Chapter 02
அலைகடலாய் ராதாவின் மனம் கொந்தளித்தது.. சித்தி பெண்ணின் திருமணத்திற்கு வந்தவளை.. வரவேற்பில் நிற்க வைத்த சொந்த பந்தங்களை மனதார – மனதிற்குள் திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தாள் அவள்..
“ஹப்பா.. பெரிய சுனாமியே வந்து ஓய்ந்து போனது போல இருக்கு..” பெருமூச்சு விட்டாள் சுபா..
“அவனுக பாட்டுக்கு வந்தானுக.. நம்ம மூஞ்சியும் ஒரு மூஞ்சியான்னு கேட்டு.. நம்மகிட்டயே ஒரு சண்டையும் போட்டானுக.. இப்ப இடத்தைக் காலி பண்ணிட்டு போயிட்டானுக.. என்னடி.. இது.. பெரிய வேடிக்கையாய் இருக்கு..” என்றாள் லாவண்யா..
“அதானே.. இவனுக கல்யாணத்திற்கு வந்தானுகளா இல்லை நம்மைப் பெண்பார்க்கவந்தானுகளா..? என்னவோ மாப்பிள்ளை ரேஞ்சுக்கு இப்படி ஒரு பில்ட் அப்பைக் கொடுத்துவிட்டு போயிருக்கானுகளே..” ரேவதி அங்கலாய்த்தாள்..
தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்த ராதா கோபத்துடன் வெடித்தாள்..
“கொஞ்சம் அடங்குங்கடி.. அவங்களை முகத்திற்கு நேராகவே.. அவனுக.. இவனுக..ன்னு சொன்னால் அவங்க சண்டைக்கு வர மாட்டாங்களா..?”
“வேண்டாம் ராதா.. வீணாய் அவங்களுக்கு சப்போர்ட் பண்ணாதே.. ஏண்டி.. நாம் ரிசப்ஷனில் நிற்கிறோமா.. இல்லை ஃபேஷன் பரேடில் நிற்கிறோமா..? என்னவோ ஆணழகன் ரேஞ்சுற்கு அலட்டிக் கொண்டு வந்து நம்மைப் பார்வையிட்டு விட்டு கமெண்ட் பண்ணலாமா..?”
“தப்புதான் சுபா.. அவங்க செய்தது தப்புதான்.. அதைக் கேட்பதற்கு முன்னால்.. நாமும் அதே தப்பைச் செய்து விட்டால் அவங்களை எப்படிடீ நாம் கேள்வி கேட்க முடியும்..? இரண்டு பக்கமும் ஈக்குவல் ஆகிவிடாதா..?”
“எனக்கு அதெல்லாம் தெரியாது.. எனக்குத் தெரிந்ததெல்லாம் வம்புக்குப் போகக் கூடாது வந்த வம்பை விடக் கூடாது.. அவ்வளவு தான்..”
“அதற்கு..? இப்ப.. என்னதான் செய்யப் போகிற..?”
“பொறுத்திருந்து பார்..”
சுபா சூளுரைத்து விட்டு.. லாவண்யாவும்.. ரேவதியும் பின்தொடர உள்ளே சென்றுவிட..
‘எக்கேடோ.. கெட்டுத் தொலையுங்கள்..’ என்று எரிச்சலுடன் நினைத்தபடி ராதா அங்கேயே நின்று விட்டாள்..
திருமண மேடைக்கு முன்னால் இருந்த நாற்காலிகளில் அமர்ந்திருந்தவர்கள் மணமேடையை கவனிப்பதை விட்டுவிட்டு.. அவரவர் மனப் போக்கின்படி வருகிறவர்கள்.. போகிறவர்களைக் கவனித்துக் கொண்டிருக்க.. முரளி.. யதுநந்தனை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தான்..
“நீயெல்லாம் ஒரு நண்பனாடா..?”
“என்னவோ.. ஜூலியஸ் சீஸர்.. புரூட்டஸைப் பார்த்துக் கேட்பது போல் கேட்கிறாயே.. இப்ப என்னடா ஆச்சு..?”
“இன்னும் என்ன ஆகணும்..? உன்னை நம்பி உன் பின்னால் வந்தேன் பார்.. என்னைச் சொல்லணும்..!”
“என்னவோ.. காதலன்கிட்ட.. காதலி செல்கிற மாதிரி.. என்கிட்ட வந்து பினாத்துகிறாயே.. என்ன விஷயம்..?”
“கல்யாண வீட்டிற்கு ஏண்டா.. உன் கூட வந்தேன்..?”
“வேறு எதற்கு..? கல்யாணச் சாப்பாடு.. சாப்பிடத்தான்..”
“என்னை சாப்பாட்டு ராமன்னு முடிவே பண்ணிட்டியா..?”
“அதுதானே உண்மை..”
“உன் உண்மையைத் தூக்கி உடைப்பில் போடு நீயும்.. உன் உண்மை விளம்பும் லட்சணமும்.. கல்யாண வீட்டுக்கு வந்தால்.. கலர் கலராய் நாலு ஃபிகரைப் பார்க்கலாம்னு நானே.. ஏங்கிப் போய் உன்கூட வந்து தொலைந்தேன்..”
“உன்னைப் பார்த்தால்.. ஏங்கிப் போய் வந்தது போல் இல்லையே..”
“வேறு எப்படி இருந்தது..?”
“நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு வந்தது போல் இருந்தது..”
“யது.. வேண்டாம்.. வாராதே.. சொல்லிட்டேன்..”
“அப்போ.. நீயும் வாயை மூடிக் கொண்டு உட்காரு..”
“நீ பண்ணி வைத்திருக்கும் வேலைக்கு நிம்மதியாய் நான் உட்கார முடியுமாடா..?”
“இப்ப என்னடா ஆகிப் போச்சு..? உலகம் தலைகீழா தொங்குதா..?”
“ம்ஹூம்.. அங்கே பாரு..”
முரளி கைகாட்டிய திசையில் சுபா, எரிதணல் விழிகளோடு போய்க் கொண்டிருந்தாள்.. அவளுடைய பார்வை.. முரளியை சுட்டெரித்தது..
“அவளுகளுக்கு என்னடா..?”
“எப்படிப் பார்க்கிறாளுக பாரு..”
“அவளுகளைப் பார்ப்பதே பெரிசு.. இதில் அவளுக பார்வையை வேறு நான் பார்த்து வைக்கணுமா..? அதை நீயே பாரு..”
“எங்கே பார்க்கிறது..? அப்படியே எரிக்கிறது போல பார்க்கிறாளுகடா.. உன்னோடு வந்ததற்கு.. அழகான பெண்களை எதிரிகளாக்கிக் கொண்டதுதான் எனக்கு கிடைத்த பலன்..”
“புலம்பாமல் உட்காரு.. அவளுக கூட நட்பு பாராட்டிட்டாலும்.. அப்படியே விளங்கிவிடும்..”
யதுநந்தன் அலட்சியமாய் சுபா கோஷ்டி இருந்த திசைப் பக்கம் திரும்பிப் பார்க்க.. அப்போதுதான் அவர்களோடு வந்து சேர்ந்து நின்ற ராதா.. யதேச்சையாய் அவன் பக்கம் பார்த்தாள்.. இருவரின் பார்வையும்.. எரிமலையாய் சந்தித்துக் கொள்ள லாவண்யா.. ‘களுக்..’ கென்று வாய் பொத்தி சிரித்தாள்..
“எதுக்குடி சிரிக்கிற..?” சுபா புரியாமல் கேட்டாள்.
“ம்ம்.. அண்ணனும் முறைத்தான்.. அவளும் முறைத்தாள்.. கண்ணோடு கண் கலக்க.. கனல் பற்றி எரிந்தது..”
“ஏய்ய்.. இவள் கம்ப ராமாயணத்தை உல்டா பண்ணுகிறாடி.. ஏண்டி.. ராமாயணத்தைக் கூட நீ விட்டு வைக்க மாட்டாயா..?”
“அதில்லை சுபா.. நம்ம ராதா.. அந்த வில்லனை முறைத்தாள் பாரு.. அதைப் பார்த்தவுடன் தானாய்.. கவிதை பொங்கி வருதுப்பா..”
“நீ சொல்றதுக்கு பெயர் கவிதையா..?”
“பின்னே.. இல்லையா..?”
“நீ சொல்வதற்கு பெயரெல்லாம் கவிதைன்னா.. கவிதைக்கு என்ன பெயர் வைப்பது..?”
“அது எதையாவது வைத்துக் கொள்ளலாம்.. இப்ப வில்லனுக்கு ஒரு செக் வைக்கணுமே.. என்ன பண்ணலாம்..?”
அவர்கள் கலந்து ஆலோசிக்க ஆரம்பித்தபோது.. ராதாவை அவளுடைய அம்மா மந்தாகினி அழைக்கவும் அவள் எழுந்து சென்று விட்டாள்..
‘கடனே’ என்று மணமேடையைப் பார்த்த வண்ணம் யதுநந்தன் அமர்ந்திருந்தபோது.. மணமகளின் தந்தை வந்து அவனை வரவேற்றார்..
“வாப்பா.. யதுநந்தா.. அம்மாவும்.. அப்பாவும் வரவில்லையா..?”
“அவங்க வேறு ஒரு மேரேஜை அட்டெண்ட் பண்ணப் போயிருக்கிறாங்க அங்கிள்..”
“அப்படியா.. தாத்தா, பாட்டி சௌக்கியமா..?”
“சௌக்கியம்..”
அவர் வேறு ஒரு உறவினரை வரவேற்க நகர்ந்துவிட.. யதுநந்தன் எரிச்சலுடன் கைக்கடிகாரத்தைப் பார்த்தான்.. பின் நாற்காலியை விட்டு எழுந்தான்..
“எங்கேடா போகிற…?”
“பாத்ரூமிற்கு..”
“மெதுவாகவே வா.. நான் நிம்மதியாய் கடலை போட முடியுமான்னு பார்க்கிறேன்..”
“உனக்கு உன் பிரச்சனை..”
யதுநந்தன்.. மாடிப் படிகளின் அருகேயிருந்த பாத்ரூமை நாடிப் போனான்.. அவன் வெளியே வந்தபோது.. மாடிப் படியின் மேலிருந்து.. அவன் முகத்தில் கரித்தூள் வந்து கனமாய் விழுந்தது..
‘என்ன இது..’ அவன் இயல்பாய் முகம் துடைக்க.. முகம் பூராவும் கரி அப்பிக் கொண்டது..
அதை உணராமல் அவன் முரளியின் அருகே போய் அமர.. அருகிலிருந்தவர்கள் அவனை வினோதமாகப் பார்த்தனர்.. எப்படியாவது சுபாவின் அருள் பார்வையை பெற்றுவிட வேண்டி.. இடைவிடாமல் பார்வைக் கணைகளை வீசிக் கொண்டிருந்து முரளி.. தற்செயலாய் திரும்பி யதுநந்தனைப் பார்த்தவன்..
“பே.. பே.. பே.. பேய்..” என்று அலறினான்..
“டேய் முரளி.. ஏண்டா இப்படி அலறுகிற..?”
“இது யதுவின் குரல் மாதிரியே இருக்கே..”
“ஏண்டா.. என் குரல்.. என் குரல் போல இருக்காமல் உன் குரலைப் போலவா இருக்கும்..?”
“யது.. என் நண்பனே.. நீயாடா இது..?”
முரளி உருக்கத்துடன் வினவ.. யதுநந்தன் திகைத்துப் போனான்..
‘என்றைக்கும் இல்லாத திருநாளாய்.. இவன் ஏன் இப்படி பரிதாபப்படுகிறான்..?’
“ஏண்டா.. இப்படிக் கேட்டுத் தொலைக்கிற..?”
“உன் முகத்தைப் போய் கண்ணாடியில் பார்..”
முரளி அடக்க முடியாமல் சிரிக்க.. அருகிலிருந்தவர்கள் இன்னும் வினோதமாய் பார்க்க.. யதுநந்தன் அவசரமாக எழுந்து பாத்ரூமை நோக்கிப் போனான்..
பாத்ரூமில் இருந்த கண்ணாடியில் தன் முகத்தை பார்த்தவன் அதிர்ந்து போனான்.. முகமெல்லாம் கரித்தூள் அப்பி பார்க்கவே சகிக்க முடியாமல் இருந்தது அவன் முகம்.. அவசரமாய் அங்கிருந்த சோப்பை எடுத்து முகம் கழுவிவிட்டு வெளியே அவன் வரவும்.. மாடியிலிருந்து எதற்காகவோ சிரித்துக் கொண்டே இறங்கிய ராதா.. அவனுக்கு எதிரே வரவும் சரியாக இருந்தது..
‘எப்படிச் சிரிக்கிறாள் பார்.. என் முகத்தில் கரியை பூசிவிட்ட சந்தோஷத்தில் சிரித்து மகிழ்கிறாளா..’ மனதில் வன்மத்துடன் யதுநந்தன் அவளைப் பார்க்க.. தன் சிரிப்பு மாறாதவளாய்.. அவனது பார்வையை உணராமல் ராதா அவனைக் கடந்து போனாள்..
“எங்கேடா போயிட்ட.. தாலி கட்டி முடிச்சாச்சு.. வா சாப்பிடப் போகலாம்..” முரளி அழைத்தான்..
பல்லைக் கடித்துக் கொண்டு இருந்த யதுநந்தன் பதில் சொல்லாமல் அவனுடன் போனான்.. அவர்களுக்கு எதிரே இருந்த வரிசையில்.. ராதாவும், சுபாவும் வந்து சாப்பிட அமர்ந்தனர்.
குனிந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த யதுநந்தனின் கவனத்தைக் கவரும் வகையில் சத்தமாக சிரித்தாள் சுபா.. அவளது எதிர்பார்ப்பின்படி.. யதுநந்தன் அவர்களைப் பார்த்தான்.
“ராதா.. நம்மை மட்டம் தட்டினவங்களை.. நாம் நினைத்தது போலவே மட்டம் தட்டி விட்டோம்டி..”
யதுநந்தனின் முகம் சுருங்க.. அதைக் கவனிக்காமல் ராதா.. சுபா ஏதோ சொல்கிறாள் என்று சிரித்து வைத்ததுடன் மட்டுமில்லாமல்.. தலையையும் ஆட்டி வைத்தாள்.
“அப்புறம்.. சும்மாவா.. பெண்களை மகாசக்தின்னு சொல்கிறாங்க.. ஒரு பெண் நினைத்தால்.. எதையும் சாதிப்பாள்..” என்று வேறு சொல்லியும் வைத்துத் தொலைந்தாள்..
Reviews — Geethaiyen rathai / கீதையின் ராதை
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.