Chapter 10
மெயில் பேக்கை வெட்டிப் பறத்திக் கொண்டிருந்தான் அன்பழகன்.. முதல் நாளைய வேலைகளின் டெய்லி அக்கவுண்டை சரிபார்த்து அதற்கான வவுச்சர்களுடன் கட்டி வைத்து விட்டு நிமிர்ந்த ஆனந்தனின் முன்னால் அன்றைக்கு வந்திருந்த அக்கவுண்ட் பேக்கை வெட்டி வைத்தான்.. பிரான்ச் ஆபிஸ்களுக்குப் போக வேண்டிய தபால்களை பிரித்துப் போட்ட ஆனந்தன் அவற்றுக்கான பைகளைக் கட்டச் சொன்னான்.. சைக்கிள் பெல்லை அடித்தபடி வந்த சிலுவூர், பெருவூரின் ஈ.டி.டி.ஏக்கள் இருவரும் சற்று நேரம் வாய் வளர்த்து விட்டுப் பைகளைத் தூக்கிக் கொண்டு பறந்தார்கள்.. மூச்சு விடநேரம் கிடைத்ததும் சுழல் நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்து சுழன்று திரும்பிய ஆனந்தன்..
“டீ குடிக்கலாமா அன்பு..?” என்று கேட்டான்..
“குடிச்சாத்தான் வேலை நடக்கும் சார்..” என்ற அன்பழகன் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு டீக்கடைப் பக்கம் தலைமறைவானான்..
வீட்டில் டீ போட்டு பிளாஸ்க்கில் நிரப்பிக் கொண்டு வரத்தான் நினைத்தான் ஆனந்தன்.. அதை செயல்படுத்துவதற்கு பலத்த எதிர்ப்பைத் தெரிவித்து விட்டான் அன்பழகன்..
“ஆயிரம்தான் சொல்லுங்க சார்.. டீக்கடை பெஞ்சில உட்கார்ந்து நாலு பேரை வம்பிழுத்து.. ஊருநடப்பு, நாட்டு நடப்பப் பத்திப் புறணி பேசிக்கிட்டே டீயைக் குடிக்கிறதில கிடைக்கிற சுகம் நீங்க கொண்டு வர்ற பிளாஸ்க்கில இருக்கிற டீயைக் குடிக்கிறப்பக் கிடைச்சிருமா..? அந்த சுகமே தனி சார்..”
விழிகள் செறுகப் பேசுபவன் டீயைப் பற்றித்தான் பேசுகிறான் என்று சொன்னால் சின்னக் குழந்தைகூட நம்பாது.. அந்த ரீதியில் பேசி வைத்தான் அன்பழகன்..
இப்படிச் சொக்குகிறவனை பிளாஸ்க் டீயில் அடைப்பது உத்தமமல்ல என்று தண்ணீர் தெளித்து டீக்கடைப் பக்கம் பற்றி விட்டு விட்டான் ஆனந்தன்..
காலை வேலைகள் முடிந்து ஆசுவாசமாகும் பதினொரு மணியளவில் டீக்கடைப் பக்கம் தாவா விட்டால் அன்பழகனுக்கு தலையே வெடித்து விடும்.
“டீ குடிச்சுட்டு வர்றேன் சார்..” என்று போகிறவன் ஒரு மணி நேரம் கழித்துத்தான் திரும்பி வருவான்..
வரும் போது ஒரு கையில் ஆனந்தனுக்கான டீயையும் வாய் நிறைய ஊர் நடப்பைப் பற்றிய செய்திகளையும் சுமந்து வருவான்.. ஆனந்தன் கேட்கிறானோ இல்லையோ.. அன்பழகனின் வாய் ஓயாமல் பேசிக் கொண்டேயிருக்கும்..
‘இவனுக்கு வாய் வலிக்காதா..?’
சந்தேகம் வந்தாலும் ஆனந்தன் அதைக் கேட்க மாட்டான்.. அளப்பறை பண்ணுவதைப் போலத் தோன்றினாலும் அன்பழகன் ஒரு சிறந்த விசுவாசி.. ஆனந்தனின் மீது ஆழ்ந்த அன்பு கொண்டவன்.. அதை வெகு சீக்கிரத்தில் புரிந்து கொண்டுவிட்ட ஆனந்தன் அன்பழகனுடன் இணக்கமான நட்பைப் பூண்டு விட்டான்..
எல்லாம் நான்தான் என்று சிலும்பும் அன்பழகனின் உழைப்பு அளவு கடந்தது.. இதுதான் என் வேலை என்று அளந்து வேலை பார்க்காமல் ஆத்மார்த்தமாக வேலை பார்க்கும் தபால்துறை ஊழியன் அவன்.. ஆனந்தனுக்கு ஆச்சரியமாக இருக்கும்.. இங்கு பார்க்கும் வேலையை வேறு எங்கு பார்த்தாலும் நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய்க்கு குறையாமல் சம்பாதிக்கலாமே என்ற எண்ணம் தோன்றும்.. கட்டிடத்துறையிலிருந்து, பிளம்பர், எலக்ட்ரீசியன் என்று தொழில் தெரிந்த அத்தனை பேரும் வேலைக்கேற்ற ஊதியம் வாங்கிக் கொண்டிருக்க.. ஐந்து மணி நேரம்தான் என்று வரையறுக்கப்பட்ட வேலை நேரத்தைப் பற்றிப் பேச்சே எடுக்காமல் ஆபிஸ் திறப்பதிலிருந்து மூடுவதுவரை அயராமல் உழைக்கும் ஈ.டி.டி ஏக்களுக்கு என்ன கிடைக்கிறது..? ஐயா போஸ்ட் ஆபிசில வேலை செய்கிறாரு என்ற பெருமை மட்டும்தான் கிடைக்கிறது..
பணி பாதுகாப்பு, பென்சன் என்ற எதுவுமின்றி தபால் துறையின் அஸ்திவாரமாக உழைக்கும் அடிமட்ட ஊழியர்கள்தான் கிராமப்புறங்களில் தபால் துறையின் சேவையை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.. அவர்களைப் பற்றி நினைத்துக் கூடப் பார்க்காமல் கோடிக் கணக்கில் பணத்தைக் கொட்டி கம்யூட்டர்களை இறக்குமதி செய்து துறையை நவின மயம்போல காட்ட முனைந்து கொண்டிருக்கிறது தபால் துறை..!
நிரந்தரப் படுத்தப் படாத வேலையில் இருக்கிற நினைவின்றி வாய் நிறைய சிரிப்பும் பேச்சுமாக அலுவலகத்திற்கு உயிர்ப்பூட்டிக் கொண்டிருப்பது ஈ.டி.டி.ஏ ஊழியர்கள்தான்..
“வாத்தியாரு என்ன சொல்றார் சார்..?”
ஆனந்தனின் முன்னால் டீத்தம்ளரை வைத்து விட்டு அலுவலகத்தின் மூலையில் கிடந்த கோணிப்பைகளை மடித்து வைத்தபடி கேட்டான் அன்பழகன்.
“என்னத்தைச் சொல்றான்.. தினமும் சொன்னதையேதான் திருப்பித் திருப்பிச் சொல்றான்…” டீயைக் குடித்தபடி அசுவராஸ்யமாக சொன்னான் ஆனந்தன்..
சுகுமாறன் அப்படித்தான் சொல்லிக் கொண்டிருந்தான்.. எங்கே ஆரம்பித்தாலும் அவனுடைய பேச்சு அங்கே சுற்றி.. இங்கே சுற்றி.. அவன் கீதாவை மணக்க வேண்டியவன் என்பதில்தான் வந்து முடியும்..
“எங்க ஊர்ப்பக்கம் போஸ்டிங் வாங்கிக்காம இந்த அரச பட்டினத்தில நான் குப்பை கொட்டறதுக்கான ஒரே காரணம் கீதாதான் ஆனந்தா.. அவதான் எனக்குன்னு சின்ன வயசில இருந்து சொல்லிச் சொல்லி வளர்த்துட்டாங்க..”
“இதைப் பத்தி நீ ஒரு தடவை கூடச் சொன்னதே இல்லையேடா..”
ஆனந்தன் யதார்த்தமாகத்தான் கேட்டு வைத்தான்.. சுகுமாறனின் முகம் கருத்து விட்டது.. பதில் சொல்ல வார்த்தைகளைத் தேடினான்.. இவன் எதற்காக இந்தப் பாடு படுகிறான் என்று யோசித்தான் ஆனந்தன். அவன் கேட்ட கேள்வி என்ன அத்தனை கடினமாகவா இருக்கிறது..?
“இது பெர்சனல் ஆனந்தா.. மத்தவங்ககிட்ட ஷேர் பண்ணிக்கிற விசயமில்லை..”
இதைச் சொல்லவா இத்தனை நேரம் யோசித்தாய் என்று கேட்க வாயெடுத்துத் தொலைகிறான் என்று விட்டு விட்டான் ஆனந்தன்..
“இப்போ மட்டும் ஏண்டா ஷேர் பண்ணிக்கிற..? இப்பவும் இது உன்னுடைய பெர்சனல்தானே..?”
“இப்ப நிலைமையே வேறடா.. சொல்லித்தானே ஆகனும்..?”
“அப்படி என்னத்தடா நிலைமையைக் கண்டுட்ட..?”
“நீயோ இளம் வயசு..”
“ஆமாண்டா.. நான் இளவயசு..! நீ கிழவன்..! ஹா.. ஹா..”
ஆனந்தன் சிரித்தான்.. சுகுமாறன் அவனின் சிரிப்பில் கலந்து கொள்ளவில்லை.. ஆனந்தனின் நகைச்சுவையை ரசிக்காத முகபாவத்தோடு..
“நீ இளவயசா இருக்கறப்ப நான் மட்டும் கிழவனா கிருவேனா..?” என்று ஒரு தினுசான குரலில் வினவினான்.
“என்னடா நீ..? விளையாட்டுக்குப் பேசினதை வினயமா எடுத்துக்கற..?”
“விளையாட்டுக்கும் ஒரு அளவிருக்கனும்..”
“ஆகட்டும்டா.. நீயே அளந்து ஒரு கோட்டைப் போட்டுரு..”
“ஆனந்தா..”
“என்னடா..”
“இது விளையாட்டில்லை.. என் வாழ்க்கை..”
“அடிங்..! இப்ப என்ன அலுவலுக்கு இம்புட்டு சீரியஸா முகத்தை வைச்சுக்கிட்டு டயலாக் பேசற..?”
“கீதா சின்னப் பொண்ணு.. கட்டிக்கப் போகிறவன் எதிர் வீட்டில இருக்கேன்னு இங்கேயே பார்த்துக்கிட்டு இருக்கும்.. என்னைப் பார்க்கிற அந்தப் பார்வையை உன்னைப் பார்க்கிறதா நீ நினைச்சுரக் கூடாது..”
“டேய்..”
திகைத்து விட்டான் ஆனந்தன்.. அதுவரை சுகுமாறன் எதையோ பேசுகிறான் என்று நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு என்னவோ போல ஆகிவிட்டது..
‘இப்படியா தேங்காயை உடைத்ததைப் போலச் சொல்லி வைப்பான்..?’
“உன்னை நம்புவேன் ஆனந்தா.. உன் வயசை நம்ப மாட்டேன்.. கீதாவைப் போல அழகான பொண்ணு பேச வந்தா பேசத்தான் உனக்குத் தோணும்.. அப்படித் தோணறப்ப என்னை நீ நினைச்சுக்கடா.. என் பாட்டிக்கு என் மாமா கொடுத்திருக்கிற வாக்கை நினைச்சுக்க.. கீதாவுக்காக இந்தப் பட்டிக்காட்டில நான் குப்பை கொட்டிக்கிட்டு இருக்கிறதை நினைச்சுக்க.. பேச நினைக்கிற எதையும் நீ பேச மாட்ட..”
“டேய்.. சும்மா பினாத்தாம தூக்கம் வந்தா போய் தூங்கு..”
“இல்லேடா ஆனந்தா.. நான் என்ன சொல்ல வர்றேன்னா..”
“எதையும் சொல்ல வேணாம்.. சொன்ன வரைக்கும் போதும்.. கேட்டுக்க சுகுமாறா.. நான் அரசபட்டினத்துக்கு வேலை பார்க்கத்தான் வந்திருக்கேன்.. வேற எதுக்கும் வரலை..”
ஆனந்தனின் ஆழ்ந்த கோபத்தில் வாயடைத்துப் போனவனாகத் தூங்கப் போய் விடுவான் சுகுமாறன்.. மறுநாள் பேசும் போது முதல்நாள் சொன்னதில்தான் வந்து நிற்பான்..
“அவ சின்னப் பொண்ணுடா.. பெரியவங்களோட வாக்குப் பத்திப் புரியாத வயசு.. என் மாமா மானஸ்தர்.. கொடுத்த வாக்கைக் காப்பாத்த முடியலைன்னா உயிரை விட்டிருவார்..”
“அதுக்கு என்னை என்னடா செய்யச் சொல்ற..? வேலையை ரிசைன் பண்ணிட்டு ஊரைப் பாத்துப் போகச் சொல்றியா..?”
“ஆனந்தா..”
“பின்னே என்னடா..? கூட இருக்கலாம் வான்னு கூப்பிட்டுக்கிட்டு வந்துட்டு இந்தப் பாடு படுத்தறயே.. இதுக்கு நான் ஆபிசிலேயே தங்கி இருந்திருக்கலாம்..”
“ஐயையோ.. என்னை இந்த வீட்டில தனியா விட்டுட்டுப் போறேன்ங்கறியா..? வேண்டாம்டா ஆனந்தா..”
“எனக்கென்னவோ உன்கூட நான் இருக்கறது சரிவராதுன்னு தோணுது..”
“எல்லாம் சரிவரும்.. நீ மட்டும் கீதாவைக் கண்டுக்காம இருந்துக்கனும்.. அவ பேச வந்தாலும் பேசக் கூடாது..”
“அது கஷ்டம்.. பொதுவாப் பேசினாப் பேசுவேன்.. தனிப்பட்ட முறையில எந்தப் பேச்சையும் பேச மாட்டேன்.. போதுமா..?”
தன்னையும் அறியாமல் வாக்குக் கொடுத்து விட்டான் ஆனந்தன்.. எதற்காக அப்படியொரு வாக்கைக் கொடுத்தான் என்று அவன் மறுகும் நாளும் வரும் என்று அவன் கண்டானா என்ன..?
Reviews — Anantha Geetham / ஆனந்த கீதம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.