Chapter 04
“வீட்டில கிரௌவுண்ட் புளோரில ரெண்டு ரூம் இருக்கு… எதில வேணும்னாலும் நீ தங்கிக்கலாம்.. பட்.. மாடிப் பக்கம் வரக்கூடாது.. அது என்னோட பிரைவசியைப் பாதிக்கும்..”
“இவ்வளவுதானா.. நான் என்னவோ ஏதோன்னு நினைச்சுட்டேன்..”
இலகுவாக ஆனந்தன் சிரித்ததில் சுகுமாறனின் மனம் உறுத்தியது.. கள்ளமில்லாத நண்பனின் மனதை பதட்டப் படுத்தி விட்ட குற்ற உணர்வுடன்..
“ஐ ஆம் ஸாரி ஆனந்தா..” என்றான்..
“விடுடா.. இதைப் போயி பெரிசா பேசிக்கிட்டு..”
“இன்னொன்னும் இருக்குடா..”
“இன்னுமா..? அதையும் சொல்லு.. கேட்டுக்கறேன்..”
“என்னதான் எனக்கு மாமா முறைன்னாலும் அவர் ஊர்ப் பண்ணையார்.. அவர் குடும்பத்துக்குன்னு சில பழக்க வழக்கங்களும் கட்டுப்பாடுகளும் உண்டு..”
“இருக்கட்டுமே.. அவர் வீட்டில இருக்கிற கட்டுப்பாடுகளைப் பத்தி என்கிட்ட ஏண்டா சொல்ற..?”
“இல்லேடா ஆனந்தா.. எங்க மாமா வீட்டுக்குள்ள வெளியாளுகள அனுமதிக்க மாட்டாங்க..”
“அதுக்கு..?”
சுகுமாறன் என்னதான் சொல்ல வருகிறான் என்று புரியாமல் விழித்தான் ஆனந்தன்.. இப்படியா ஒருத்தன் அறிமுகமில்லாத ஊரில் ஆதரவுக்கரம் நீட்டி அழைத்துக் கொண்டு வந்து என்னவென்னவோ பேசி வைப்பான்..?
“நான் தினமும் மாமா வீட்டுக்குப் போய் வருவேன் ஆனந்தா..”
சுகுமாறன் மென்று விழுங்கியதில் மின்னல் வெட்டியதைப் போல அவன் சொல்ல வருவதை புரிந்து கொண்டான் ஆனந்தன்..
“அதாவது.. உன் மாமா வீட்டுக்கு உன்கூட ஒட்டுப் புல்லைப் போல ஒட்டிக்கிட்டு நானும் வரக் கூடாதுன்னு சொல்ல வர்ற..?”
“அஃதே..” பிரகாசமானான் சுகுமாறன்..
“அடிச்சேன்னா பாரு.. பழகினவங்க கூடப் பேசவே எனக்கு நேரமில்லை… இதில உங்க மாமா வீட்டிலதான் உறவு கொண்டாடனும்னு அலைந்துக்கிட்டிருக்கேன்.. போவியா.. போஸ்ட் ஆபிஸ் வேலையிலே முழி பிதுங்குது.. காலையில வர்ற மெயில் பையை வெட்டறதுல ஆரம்பிக்கிற வேலை.. சாயந்திரமா மெயில்பையைக் கட்டி அனுப்பின பின்னாலும் முடிந்து வைக்காது.. கம்யூட்டர் கூட மல்லுக்கட்டிக்கிட்டு உட்கார்ந்திருக்கனும்.. ஆபிஸ் முடிஞ்சு வீட்டுக்கு வர்றவன் அக்கடான்னு கட்டையைச் சாய்க்கனும்னு நினைப்பேனா.. இல்லை.. உன்மாமா வீட்டுக்கு வந்து வாய் பார்க்கனும்னு நினைப்பேனா..?”
“நீ நினைச்சாலும் அங்கெல்லாம் வர முடியாதுடா ஆனந்தா..”
கர்வத்துடன் ஒலித்தது சுகுமாறனின் குரல்.. அவனுக்கு மட்டுமான அரியாசனத்தை உறுதிபடுத்திய அந்தக் குரலில் இவன் எதற்காக இப்படி அலைபாய்கிறான் என்று யோசித்தான் ஆனந்தன்.. எந்த திரவியத்தை தக்க வைத்துக் கொள்ளத் துடிக்கிறான்..?
“நான் நினைக்க மாட்டேன்.. போதுமா..?”
ஆனந்தனின் உத்திரவாதத்தில் அடங்கிப் போனான் சுகுமாறன்.. நீண்ட ஹாலும் முன்பக்கம் போர்டிகோவுமாக அழகான பங்களா போல இருந்தது வீடு.. போர்டிகோவின் பக்கத்தில் இருந்த தோட்டத்தில் பூச்செடிகள் இருந்தன.. தண்ணீர் இல்லாமல் வறண்டு வாடித் தெரிந்தன.. ஆனந்தன் கேட்டபோது..
“அதுக்கெல்லாம் ஏதுடா நேரம்..? மாமா வீட்டுக்குப் போனா திரும்பி வர ராத்திரியாகும்..” என்றான் சுகுமாறன்..
அவனது ‘மாமா வீடு..’ பகுமானத்தைக் கேட்கப் பிடிக்காமல் விட்டு விட்டான் ஆனந்தன்.. ஹாலை ஒட்டிய படுக்கையறையில் தெருவைப் பார்த்தபடி இருந்த பெரிய அறையை தேர்ந்தெடுத்து அங்கிருந்த கட்டிலில் பெட்டியையும் பையையும் வைத்தான்.. சுவரின் மர அலமாரியும் அதன் நடுவில் அமைக்கப்பட்டிருந்த ஆளுயுயரக் கண்ணாடியும் அரச பட்டினத்திற்குப் பொருத்தமில்லாமல் இருந்தன.
“பணம் இருந்தா காடு கூட நகரம்தான்..” என்றான் சுகுமாறன்..
“நிஜம்தான்..” ஆமோதித்தான் ஆனந்தன்..
குளியலறை ஹீட்டர் பொருத்தப்பட்டு நட்சத்திர ஹோட்டலின் அனைத்து அடையாளங்களுடன் இருந்தது.. அப்பேற்பட்ட வீட்டில் தனக்கொரு வசதியான அறை கிடைத்திருப்பதை நம்ப முடியாமல் பிரமித்துத்தான் போனான் ஆனந்தன்..
“இது மட்டுமா.. மாடியைப் பாத்தா அசந்து போயிருவ..”
வாய் விட்டு விட்ட சுகுமாறன் எங்கே அதைப் பார்ப்போம் என்று நண்பன் மாடிப்பக்கம் வந்து விடுவானோ என்ற பயத்தில் பாதியிலேயே பேச்சை நிறுத்தி விட்டான்..
“அசந்து போகக்கூட அங்கே நான் வரமாட்டேன்..”
ஆனந்தன் அறிவித்த பின்புதான் சுகுமாறனுக்கு சுவாசமே சீரானது..
பூஜையறையில் தெய்வத் திருவுருவங்களின் படங்கள் இருந்தன.. சமையலறையில் கேஸ் ஸ்டவ்வும் பாத்திரங்களும் இருந்தன..
“மளிகை ஜாமானும் காய்கறிகளும் வாங்கினா சமைச்சுச் சாப்பிடலாம்தான்.. பட்.. மெஜாரிட்டி டயத்தில நான் மாமா வீட்டில சாப்பிட்டிருவேன்.. மத்த நேரங்களில மெஸ் இருக்கு..”
வாயைத் திறந்தால் ஏதாவது ஒரு வகையில் அவன் மாமன் வீட்டில் சீராடும் புராணத்தைப் பாடாமல் இருக்க மாட்டான் என்பதை கண்டு கொண்டிருந்த ஆனந்தன்.
“எனக்கு மெஸ் சாப்பாடு சரி வராது.. வீட்டிலேயே சமைச்சுக்கறேன்..” என்றான்..
“உனக்கு மட்டும் செஞ்சுக்க.. எனக்கு..”
“மாமா வீடு இருக்கு..”
சுகுமாறன் ஆரம்பித்து வைத்ததை முடித்து வைத்த ஆனந்தன் பெட்டியைத் திறந்து உடைகளை எடுத்து சுவர் அலமாரியில் அடுக்க ஆரம்பித்தான்..
“சரிடா.. நான் மாடிக்குப் போறேன்..”
ஆனந்தனைக் கொண்டு வந்து வீட்டில் சேர்ப்பித்ததோடு வேலை முடிந்து விட்டது என்பதைப் போல மாடிப் படிகளில் தாவி விட்டான் சுகுமாறன்.
கைலியை எடுத்துக் கொண்டு குளியலறையில் புகுந்த ஆனந்தன் இதமான வெள்நீரில் அலுப்பு நீங்க குளித்து விட்டு கைலியும் டி சர்ட்டுமாக சமையலறைக்குள் புகுந்தான்.. அங்கே இருக்கும் பொருள்களை கணக்கில் எடுத்துக் கொண்டு மேற்கொண்டு தேவையான பொருள்களை ஒரு லிஸ்டில் எழுதிப் பாக்கெட்டில் வைத்துக் கொண்டவன் கைலியை மடித்துக் கட்டியபடி வாசல் படிகளில் இறங்கி போர்டிகோவில் நின்றான்.. தோட்டத்தை ஒட்டியிருந்த குழாயின் பக்கத்தில் ரப்பர் பைப் இருந்தது..
‘அடப்பாவி..! இதை குழாயில் மாட்டி ஐஞ்சு நிமிசம் செடிகளுக்கு பக்கத்தில காட்டினா வேருக்கு நீர் பாய்ஞ்சிருக்குமே.. இதுக்காடா நேரமில்லை..?’
மனதுக்குள் சுகுமாறனைத் திட்டியபடி குழாயில் ரப்பர் பைப்பை பொருத்தி திருகி விட்டவன் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச ஆரம்பித்தான்.
“எந்த ஊரு..?”
தேனினும் இனிய பெண்குரல் அவன் காதுகளில் பாய்ந்ததில் அனிச்சையாக நிமிர்ந்து பார்த்தான்.. பார்த்தவனின் விழிகள் விரிந்தன.. அரசபட்டினத்தைப் போன்ற ஊரில் அவளைப் போன்ற அதிரூப சுந்தரியை சத்தியமாக அவன் எதிர் பார்த்திருக்கவில்லை..
என்னதான் இலுப்பைப்பூவை எதிர்பார்த்த ஊரில் சர்க்கரை ஆலையையே பார்த்து விட்டிருந்தாலும் பட்டிக்காட்டான் மிட்டாயைப் பார்த்த தினுசில் அவன் ‘ஆ’வென்று வாய் பிளக்க அவளைப் பார்த்திருக்கக் கூடாதுதான்..
அவள் மிடுக்காக விரல் சொடுக்கி..
“என்..ன்..ன்..ன..?” என்றாள்..
ஒன்றுமில்லை இளவரசி என்று வாய் வரை வார்த்தை வந்து தொலைத்து விட்டது.. நல்ல வேளையாக அதை சடன் பிரேக் போட்டு தொண்டைக் குழிக்குள் தேக்கி நிறுத்தி விட்டான் ஆனந்தன்.
கந்தர்வக் கன்னிகை போல தென்பட்டவளை பார்த்தபடி பேசுவதில் அவனுக்குச் சில சங்கடங்கள் இருந்தன.. கொடி போல உயரமாக இருந்தவளின் வாளிப்பில் அவன் கண்கள் சறுக்கு மரம் போல வழுக்கி வைத்து சோதித்தன.. அழகான வளைக்கரத்தைக் குவித்து அவள் ‘என்ன..?’ என்று மிரட்டியதில் அவன் இதழ்கள் ஜொள் விட்டு செடிகளுக்கு நீர்பாய்ச்ச யத்தனித்தன.. தோகை போல நீண்டிருந்த கூந்தலைப் பின்னலிட்டு அதைக் கையில் பிடித்து அவள் சுழற்றிய சுழலில் அவன் பார்வையும் சிக்கி சுழன்று வைத்தது..
‘என்னடா இது ஆனந்தனுக்கு வந்த சோதனை..!’
அவன் வலுக்கட்டாயமாக பிரம்ம பிரயத்தனங்களை மேற்கொண்டு அவளிடமிருந்து பார்வையைத் திருப்பி பூச்செடிகளைப் பார்த்தபடி நீர் பாய்ச்சுவதை தொடர்ந்தான்..
“திமிரா..?”
‘அது உனக்கல்லவா வரவேண்டும் கண்மணி..!’
“எந்த ஊருன்னு கேட்டேன்..”
‘நீ பிறந்திருக்கும் இவ்வூரில் பிறக்கவில்லையே.. என் செய்வேன்..?’
“பேச வராதா..?”
‘ஏன் வராது..? உன் முன் வார்த்தைக் கடல் வற்றிப் போனதே.. வாய் திறந்தால் காற்றுத்தான் வரும் போல உள்ளதே..’
“ஊமையா..?”
‘உன் முன் நான் ஊமைதான்..’
அவள் கேட்கக் கேட்க இவன் மனதிற்குள் மைண்ட் வாய்ஸில் மத்தளம் வாசித்துக் கொண்டிருந்தான்.. அவள் சுவாதீனமாக காம்பவுண்டின் கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே வந்தாள்.. அவனை ஏற இறங்க பார்த்தவளின் விழிகளில் வியப்பு வந்தது..
‘ஏனாம்..?’ அவளை ஓரக் கண்ணால் பார்த்தபடி தனக்குள் வினவிக் கொண்டான் ஆனந்தன்..
“பாத்தா படிச்சவனைப் போல இருக்கிற.. கொஞ்ச வயசு வேற.. இந்த செடிகளுக்கு தண்ணி ஊத்தற வேலைதான் உனக்குக் கிடைச்சதா..? வாத்தி கஞ்சமாச்சே.. ஒரு பைசாவ ஈயனும்னாக் கூட ஓராயிரம் தடவ யோசிப்பாரே..”
அவள் சுகுமாறனை கணித்துச் சொன்னதில் அவனுக்கு சிரிப்பு வந்தது..
Reviews — Anantha Geetham / ஆனந்த கீதம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.