Chapter 03
பத்துக்குப் பத்தில் இருந்த அந்த அறையின் ஜன்னல் கவுண்டராக
மாற்றப் பட்டிருந்தது.. வெளி வராண்டா பொதுமக்கள் வந்து போகும் இடமாகியிருந்ததில் அங்கே ஒரு பெஞ்ச் போடப்பட்டிருந்தது.. ஜன்னலை ஒட்டிப் போடப்பட்டிருந்த பெரிய டேபிளில் கம்யூட்டர் ஒயிலாக அமர்ந்திருக்க அதன் பக்கத்தில் எடை பார்க்கும் மெஷின் பொருத்தப்பட்டிருந்தது.
அறையின் மூலையில் சுவரோடு சுவராக ஒட்டிப் போடப் பட்டிருந்த நீண்ட டேபிளில் கரியநிற மை வழியும் வட்ட வடிவமான பேடு இருந்தது.. தபால் நிலையத்தின் தனி அடையாளம் அது.. அதையொட்டித்தான் டேட் ஸ்டாம்பு முதலான அணைத்து முத்திரைகளும் இருந்தன.. சுத்தியலைப் போல நீண்ட மரக் கைப்பிடியுடன் முனையில் வட்டம், முக்கோனம் என்ற பலவிதமான இரும்பு வடிவங்களுடன் இருக்கும் அந்த முத்திரைகளின் பதிவுகள் எந்த நீதிமன்றத்திலும் அசைக்க முடியாத சாட்சிகளாக நிமிர்ந்து நிற்கும் வல்லமை வாய்ந்தவை..
தபால்துறையில் அனுப்பப் படும் தபால்களும் அவற்றின் முத்திரைகளும்தான் சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட சாட்சியங்களாக நீதிமன்றங்களால் ஏற்றுக் கொள்ளப் படுகின்றன.
தபால் முத்திரைகளைப் பதிப்பது தனிக்கலை..! சுத்தியலைப் பிடிப்பதைப் போல அதன் மரப் பகுதியில் கையைப் பதித்து முத்திரை பதித்தால் நேரம், ஊர், தேதி, பின்கோடு போன்ற எந்த விவரமும் தெளிவாகப் பதியாது.. மரப்பகுதியின் மேல் முனையில் ஆள்காட்டி விரலின் மையப் பகுதியை அழுத்திப் பதிய வைத்து மற்ற நான்கு விரல்களையும் மரப்பகுதியைச் சுற்றிப் படிய வைத்து இறுக்கிப் பிடித்து ஓங்கி பதிக்க வேண்டும்.. இதை அதி விரைவாக செய்ய தேர்ந்த பயிற்சி பெற்ற தபால்துறையினரால்தான் முடியும்.. அங்குள்ள பணியாளர்கள் அதிவிரைவில் தெளிவான முத்திரை பதிப்பதில் வல்லுனர்கள்.. அப்படிப் பதிக்கும் போது தபால் முத்திரைக்கான கருப்பு மை கைகளிலும் உடைகளிலும் படியாதபடி லாவகமாக கையாள வேண்டும்.. தபால்துறையின் கருப்பு மை எளிதில் அழியாது.. அவர்களுக்கு அந்த லாவகம் தெரியும்..
என்ன ஒன்று.. முத்திரை பதிப்பதில் இத்துனை நுணுக்கமான அணுகுமுறைகள் இருக்கின்றன என்பது முத்திரை பதிப்பவர்களுக்கும் தெரியாது.. மேலதிகாரிகளுக்கும் தெரியாது.
மடிப்புக் கலையாத நேர்த்தியான உடையுடன் வரும் மேலதிகாரிகளின் வாயிலிருந்து வரும் ஒரு சிறு பாராட்டு போதும்.. தபால் துறையின் கடைநிலை ஊழியர்கள் மகிழ்ந்து பரவசப் பட்டுப் போக.. ஆனால் அந்தப் பரவசம் அவர்களுக்குக் கிடைத்ததேயில்லை.
அதிகாரத்தைப் பிரயோகிக்கும் அதிகார மேல் மட்டம் கடைநிலை ஊழியரைப் பற்றி கண நேரம்கூட நினைப்பதில்லை என்பதே நிதரிசனமான உண்மை.. அவர்களின் சிந்தனைகளெல்லாம் துறையின் வரவு செலவு கணக்கிலேயே மையமிட்டுக் கொண்டிருக்கும்..
அரச பட்டினத்தின் தபால் நிலையம் துணைதபால் நிலையம் என்ற பெயரைப் பெற்றிருந்தாலும் ஒற்றை அறைக் கட்டிடத்தில்தான் இயங்கிக் கொண்டிருந்தது.. சிக்கனத்திற்கு பெயர் பெற்றது தபால்துறை..!
ஒற்றை அறையில் தபால் நிலையம் இயங்கிக் கொண்டிருக்க ஒட்டியிருந்த சின்ன அறையின் அலமாரிகளில் அலுவலகத்திற்குத் தேவையான அனைத்துப் ஃபார்ம்களும் அடுக்கப் பட்டிருந்தன.. மூலையில் வரிசையாக கோணிப்பை.. பின்பக்கம் குளியலறை..
“எங்க ஸ்கூலோட ஃபைல் ரூம்கூட இதைவிட பெரிசா இருக்கும்டா..”
சுகுமாறன் கேள்வியில் சுருக்கென்று கோபம் வந்து விட்டதில்..
“உன்னுடையது ஸ்கூல்.. என்னுடையது ஆபிஸ்..” என்று எரிந்து விழுந்தான் ஆனந்தன்.
“ஆமாண்டா.. எனக்கு ஸ்கூலைப் பட்டாப் போட்டுக் கொடுத்திருக்கு.. உனக்கு ஆபிசைப் பட்டாப் போட்டுக் கொடுத்திருக்கு.. விடுவியா..” வெண்புறாவை பறக்க விட்டு சமாதானமானான் சுகுமாறன்.
‘அஃது..’ என்ற முறைப்புடன் சுகுமாறனுக்கான ஸ்பீடு போஸ்டை தேட ஆரம்பித்தான் ஆனந்தன்.
‘ஆஹா..! வாத்தியாருக்கும் வைச்சான்டா ஆப்பு..’ தான் பெற்ற துன்பத்தை சுகுமாறனும் பெற்று விட்டதில் இன்பமானான் அன்பழகன்..
“இதில் ஒரு சைன் போட்டுட்டு ஸ்பீடு போஸ்டை எடுத்துக்கிட்டுப் போ..”
கவுண்டர் டெலிவரி ஃபார்மை நீட்டினான் ஆனந்தன்.. அதில் கையெழுத்தைப் போட்டபடி..
“ஒன்னு செய்யலாமா..?” என்றான் சுகுமாறன்..
“வாத்தியாரில்ல.. அதான் ஆனா.. ஆவன்னாவை ஆரம்பிக்கிறதைப் போல ஒன்னில இருந்து ஆரம்பிக்கிறாரு..” வியாக்கினம் பேசினான் அன்பழகன்.
“இம்புட்டுத் தாக்கினாலும் நீ அடங்கவே இல்லை பார்த்தியா..”
சுகுமாறனின் நையாண்டியில் ஆனந்தன் நிமிர்ந்து பார்க்க..
‘ஆத்தி..’ என்று அரண்டு போனான் அன்பழகன்.
‘இந்த வாத்தி கிளப்பி விடறதிலேயே குறியா இருக்கானே.. இந்தாளு மறந்தாலும் இவன் உசுப்பி விடாம இருக்க மாட்டான் போல இருக்கே.. புதுசா வந்திருக்கிற இளந்தாரி எஸ்.பி.எம் போட்டுத் தாக்கறதில மன்னனாச்சே.. திரும்பவும் தாக்க ஆரம்பிச்சிட்டா என்கதி என்னாகும்..?’
ஓடிப் போய் விடலாமா என்று யோசித்தான் அன்பழகன்..
‘போஸ்ட் ஆபிஸ்காரரு..’ என்ற கெத்தோடு உலா வரும் உள்ளூர்வாசியான அவன் ஓடி ஒளிய இடமில்லை என்பதால் அந்த யோசனையை கைவிட்டு டேட் ஸ்டாம்பைக் கைப்பற்றி வந்திருக்கும் தபால்களுக்கு அதி விரைவில் ஸ்டாம்படிப்பது போல ஆனந்தனுக்கு புறமுதுகு காட்டி நின்று விட்டான்.
“பிழைச்சுப் போகட்டும்.. விடுடா ஆனந்தா..” சுகுமாறன் சிபாரிசு செய்து அன்பழகனின் வயிற்றில் டீ வார்த்தான்.
“அப்படிங்கறே..? அதுவும் சரிதான்… இன்னைக்கு இதுபோதும்.. நீ சொல்ல வந்த ஒன்னைச் சொல்லு..”
“இந்த ஊரில எங்க சொந்தக்காரங்க இருக்காங்க.. அவங்கதான் ஊர்ப் பண்ணையாரு குடும்பம்.. பெரிய வீட்டுக்காரங்க.. வசதி வாய்ப்பா வீடு கட்டியிருக்கிறவங்க.. அவங்க வீட்டுக்கு எதிரிலே விருந்தாளிக அதிகமா வந்தா தங்க வைக்கிறதுக்காக வீடு ஒன்னைக் கட்டிப் போட்டிருந்தாங்க..”
“யு மீன் கெஸ்ட் ஹவுஸ்..?”
“அப்படியும் சொல்லிக்கலாம்.. இவங்களுக்கு அந்த பாசையெல்லாம் புரியாது.. எடுத்தவுடனே எனக்கு இந்த ஊரில போஸ்டிங் போட்டுட்டதால எங்கப்பா பண்ணையாருக்குப் போன் போட்டு விவரத்தைச் சொன்னாரு.. மாமாவும் அதுக்கென்ன.. என் மருமகன் எங்க புது வீட்டிலேயே இருந்துக்கட்டும்ன்னு சொல்லிட்டாரு..”
“மாமாவா..?”
“பண்ணையாரைத்தான் மாமான்னு சொன்னேன்டா.. அவரு எனக்கு மாமா முறைதான்..”
சுகுமாறனின் கண்களின் பிரகாசத்திற்கான காரணம் என்னவென்று அப்போது தெரியவில்லை ஆனந்தனுக்கு.. பின்னால் தெரிந்த பொழுதில் அவன் மனதில் இனம் புரியாத வேதனை மண்டியது..
“மாமா வீட்டுக்கு எதிரேயிருக்கிற புது வீட்டிலதான் நான் இருக்கேன்.. வீடு பெரிசு.. கீழே ரெண்டு ரூம்.. மாடியில ரெண்டு ரூம்ன்னு விசாலமா இருக்கும்.. என்னதான் ஸ்கூல் நேரம் போக மீதி நேரத்தில மாமா வீட்டில பேசிக்கிட்டு இருந்தாலும் தூங்கறதுக்கு இந்த வீட்டுக்குத்தானே வந்தாகனும்..?”
சுகுமாறன் விட்ட அனல் பெருமூச்சில் புருவங்களை உயர்த்தினான் ஆனந்தன்.. அதில் அவனுக்கென்ன பெருந்துயரம் என்று ஆனந்தனுக்கு விளங்கவில்லை.. டேட் ஸ்டாம்பை அடித்துக் கொண்டிருந்த அன்பழகனின் இதழ்களில் நெளிந்த மர்மப் புன்னகைக்கும் அர்த்தம் தெரியவில்லை..
“அதையேண்டா என்கிட்டச் சொல்ற..? வேணும்னா இங்கே வந்து என்கூடத் தூங்கேன்.. எனக்கும் துணையா இருக்கும்..”
அக்கறையான ஆனந்தனின் யோசனையில் அன்பழகன் சிரித்து வைத்தான்.. சுகுமாறன் முறைத்து வைத்தான்.
“ஐயோ பாவம்ன்னு உன்னை ஆபிசில தங்காம தப்பிக்க வைக்கப் பார்த்தா நீ என்னையுமா இதில இழுத்து விடப் பாக்கிற..?”
“என்னதாண்டா சொல்ல வர்ற..?”
“நீயும் என்கூட வந்து தங்கிக்கலாம்ன்னு சொல்ல வர்றேன்.. மெஜாரிட்டி டைம் நான் என்னோட மாமா வீட்டிலதான் இருப்பேன்.. தூங்க மட்டும்தான் வீட்டுக்கு வருவேன்.. நீ வந்தேன்னா வீட்டுக்கு காவலாச்சு..”
சுகுமாறன் அழைத்த லட்சணத்தில் ஆனந்தன் நொந்துபோய் விட்டான்.. அன்பழகனின் கள்ளச்சிரிப்பில் போடா நீயும் வேண்டாம் உன் வீடும் வேண்டாம் என்று சுகுமாறனின் கோரிக்கையை மறுத்து விடலாமென்ற வேகம் அவனுக்குள் எழத்தான் செய்தது.. அரசரில்லாத அரசபட்டினத்தில் சுகுமாறன் குடியிருக்கும் வீட்டை விட்டால் வேறு வசதியான வீடு அகப்படாது என்ற ஒரேயொரு காரணத்தினால் கோரிக்கையை ஏற்றுக் கொண்டான்.
இப்படியாகத்தான் அரசபட்டினத்தில் காலடி பதித்த சுபயோக சுபதினத்திலேயே சுகுமாறனின் வீட்டில் ஐக்கியமாகி விட்டான் ஆனந்தன்.. கைவசம் கொண்டு வந்திருந்த ஒற்றை பெட்டியும் தோளில் தொங்கிய லெதர் பேக்குமாக வீட்டுக்குள் பிரவேசித்தவனிடம் எடுத்த எடுப்பிலேயே கறராக சொல்லி விட்டான் சுகுமாறன்..
“பாருடா ஆனந்தா.. நட்பு வேற.. சொந்தம் வேற..”
இதை எதற்காக அவனிடம் சொல்கிறான் என்று புரியாமல் தலையாட்டி வைத்தான் ஆனந்தன்..
ஆரண்யத்தில் சீதைக்கு லட்சுமணன் போட்ட கோட்டைப் போல ஆனந்தனுக்கும் அந்த வீட்டில் ஒரு கோட்டை போட்டு வைத்தான் சுகுமாறன்..
நேர்மைக்குப் பெயர் பெற்ற ஆனந்தன் ஒருபோதும் அந்தக் கோட்டைத் தாண்ட முனைந்ததில்லை..
Reviews — Anantha Geetham / ஆனந்த கீதம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.