Chapter 11
“சொல்கிறதையே திரும்பத் திரும்பச் சொல்றாரா..?”
சுவராஸ்யமாகிப் போனான் அன்பழகன்.. எப்படித்தான் இப்படி ஒவ்வொரு நாளையும் சுவராஸ்ய மானதாக ஆக்கிக் கொள்கிறானோ என்ற வியப்பு வந்தது ஆனந்தனுக்கு..
அன்பழகனுக்கு மட்டுமா அந்த நாள் சுவராஸ்யமானதாக மாறுகிறது..? ஆனந்தனுக்கும் சேர்த்து அல்லவா மாறுகிறது..!
‘இவன் மட்டும் இல்லைன்னா இந்த அரசபட்டினத்தில எனக்கு மூச்சு முட்டியிருக்கும்..’ நன்றியுடன் நினைத்துக் கொண்டான் ஆனந்தன்..
“என்னத்தைச் சொல்வாரு..? பண்ணையாரு அவரோட மாமன்.. பண்ணையாரு மக அவருக்கு மாமன் மக.. அதைக் கட்டிக்கிற சொந்தம் இவருக்கு மட்டும்தான் இருக்குன்னு அளந்திருப்பாரு..”
சுவாதீனமாக அன்பழகன் சொன்னதில் ஆனந்தனுக்கு தூக்கி வாரிப் போட்டது..
“என்னப்பா பக்கத்தில நின்னு கேட்டதைப் போலச் சொல்ற..?” ஆச்சரியமானான்..
“உங்ககிட்ட மட்டுமில்ல சார்… இந்த ஊருப்பூராவும் அப்படித்தான் சொல்லிக்கிட்டு இருக்காரு… நீங்களாவது பரவாயில்லை… இந்த ஒரு மாசமாத்தான் இந்த இம்சையை அனுபவிக்கிறிங்க… இந்த ஊருக்காரங்க பாவம்.. ரெண்டு வருசமா இதே இம்சைதான்னா பாத்துக்கங்களேன்.. மனுசன், நம்ம காதில ரத்தம் வழிஞ்சாலும் பேச்சை நிப்பாட்ட மாட்டாரு.. அளந்துக்கிட்டே இருப்பாரு..”
லெட்டர் பாக்சைத் திறந்து எடுத்துக் கொண்டு வந்து கொட்டியிருந்த கடிதங்களை அடுக்கியபடியே சொன்னான் அன்பழகன்..
‘இருந்தாலும் இருக்கும்..’
தனது ஒரு மாத அனுபவத்தின் அவஸ்தையில் நினைத்துக் கொண்டான் ஆனந்தன்..
“நட்ட நடுராத்திரியில டீக்கடையை மூடிட்டுத் தூங்கறவனைத் தட்டி எழுப்பி புரோட்டா கேப்பாரு.. ஐயோ பாவம்ன்னு கண்ணைக் கசக்கிக்கிட்டு எழுந்திருச்சு.. மீந்திருக்கிற புரோட்டாவக் கொடுத்துப் பாலையும் காச்சிக் கொடுத்தா, தின்னுட்டுத் தூங்கப் போகாம என் மாமா வீட்டில கோழியடிச்சு குழம்பு வைச்சுப் போட்டாங்க.. பலமா வெட்டினேன்.. அப்படிச் சாட்பிட்டும் இப்பப் போய் பசிக்குது.. மாமாவுக்குத் தெரிஞ்சா போதும்.. அத்தையை எழுப்பி முட்டைக் குழம்பு செய்யச் சொல்லி இலையைப் போட்டிருவாரு.. நான்தான் வேணாம்ன்னு உன்னை எழுப்பி புரோட்டா சாப்பிட்டுட்டுப் போகலாம்ன்னு வந்தேன்னு டீக்கடைக்காரனைத் தூங்க விடாம ரம்பம் போடுவாரு..”
அடுக்கிய கடிதங்களில் டேட் ஸ்டாம்பை அடித்தபடி அன்பழகன் விவரித்த தினுசில்..
“ஹா.. ஹா..” என்று சிரித்து விட்டான் ஆனந்தன்..
“இதில ஒரு கூத்து என்னன்னா.. நம்மாளு கோழியடிச்சு குழம்பு சாப்பிட்டக் கதையைச் சொன்ன நாளு.. முழு அம்மாவாசை நாளு..” அன்பழகன் மர்மமாக இமைகளைச் சிமிட்ட..
“அதுக்கென்னப்பா..?” என்று கேட்டான் ஆனந்தன்..
“அம்மா, அப்பா இல்லாத பண்ணையாரு அம்மாவாசை விரதம் இருக்கிறவரு.. அன்னைக்குப் போயி கோழியடிச்சு குழம்பு வைக்கச் சொல்வாரா..?”
அன்பழகன் கேட்டபோதுதான் ஆனந்தனுக்கு விவரமே புரிந்தது..
“அடப்பாவி..! புளுகினானா..?”
“ஆமாம் சார்… அரசபட்டினத்து ஆளுகளுக்கும் அம்மாவாசைக்கும் இருக்கிற சம்பந்தம் புரியாம இவன் புளுகின புளுகல் இந்த சுத்து வட்டாரம் முழுக்கப் பரவிருச்சு.. அதுக்கப்புறமா இவருக்கு.. ‘கோழிக் குழம்பு..’ன்னு பட்டப் பேரே கொடுத்துட்டாங்கன்னா பாருங்களேன்..”
“அது இவனுக்குத் தெரியுமா..?”
“தெரியாம இருக்குமா..? தெரிஞ்சதைப் போலக் காட்டிக்க மாட்டாரு..”
“கில்லாடிதான்..”
“வெறும் கில்லாடியில்ல.. ஜெகஜாலக் கில்லாடி சார்..”
“ஹா.. ஹா..”
சிரித்துக் கொண்டே கம்யூட்டரின் கீபோர்டைத் தட்டி வேலையைப் பார்க்க ஆரம்பித்தான் ஆனந்தன்..
“என்ன அன்பு.. இது போஸ்ட் ஆபிசா இல்ல கிளப்பா..? சிரிப்பு கொடி கட்டிப் பறக்குது..?”
தேனினும் இனிய பெண் குரலின் கிண்டலில்..
‘எவ அவ..?’ என்று நிமிர்ந்து பார்த்த ஆனந்தனுக்கு வாயடைத்துப் போனது..
அங்கே பாவாடை தாவணியில் அழகுச் சிலையாக நின்றிருந்தாள் கீதா.. அவளது துளைக்கும் பார்வை ஆனந்தனைத் துளைத்துச் சங்கடப் படுத்தியது..
‘இவ என்ன இப்படிப் பார்க்கிறா..?’ பதிலுக்குப் பார்க்க முடியாமல் தவித்துப் போனான் அவன்..
அது என்னவோ கீதாவைப் பார்க்கும் போதெல்லாம் அவன் மனதில் ஆயிரம் வயலின்களின் இசை மொத்தமாக கேட்டுத் தொலைத்தது.. அவளுக்கும் சுகுமாறனுக்கும் இடையில் இருக்கும் பந்தம் நினைவுக்கு வர மறுத்தது..
‘ஊஹீம்.. இது வேலைக்கு ஆகாது..’ வலுக்கட்டாயமாக பார்வையைத் திருப்பிக் கொண்டான்..
ஆனந்தனின் மௌனத்தில் யோசனையான அன்பழகன் கடிதங்களை அம்போ என்று விட்டு விட்டு ஆனந்தனின் பக்கம் வந்து ஒரு ஸ்டூலை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தான்..
“போஸ்ட் ஆபிசுக்காரங்களும் மனுசங்கதாம்மா.. நாங்க சிரிக்கக் கூடாதுன்னு சட்டம் ஏதும் இருக்கா..?”
“அதுசரி.. எல்லாத்துக்கும் சட்டம் பேசிருவீங்களே..”
“இல்லைன்னா ஏமாந்த சோணகிரி போஸ்ட் ஆபிசுக்காரன்தான்னு இழுத்து வைச்சு தலையில மிளகாயை அரைச்சுருவீங்களே..”
சரிக்குச் சரியாக அன்பழகன் கொடுத்த பதிலடியில் ஆனந்தனின் இதழோரம் சிரிப்பு மலர்ந்தது.. அதை ஓரக் கண்ணால் பார்த்த கீதா..
“அடியாள் வைச்சிருக்கிற ஆளுகளைப் பத்திக் கேள்விப் பட்டிருக்கேன்.. பதில் பேசறதுக்குன்னே ஒரு ஆளை ரெடி பண்ணி வைச்சிருக்கிற ஆளை இப்போத்தான் பாக்கிறேன்..” என்றாள்..
அவள் சொல்வது ஆனந்தனைத்தான் என்று அன்பழகனுக்கு அப்பட்டமாகப் புரிந்தது.. ஆனந்தனோ அது புரியாதவனைப் போல முகத்தை வைத்துக் கொண்டு கம்யூட்டரே கண்ணாக இருந்தான்..
‘இந்த மனுசன் ஜகா வாங்கற ஆளில்லையே..’ தாடையைத் தடவினான் அன்பழகன்..
ஏதேனும் ஒர் பதில் வார்த்தையை உதிர்த்து விடுவானா என்று கீதா ஆர்வமாக பார்த்து வைத்தாள்.. ஆனந்தன் அசையவே இல்லை.. ஏமாற்றத்துடன் அன்பழகனைப் பார்த்து..
“இப்படித்தான் மக்கள்கிட்ட ஊமை வேசம் போடுவீங்களா..? இருங்க.. உங்க போஸ்ட் மாஸ்டர் ஆபிசுக்கு வர்ற பப்ளிக்கை ஏன்னு கேக்கறதில்லைன்னு ஒரு கம்ப்ளெயிண்ட் எழுதிப் போடறேன்..” என்று முறைத்தாள்..
“எங்களை மிரட்டறதுக்கு கம்ப்ளெயிண்ட்டுன்னு ஒன்னைக் கண்டு பிடிச்சு வைச்சிருக்கீங்கம்மா.. உச்சி குளிர்ந்து போகுது.. வீட்டை மறந்து ஆபிசே கதின்னு உக்காந்திருக்கிற போஸ்ட் ஆபிஸ்காரங்களுக்கு மெடல் கொடுக்க வேணாம்.. இல்லாததையும் பொல்லாததையும் சொல்லிக் கம்ப்ளெயிண்ட் கொடுக்காம இருந்தாப் போதும்..” பதிலுக்கு முறைத்தான் அன்பழகன்..
“பேச்சுக்கொன்னும் குறைச்சலில்லை.. என்கூடச் சண்டைக்கு வர்றியே.. நான் வந்து இம்புட்டு நேரமாகுது.. என்ன வேணும்ன்னு ஒரு வார்த்தை கேட்டாரா உன் போஸ்ட் மாஸ்டர்..? அவரைக் கேட்க வேண்டியதுதானே..?”
“அம்புட்டுத்தானே.. இதோ கேக்கறேன்.. ஏன் சார்.. கீதாம்மா சொல்றதும் சரிதானே.. பப்ளிக் வந்தா என்ன ஏதுன்னு நீங்க கேக்க வேணாமா..?”
சடாரென்று கட்சி மாறினான் அன்பழகன்.. வேறு வழியில்லாமல் காதலியைப் பிரிவதைப் போலக் கம்யூட்டரிலிருந்து கண்களை விலக்கிய ஆனந்தன் கீதாவைப் பார்க்காமல் சுவரைப் பார்த்தபடி..
“என்ன வேணும்..?” என்று கேட்டான்..
சுவரிலிருந்த பல்லி ‘ச்ச்ச்.. ச்ச்ச்..’ என்று சப்தம் எழுப்பி வைத்தது..
“பல்லிக்கு என்ன வேணும்னு சொல்லுச்சாம் அன்பு…? கார்டு வேணுமா..? கவர் வேணுமா..?” சிரிக்காமல் கேட்டாள் கீதா..
“ஏன்சார் மானத்தை வாங்கறிங்க..?” சிரித்து விட்டான் அன்பழகன்..
“சாருக்கு பல்லி பாஷை அத்துபடி போல இருக்கு.. பப்ளிக்கிட்டப் பேசாம பல்லிகிட்ட பேச்சு வார்த்தை நடத்தறாரு..” குறும்பான கீதாவின் விழிகள் ஆனந்தனை மொய்த்தன..
அவள் இயல்பாகப் பேசியிருந்தால் ஆனந்தனும் இயல்பாக பேசியிருப்பான்.. அவள்தான் இயல்பாக பேசித் தொலைக்காமல் முறை மாப்பிள்ளையிடம் பேசித் தொலைப்பதைப் போல ஒரு மார்க்கமாகப் பார்த்தபடி கிண்டலும், கேலியுமாகப் பேசித் தொலைக்கிறாளே.. ஆனந்தன் என்ன செய்வான்..?
“எனக்கு ரெண்டில ஒன்னு தெரிஞ்சாகனும் அன்பு.. என்னை விட எந்த விதத்தில அந்தப் பல்லி உயர்த்தியானதாம்..? கேட்டுச் சொல்லு..” விடாமல் வம்பு வளர்த்தாள் கீதா..
“அவங்க கேக்கறதிலயும் நியாயம் இருக்கில்ல..? ஆனாலும் உங்களுக்கு இம்புட்டு ஓர வஞ்சனை கூடாது சார்.. பல்லி கிட்டப் பேசலாம்.. நம்ம ஊரு பண்ணையாரு மககிட்டப் பேசக் கூடாதா..?” இசைப் பாட்டு பாடினான் அன்பழகன்..
“யோவ்.. நீ வேற ஏத்தி விடாம சும்மா இருய்யா..” என்றான் ஆனந்தன்..
“ஐ..! நம்ம போஸ்ட் மாஸ்டரு பேசிட்டாரு.. இதுக்கு ஒரு விழா எடுத்தாகனுமே..” குதூகலப் பட்டுப் போனாள் கீதா..
அதற்கு மேலும் தாள மாட்டாமல் விழிகளை உயர்த்தி அவளை இமைக்காமல் பார்த்து வைத்தான் ஆனந்தன்.. அந்தப் பார்வையில் தடுமாறிப் போனாள் அந்தக் குறும்புக்காரி..!
Reviews — Anantha Geetham / ஆனந்த கீதம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.