Chapter 24
இரவு நேரப் பிருந்தாவனம் காண்பவர் கழுத்தைக் கவர்ந்து மனதை மயக்கிக் கொண்டிருந்தது.. கோபக்காரக் காதலனை வசியம் பண்ணும் வசியக்காரியின் மோகனத்துடன் மிளிர்ந்தது.. காரை விட்டு இறங்கிப் பூங்காவுக்குள் நடந்த அனுராதாவின் மனம் நிச்சலனமாக இருந்தது.. எவ்விதச் சஞ்சலமும் இல்லாமல் அலைகளற்ற ஆழ்கடலின் அமைதி அவள் மனதில் விரவியிருந்தது.. ஒளிந்து விளையாடும் கண்ணாமூச்சி விளையாட்டில் தேடுபவர் மட்டும் சோர்ந்து போவது இல்லை.. ஒளிபவரும் சேர்ந்துதான் சோர்ந்தாக வேண்டும்.. பரபரப்பு தேடுதலில் மட்டுமல்ல.. மறைதலிலும் உள்ளது..
“காதலில நம்பிக்கை அவசியம்டி.. உனக்கு அந்த நம்பிக்கை இல்லை ராதா.. இருந்திருந்தா கோபிகாவைப் போலக் கீழ்த்தரமான புத்தி படைத்த பொய்காரி பேச்சையெல்லாம் ஒரு பொருட்டா எடுத்துக்கிட்டு ஓடி ஒளிந்திருக்க மாட்ட.. எப்படியோ.. உன்னைக் கண்டபிடிச்சுட்டேன்னு சந்தோசப்பட்டேனேடி.. அதை நிலைக்க விடாம மறுபடியும் சந்தேகமாப் பார்த்துத் தொலைக்கறியேடி.. என்னைப் பார்த்தா லிவிங் டுகெதர்ன்னு கல்யாணம் பண்ணிக்காம ஒருத்திகூடக் குடித்தனம் பண்றவனைப் போலவா தெரியுது..? எங்கம்மாப்பா என்னை அப்படி வளர்க்கலைடி.. கண்டபடி அலைகிறவனா இருந்தா எதுக்காகடி உன்னைத் தேடி என் உயிரைக் குறைத்துக்கிட்டு இருந்தேன்..? உன் பணத்துக்காகவா..?”
அது இல்லையென்பதை அனுராதா அறிவாளே.. கொதிப்புடன் கேட்ட நந்தகுமாரனின் கேள்வியை இவள் பீம்சிங்கிடம் கேட்டாளே..
“டெல் மீ டாட்.. நந்தகுமார், கரண்.. இரண்டு பேரில் என் பணத்தைப் பெரிதாக நினைக்காமல் என்னைப் பெரிதாக நினைப்பது யாராக இருக்கும்ன்னு நீங்க நினைக்கறிங்க..?”
பீம்சிங் யோசித்தார்.. மகளின் இந்தக் கேள்விக்கான விடையில் தான் அவளது நிம்மதியான வாழ்வு அடங்கியிருக்கிறது என்று அவரது மனம் அறிவுறுத்தியது..
“என்னை எனக்காக மேரேஜ் பண்ணிக்க யார் நினைப்பாங்க டாடி..? யாரா இருந்தாலும் அவங்க கண்களுக்கு என்னோட பணமும் ஸ்டேட்டஸீம்தானே தெரியும்..? நான் தெரிய மாட்டேன்.. கரண் அந்த டைப்தான் டாடி..”
“பட் பேபி.. கரண் தீப்தியின் பிரதர்.. நம் ரிலேட்டிவ்..”
“ஷ்யூர்… பட் டாட்… கரணின் அக்கா உங்க பணத்துக்காகத்தானே உங்களை மேரேஜ் பண்ணிக்கிட்டாங்க..? உங்களுக்காக இல்லையே..”
அதை பீம்சிங் மறுப்பாரா..? ‘ஆம்..’ எனும் விதத்தில் தலையை அசைத்தார்..
“நந்தகுமார் என்னை எனக்காக லவ் பண்ணுகிறான் டாடி.. நான் கோடிஸ்வரி.. ஹை ஸ்டேட்டஸ்ன்னு அவனுக்குத் தெரியவே தெரியாது.. கரண் அப்படியில்லை டாடி.. எதைச் செய்தாலும் திட்டம் போட்டுச் செய்கிறவர்.. ஜெயிப்பதற்காக எந்த வழியையும் ஃபாலோ பண்ணுகிறவர்.. என்னை எனக்காக அவர் விரும்பலை.. என் பெயரில் இருக்கும் கோடிக் கணக்கான சொத்துக்களுக்காகத்தான் விரும்புகிறார்.. உங்களுக்கு இது தெரியலையா.. இல்லை தெரிந்தும் தெரியாததைப் போல நடிக்கிறிங்களா..? திஸ் இஸ் மை லைஃப் டாட்..”
“அனு.. நீ நம் ஸ்டேட்டஸிற்கு சரி வராத செண்டிமெண்டுகளில் சிக்குகிறாய்.. நந்தகுமார் நல்லவனில்லையே..”
“அப்படி ஒரு இமேஜை கிரியேட் பண்ணியது யார் டாடி..? கரண்தானே.. நான்தான் சொன்னேனே.. ஜெயிப்பதற்காக கரண் எதை வேண்டுமானாலும் செய்வார்..”
“கரணுக்கு டில்லியில் குட் நேம் இருக்கிறது.. நம் ஸ்டேட்டஸில் இருக்கிற குடும்பங்களில் பலர் கரணுக்குப் பெண் கொடுக்க விரும்புகிறார்கள்..”
“நல்லதாகப் போனது.. கரணுக்கு அவங்களில் யாரையாவது பிக்ஸ் பண்ணிருங்க.. ரிலிவ் மீ டாடி..”
“கரணுக்கு ஈக்குவல் ஸ்டேட்டஸில் நந்தகுமார் இல்லை அனும்மா..”
“இன்றைக்கு இல்லை.. ப்யூச்சரில் கரணை விட பெரிய ஆளாய் நந்தகுமார் வருவார்.. என் கம்பெனிக்குத் திறமையான சீஃப் என்ஜினியர் வேண்டும்ன்னு கிஷோர் அங்கிளிடம் நீங்கள் கேட்டதும் அவர் இம்மீடியட்டாய் சொன்ன பெயர் நந்தகுமார்.. திறமையையும், குணத்தையும் எடை போடுவதில் கிஷோர் அங்கிள் எக்ஸ்பார்ட்டுன்னு நீங்க சொல்லுவீங்களே.. அதை நமக்கும் புரூவ் பண்ணிட்டாரே..”
பேசிப் பேசி பீம்சிங்கின் மனதைக் கரைத்து விட்டாள் அனுராதா.. அரைகுறை மனதாய் தயங்கியவரை..
“அம்மா போன பின்னால் நான் லோன்லியா ஆகிட்டேன் டாடி.. தாத்தா, பாட்டியுடன் இல்லாம என்னை ஊட்டி கான்வெண்டில் சேர்த்துத் தனிமைப் படுத்திட்டிங்க.. இப்பத்தான் தாத்தா, பாட்டியுடன் இருக்க முடியுது.. கரணை மேரேஜ் பண்ணிக்கிட்டா தாத்தா, பாட்டி என்னை விட்டுப் பிரிஞ்சு போயிருவாங்க டாடி.. அம்மாவோட இடத்தில கரணுடைய அக்கா இருக்கிறதை அவங்க அக்செப்ட் பண்ணிக்கிட்டது ஒரு கட்டாயத்தினாலதான்.. மனதார அவங்களால ஒட்டி உறவாட முடியலை.. நந்தகுமார் அப்படியில்லை டாடி.. கடைசி வரைக்கும் தாத்தாவும், பாட்டியும் என்னுடன் இருக்க அலோவ் பண்ணுவான்.. இத்தனைக்கும் மேலா ஐ லவ் ஹிம் டாடி.. என்னால் அவனை மட்டும்தான் காதலிக்க முடியும்.. மேரேஜ் பண்ணிக்க முடியும்..” என்ற அனுராதாவின் அழுகை மாற்றி விட்டது..
“அவனை மேரேஜ் பண்ணிக்கிட்டாத்ததான் நீ சந்தோசமா இருப்பேன்னா.. நீ அவனையே மேரேஜ் பண்ணிக்க அனு..” பீம்சிங் சம்மதம் தெரிவித்து விட்டார்..
“உன் மூஞ்சியில் முழிப்பது கூட பாவம்டி.. கரணைக் கூட நான் மன்னிச்சுருவேன்.. இந்த கோபிகாவைக் கூட மன்னிச்சுருவேன்.. ஆனா உன்னை மன்னிக்க மாட்டேண்டி.. பார்த்தியே ஒரு பார்வை.. அது கேட்டுச்சே ஒரு கேள்வி.. இவ சொல்வது உண்மைதானான்னு வாய் வார்த்தையில கேட்டால்தானா..? உன் மனசு கேட்குதேடி.. ச்சே.. உனக்காக என் உயிரையும் கொடுப்பேன்.. அதைப் புரிஞ்சுக்காம எவளோ ஒருத்தி கதை கட்டி விடறா.. அதைக் காது கொடுத்துக் கேட்கிற.. வேண்டாம்டி.. நீ எனக்கு வேண்டாம்.. இனி இந்த நந்தகுமாரன் உன் வாழ்வில் இல்லை..”
மைசூர் அரண்மனையில் அனுராதாவை ‘அம்போ’ என விட்டு விட்டுப் போய் விட்டான் அந்த கோபக்காரன்.. எப்படி வீடு வந்தாளோ.. ஆழ்ந்து சிந்தித்து.. மனம் தெளிந்து.. தந்தையிடம் போராடி அவர் சம்மதத்தை வாங்கி விட்டாள்.. நந்தகுமாரனைத் தேடிப் போனாள்..
பிளாட் கதவைத் திறந்த அர்ஜூன் விழி விரிந்தான்..
“வாங்க.. வாங்க.. உட்காருங்க..”
“மரியாதை எதற்கு அர்ஜூன்.. வா, போன்னே கூப்பிடுங்க.. நான் நந்தகுமாரைப் பார்க்க வந்தேன்..”
அனுராதாவின் பார்வை பிளாட் முழுவதும் துழாவி ஏமாந்து.. அர்ஜூனின் கண்ணசைவில் காபியோடு வந்த ஈஸ்வரி..
“இவங்கதானா அவங்க..?” என்று அர்ஜூனிடம் கேட்டு விட்டுப் போனாள்..
“என்ன கேக்கிறாங்க..?” அனுராதா கேட்டாள்..
“நம்ம ஆளு இந்த பிளாட்டுக்கு வந்து இறங்கின முதல் நாளில இந்தம்மாவைக் காய்ச்சின காச்சில வேலையை விட்டு ஓடிப் போறேன்னு கிளம்பிட்டாங்க.. கையில, காலில விழுந்து நிறுத்தி வைத்தேன்.. வேலையில சேர்ந்தன்னைக்கு நைட்டில தேன் குடிச்ச சிங்கம் போல ‘ஈ’ன்னு சிரிச்ச முகமா வந்து சேர்ந்ததில மயக்கம் போட்டுட்டாங்கன்னா பார்த்துக்க.. அப்படி உம்மணாம் மூஞ்சியை சிரிச்ச மூஞ்சியா மாத்தின தேவதை நீங்கதானான்னு கேட்டுட்டுப் போறாங்க..” அர்ஜூன் விளக்கமாளித்தான்..
அனுராதாவின் முகம் சிவந்தது.. அவளது பொழிவைக் கூர்ந்து கவனித்த அர்ஜூன் சிந்தனையுடன்..
“நீங்க ரெண்டு பேரும் பிரிஞ்சுட்டிங்கன்னு சொன்னானே.. மறுபடியும் சேர மாட்டோம்… சென்னைக்குப் போகப் போறேண்டான்னு குண்டைத் தூக்கிப் போட்டான்.. பிளைட்டுக்கு டிக்கெட் புக் பண்ணிட்டு ஒரு வேலையா வெளியே போயிருக்கான்..” என்றான்..
அனுராதா உதட்டைக் கடித்தாள்.. டீப்பாயில் இருந்த டைரியை எடுத்துப் பிரித்து மடமடவென எழுதினாள்..
‘உடல் நான்.. உயிர் நீ..
உயிர் நீங்கி உடல் வாழ்ந்ததில்லை..
நீ பிருந்தாவனத்தின் நந்தகுமாரன்..
உன் காதலி ராதை இங்கிருக்க..
நீ செல்வதெங்கே.. என்னுயிரே.. சொல்லிவிடு..
நீயின்றி நானில்லை.. நிலவின்றி வானில்லை..
மாலை மயங்கிய முன்னிரவில்
காத்திருப்பேன் நான் பிருந்தாவனத்தில்..
நீ வந்தால் உயிர் வாழ்வேன்..
பிரிந்தால் என்னுயிர் நீப்பேன்..’
எழுதிய தாளைக் கிழித்து அர்ஜூனிடம் நீட்டி..
“அவரிடம் கொடுத்து விடுங்க..” என்று சொல்லி விட்டுக் கிளம்பியவளின் மனம் அமைதியடைந்திருந்தது..
முடிவெடுக்கும்வரைதான் சஞ்சலம்.. முடிவெடுத்து விட்டால் தொல்லையில்லை.. காரில் கிளம்பும் போது மறக்காமல் தூக்க மாத்திரைகள் நிரம்பிய பாட்டிலை எடுத்துக் கைப்பையில் போட்டுக் கொண்டாள்.. பிருந்தாவனத்துக்குக் காரைச் செழுத்தினாள்.. இறங்கி நிதானமாக நடந்தாள்..
காவிரி ஆற்றில் கட்டப்பட்டுள்ள ‘கிருஷ்ண ராஜ சாகர்..’ என்ற அணைக்குக் கீழே பிருந்தாவனம் அமைக்கப் பட்டிருந்தது.. மைசூரில் இருந்து 20 கிமி தொலைவில் இருந்த பூங்காவில் நுழைந்த அனுராதா நீர் தடாகங்களும், நீருற்றுகளும் இருந்த இடத்தில் சாய்வான மர பெஞ்சில் சாய்ந்து உட்கார்ந்து நந்தகுமாருக்காக காத்திருக்க ஆரம்பித்தாள்..
இசைக்கேற்ப நடனமாடும் நீருற்றுகளை இலக்கில்லாமல் வெறித்தபடி எத்தனை நேரம் அமர்ந்திருந்தாளோ.. அவள் கணக்கிடவில்லை.. சுற்றிலும் நடமாட்டம் குறைவதைப் போல இருந்ததில் மணிபார்த்தாள்.. இரண்டு மணிக்கும் மேல் அவள் ஓரிடத்திலேயே உட்கார்ந்திருக்கிறாள்.. பூங்காவின் மையத்திலிருந்த சிறு குளத்தின் நடுவே இருந்த காவேரி அன்னையின் சிலை இவளுக்கு ஆறுதல் சொல்வதைப் போல ஒளிர்ந்தது.. அனுராதா பெருமூச்சுடன் ஹேண்ட் பேகில் இருந்த தூக்க மாத்திரை பாட்டிலை எடுத்தாள்.. அதை தட்டி விட்டது ஓர் கரம்.. நிமிர்ந்து பார்த்தவள் கண்ணீருடன் விம்மினாள்.. அவளை இழுத்து அணைத்துக் கொண்டவனின் ஆவேச அணைப்பில் கட்டுண்டாள்..
“அந்த நந்தகுமாரன்தான் பொதுவானவன் ராதா.. இந்த நந்தகுமாரன் இந்த ராதையின் நந்தகுமார்.. ராதைக்கு மட்டும் சொந்தமானவன்.. நம்புடி.. இந்த பிருந்தாவனத்தில் நின்றுக்கிட்டு சத்தியம் பண்றேன்டி.. என் மனதில் நீ மட்டும்தான்..”
“நான் கேட்டேனா..?”
நீயே எனக்கு எல்லாமும் என்று பிருந்தாவனத்தை சாட்சியாக வைத்து நந்தகுமாரனிடம் தஞ்சம் புகுந்தாள் அனுராதா..
அடுத்து வந்த சுபயோக சுப நாளில் சென்னையையே ஓர் கலக்குக் கலக்கி.. நந்தகுமாரன் – அனுராதாவின் திருமணம் நடந்தது.. மகன் வாழ்வை நினைத்து மருகிக் கொண்டிருந்த வாசுதேவனும், யமுனாவும் மகிழ்ச்சிக் கடலில் நீந்தினார்கள்.. நந்தினி ஆனந்தத்தில் குதித்தாள்.. ‘அனுராக்’ கண்ஸ்ட்ரக்சன் கம்பெனியின் ஹெட் ஆபிஸ் மைசூரில் இருந்து சென்னைக்கு மாறியது.. சத்தியமூர்த்தியும், ராதிகாவும் வற்புறுத்தியதில் அனைவரும் ஒரு குடும்பமாக அடையாறு பங்களாவுக்கு இடம் பெயர்ந்தார்கள்.. கரண் ஷாலினியுடன் காதல் பயிரை வளர்க்க ஆரம்பித்தான்.. பீம்சிங்கும், தீப்தியும் வெளிநாட்டு வாசிகளாக மாறிப் போனார்கள்.. காதல் பண்ணினால்தானே.. ‘அண்ணா’ என்று அலற வைப்பார்கள் என்று அர்ஜூன் நல்ல பிள்ளையாக வீட்டில் பார்த்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு காதலிக்க ஆரம்பித்தான்..
குழலூதும் நந்தகுமாரன் இருக்கும் பிருந்தாவனத்தில் மகிழ்ச்சிக்குக் குறைவேது..?
– முற்றும் –
Reviews — Brinthavanathil Nanthakumaran / பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.