Chapter 12

0Shares

“பார்வை ஒன்றே போதுமா..?

பல்லாயிரம் சொல் வேண்டுமா..”

மெதுவான குரலில் மேஜையில் விரல்களால் தாளம் போட்டபடி பாடினான் அன்பழகன்.. அந்தப் பாடலில் பார்வையை விலக்கிக் கொண்ட கீதா.. வேறு திக்கில் பார்த்தாள்.. ஆனந்தன் அன்பழகனைப் பார்த்து விட்டுக் கம்யூட்டரைப் பார்த்தான்..

‘தனிப்பட்ட முறையில் எந்தப் பேச்சையும் பேச மாட்டேன்னு தானே சுகுமாறனுக்கு வாக்குக் கொடுத்திருக்கேன்..? பார்க்க மாட்டேன்னு வாக்குக் கொடுக்கலையே..’

அவன் மனம் சொன்னது.. மறுபடியும் விழிகளை உயர்த்தி கீதாவைப் பார்த்தான்.. அவன் பார்வைக்காக காத்திருந்தவள் முகம் மலர்ந்து போனாள்.. ஆனந்தனுக்குச் சங்கடமாக இருந்தது.. இவள் சுகுமாறனுக்கு உரியவள் என்று உருப் போட்டுப் பார்த்தான்.. மனம் அடங்காத குதிரையாக விசும்பித் திமிறியது.. மனக்குதிரைக்கு கடிவாளமிட முடிந்த மனிதர் இவ்வுலகில் இல்லையெனும்போது ஆனந்தன் பாவம் என்ன செய்வான்..?

“என்ன வேணும்..?” மிருதுவாக கேட்டான்..

அவ்வளவு நேரமும் வாயடித்தவள் பேச்சிழந்த பதுமையாக..

“ஒரு இன்லெண்ட் லெட்டர் வேணும்..” என்று மெல்லிய குரலில் சொன்னாள்..

“இந்தாங்க..”

ஆனந்தன் நீட்டிய இன்லெண்ட் லெட்டரை வாங்கிக் கொண்டவளின் பார்வை மிட்டாய் தீர்ந்து விட்டக் குழந்தை போல, இவ்வளவுதானா என்ற ஏக்கத்துடன் பார்த்தது..

ஆனந்தனின் மனம் அசைந்தது.. அவனைத் தேடும் அந்தப் பார்வையைப் புறக்கணிக்க அவனால் முடியவில்லை.. ஆதுரத்துடன் அவளைப் பார்த்தான்.. அவளுக்கான பிரத்யேகப் பார்வையில் அவள் பூவாக மலர்ந்தாள்.. இதழ்கள் துடிக்க எதையோ பேச நினைத்து பேச முடியாதவளாக மறுகி நின்றாள்..

“ஆர்.டி. பணம் கட்டனும்.. சலான் தாங்க சார்..” 

போஸ்ட் ஆபிசில் கூட்டம் வரத் துவங்கி விட்டது.. சடுதியில் விரைந்து விட்டாள் கீதா.. போகும் போது அவனைத் திரும்பிப் பார்த்த அவளது பார்வையில் இருந்த புலப்படாத செய்தியில் புதைந்து போனான் ஆனந்தன்..

அவனிடம் என்ன சொல்ல விரும்புகிறாள் அவள்..?

வெகுநேரம் அவன் மனதைக் குடைந்து ஆட்டிப் படைத்தது அந்தக் கேள்வி..

கூட்டம் குறைந்த பின்.. யோசனையுடன் மௌனமாகி விட்டவனின் பக்கத்தில் வந்த அன்பழகன்..

“கீதாம்மாகிட்டப் பேச மாட்டேங்கறிங்களே.. ஏன் சார்..?” என்று கேட்டான்..

மிகச் சரியாக அவன் கணித்து விட்டதில் கொஞ்சமாக ஆசுவாசம் ஏற்பட்டது ஆனந்தனுக்கு.. ஒளிந்து விளையாடாமல் அன்பழகனிடம் உண்மையைப் பகிர்ந்து கொள்ளலாமே.. மனம் விட்டுப் பேச அன்பழகனை விட நம்பிக்கையான மனிதர் அரசபட்டினத்தில் ஆனந்தனுக்கு இல்லையே..

“எதுக்குப்பா வம்பு..?”

“இதில வம்பென்ன இருக்கு சார்..? நீங்களா அந்தம்மாவத் தேடிப் போயி பேசறிங்க..? அவங்கதானே உங்களைச் சுத்திச் சுத்தி வர்றாங்க..?”

“அன்பு..”

“எல்லாம் எனக்கும் தெரியும் சார்.. அவங்க தேடி வந்தாலும் நீங்க விலகிப் போறது ஏன்னுதான் தெரியலை..”

“ம்ப்ச்சு..! அந்தப் பொண்ணு சுகுமாரனோட மாமா பொண்ணுப்பா..”

ஆனந்தனின் மன வலியை அவனது கண்களில் கண்ட அன்பழகன்..

“அப்படிப் போகுதா கதை..?” என்றான்..

“என்னப்பா சொல்ற…?”

“கீதாம்மா சுகுமாறன் வாத்தியாரோட தூரத்துச் சொந்தக்காரப் பொண்ணுன்னு சொல்லுங்க.. கேட்டுக்கறேன்.. அதென்ன மாமா பொண்ணு..? ரெண்டு வருசத்தில இவரு மாமாவைக் கண்டு மாமன் பொண்ணச் சொந்தம் கொண்டாடறாரா..? இவங்க என்ன சுகுமாறன் சாரோட சொந்த தாய்மாமன் பொண்ணா..?”

“அவன் அப்படித்தான் சொல்றான்..”

“அவர் சொல்றதைப் பத்திச் சொல்லாதீங்க சார்.. வாயைத் திறந்தா பொய்தான்.. அம்மாவாசை விரதமிருக்கிற பண்ணையாரு வீட்டில அம்மாவாசையன்னைக்கு கோழியடிச்சு குழம்பு வைத்தாங்கன்னு புளுகற ஆளு.. அவர் சொல்றதையெல்லாம் கணக்கில எடுத்துக்கிட்டு மனசைப் போட்டு உழட்டிக்கறீங்களே..”

ஆனந்தனின் மன உளைச்சளை எளிதாக இனம் கண்டு ஆற்றி விட முனைந்த அன்பழகனின் அன்பில் மனம் நெகிழ்ந்தான் ஆனந்தன்.. 

என்ன மாதிரியான அன்பு இது..! அவன் யார்..? அன்பழகன் யார்..? அரசபட்டினத்திற்கு வரும் வரை அன்பழகனைப் பற்றி ஆனந்தன் அறிவானா..? 

எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் மழை பொழியும் கார்மேகத்திற்கு ஒப்பானவனல்லவா இவன்..!

அன்பழகனின் அன்பானது ஆனந்தனின் புண்பட்ட மனத்திற்கு மருந்திட்டுக் குணப்படுத்தும் வல்லமை கொண்டதாக இருந்தது..

“தேங்க்ஸ் அன்பு..” மனதார நன்றி சொன்னான் ஆனந்தன்..

“எதுக்கு சார்..?” அன்பழகன் திகைத்தான்..

எதற்கென்று சொல்வான் ஆனந்தன்..? லேசான புன்சிரிப்புடன் அவன் கம்யூட்டரில் கவனமாகி விட அன்பழகன் கடிதங்களைக் கவனிக்க எழுந்து போனான்.. மாலையில் வேலை முடிந்ததும் அலுவலகத்தை பூட்டி விட்டு வீட்டைப் பார்த்து நடந்த ஆனந்தனுடன் சைக்கிளை உருட்டியபடி பேசிக் கொண்டு வந்தான் அன்பழகன்..

“எங்க ஸ்கூலிலும் பியூன் இருக்கான் ம்ஹீம்..! எனக்கு மேலே பந்தா காட்டுவான்..”

அதற்கும் வயிறெரிவான் சுகுமாறான்.. ஆனந்தனின் காபிக் கடையில் அவனும் அங்கம் வகித்தாலும் ஒரு தம்ளரைக் கூட நகர்த்தி வைக்க மாட்டான்.. அதைச் சொல்லிக் காட்டி விடுவான் அன்பழகன்..

“ஏன் வாத்தியாரே..! உங்க கூடவும் குடித்தனம் பண்ணத் துணிச்சலா ஒப்புக்கிட்டு வந்திருக்கிற போஸ்ட் மாஸ்டருக்கு கூடமாட ஒத்தாசையா இருப்போம்ன்னு உங்களுக்குத் தோணவே தோணாதா..?”

முகத்தாட்சண்யம் பார்க்காமல் நேருக்கு நேராக கேட்டு விடும் அன்பழகனின் குணத்தை மனதுக்குள் திட்டித் தீர்ப்பான் சுகுமாறன்..

‘இவனே நெத்தியடியாய் பேசறவன்.. இவனுக்கு மேலே 

இந்த அன்பழகன் இருக்கானே… இவன் மறந்தாலும் எடுத்துக் கெடுக்கிறானே..’

“என்ன வாத்தியாரே.. பேச்சைக் காணோம்..”

“என்கூடத் தங்க வைச்சிருக்கிறதே பெரிய ஒத்தாசை அன்பு..! இதுக்கு மேலே நான் என்ன செய்ய..?”

வாயிருக்க மாட்டாமல் பேசி விட்டு.. நிமிர்ந்து பார்க்கும் ஆனந்தனின் ஆழ்ந்த பார்வையில் அரண்டு போய் விடுவான் சுகுமாறன்..

‘இவன் ரோசக்காரனாச்சே.. பெட்டியைக் கட்டிக்கிட்டு கிளம்பிப் போயிருவானோ..’

சுகுமாறனின் மிரட்சியை அவனது கண்களில் கண்டு விடும் ஆனந்தன் தலையில் அடித்துக் கொண்டு..

“உளராம காபியைக் குடிடா..” என்று அதட்டுவான்..

அதை வேடிக்கை பார்ப்பதில் அப்படியொரு இன்பம் அன்பழகனுக்கு.. சுவராஸ்யமாக வேடிக்கை பார்ப்பான்..

இப்படிப்பட்ட இதமான பொன்மாலைப் பொழுதுகள் அரசபட்டினத்தில் கிடைக்கத்தான் செய்தன..

“இந்த சிறுவூக்காரனக் கண்டிச்சு வையுங்க சார்..”

“ஏன்ப்பா..? அவன் என்ன செஞ்சான்..?”

“டீக்குக் காசு கொடுக்காம நம்ம தலையில கையை வைக்கிறான்..”

“ஹா.. ஹா.. விட்டுத் தள்ளுப்பா.. இதை ஒரு பஞ்சாயத்துன்னு பேச வந்திட்ட..”

பேசியபடியே வீடு இருந்த தெருவில் திரும்பிய ஆனந்தன் ஸ்பீடு பிரேக் போட்டதைப் போல தேங்கி நின்று விட்டான்..

“என்னாச்சு சார்..?” புரியாமல் கேட்ட அன்பழகன் வீடிருக்கும் திசையில் பார்த்தான்..

அங்கே பண்ணையார் வீட்டு வாசலை பதுமை போலப் பெருக்கிக் கொண்டிருந்தாள் கீதா..

‘விசயம் இதுதானா..?’

ஆனந்தன் அப்படியே திரும்பி விடலாமா என்று அபத்தமாக யோசித்து வைத்தான்.. அவன் அப்படிச் செய்தாலும் செய்து விடுவான் என்பதை யூகித்து விட்ட அன்பழகன்..

“சிரிப்புச் சிரிப்பா வருது சார்.. இந்தம்மாவப் பாக்கப் பயந்து ஊரை விட்டே ஓடிப் போயிருவீங்க போல இருக்கு..” என்றான்..

‘கண்டு புடிச்சிட்டானே..’ வேறு வழியில்லாமல் வீட்டைப் பார்த்து நடந்தான் ஆனந்தன்..

“ஆமாம்.. இதென்ன சார் புது வழக்கமா இருக்கு.. இந்தம்மா வாசலக் கூட்டிப் பெருக்குது.. இவுக வீட்டிலதான் வேலையாளுக குமிஞ்சு இருப்பாகளே..”

“தெரியல அன்பு.. கொஞ்ச நாளா இந்தக் கததான் நடக்குது..”

“அப்படிப் போடு அருவாளை..! காலையிலேயும் இதே கதைதானா..?”

“ம்ம்ம்.. நான் பால்வாங்க வாரப்ப கோலம் போட்டுக்கிட்டு இருக்கும்..”

“சாயங்காலம் நீங்க ஆபிஸ் முடிஞ்சு வாரப்ப கோலம் போட வருவாங்களாக்கும்..”

“இல்லேப்பா.. சாயங்காலமும் நான் பால் வாங்க வாரப்பதான் வாசல் தெளிச்சுக் கோலம் போடும்.. இன்னைக்கு என்னவோ முந்திருச்சு..”

“நீங்க பிந்திட்டிங்கன்னு சொல்லுங்க.. இந்த சிறுவூர்க்காரன் கணக்கத் தப்பாப் போட்டு பி.ஓ டெய்லி அக்கவுண்ட அனுப்பிச்சுத் தொலைச்சதில கணக்கு டேலியாகாம நேரமாகிருச்சுல்ல..?”

“இல்ல அன்பு.. நாம வீணாக் கற்பனையை வளர்த்துக்கக் கூடாது..”

“ஏனாம்..?”

ஆனந்தன் அதற்குச் சொன்ன பதிலில் இந்தச் சுகுமாறனை வீடு கட்டி அடித்தால் என்ன என்ற வெறி கிளம்பியது அன்பழகனுக்கு..

0Shares

Reviews — Anantha Geetham / ஆனந்த கீதம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link