Chapter 23

0Shares

“டொக்.. டொக்..”

குதிரையின் குளம்படி சப்தத்தை ரசித்தாள் அனுராதா.. சாலையின் மேடு பள்ளங்களில் குதிரை வண்டி ஏறி இறங்க.. நந்தகுமாரின் மீது விழுந்தாள்.. ‘ஆஹா’ என்று நந்தகுமார் அவளது முதுகைத் தடவ..

“சான்ஸ் கிடைச்சாப் போதுமே..” என்று அவனைக் கிள்ளினாள்..

“ஏண்டி.. நிமிசத்துக்கு ஒரு காரில் வருகிற அளவுக்கு கோடிஸ்வரி நீ.. குதிரை வண்டியில டிராவல் பண்ணனும்னு பிடிவாதம் பிடிக்கிற..” நந்தகுமார் கேலி செய்தான்..

“எனக்குப் பிடிச்சிருக்கே..” அனுராதா ஓரக்கண்ணால் அவனைப் பார்த்தாள்.. அவளது விழிகளில் வழிந்த காதலில் அவன் கிறங்கினான்..

கடல் மட்டத்திலிருந்து சுமார் 1665 அடிகள் உயரத்தில் இருக்கும் சாமுண்டி மலைகளின் உச்சியில் இருந்த பார்வதி தேவி, சாமுண்டிஸ்வரி அம்மனாக அருள் பாலிக்கும் சாமுண்டிஸ்வரியம்மன் கோவிலுக்கு அவர்கள் படியேறினார்கள்.. கடினமான மலையேற்றத்தில் அவன் அவளுக்கு கை கொடுத்து தூக்கி விட்டான்.. ஒரே ஒரு கருப்பு சலவைக் கல்லில் 5 மீட்டர் உயரத்தில் செதுக்கப் பட்டிருந்த நந்தி சிலையை வணங்கியபின் அம்மனை தரிசித்தார்கள்.. கண்மூடி நின்றிருந்த அனுராதாவின் உதடுகள் மட்டும் அசைந்தன..

“என்னடி வேண்டிக்கிட்ட..?” திரும்பும் போது நந்தகுமார் கேட்டான்..

“எனக்குத் திரும்பக் கிடைச்சிருக்கிற நீங்க எப்போதும் என் கூடவே இருக்கனும்னு வேண்டிக்கிட்டேன்.. இனியொரு பிரிவை என்னால தாங்கிக்க முடியாது..” அனுராதா அழுது விட்டாள்..

“என்னால் மட்டும் முடியுமா..?”

நந்தகுமாரின் கைகள் அவளது தோளைச் சுற்றிப் படிந்தன.. மறுநாள் அனுராதாவின் காரில் அவர்கள் இருவரும் மைசூர் அரண்மனைக்குச் சென்றார்கள்.. அடுத்து அவர்கள் கட்டப் போகும் ஐந்து நட்சத்திர ஹோட்டலின் வெளிப்புறத் தோற்றம் மைசூர் அரண்மனையைப் போல இருக்க வேண்டும் என்று வரைபடம் வரைந்து கொடுத்திருந்தான் நந்தகுமார்.. அதை இருவரும் சேர்ந்து ஓர்முறை பார்த்து விட்டு வந்தால் மேலும் சில ஐடியாக்கள் கிடைக்க கூடும் என்றாள் அனுராதா.. நந்தகுமார் அதை ஆமோதிக்க.. அரண்மனைக்குக் கிளம்பி வந்து விட்டார்கள்..

“அல்லி சூடு..”

“இல்லி பண்ணி..”

“தெரிது கொல்லி..”

“கியா கை மாதாஜி..”

“தானிக்கு ஏமி..”

“எந்தா சேச்சி..?”

இந்திய நாட்டின் பன்மொழிகளும் அங்கே காதில் விழுந்தன.. அனைவரையும் ஈர்க்கும் சுற்றுலா ஸ்தலமான மைசூர் அரண்மனை லாவண்யத்துடன் மிளிர்ந்து பார்வையாளர்களை வசீகரித்துக் கொண்டிருந்தது.. 1897-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட அரண்மனை.. ‘இவரு பெரிய மைசூர் மகாராஜா..’ என்ற மாறாத சொலவடையை அக்கம் பக்கத்து மாநிலங்களுக்குத் தந்த செல்வச் செழிப்பு மிக்க மைசூர் உடையார் வம்சத்தினர் உருவாக்கியிருந்த மாளிகை.. நூற்றாண்டைக் கடந்தும் பொழிவு குன்றாமல் காண்போரைக் காந்தமெனக் கவர்ந்து இழுத்தது..

நுழைவு வாயிலில் இருந்து மைதானம்.. அடுத்து ராச தர்பார் மண்டபம்.. அதையடுத்த உள்பகுதியில் மல்யுத்த மைதானம்.. அதைத் தாண்டினால் வருவது அழகிய அரண்மனை அந்தப்புரம்..

50000 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட அரண்மனையின் உயரம் 145 அடி.. அதில் 175 அறைகள் இருந்தன.. மூன்றாவது மாடியில் நூலகம்.. லிப்ட்.. வேட்டை அறை.. படுக்கையறைகள்..

மூன்று அடுக்குகளைக் கொண்ட இந்த மைசூர் அரண்மனை சாம்பல் நிற சலவைக் கற்களால் உருவாக்கப் பட்டிருந்தது.. அரண்மனையின் மீது மூன்று இளம் சிகப்பு நிறக் குமிழ் கோபுரங்கள் காணப்பட்டன.. அரண்மனையை ஒட்டி 44.2 மீட்டர் உயரத்துக்கு ஐந்து அடுக்குகளைக் கொண்ட தூண் கோபுரம் ஒன்றும் இருந்தது.. இதன் மேற்பகுதியில் அலங்கார கலசங்கள் தங்கத்தால் உருவாக்கப் பட்டிருந்தன.. சுற்றுலாப் பயணிகள் இந்த அரண்மனையில்.. ‘கோம்பே தொட்டி..’ அல்லது ‘பொம்மை விதானம்..’ என்ற வாசல் வழியாக நுழையலாம் என்று கை காட்டினாள் அனுராதா.. அவளுடன் கை கோர்த்து நுழைந்தான் நந்தகுமார்.. அங்கே 19-ஆம் நூற்றாண்டு மற்றும் 20-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பொம்மைகள் இருந்தன..

“ஆச்சரியமா இருக்கில்ல..?” என்றான் நந்தகுமார்..

“நம்ம நாட்டுக் கட்டிடக் கலையை நினைத்தா ஆச்சரியம் வராம என்ன செய்யுமாம்..?” என்றாள் அனுராதா..

“நான் இதைச் சொல்லலைடி.. மைசூர் அரண்மனையும், மதுரை மீனாட்சியம்மன் கோவிலும் ஆளை அயர வைக்கிற அதிசய சுரங்கங்கள்ன்னு தெரியாதா என்ன..? நமக்கு ஸ்டார் ஹோட்டல் கட்டுகிற புராஜெக்டைக் கொடுத்திருக்கிற வெளிநாட்டுக் காரன் மைசூர் பேலஸ் போல அதன் எக்ஸ்டர்னல் அப்பீயரன்ஸ் இருக்கனும்னு சொல்லியிருக்கான் பாரு.. அதைச் சொன்னேன்..”

அவன் ‘உன் கம்பெனி..’ என்று சொல்லாமல்.. ‘நம்ம கம்பெனி’ என்று சொல்லியதில் மனம் குளிர்ந்து போயிருந்தாள் அனுராதா.. விட்டால் அவன் பறந்து போய் விடுவானோ என்று அஞ்சுகிறவளைப் போல அவன் கையை இறுக்கிப் பிடித்திருந்தாள்..

“நாம இந்த புராஜெக்ட்டிலும் வின் பண்ணிருவோமில்ல..” கொஞ்சலாகக் கேட்டாள்.. அவள் ‘நாம்’ என்று சொன்னதில் மனம் மகிழ்ந்து போன நந்தகுமார் அவளது உள்ளங்கையை உயர்த்திப் பிடித்து அதில் முத்தமிட்டான்..

கண்மூடி நின்றாள் அனுராதா.. அவளது முகத்தைப் பற்றிய நந்தகுமார் குனிந்து அவளது இதழோடு இதழ் பதித்தபோது தாள முடியாமல் பூங்கொடியாய் அவன் மார்பில் சாய்ந்தாள்.. நந்தகுமாரின் கரங்கள் அவளது தோள் தடவி இறங்கி முதுகில் பதிந்தன.. ஆலிங்கனத்தில் கட்டுண்டு நின்றிருந்தவர்களை..

“என்னை வீட்டில இருக்கச் சொல்லிட்டு நீங்க இங்கே இவளுடன் கூத்தடிக்கிறிங்களா..?” என்ற ஆத்திரக் குரல் உசுப்பி விட்டது..

“எவ.. அவ..?” எரிச்சலுடன் திரும்பிய நந்தகுமாரின் முகம் மாறியது.. அனுராதாவோ விதிர்த்துப் போனவளாக அவனை விட்டு விலகி நின்றாள்..

அங்கே ஆவேசமாக நின்றிருந்தாள் கோபிகா.. மாதவியிடம் கூடிக் குழாவிக் கொண்டிருக்கும் கோவலனை எரிக்கும் கண்ணகி பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள்.. கொடுமைடா சாமி என்று தலையில் அடித்துக் கொள்ளப் போன நந்தகுமாரனுக்கு அவள் எப்படி அங்கே வந்தாள் என்ற சந்தேகம் எழுந்தது..

‘அதுவும் சரியா மைசூர் பேலஸில வந்து நிற்கிறாளே.. எப்படி..?’

கோபிகாவை அவன் பார்த்து வருடக் கணக்காகிறது.. தேர்வு முடிவுகளைப் பார்க்கப் போனபோது பார்த்ததுதான்.. அனுராதா அவனைப் பிரிந்து சென்று விட்டாள்.. அதற்குக் காரணம் கோபிகா ஆடிய நாடகம்தான் என்று தெரிய வந்தபோது அவளது குரல் வளையிலே கை வைத்து நெரிக்க ஆரம்பித்து விட்டான்.. நண்பர்கள்தான் அவனை அவளிடமிருந்து பிய்த்தெடுத்து தள்ளிக் கொண்டு வந்தார்கள்.. கோபிகா ஓடி விட்டாள்.. அன்று ஓடிய கோபிகாவை மறுபடியும் இன்றுதான் அவன் பார்க்கிறான்.. அவள் என்னவோ அவனும் அவளும் ஒரே வீட்டில் குடும்பம் நடத்துவதைப் போல பேசிக் கொண்டு வந்து நிற்கிறாளே..

“ஏய்ய்.. என்ன பினாத்தற..? இறுக்கினா செவிலு பேர்ந்திரும்.. அன்றைக்கே உன்னைக் கொன்று புதைத்திருக்கனும்.. தப்பிச்சு ஓடிட்ட.. இங்க எங்க வந்த..? எப்ப வந்த..? என்னவோ கதையெல்லாம் சொல்ற..? என்ன..? சாவடிக்கனுமா..?” உக்கிரமானான் நந்தகுமார்..

“இவளை இங்கே பார்த்தப்பவே நீங்க இப்படித்தான் பேசுவீங்கன்னு கெஸ் பண்ணிட்டேன் நந்து.. இவ கம்பெனியில தான் நீங்க வேலை பார்க்கறிங்களா..? சொல்லாம ஏமாத்திட்டிங்கள்ல..”

“உன்னை எவன்டி பார்த்தா..?”

“நீங்களும் நானும் ஒரே வீட்டில்தானே தங்கியிருக்கிறோம்..”

“அடி வாங்கிச் சாகப் போகிற.. நான் அர்ஜூன் வீட்டில் தங்கியிருக்கிறேன்..”

“அப்படி ஒரு இமேஜையும் கிரியேட் பண்ணியிருக்கீங்களா..? அதனாலதான் நைட் ஸ்டே பண்ண நம்ம வீட்டுக்கு வர்றதில்லையா..?”

உண்மையைப் போலத் தடுமாறாமல் கோர்வையாக கோபிகா பேசிய பேச்சில் அனுராதாவின் உதடுகள் துடித்தன.. அவளது விழிகளில் தெரிந்த சஞ்சலத்தில் திகைத்துப் போன நந்தகுமார்..

“இவ்வளவுதானா நீ..?” என்று நிதானமாக கேட்டான்..

“இவ.. இவ.. இவ..” அனுராதா தவித்தாள்..

“உன் உணர்ச்சிகளுடன் இவள் விளையாடுகிறாள் ராதா.. என்மீது உனக்கு நம்பிக்கையிருந்தால் இதிலிருந்து மீண்டு வா.. என் மீது உனக்கு உண்மையான காதலிருந்தால் உண்மை எதுவெனக் கண்டுபிடி… அதை விட்டுவிட்டு யார் எதைச் சொன்னாலும் நம்பிக் கொண்டு என்னை விட்டு ஓடாதே..” நந்தகுமாரின் குரலில் சலிப்பு வழிந்தது..

“உலகம் முழுவதும் உன்னைத் தேடி அலைந்திருக்கேண்டி.. உன்னைப் போல நான் பணக்காரனில்லை.. உலகம் சுற்றப் பணம் வேண்டாமா..? நான் சம்பாதித்த பணத்தையெல்லாம் உன்னைத் தேடுவதற்கே செலவளித்தேண்டி.. பெத்தவங்களை நினைத்ததில்லை.. கூடப் பிறந்தவளை நினைத்ததில்லை.. கொக்குக்கு ஒன்றே குறிங்கிறதைப் போல என் நினைப்பெல்லாம் நீ மட்டும்தாண்டி இருந்த.. அப்படிப்பட்ட என் காதலை இவளைப் போல கேடு கெட்டவளின் பேச்சை நம்பிக்கிட்டுத் தூக்கி எறியப் போறியா..?”

நந்தகுமார் கேட்ட கேள்வியில் அனுராதாவின் முகம் தெளிவதைப் போல இருந்தது.. அவசரமாக தன் செல்போனை எடுத்த கோபிகா வழக்கமாக காண்பிப்பதைப் போல ஒரு போட்டோவைக் காட்டினாள்.. அதில் நந்தகுமாரும் கோபிகாவும் கட்டிலில் இருந்தார்கள்..

“அடிங்..”

நந்தகுமார் ஓங்கி விட்ட அறையில் கோபிகா நிலைகுலைந்து விழ.. செல்போன் பறந்து விழுந்து சில்லுச் சில்லாக சிதறியது.. சில நொடிகள் தாமதித்தாலும் செல்போனுக்கு வந்த கதி தனக்கும் வந்து விடும் என்று நடுநடுங்கிப் போன கோபிகா.. வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து ஓடி விட்டாள்.. போகிற போக்கில்..

“அடப்பாவி.. கூட வாழ்ந்தவளையே அடித்துக் கொல்லப் பார்க்கிறயே.. அனுராதா.. இவனை நம்பாதே.. என்னை ஏமாற்றியவன் உன்னையும் ஏமாற்றி விடுவான்..” என்று கத்திக் கொண்டே ஓடினாள்..

நந்தகுமாரன் ரௌத்ரமாக நின்று கொண்டிருந்தான்.. சற்றுமுன் அவளது இதழோடு இதழ் பதித்துக் காதல் செய்து கொண்டிருந்த நந்தகுமாரா இவன் என்று அவளுக்குப் பயமாக இருந்தது.. தணலாக நிற்பவனை ஏறெடுத்துப் பார்க்கவும் அவள் அஞ்சினாள்..

உண்மையில் நந்தகுமார் யார்..? அவளது காதலனா இல்லை கோபிகாவுடன் வாழ்ந்தவனா..?

0Shares

Reviews — Brinthavanathil Nanthakumaran / பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link