Chapter 13
எறும்பு ஊறக் கல்லே தேயும் போது.. பீம்சிங் போன்ற கனிவான மனிதர் தேய மாட்டாரா..? மெல்ல.. மெல்ல.. தீப்தியின் அழகுக்கும், இளமைக்கும் அடிமையாகி விட்டார்… மாதமொரு முறை அனுராதாவைப் பார்க்க ஊட்டிக்கு வந்து போனவர் வருடத்திற்கு ஒருமுறை வந்து போக ஆரம்பித்தார்.. அனுராதாவின் விடுமுறை தினங்கள் சென்னையிலிருந்த அவளது தாய்வழிப் பாட்டி, தாத்தாவின் பராமரிப்பில் கழிந்தன.. இனியா பணக்காரக் குடும்பத்தில் ஒற்றைப் பெண்ணாகப் பிறந்தவள்.. தீப்தி அப்படியல்ல.. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து தனது படிப்பின் மூலம் கிடைத்த வேலையினால் மத்தியதர வாழ்க்கைக்கு மாறியவள்.. நாற்பத்தி
ஏழு வயதிலிருந்த பீம்சிங்கிற்கு அவள் இரண்டாவது மனைவியானதற்கான ஒரே காரணம்.. கோடிஸ்வர வாழ்க்கையை வாழ்ந்து பார்த்துவிட வேண்டும் என்பது மட்டுமே.. அதை மறைத்து பீம்சிங்கிடம் அவரது கம்பீரத்தில் மயங்கிப் போய் அவரை மணந்து கொள்ள விருப்பம் தெரிவித்ததாக பொய் சொல்லுவாள்.. கெட்டிக்கார பீம்சிங் அதை புரிந்தும் புரிந்து கொள்ளாததைப் போல இருந்து விடுவார்.. தீப்தியின் பொய்யை அவரும் விரும்பினார்.. கசப்பான உண்மைகளை ஏன் மனதில் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டும் என்பது அவர் கேள்வி..
கல்லூரிப் படிப்பைப் படிக்க அனுராதா அமெரிக்காவுக்கு வந்து விடட்டுமே என்று பீம்சிங் நினைத்தார்.. அதற்கான காரணமும் இருந்தது.. தீப்திக்கும் அவருக்கும் என்று குழந்தை பிறக்கவில்லை.. முதலிரண்டு வருடங்கள் உலகத்தைச் சுற்றுவதிலும்.. கோடிஸ்வர வாழ்க்கையின் அனைத்து வசதிகளையும் அனுபவித்து விட வேண்டும் என்பதிலும் ஆர்வம் காட்டிய தீப்தி.. பீம்சிங்கை அவளிடம் இழுத்துப் பிடித்து நிறுத்தி வைத்துக் கொள்ள அழகும், இளமையும் மட்டும் இருந்தால் போதாது என்பதை உணர்ந்து கொண்டாள்..
உலகம் முழுவதும் விரிந்து கிடக்கும் பீம்சிங்கின் தொழில் சாம்ராஜ்யத்திற்கான வாரிசு அவளல்ல.. அவரது முதல் மனைவியின் வயிற்றில் பிறந்த அனுராதாதான் என்பதை அறிய நேர்ந்தபோது அதிர்ந்து போனாள்.. அவளது உலகமே தலைகீழாய் மாறிப் போனது.. வெளிநாட்டில் வெளியாகும் பிஸினெஸ் மேகசீன் ஒன்றுக்கு பீம்சிங் பேட்டியளித்த போது அவரது மனைவியென்ற கர்வத்துடன் பக்கத்தில் நின்று போஸ் கொடுத்துக் கொண்டிருந்த தீப்தியின் காதுகளில் அமிலம் விழுந்தது..
“உங்களது தொழில்கள் எல்லாம் உங்களது முதல் மனைவியான இனியாவின் பெயரில் இயங்குவது ஏன்..?” ஆங்கில இதழின் பேட்டியாளர் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டார்..
“ஏனெனில்.. எனது தொழில்களுக்கான முதலீட்டை இனியாதான் கொடுத்தாள்.. அவளது பெற்றோரின் சொத்துக்களுக்கு அவள்தான் வாரிசு.. அவளை மணந்து கொண்டதன் மூலம் அவளது பணத்துக்கும் சொத்துக்களுக்கும் நான் உரிமையாளனாக ஆனேன்.. அவளது பணமும் சொத்துக்களும் எனது தொழில்களாக உருமாறின.. அதனால் அனைத்துத் தொழில்களையும் அவள் பெயரில் ஆரம்பித்தேன்..” தெளிவான ஆங்கிலத்தில் மிகத் தெளிவான பதிலைச் சொன்னார் பீம்சிங்..
“உங்கள் பெயரில் சொத்துக்களோ, தொழில்களோ இல்லையா..?”
“இருக்கின்றன.. என்பெயரில் சில சொத்துக்களும், தொழில்களும் உண்டு.. ஆனால் பெரும்பான்மையான தொழில்களும் சொத்துக்களும் இனியாவின் பெயரில்தான் இருக்கின்றன..”
பேட்டி முடிந்தது.. பேட்டி எடுத்தவர்கள் சென்று விட்டார்கள்.. தீப்தி அமைதியிழந்தாள்.. அதுநாள்வரை ஏன் அவள் இது குறித்து யோசிக்கவில்லை..? பீம்சிங்கின் தொழில் சாம்ராஜ்யம் அவர் பெயரில் இல்லை என்பதை ஏன் அவள் தெரிந்து கொள்ளாமல் போனாள்..? இதற்கா அவள் நாற்பத்தியேழு வயது மனிதருக்கு இரண்டாம் தாரமாக வாழ்க்கைப் பட்டாள்..?
புயல் வேகத்தில் செயல்பட்டாள் தீப்தி.. பீம்சிங்கின் தொழில்களில் எவையெவை அவர் பெயரில் இருக்கின்றன.. எவையெவை இனியாவின் பெயரில் இருக்கின்றன.. என்று ஆராய்ந்தாள்.. முக்கால்வாசி தொழில்களுக்கு மேல் இனியாவின் பெயரில் இருக்க.. கால்வாசிக்கும் குறைவான தொழில்கள்தான் பீம்சிங்கின் பெயரில் இருந்தன.. சொத்துக்களும் அப்படியே..
இனியாவின் பெயரில் இருக்கும் சொத்துக்களுக்கும் தொழில்களுக்கும் தீப்தி உரிமை கொண்டாட முடியாது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரிகின்ற ஒன்று… அவை இனியாவின் மகளான அனுராதாவிற்குத்தான் போய் சேரும்.. பீம்சிங்கின் சொத்துக்களாவது சிந்தாமல், சிதறாமல் தீப்திக்கு வந்து சேருமா என்றால் அதுவும் இல்லை.. அனுராதா மகள் என்ற முறையில் அவற்றிலும் பங்குக்கு வருவாள்..
ஆசை அறுபது நாள்.. மோகம் முப்பது நாள் என்பார்கள்.. இளமையின் வேகத்தில் இருப்பவர்களுக்கே இந்தப் பழமொழி என்றால்.. திருமணமாகி குழந்தை பெற்று.. அதற்கும் பத்து வயதாகும் போது மறுமணம் செய்து கொண்ட பீம்சிங்கிற்கு அலுத்துப் போகாதா..?
மூன்று வருடங்கள் கடந்ததும் அவர் மகளை நினைத்து ஏங்க ஆரம்பித்தார்.. தீப்தி அரண்டு போனாள்.. உடனடியாக பீம்சிங்கின் குழந்தைக்கு அவள் தாயானால் மட்டுமே அவரைத் தன்னிடம் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதில் தீவிரமாக முயற்சி செய்தாள்.. பலன் பூஜ்யமானதில் மருத்துவர்களின் உதவியை நாடினாள்..
“ஸாரி தீப்தி.. உங்களது கர்ப்பப்பை பலவீனமாக இருக்கிறது..” என்று அவர்களும் கைவிட்டு விட மனம் உடைந்து போனாள்..
திடமாக இருந்தது பீம்சிங்தான்.. அவர் தீப்தியைச் சமாதானப் படுத்தப் பேசிய பேச்சிலிருந்து அவர் அவளை எந்த நிலையில் வைத்திருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்ட தீப்தி நிலை குலைந்தாள்..
“வாட் இஸ் திஸ் தீப்தி..? ஐம்பது வயதுக்கு மேல் என்னை உன் குழந்தைக்கு அப்பாவாகச் சொல்கிறாயா..? நோ.. நோ.. யு ஆர் ஜஸ்ட் எ கம்பானியன்.. தட்’ஸ் ஆல்.. எனக்கென்று மகள் இருக்கிறாள்.. இனியா போன பின்பு பார்ட்டிகளுக்கும், பிஸினெஸ் இண்டர்வியுக்களுக்கும் தனியாகப் போக வேண்டியிருந்தது.. அதற்காகத்தான் உன்னை ரீ மேரேஜ் பண்ணிக்கிட்டேன்.. உன் அழகும் இளமையும் பிளஸ் பாயிண்ட்ஸ்.. நீ என்னடாவென்றால் குழந்தை அது, இதுன்னு ஹாஸ்பிடல், ஹாஸ்பிடலாய் சுற்றிக்கிட்டு இருக்க.. வாட்’ஸ் ராங் வித் யு..?”
இதற்கு மட்டும்தான் நீ.. குடும்பம் நடத்துவதற்காக அல்ல என்று பீம்சிங்கின் சுட்டு விரல் சுட்டிக் காட்டி விடத் துடித்துப் போனால் தீப்தி.. அவரிடம் சண்டையிட்டாள்.. அவரோ ஏளனமாகச் சிரித்தார்..
“என் ஸ்டேட்டஸ் மேல ஆசைப்பட்டுத்தானே என்னை ரீமேரேஜ் பண்ணிக்கிட்ட..? என் மேல் ஆசைப்பட்டு ரீ மேரேஜ் பண்ணிக்கிட்டன்னு சொல்லாதே.. அது பொய் என்று உனக்கும் தெரியும்.. எனக்கும் தெரியும்..”
“டியர்..”
“உனக்குத் தேவை பணம்.. எனக்குத் தேவை அழகும் இளமையுமான கம்பானியன்.. அத்துடன் நிறுத்திக்க..”
“நான் ஜஸ்ட் எ கம்பெனியன் மட்டும்தானா..? உங்க வொஃய்ப் இல்லையா..?”
“லிவிங் டுகெதர் லைஃபை இனியாவின் பேரண்ட்ஸ் லைக் பண்ண மாட்டாங்க.. அனுவுக்கும் என்மீது இருக்கிற இமேஜ் போய் விடும்.. அதற்காக மட்டும்தான் உன்னை லீகலாக ரீ மேரேஜ் பண்ணிக்கிட்டேன்.. மைண்ட் இட்..”
தீப்தி விக்கித்துப் போய் படுக்கையில் குப்புற விழுந்து அழ ஆரம்பித்தாள்.. முகம் சுளித்த பீம்சிங் அறையை விட்டு வெளியே போய்விட்டார்.. அவளைச் சமாதானப் படுத்த அவர் முயலாததில் அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.. அதைவிட அதிர்ச்சியைத் தந்தது, அவர் அவளிடம் சொல்லிக் கொள்ளாமல் வெளிநாடு சென்று விட்டது..
பீம்சிங்கிடம் முரண்டு பிடித்தால் அவர் இமைக்கும் பொழுதிற்குள் அவளைத் தூக்கி எறிந்து விடுவார் என்பதைத் தெளிவாக புரிந்து கொண்ட தீப்தி அடுத்துத் தான் செய்ய வேண்டியதைத் தீர்க்கமாக சிந்திக்க ஆரம்பித்தாள்.. பீம்சிங் திரும்பி வர இரண்டு மாதங்களாயின.. அந்த ஆறுபது நாள்களில் அவள் எந்தெந்த அழகிகளுடன் எங்கெங்கு சுற்றினார் என்ற விவரங்களை விசாரித்து அறிந்து கொண்ட தீப்திக்கு ‘திக்’ கென்று ஆனது.. அவள் ஒன்றும் உலக அழகியல்ல.. பீம்சிங்கே சொன்னதைப் போல.. பார்ட்டிகளிலும், பிஸினெஸ் இண்டர்வியூக்களிலும் அவர் பக்கத்தில் போஸ் கொடுக்க அவர் வாழ்வில் வந்தவள் அவள்.. அது நிலைக்க வேண்டுமென்றால் அவள் அவரை அனுசரித்துத்தான் ஆக வேண்டும்.
அவளால் அவரது குழந்தையைச் சுமக்க இயலாது என்று ஆன பின்பு தீப்தி அதைப்பற்றிப் பேசாமல் அவருடனான நெருக்கத்தை அதிகப் படுத்திக் கொண்டாள்.. அவர் அறியாத வண்ணம் மோக வலையை வீசி அதில் அவரைச் சிக்க வைத்து சிறை வைத்தாள். பிள்ளை பாசத்தில் அனுராதாவைத் தன்னிடம் அழைத்துக் கொள்ள விரும்பிய பீம்சிங்கை மூளைச் சலவை செய்தாள்..
Reviews — Brinthavanathil Nanthakumaran / பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.