இங்கன போயி கம்யூட்டரு..! ம்ஹீம்.. ஈடி பேக்கருக்கு விடிவைக் காணோம்.. இன்னமும் அத்தக்கூலியா, அன்னாடம் காய்ச்சியா நிக்கிறோம்.. கம்யூட்டருக மட்டும் கோடிக் கணக்கில ரூபாயை முழுங்கிக்கிட்டு இறக்குமதியாகுது.. வரவர மெஷினுக்கு இருக்கிற மதிப்பு மனுசனுக்கு இல்லைன்னு ஆகிப் போச்சு சார்..”
புழுதி படிந்த அரச பட்டினமும்.. புலம்பிக் கொண்டிருந்த அன்பழகனும் ஆனந்தனை அவசரப்பட்டு விட்டோமோ என்று யோசிக்க வைத்ததில் அவன் தலையைப் பிடித்தபடி சீட்டில் உட்கார்ந்தான்..
“இப்பவே கண்ணக் கட்டினா எப்புடி..? இன்னும் நிறய இருக்கே..” வயிற்றில் புளியைக் கரைத்து ஊற்றினான் அன்பழகன்..
‘இதுவே தாங்கலை.. இன்னும் இருக்கா..?’
அன்பழகனைப் பேச விடக் கூடாது என்று தீர்மானித்தான் ஆனந்தன்..
“எத்தனை பிரான்ச் ஆபிஸ் இருக்கு..?”
“ரெண்டு சார்.. பையெடுக்க வருவாங்க.. நீங்க பத்து மணிக்குள்ள ‘பிஓ’ பையைக் கட்டி ரெடியா வைச்சிரனும்.. இல்லேன்னா சிறுவூர்க்காரனும், பெருவூர்க்காரனும் குதியாய் குதிப்பானுக..”
‘இவனுக்கு நான் சுப்பிரியரா.. இல்லை எனக்கு இவன் சுப்பிரியரா..?’
“தலைய வலிக்குதா..? இருங்க டீ வாங்கியாறேன்.. நம்மள நம்பி ஆரம்பிச்சிருக்கிற கடை..! நாம ஓட வைச்சிருவோமுல்ல..”
அன்பழகனின் ‘ஓட வைத்தல்’ டீக்கடையை ஓட வைப்பதா இல்லை டீக்கடை நடத்துபவனை ஓட வைப்பதா என்ற குழப்பத்தில் ஆழ்ந்தான் ஆனந்தன்.
அன்பழகன் டீ வாங்கப் போய் விட்டதில் அலுவலகமே அமைதிப் பூங்காவாக உருமாறினது.. ஆசுவாசமடைய இப்படி ஒரு வழி இருக்கிறது என்பதை கண்டு கொண்டான் ஆனந்தன். திரும்பி வர நேரமெடுத்துக் கொண்ட அன்பழகன்..
“போனா சட்டு புட்டுன்னு திரும்பி வர முடியுதா..? பேச்சில புடிச்சுக்கிறானுக..” என்று அலுத்தபடி டீக் கிளாஸை வைத்தான்.
‘இவனைப் பேச்சில் பிடிக்கவும் ஆள் இருக்கிறதா..?’
கம்யூட்டரை உயிர்ப்பித்து முதல் நாளின் வேலை விவரங்களை பார்வையிட ஆரம்பித்த ஆனந்தனை உன்னிப்பாக பார்த்து வைத்த அன்பழகன்.
“இதுவரைக்கும் இந்த ஆபிசுக்கு இளந்தாரி போஸ்ட் மாஸ்டருக வந்ததேயில்ல.. எல்லாம் ரிட்டயராகிற வயசில இருக்கிறவங்கதான் வந்து போவாங்க.. முதல் ஆளா நீங்க சிக்கியிருக்கீங்க போல..” என்றான்..
அடுத்த பஸ்ஸைப் பிடித்து அரச பட்டினத்தை விட்டு ஓடிவிட வேண்டும் என்ற ஆசையை ஆனந்தனின் மனதில் விதைப்பதில் அவன் முனைப்பாக இருந்ததில் வெறுத்துப்போன ஆனந்தன் நிமிர்ந்து அன்பழகனை தீர்க்கமாக ஒர் பார்வை பார்த்து வைத்தான்.
“என்ன சார்..?”
“நீ எப்படிக் கதை சொன்னாலும் அரச பட்டினத்தை விட்டு நான் நகருகிறதா இல்லை.. அதனால இங்கே வாடகைக்கு வீடு கிடைக்குமான்னு பார்த்துச் சொல்லு..”
“வாடகைக்கு வீடா..? இந்த ஊரிலா..? மனுசன் குடியிருப்பானா சார் இந்த ஊரில..?”
“நான் குடியிருப்பேன்.. என்னைப் பார்த்தா உனக்கு மனுசனாத் தெரியலையா..?”
“ஐயோ சார்.. நீங்க தெய்வம்..!”
“அஃது.. இப்படியே மெயின்டெயின் பண்ணு.. அதான் உனக்கு நல்லது.. முதல்ல இந்த தெய்வம் குடியிருக்க ஒரு கோவிலைத் தேடிக் கொடு..”
“உங்களுக்கேத்ததைப் போல ஒரேயொரு வீடுதான் இருந்துச்சு.. அதிலயும் நம்ம சுகுமாறன் வாத்தியார் குடியிருக்காரே.. என்ன செய்யலாம்..?”
அன்பழகன் நெற்றியை ஒற்றை விரலால் தட்டி யோசிக்க ஆரம்பித்த போது அவன் சொன்ன சுகுமாறனே போஸ்ட் ஆபிசிற்கு வந்து விட்டான்..
“என்ன அன்பு.. எனக்கு முக்கியமா ஒரு ஸ்பீடு போஸ்ட் வரவேண்டியிருக்கு.. இன்னைக்கு மெயிலில் வர்திருக்குதா..?” என்று கேட்டான்.
Reviews — Anantha Geetham / ஆனந்த கீதம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.