Chapter 07
“காபி குடிடா..”
இயல்பாக தம்ளரை எடுத்துக் காபியை ஊற்றினான் ஆனந்தன்.. உள்ளே வந்த சுகுமாறன் சமையலறை மேடையில் தாவி ஏறி அமர்ந்தபடி காபித் தம்ளரை எடுத்துக் கொண்டான்.. எதிர்வீட்டுப் பெண்ணிடம் ஆனந்தன் தோட்டக்காரனில்லை, தனது நண்பன்தான் என்ற விவரத்தைச் சொல்லாமல் தாமதித்ததிற்கு சமாதானம் சொல்வான் என்று எதிர்பார்த்தான் ஆனந்தன்.. அப்படியொரு சம்பவமே நிகழாததைப் போல இலகுவாக வேறு பேச்சுக்களை பேச ஆரம்பித்து விட்டான் சுகுமாறன்..
“பரவாயில்லையே.. காபி படு டேஸ்டா இருக்கே.. இனிக் காபிக்காக டீக்கடையைத் தேடிப் போக வேணாம்ன்னு சொல்லு..”
வக்கணையான சுகுமாறனின் பேச்சில் ஏதோ ஒரு நையாண்டி ஒளிந்திருப்பதைப் போல ஆனந்தனுக்குத் தோன்றியது.. ஆமாண்டா உனக்குக் காபி போட்டுக் கொடுக்கத்தான் நான் அரசப் பட்டினத்துக்கு வந்திருக்கேன் என்று சொல்ல வந்ததை தொண்டைக் குழியிலேயே நிறுத்திக் கொண்டான்..
‘அப்போ என்னடான்னா இவன் மாமன் பொண்ணு முன்னாலே தோட்டக்காரனாக்கினான்.. இப்பச் சமையல் காரனாக்கறான்..’
இதை இப்படியே விட்டுவிடக் கூடாது என்று ஆனந்தனுக்குத் தோன்றியது.. துளிர்க்கும் போதே கிள்ளி எறிந்து விட வேண்டும்.. அரசபட்டினத்தில் குடியிருக்கத் தோதான வீடு கிடைக்காவிட்டால் ஆபிஸிலேயே தங்கிக் கொள்ள வேண்டியதுதான்.. ஆபிசிற்கும் காவலாச்சு.. அதை விட்டுவிட்டு தோதான இருப்பிடத்திற்காக தன் சுயமரியாதையை அடகு வைப்பதா..?
“காபி போடறது ஒன்னும் பிரம்ம சூத்திரம் இல்லை சுகுமார்.. தண்ணி விடாம பாலைக் காய்ச்சி தேவையான அளவு சர்க்கரையையும் இன்ஸ்டண்ட் காபிப் பொடியையும் கலந்தா படு டேஸ்ட்டான காபி ரெடி.. இதைச் செய்யாம இத்தனைநாளா டீக்கடை பெஞ்சை எதுக்காக தேய்த்துக்கிட்டு இருந்த..?”
சுகுமாறனின் நையாண்டியைப் புரிந்து கொள்ளாமல் இயல்பாக சொல்வதைப் போல சொல்லி வைத்தான் ஆனந்தன்.. சுகுமாறனின் முகம் கருத்தது.. அவனுக்கு ஆனந்தனின் குணம் தெரியும்.. எதற்காகவும் சுயமரியாதையை விட்டுக் கொடுக்க மாட்டான்.. எத்தனை நுணுக்கமான மறைமுக நையாண்டியையும் வெகு எளிதாக இனம் கண்டு விடுவான்..
‘இவன் இத்தனை புத்திசாலியாக இருந்து தொலைக்கக் கூடாது..’ மனம் புழுங்கினான் சுகுமாறன்..
அவனுக்கு அந்த வீட்டில் ஒரு பிரச்னை இருந்தது.. ஊர்ப் பண்ணையாரும் அவன் ‘மாமா’ என்று உறவு கொண்டாடும் பெருந்தனக்காரருமான நீலகண்டனின் அம்மா அந்தப் புது வீட்டில்தான் இருந்தாள்.. என்றும், வயோதிகம் மற்றும் தள்ளாமையினால் அந்த வீட்டில் படுத்திருக்கும் போது உறக்கத்திலேயே இறந்து விட்டாள் என்றும் அவன் அந்த வீட்டிற்கு குடி வந்து இரண்டு மாதங்கள் ஆனபின்னால் செவிவழிச் செய்தியாக அவன் காதிற்கு வந்து சேர்ந்தது..
அன்று முதல் அந்த வீட்டில் தனியாகத் தங்குவதற்கு அவன் அஞ்சி நடுங்கினான்.. விடிந்தவுடனே வெளியே ஒடி விடுவேன் பள்ளி முடிந்த பின்னாலும் அங்கே இங்கேயென்று சுற்றி விட்டு தூங்குவதற்காகத்தான் வீட்டிற்குள் நுழைவான்..
இரவானால் தூக்கம் கொள்வது உலக ஜீவராசிகளின் வழக்கம்தான்.. அதற்கு சுகுமாறனும் விதிவிலக்கில்லைதான்.. ஆனால் தூக்கம்தான் அவனை அண்ட மறுத்ததே.. ஒரு பொட்டு உறக்கமில்லாமல் கொட்டக் கொட்ட விழித்தபடி ராப்பொழுதைக் கடப்பான்.. இரவில் கேட்கும் சிறிய சந்தடிக்கும் அவன் உள்ளம் பதறும்..
தரைத்தளத்தில் இருந்த ஹாலில் படுத்திருக்கும் போதுதான் அந்தப் பாட்டி உயிரை விட்டாள் என்பதால் இவன் மாடியிலேயே பதுங்கிக் கொண்டான்.. தேவையில்லாமல் கீழே வரமாட்டான்.. வாசலுக்குப் போக மாடிப்படிகளில் இறங்கி ஹாலைக் கடந்துதான் போக வேண்டும் என்பதால் வேறு வழியின்றி ‘பதக், பதக்’ கென்று மனம் பதற திகிலோடு ஹாலைக் கடப்பான்..
அவனுக்கு மட்டும் துணிவிருந்தால் மாடி பால்கனியிலிருந்து தோட்டத்தில் குதித்து வெளியே சென்று வரப் பழகியிருப்பான்.. அப்படி தோட்டத்தில் குதிக்கும்போது கால், கைகளுக்கு சேதாரம் ஏற்பட்டு விட்டால் என்ன செய்வது என்ற பயத்தால் துணிவை துணை கொள்ளாமல் சமர்த்தாக மாடிப்படி வழியாக ஹாலில் இறங்கி வாசலுக்குச் செல்வதை வழக்கப்படுத்தியிருந்தான்..
இரவில் உறக்கமில்லாமல் பள்ளியில் பாடம் நடத்தப் போனால் பாடமா வரும்..? உறக்கம்தான் வரும்.. அந்த உறக்கத்தை விரட்ட அடிக்கடி டீக்குடிப்பவன் டீக்கடை பெஞ்சின் நிரந்தர உறுப்பினராகி விட்டான்..
இவனுக்கிருக்கும் இந்த நூதன பிரச்னையைப் பற்றி எவரிடமும் மூச்சு விடவில்லை.. அரசபட்டினத்தின் அம்சம் அப்படிப்பட்டது..
‘அந்த வீட்டில கொஞ்சம் பயமாயிருக்குப்பா..’ என்ற ஒற்றை வரியை அவன் சொல்லி விட்டால்.. அடுத்த நொடியிலேயே அது வான்வெளியில் கலந்து எந்தப் பண்பலையின் உதவிகளும் இல்லாமலே பல்கிப் பெருகி.. அரசப்பட்டினத்தில் மட்டுமல்லாமல் அதன் சுற்று வட்டார ஒட்டு மொத்த கிராமங்களுக்கும் பரவிப் பறந்து..
‘வாத்தயார பேயடிச்சு அவரு ரத்தம் கக்கி செத்துப் போயிட்டாராம்டா.. தினமும் பேய் வந்து அவரை பயமுறுத்துமாம்.. இவரு கைலியில ஒன்னுக்குப் போயி நனைச்சிருவாராம்.. பயந்த மனுசன் எதுக்கு இந்த ஊருக்கு வேலைக்கு வந்தாரு..?’ என்று பேச்சுக் கிளம்பி விடும்..
சுகுமாறன் பாடம் நடத்த வந்தால்..
‘டேய்.. பேயடிச்சு செத்த வாத்தியாரு பேயா நடந்து வர்றாருடோய்..’ என்று பள்ளியிலிருக்கும் மாணவ, மாணவிகள் பயந்து ஓடி விடும் அபாயமும் நேர்ந்து விடும்..
இவற்றைக்கூட சுகுமாறன் தாங்கிக் கொள்வான்.. கிழவியைப் பற்றிய பயத்தில் அவன் இரவுகளில் கைலியை நனைத்து விட்டதாக கிளம்பி விடும் கதையை கீதா செவி மடுத்து விட்டால் தாங்கிக் கொள்வானா..?
அவனால் அதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது என்பதினால் அவன் தினமும் செத்துப் பிழைத்தாலும் சரி.. மனதிலிருக்கும் பயத்தை வெளியில் சொல்லி விடவே கூடாது என்று உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இரண்டு வருடமாக பேயோட்டிக் கொண்டிருந்தான்..
இப்படி உயிர்பயத்தோடு பேயிருப்பதாக அவன் நம்பும் வீட்டில் காலத்தைக் கழிப்பதற்கான காரணம் அரசப்பட்டினத்தின பெருங்கொண்ட செல்வந்தர் பெற்ற அதிரூப சுந்தரியான கீதாதான்..
“அடேய் மகனே..! கவர்ண்ட்மெண்ட் வேலைங்கிற பேருதான்.. குடியிருக்க சொந்த வீடு மட்டும்தான் மிச்சம்.. மத்ததெல்லாம் கையைப் பிடி, மென்னையைப் பிடிங்கிற கணக்குத்தான்.. இப்படி இழுத்துப் பிடிச்சு செலவளிக்கிற பிழைப்பு என்னோட போகனும்.. உன் தலைமுறையில அள்ள அள்ளக் குறையாத பணக்காரனா நீ வாழனும்.. என்னால முடிஞ்சதெல்லாம் உனக்கு ஒரு படிப்பைக் கொடுத்து உன் தங்கையைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்ததுதான்.. இனிப் புத்தியோட நீதான் பிழைத்துக்கனும்.. நீ வேலை பார்க்கப் போற அரசபட்டினத்து பண்ணையாரு உன் அம்மாவுக்கு சுற்றி வளைச்ச சொந்தம்.. அவருக்குப் போனைப் போடறேன்.. அவரு வீட்டில நீ தங்கி வேலையைப் பாரு..” என்று சுகுமாறனின் தந்தையான மணிமாறன் சொன்ன போது..
“என்னது..? அந்தப் பட்டிக்காட்டில நான் தங்கியிருக்கிறதா..? அதுக்கு வேற ஆளைப் பாருங்க.. போஸ்டிங் போட்டுட்டதால அங்கே ஜாயின் பண்ணப் போறேன்.. பக்கத்து டவுனில ரூம் பார்த்து இருந்துக்கிட்டு ரெண்டே மாதத்தில நம்ம ஊர்ப்பக்கம் டிரான்ஸ்பர் வாங்கிக்கிட்டு வந்துருவேன்.. அந்தப் பட்டிக்காட்டில யாரு வேலை பார்க்கிறதாம்..?” என்றுதான் சிலுப்பினான் சுகுமாறன்..
“அறைஞ்சேன்னா பாரு..” என்று மணிமாறன் சீறிய போதுதான் ஏதோ விவரமிருப்பதை உணர்ந்தான்..
“உனக்குத் தானாவாடா அரச பட்டினத்தில போஸ்டிங் கிடைச்சது..? யாராரையோ பிடிச்சு.. அங்கேயிங்கே அலைஞ்சு.. நாய் படாத பாடுபட்டு அந்த ஊரில போஸ்டிங் போட வைச்சேன்.. எதுக்காக..?”
“எதுக்காகப்பா இப்படியொரு கொடுமையைப் பண்ணினீங்க..?”
“புத்தி கெட்டவனே..!”
“யாருப்பா..?”
“வேற யாரு..? எல்லாம் நீதான்.. வாத்தியாரு வேலை கிடைச்சிட்டா நீ புத்திசாலியா ஆகிருவியா..? பொழைக்கத் தெரியாதவன் புத்தி கெட்டவன்தான்.. எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்கப் பாரு..”
“இப்ப என்னத்துக்காக இப்படித் தாளிக்கறீங்க..?”
“அந்த அரசபட்டினத்து பண்ணையாருக்கு ஒரு மகளும், மகனும் இருக்காங்க.. பொண்ணுதான் மூத்தது.. மூக்கும் முழியுமா அழகா இருக்கும்..”
மணிமாறன் சொல்லச் சொல்ல அப்போதுதான் அவர் எங்கே வருகிறார் என்று புரிந்து கொண்டான் சுகுமாறன்..
“என்ன படிச்சிருக்காம்..?”
“படிப்பாடா முக்கியம்..? பண்ணையாரு தன் பொண்ணு பேரில பக்கத்து டவுனில ஐஞ்சாறு வீடு வாங்கிப் போட்டிருக்காரு.. அதுதாண்டா முக்கியம்.. பொண்ணுக்கு அறநூறு பவுன் நகை போடுவாராம்.. வைர நகைகள் தனியாம்.. ரொக்கமா
கோடிக் கணக்கில பணத்தைக் கொடுப்பாராம்.. காராம்.. நிலமாம்.. இன்னும் என்னென்னவோ சொல்றாங்கடா.. இம்புட்டுச் செல்வத்தோட இருக்கிற பொண்ணை நாம கேட்டா கட்டிக் கொடுத்துருவாங்களா..?”
“அதெப்படிக் கொடுப்பாங்க..?”
“அதுக்குத்தான் அரச பட்டினத்துப் பள்ளிக்கூடத்தில போஸ்டிங் போட வைச்சேன்.. இப்பன்னா குடியிருக்க வீடில்லைன்னு நீ அவங்க வீட்டில தங்கலாம்.. சொந்தக்காரனா குடும்பத்தோடு பேசிப் பழகலாம்.. அந்தப் பொண்ணு மனசில இடம் பிடிக்கலாம்.. அவங்களுக்கு இவனை விட நல்ல மாப்பிள்ளை நம்ம பொண்ணுக்கு கிடைக்க மாட்டான்னு தோண வைச்சிரலாம்..”
“ஐடியாப்பா..”
இப்படி ஐடியா பண்ணி சுற்றி வளைத்த சொந்தத்தை நெருங்கின சொந்தம் போல உருவகப்படுத்தி அரசபட்டினத்து பண்ணையாரின் வீட்டில் ஐக்கியமாகும் திட்டத்தோடு வந்த சுகுமாறனை தனது அம்மா மண்டையைப் போட்ட புதுவீட்டில் குடியிருக்க வைத்து சோதித்து வைத்தார் பண்ணையார்..! மெல்லவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் தவித்துக் கொண்டிருந்த சுகுமாறனுக்கு துணைக்கு இருக்க என்று அகப்பட்டபன் தான் ஆனந்தன்..
Reviews — Anantha Geetham / ஆனந்த கீதம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.