Chapter 13
“இது சுகுமாறனைப் பார்க்கிறதுக் காகத்தான் கோலம் போட வாசலுக்கு வருதாம்..”
“அப்படின்னு யாரு சொன்னது..?”
“சுகுமாறன்தான் சொன்னான்.. அவன் மாடி பால்கனியில நின்னு வாசலைப் பார்ப்பானாம்.. இது வாசல் தெளிச்சுக் கோலம் போட்டுக்கிட்டே அவனைப் பார்க்குமாம்..”
“அப்படியே ராமாயணக் கதையை உல்ட்டா பண்ணிட்டாராக்கும்..? கேட்கிறவங்க இரக்கமானவுகளா இருந்தா கேழ்வரகில நெய் எடுத்தோம்ன்னுதான் சொல்லுவாக.. ஆனாலும் நீங்க அவரு பேச்சை ரொம்பத்தான் நம்பறீங்க சார்..”
“இதில் நம்பிக்கைக்கு வேலையில்லை அன்பு.. திடிர்ன்னு புதுசா காலையிலேயும், சாயந்திரமும் பால்கார கோனாரோட சைக்கிள் வார நேரத்துக்கு கீதா வாசல் தெளிச்சுக் கோலம் போட வருகிறதை அவன் கண்டுக்கிட்டிருக்கான்.. அதைத்தான் நாம புரிஞ்சுக்கனும்..”
மனதின் வலியை மறைக்க முயன்றபடி தெளிவான குரலில் ஆனந்தன் விளக்கிய போது சுகுமாறனின் மண்டையை உடைத்தால் என்ன என்ற கோபம் கொண்டான் அன்பழகன்.
“அதனால் அவரோட மாமன்மகள் உங்களைப் பார்க்க வரலை.. அவரைப் பார்க்க வருகிறாங்கன்னு உங்ககிட்ட கதை பிணைஞ்சாராக்கும்..?”
“அது கதையோ இல்லையோ.. கீதா அவனுக்குத்தான் உறவுக்காரப் பெண்… எனக்கில்லை.. இந்த வீட்டையும் அவனுக்குத்தான் அவங்க கொடுத்திருக்காங்க.. எனக்கில்லை.. ரெண்டு வருசமா இந்த ஊரில இந்த வீட்டில இருந்திருக்கான்.. அவனோட சிநேகிதனாத்தான் இந்த வீட்டுக்குள்ள நுழைஞ்சிருக்கேன்.. சிநேகிதன் துரோகியா மாறக் கூடாது அன்பு.. அது நியாயமில்லை..”
பொன்னே.. பூவே என்று வாசலைப் பெருக்கிக் கொண்டிருந்த கீதாவின் பக்கம் திரும்பாமல் வீட்டுக்குள் போக முனைந்தான் ஆனந்தன்.. அன்பழகனை நிமிர்ந்து பார்த்த கீதா.. ஆனந்தனை ஓரக் கண்ணால் பார்த்தபடி..
“ஆபிஸ் அப்பவே முடிஞ்சிருக்கனுமே அன்பு..?” என்றாள்..
“வேலை இப்பத்தானேம்மா முடிஞ்சது..” அன்பழகன் நின்று விட்டான்..
சும்மாவும் நிற்காமல் சுகுமாறன் குடியிருந்த வீட்டுக் காம்பவுண்டுக் கேட்டை மறைப்பதைப் போல சைக்கிளை குறுக்கே மறித்து நிறுத்தி நின்று விட்டதில் கேட்டைத் திறந்து உள்ளே போக முடியாமல் ஆனந்தனும் நின்று விட்டான்..
கீதாவுக்கு குதூகலமாக இருந்தது.. ஆனந்தன் பால்வாங்க வரும் போது பார்க்கும் நொடிநேரப் பார்வை போல இல்லாமல் நின்று நிதானமாக அவனைப் பார்த்தபடி பேச்சை வளர்க்க முடிந்ததில் சந்தோசப் பட்டுப் போனாள்..
“அது என்ன.. என்னைக்கும் இல்லாம இன்னைக்கு வேலை முடிய இம்புட்டு நேரமாச்சு..?”
என்னவோ கட்டிக் கொண்டவளைப் போல வாசலில் நிற்க வைத்து அவள் கேள்வி கேட்ட விதத்தில் ஆனந்தன் நிமிர்ந்து மின் வெட்டும் பார்வையொன்றைப் பார்த்து வைத்தான்.. அவள் விழிகள் மின்னின..
‘இந்தப் பெண் எதற்காக இப்படி உரிமை கொண்டாடுகிறது..?’
அவனுக்குத் துயரமாக இருந்தது.. பேசியபடியே தற்செயலாகப் பார்ப்பதைப் போல சுகுமாறனின் வீட்டுப் பால்கனியைப் பார்த்து வைத்த அன்பழகன் ஆனந்தனுக்கு ஜாடை காட்டினான்..
“டக்குன்னு பார்த்துராதீங்க சார்..” என்று தனிந்த குரலில் எச்சரிக்கவும் செய்தான்..
மெதுவாக தலை திருப்பிப் பார்த்த ஆனந்தனுக்குத் தூக்கி வாரிப் போட்டது.. அங்கே நின்றிருந்த சுகுமாறனின் முகம் பயங்கரமாக மாறியிருந்தது..
“சைக்கிளை நகர்த்து அன்பு.. நாம வேணும்னே நின்னு வாய் வளர்க்கறோம்ன்னு நினைச்சிரப் போறான்..” என்று கவலைப் பட்டான் ஆனந்தன்..
“சும்மா இருங்க சார்.. இந்தம்மா அவரைப் பாக்கத்தான் வாசல் தெளிச்சுக் கோலம் போட வருகிறாங்களாக்கும்..? உங்ககிட்டக் கதை சொன்னாருல்ல..? இப்ப முகத்தை எங்கே கொண்டு போய் வைச்சுக்குவாருன்னு நானும் பார்க்கறேன்..” கொதித்தான் அன்பழகன்..
தணிந்த குரலில் அவர்கள் வழக்கடித்துக் கொண்டிருப்பதை விசித்திரமாகப் பார்த்த கீதா..
“என்ன..? ரகசியம் பேசிக்கறிங்க..?” என்று கேட்டாள்..
“அது ஒன்னுமில்லேம்மா.. சும்மா..” என்றான் அன்பழகன்..
“அதை நீதான் சொல்லுவியா..? உங்க போஸ்ட் மாஸ்டர் சொல்ல மாட்டாரா… வாயைத் திறந்தா வைடூரியம் கொட்டிருமா..?” கிண்டலாக ஆனந்தனைப் பார்த்தாள்..
அவளது தைரியத்தில் வியப்படைந்தான் ஆனந்தன்.. அரசபட்டினத்தைப் போன்ற ஒரு கிராமப் பாங்கான ஊரில்… பண்ணையாரின் மகள்.. வேற்று முகம் பார்க்காமல் அவனிடம் சகஜமாக உரையாடுவதில் தர்மசங்கடமும் கொண்டான்..
“எங்க போஸ்ட் மாஸ்டர் தங்கமானவரும்மா.. நீதி நேர்மைக்கு கட்டுப்பட்டவரு.. இவரு வாயைத் திறந்தா வைடூரியம் தான் கொட்டும்.. வேற ஒரு சிலர் இருக்காங்க.. அவங்க வாயைத் திறந்தா புளுகு மூட்டைதான் கொட்டும்..”
பால்கனியில் நின்றிருந்த சுகுமாறனைப் பார்த்தபடி சொன்னான் அன்பழகன்.. புரிந்தும் புரியாமல் சிரித்து வைத்தாள் கீதா.. சிரிக்கும் போது மறக்காமல் ஆனந்தனைக் கள்ளப் பார்வை பார்த்தும் வைத்தாள்..
ஆனந்தனை ஊடுறிவிய அந்தப் பார்வையில் சிலிர்த்துப் போனான் அவன்.. பதிலுக்குப் பார்க்காமல் இருக்க முடியவில்லை அவனால்.. அவனது பதில் பார்வையை எதிர்பார்த்துக் காத்திருந்தவளின் பார்வை பரவசம் கொண்டதில் ஆழ்ந்து பார்த்து வைத்தான்..
“ஏன் அன்பு.. உங்க போஸ்ட் மாஸ்டர் கணக்கில கொஞ்சம் வீக்கோ..?” கீதாவின் பேச்சு முழுவதும் ஆனந்தனை மையமாக கொண்டே வெளிவந்தது..
“கணக்குப் பண்றதில வீக்குன்னு சொல்லுங்க.. கேட்டுக்கறேன்.. மனுசருக்கு அது சுட்டுப் போட்டாலும் வர மாட்டேங்குது.. கணக்கில வீக்குன்னு சொன்னாக் கேட்டுக்க மாட்டேன்.. இவரு கணக்கில சூரப்புலி..” அன்பழகன் ரோசப் பட்டான்..
“அதான் தெரியுதே..” விசமத்துடன் சொன்னாள் அவள்..
‘இவள் எதைத் தெரிந்து கொண்டிருக்கிறாள்..?’
சுகுமாறனை மறந்து அவளை ஒரு தினுசாக பார்த்து வைத்தான் ஆனந்தன்.. கீதாவின் முகம் சிவந்து விட்டது..
“எதைச் சொல்றிங்க..?” அன்பழகன் கேட்டான்..
“கணக்கில சூரப்புலிங்கறதைச் சொன்னேன்.. அப்படியாப்பட்ட சூரப்புலி காலாகாலத்தில ஆபிஸ் கணக்கை முடிக்காம எதுக்காக அல்லல் பட்டாராம்..?”
“இவரு மட்டும் கணக்கில சூரப்புலியா இருந்தாப் போதுமாம்மா..? சிறுவூர்காரனும் பெருவூர்காரனும் இருக்கனுமில்ல..? அவனுக கோக்கு மாக்காக் கணக்கைப் போட்டு விட்டா எங்க தலையில்ல வலிக்குது..? என்னத்தை பண்ணித் தொலைச்சிருக்கானுகன்னு ஒன்னொன்னாப் பார்த்துக் கண்டு பிடிச்சு சரி செஞ்சு கணக்கை முடிக்கிறதுக்குள்ள உன்பாடு என்பாடுன்னுல்ல ஆகிருது..?”
“அதுவும் சரிதான்..”
கீதா ஆமோதிப்பாய் தலையை ஆட்டிக் கொண்டிருந்த போது சுகுமாறன் வந்து விட்டான்.. அதற்கு மேலும் அவர்கள் மூவரும் பேசுவதை மாடிப் பால்கனியிலிருந்து பார்வையிட அவனால் முடியவில்லை.. பேய்க்கு பயந்து கீதாவைக் கோட்டை விட்டு விட்டானோ என்று அவனது மனச்சாட்சி குத்திக் குடைந்து கொண்டிருந்தது..
இரண்டு வருடமாக வீட்டை விட்டு வெளியே தலை காட்டாதவள் ஆனந்தனின் வரவுக்குப் பின்னால் அவன் பால் வாங்க வாசலுக்கு வரும் வரைக்கும் தன்வீட்டு வாசலைப் பெறுக்கித் தண்ணீர் தெளித்துக் கோலம் போட்டுக் கொண்டிருப்பதின் மர்மம் என்ன என்று அவனுக்குத் தெரியாமல் இல்லை.. அந்த உண்மையில் அவன் அதிர்ந்து போயிருந்தான்.. அவனிடம் முகம் பார்த்துப் பேசாமல் ஒரிரு வார்த்தைகளுடன் நகர்ந்து விடும் கீதா ஆனந்தனிடம் பேச ஆர்வம் காட்டியதில் பதைத்துப் போயிருந்தான்..
‘என் மாமன் வீடு..’ என்று வாய்க்கு வாய் அவன்தான் சொல்லிக் கொண்டிருந்தான்.. ஒருநாள் கூட ‘மருமகனே..’ என்றோ ‘மாப்பிள்ளை..’ என்றோ.. நீலகண்டனும், பார்வதியும் அவனை உறவு முறை சொல்லி அழைத்ததில்லை..
கீதாவின் தம்பியான நிரஞ்சன் கூட சுகுமாறனை ‘மாமா’ என்று அழைக்க மாட்டான்.. பூகோள வாத்தியார் என்றுதான் அழைப்பான்.. சுகுமாறன் வேலை பார்த்த பள்ளியில்தான் அவன் படித்து வந்தான்.. அவனை ‘மாமா’ என்று அழைக்க வைத்து விட வேண்டும் என்று எத்தனையோ பிரயத்தனங்களை மேற்கொண்டுத் தோற்றுப் போனான் சுகுமாறன்..
சுற்று வட்டாரத்தில் உள்ள பிள்ளைகள் எல்லாம் படிக்க வரும் அரசபட்டினத்து அரசு மேல்நிலைப் பள்ளியில் சுகுமாறனை நிரஞ்சன் மாமா என்று அழைக்கும் செய்தி பரவினால் அது சுற்று வட்டாரம் முழுதுவம் பரவும் அல்லவா..?
கெட்டிக்காரத்தனமாக யோசித்துத்தான் காய் நகர்த்தினான் சுகுமாறன்.. வாத்தியார் என்ற ஹோதாவைக் காட்டிப் பயமுறுத்தலாம் என்றுகூட நினைத்தான்.. அதற்கு வழியில்லாமல்..
“உங்களை மாமான்னு கூப்பிட்டா எங்கப்பா அடி பின்னியெடுத்திருவாரு சார்..” என்று நிரஞ்சன் அறிவுறுத்தியதில் அரண்டு போய் விட்டு விட்டான்..
“அடி பின்னியெடுத்திருவாரா..? யாரைடா..?”
“உங்களையில்லை சார்.. என்னைத்தான்..”
சுகுமாறனை பொடியன் ஆற்றுப்படுத்திய விதத்தில் அவனை அடி பின்னியெடுத்து விடலாமா என்று கொலை வெறியானான் சுகுமாறன்.. அப்படிச் செய்து விட்டுத் தப்பித்துப் போய்விட முடியாது என்பதினால் பல்லைக் கடித்துக் கொண்டு அமைதிகாத்தான்..
“உன்னையேண்டா அடிப்பாரு..?”
“பின்னே..? படிக்கிற பள்ளிக்கூடத்தில சொல்லித்தர்ற வாத்தியாரை மாமா முறை வைத்துக் கூப்பிட்டா பின்னிப் பெடலெடுத்திர மாட்டாரா..?”
“அவர் சொல்வாரோ இல்லையோ.. நீ திறமையாத்தான் பேசறடா.. பள்ளிக்கூடத்தை விடு.. வெளியில, வீட்டில நீ மாமான்னு கூப்பிட வேண்டியதுதானே..?”
“இதே பழக்கம்தான் பள்ளிக்கூடத்திலும் வரும்ன்னு அதுக்கும் அடிப்பார் சார்..”
கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாக இருந்தான் நிரஞ்சன்.. அவன்தான் அப்படியென்றால் சுகுமாறனின் தலையைக் கண்டாலே வீட்டுக்குள் மறைந்து கொள்வாள் கீதா.. அவன் கிளம்புகிற வரை அவனிருக்கும் பக்கமே வர மாட்டாள்.. வெட்கம் என்று அதற்குப் பெயர்சூட்ட முடியாமல் தலைமுடியைப் பிய்த்துக் கொள்வான் சுகுமாறன்.
Reviews — Anantha Geetham / ஆனந்த கீதம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.