Chapter 02

0Shares

கேள்வி கேட்ட ஆசிரியரை கித்தாய்ப்பாக பார்த்து வைத்தான் அன்பழகன்.. முகத்தை தீவிரமாக வைத்துக் கொண்டான்.. அவன் காட்டிய தோரணை தமிழ்நாட்டின் போஸ்ட் மாஸ்டர் ஜெனரலே அவன்தான் என்பதைப் போல இருந்தது..

“அதுக்குள்ள அவசரப்பட்டா எப்படி சார்..? இப்பத்தான் டவுன்பஸ் வந்துட்டுப் போச்சு.. ஐயாவையும் மெயிலையும் அந்தப் பஸ்தான் இறக்கி விட்டுச்சு.. பிரிச்சுப் போடனுமில்ல..?”

அன்பழகனின் அலட்டலைத் தாள மாட்டாத ஆனந்தன் நிமிர்ந்து ஓர் பார்வை பார்த்தான்.. அவனது புருவங்களின் சுருக்கங்கள் அன்பழகன் மெயில் பையைப் பிரித்துப் போட உத்தேசித்திருக்கிறானா இல்லை அந்த அலுவலகத்தில் அடியெடுத்து வைத்து விட்ட தவறுக்காக ஆனந்தனைப் பிரித்துப் போட உத்தேசித்திருக்கிறானா என்று வினவின..

“என்ன அன்பழகன்..? எதைப் பிரிச்சுப் போடப் போற..?” ஆனந்தன் நிதானமாக கேட்டான்..

“மெயில்பையைத்தான் பிரிச்சுப் போடனும் சார்..”

“சொல்றதைத் தெளிவாச் சொல்லு.. பேசறதைப் புரியறதைப் போலப் பேசிப் பழகு.. இல்லேன்னா நான் உன்னைப் பிரிச்சுப் போட வேண்டியிருக்கும்.. அன்டர்ஸ்டாண்ட்..?”

“அன்டர்ஸ்டாண்டு சார்..”

“மெயில் பேக் வந்து இவ்வளவு நேரமாகுது.. அதைப் பிரிக்காம டீக்கடைப் பெஞ்சுல உக்காந்து வெட்டியா அரட்டையடிச்சுட்டு வர்ற..?”

“ஹி.. ஹி..”

“சிரிக்காதே.. சகிக்கலை.. பத்து மணிக்குள்ள பி.ஓ. பேக்கைக் கட்டியாகனும்னு நீதான சொன்ன..? மெயில் இல்லாம பையைக் கட்ட முடியுமா..? அந்த ஊருக்காரங்களுக்கு வர்ற கடிதங்களை அடுத்த நாள்தான் படிக்கனும்னு நீ புதுசா ரூல் போட்டு வைச்சிருக்கயா..?”

ஆனந்தன் விளாசிய விளாசலில் அன்பழகன் தாவிப் பாய்ந்து பையைப் பிரித்ததை சுவராய்யமாக வேடிக்கை பார்த்தான் சுகுமாறன்.. அதுநாள்வரை அந்த போஸ்ட் ஆபிசிற்குத் தான்தான் போஸ்ட் மாஸ்டர் போல பிலிம் காட்டிக் கொண்டிருந்த அன்பழகன் சுகுமாறனின் சுவராஸ்யமான பார்வையில் தன்னுடைய இமேஜ் சரிந்து விட்டதை உணர்ந்து கொண்டவனாக மனம் புழுங்கினான்.

அந்த இனிய பொழுதிலா பக்கத்திலிருந்து விசேச வீட்டின் ஒலிபெருக்கியில் பாடல் ஒலிக்க வேண்டும்..?

“போட்டுத் தாக்கு..

போட்டுத் தாக்கு..”

தாக்கு தாக்கென்று தாக்கிய பாடலில் சுகுமாறன் கடகடவென சிரித்து விட்டான்..

“அதெப்படி அன்பு.. பக்கத்து வீட்டுல உனக்கேத்த சிச்சுவேசன் சாங்கைப் போட்டுத் தாக்கறாங்க..?”

சுகுமாறனின் கேள்வியில் அவனை முறைத்துப் பார்த்தான் அன்பழகன்.. பேச முடியவில்லை.. ஆனந்தன்தான் வாயைத் திறக்க விடாமல் வகையாய் போட்டுத்தாக்குகிறானே..

அதுவரை அந்தத் தபால்நிலையம் ஓய்வு பெறப் போகும் போஸ்ட் மாஸ்டர்கள் வந்து தூங்கிப் போகும் சரணாலயமாக இருந்தது.. ரிட்டயர்மெண்ட் ஸ்டேஜில் உள்ளவர்கள் அன்பழகனைச் சார்ந்தே இருந்ததால் அனைத்து அதிகாரங்களையும் அவன் கையில் எடுத்துக் கொள்வதை கண்டு கொள்ள மாட்டார்கள்.. அவனும் ‘நான் ராஜா..’ என்று மன்னாதி மன்னனாக அந்தத் துணை தபால் நிலையத்தில் வானளாவிய அதிகாரத்துடன் வலம் வந்தான்.. இப்படியொரு இளந்தாரி சப் போஸ்ட் மாஸ்டர் வந்து அவனுடைய வானளாவி அதிகாரத்திற்கு ஆப்பு வைப்பான் என்று கனவிலும் அவன் நினைத்ததில்லை..

‘இந்த அரசப் பட்டினத்துக்கு வரனும்னு எந்த இளந்தாரி சப் போஸ்ட் மாஸ்டர் ஆசைப்படப் போறான்..?’

இந்த நினைவில் மண் விழுந்து விட்டத் துக்கத்துடன் அவன் மெயில் பையைப் பிரித்துக் கொட்டிக் கவிழ்த்தான்.. அக்கவுண்ட் பேக்கை ஆனந்தனின் டேபிளில் வைத்தான்.. ஸ்பீடு, ரெஜிஸ்டர் பைகளை வெட்டி பிரிக்க ஆரம்பித்தான்..

அன்பழகனின் அதி வேகத்தை புதிதாகப் பார்ப்பதைப் போல பார்த்த சுகுமாறன்.

“உனக்கு இத்தனை விரசா வேலை செய்யக் கூடத் தெரியுமா அன்பு..?” என்று வியந்து போனான்..

‘யோவ்..! சும்மாயிருய்யா..’

அன்பழகன் வெட்டும் பார்வையோடு நட்பில்லாமல் சுகுமாறனை ‘யார் நீ..?’ என்று அறிமுகமற்ற பார்வை பார்த்தபடி கடமையில் கண்ணாகினான்.

“பரவாயில்லை சார்.. வந்த முதல் நாளிலேயே நம்ம அன்பழகனை டிரில் வாங்கிட்டிங்க..?”

புதிதாக வந்திருக்கும் சப் போஸ்ட் மாஸ்டரிடம் சிநேகிதமாகிவிடும் உத்தேசத்துடன் கை நீட்டிய சுகுமாறன் ஆனந்தனின் முகத்தை நேருக்கு நேராக பார்த்ததும் ஆனந்தமாகிப் போனாவனாக..

“டேய்..! ஆனந்தா..!” என்று கூவினான்..

வந்திருப்பது யார் என்று கூடக் கவனிக்காமல் அன்பழகனை அன்பாகக் கவனிப்பதில் மும்முரமாக இருந்த ஆனந்தன் சுகுமாறனின் கூவலில் அவன் முகத்தை உன்னிப்பாக பார்த்து விட்டு..

“சுகு..! நீயாடா..?” என்று அவன் கைகளுக்குள் ஐக்கியமானான்..

கட்டித் தழுவிய நண்பர்களைக் காண்டாக பார்த்த அன்பழகன்.

‘இது வேறயா..?’ என்று மனதுக்குள் சலித்துக் கொண்டான்.

விறைத்துக் கொண்டிருக்கும் விறைப்பான சப் போஸ்ட் மாஸ்டருக்கு அரச பட்டினத்தையும் அங்குள்ள ஆள்களையும் அறிமுகப் படுத்தினால்தானே ஆனந்தனும் கொஞ்சம் மலையிறங்கி அன்பழகனுடன் சமாதானமாகப் போவான்..?

அதற்கும் வழியில்லாமல் அந்த ஊரிலேயே குடியிருக்கும் இளந்தாரி வாத்தியார் ஆனந்தனை அரவணைத்துக் கொண்டால் அன்பழகன் பாவம் என்னதான் செய்வான்..?

“என்னடா மச்சான்.. இந்த ஊரில் வந்து மாட்டியிருக்க..?”

சுகுமாறன் துக்கம் விசாரித்ததில் நொந்து போனான் ஆனந்தன்.

“நீயும் வாய் வைச்சிட்டியா..?”

“எனக்கு முன்னாலே யாருடா வாய் வைச்சது..?”

“எல்லாம் என்னோட அன்பான அழகான அஸிஸ்டெண்டு அன்பழகன்தான்..”

‘அஸிஸ்டெண்ட்..’ என்ற வார்த்தையில் முகம் மலர்ந்து போன அன்பழகன்..

“சார்..” என்று வாயெல்லாம் பல்லானான்..

“பாருடா.. நம்ம அன்புக்கு அஸிஸ்டெண்டா பிரமோசன் கிடைச்சிருச்சா..?” சுவாதீனமாக அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டான் சுகுமாறன்.

“பார்த்து சார்.. அதோட கால் ஒன்னு ஆடிக்கிட்டு இருக்கு..” எச்சரித்தான் அன்பழகன்..

“இந்த ஆபிசில ஆடிப் போயிருக்கிற அத்தனை உருப்படிகளைப் பத்தின அத்தனை விவரமும் அன்பழகனுக்கு அத்துபடி..” சிரித்தான் சுகுமாறன்.

“அத்துபடியாகி என்ன பிரயோசனம்..! இதுகளையெல்லாம் மாத்தியிருந்தா பாராட்டியிருக்கலாம்..” என்றான் ஆனந்தன்..

“மாத்தினா போஸ்ட் ஆபிசுக்கான புராதனமான அழகே மாறிப் போயிரும்ன்னு ஃபீல் பண்ணியிருப்பாப்பில..”

சுகுமாறனின் சிரிப்பில் கலந்து கொள்ளாமல் லெட்டர் பேடை எடுத்து ஏதோ எழுதி கவரில் போட்டு ஒட்டி வைத்தான் ஆனந்தன்..

“என்னப்பா செய்கிற..?”

“இங்கேயிருக்கிற பழைய பர்னிச்சர்களுக்குப் பதிலா புது பர்னிச்சர்களை அனுப்பி வைக்கச் சொல்லி டிவிசனல் ஆபிசுக்கு லெட்டர் எழுதியிருக்கேன்..”

“எழுதினா அனுப்பி வைச்சுருவாங்களா..?”

“ம்ம்ம்.. இதுக்குன்னே  ஸ்டாக் கிளார்க் இருக்காங்க..”

“இதையேன் இத்தனை நாளா மத்த சப் போஸ்ட் மாஸ்டருக செய்யலை..?”

“அதை அவங்ககிட்டத்தான் கேக்கனும்..”

“ஊஹீம்.. அன்பழகன்கிட்டதான் கேக்கனும்.. ஏன்னா.. இதுநாள் வரை இங்கே ஆல் இன் ஆல் அழகுராஜாவா நம்ம அன்பழகனோட ஆட்சிதான் கோலோச்சியிருந்தது.. வந்தவர்கள்ளாம் டம்மி.. அன்பழகன் சொல்கிறத செய்துட்டுப் போயிருவாங்க..”

“வேற என்ன செய்ய முடியும் சுகுமாரா..? வொர்க் லோடு அதிகம்.. வெளியே இருந்து பாக்கிறவங்க எளிசா போஸ்ட் ஆபிசில என்ன வேலையிருக்குன்னு சொல்லிட்டுப் போயிருவாங்க.. உள்ளே வந்து ஒருநாள் உட்கார்ந்து பார்த்தாத் தெரியும்.. இது மென்னியைப் பிடிக்கிற வேலைன்னு.. புராதனமான ஆபிஸ்தான் இது.. கட்டிடத்தில மட்டுமில்லை.. ரூல்ஸ் அண்ட் ரெகுலேசனிலும் அப்படித்தான்.. வேலை நேரத்தில சீட்டை விட்டு எழுந்திருக்கக் கூடாது..”

“பாருடா.. உன் டிபார்ட்மெண்டுக்கு பாராட்டுப் பத்திரம் கொடுக்கிற.. பரவாயில்லை.. எங்கே தங்கியிருக்கிற..?”

ஆனந்தன் வாயைத் திறப்பதற்குள் அன்பழகன் முந்திக் கொண்டான்..

“எங்கே தங்கறது..? இப்பத்தான் பஸ்ஸை விட்டு இறங்கி பெட்டி படுக்கையோட ஆபிசுக்குள்ள வந்திருக்காரு.. இப்போதைக்கு போஸ்ட் ஆபிசிலதான் ஜாகை.. பக்கத்து டீக்கடையில சாப்பாடுக்கு சொல்லி வைக்கனும்.. இந்த ஊருக்குள்ள வீடு பாத்துத் தரச் சொன்னா நான் எங்கே போறது..? சார் தங்கறதைப் போல ஒரேயொரு வீடுதான் இருந்துச்சு.. அதில நீங்க குடி வந்திட்டிங்க.. புதுசா வேற யாராவது வசதியா வீடு கட்டித்தந்தா குடி போகலாம்.. அதுவரைக்கும் போஸ்ட் ஆபிசில டேரா போட வேண்டியதுதான்..”

“இங்கேயா..?”

ஒற்றை ரூமுடன் இருந்த அந்தச் சின்னக் கட்டிடத்தைச் சுற்றிச் சுழன்றது சுகுமாறனின் பார்வை.. அவனது புருவங்கள் மேலேறின..

0Shares

Reviews — Anantha Geetham / ஆனந்த கீதம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link