Chapter 03

0Shares

நுணலும் தன் வாயால் கெடுமென்றால்.. அந்த நுணல் தவறு செய்தது.. தன் வாயால் கெட்டது.

இங்கே சுபா நடத்திய சதி ஆலோசனையையும்.. அதன் பின்னால் அவர்கள் மூவருமாக சேர்ந்து… யதுநந்தனின் முகத்தில் கரியைப் பூசிவிட்ட நிகழ்ச்சியையும் தெரியாத அப்பாவி ராதா விழா நாளின் குதூகலத்தில்.. தான் என்ன பேசுகிறோம்.. அதனால் என்ன பின் விளைவு நேரப் போகிறது என்று அறியாமல் பேசி விட்டாள்.

தென்னை மரத்தில் தேள் கொட்டினால்.. பனை மரத்தில் நெறி கட்டிய கதையாய்… சுபா செய்த செயலுக்கு.. ராதா தன்னையறியாமல் தலைகொடுத்து.. தான் பிணையாகி விட்டாள்..

யதுநந்தன்.. ராதாவை என்ன செய்தால் தகும்… என்ற யோசனையோடு பார்க்க ஆரம்பித்தான்… அதை உணராத ராதா.. தன் போக்கில் பெண்ணின் பெருமையை அள்ளி வீசிக் கொண்டிருந்தாள்..

“ஆணுக்குப் பெண் அடிமையென்பது அந்தக் காலம்.. இப்போது ஆணால் பெண்ணை அவமதிக்க முடியாது.. என்ன சுபா.. நான் சொல்வது சரிதானே..”

ராதா கேட்ட கேள்விக்கு யதுநந்தனைக் கேலிப் பார்வை பார்த்தபடி சுபா பதில் கொடுத்தாள்.

“அதாவது.. நம்மிடம் யாராவது தேவையில்லாமல் வாய் விட்டால்… வாங்கிக் கட்டிக் கொண்டுதான் ஆகணும்னு சொல்கிற..”

“அதுவேதான்.. பெண்கள்ன்னா கிள்ளுக்கீரையா..? ஆண்களாலே செய்ய முடிவதை பெண்களால் செய்ய முடியாதா..?”

“அதுதானே.. நீ நினைத்தால் எதையும் செய்யலாம்.. கண்ணாடி பார்க்காத மூஞ்சிகளைக் கூடக் கண்ணாடியைப் பார்க்க வைக்கலாம்..”

சுபாவிற்கு தான் தப்பிக்க வேண்டும் என்ற எண்ணமோ.. தனக்குப் பதில் ராதாவை மாட்டிவிட வேண்டும் என்ற திட்டமோ துளிக்கூட இல்லை.. அவளுக்கு யதுநந்தனை சீண்ட வேண்டும்.. அவன் முகத்தில் கரி பூசிவிட்ட பெருமையைப் பறைசாற்ற வேண்டும் அவ்வளவுதான்.. அதனால்.. திட்டம் போட்டு செயலாற்றிய தன்னை விட்டுவிட்டு ராதாவை யதுநந்தன் முறைப்பதை அறியாமல் கோபத்தைத் தூண்டி விட்டுக் கொண்டிருந்தாள்… அவன் பல்லில் சாப்பாட்டை அரைப்பதற்குப் பதில் ராதாவின் மேலிருந்த கோபத்தை சேர்த்து அரைத்துக் கொண்டிருந்தான்..

கை கழுவும் இடத்தில்.. ராதா சுபாவிடம் தாழ்ந்த குரலில் எதையோ சொல்லிச் சிரிக்க… பதிலுக்கு யதுநந்தனைத் திரும்பிப் பார்த்து சுபா சிரித்து வைத்தாள்.

அவனுடைய முகத்தில் கரியைப் பூசியதைச் சொல்லித்தான் ராதா சிரித்துக் கொண்டிருக்கிறாள் என்று யதுநந்தன் நினைத்து விட்டான்..

“ம்ஹூம்.. உன்கூட ஆசையாய் கல்யாண வீட்டிற்கு வந்து ஒரு நாள் வீணானதுதான் மிச்சம்..” முரளி அலுத்துக் கொண்டான்.

“அதுதான் கொட்டிக் கொண்டாயே.. அப்புறம் என்ன..?” யதுநந்தன் எரிந்து விழுந்தான்.

“உனக்கு உன் கோபம்.. என் தவிப்பு உனக்கெங்கே தெரிய போகிறது..” தூரத்தில் சென்று கொண்டிருந்த சுபாவைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விட்டபடி முரளி கூறினான்.

“கொஞ்ச நேரம் உட்கார்ந்திரு முரளி.. இதோ வந்து விடுகிறேன்..”

ராதா மாடிப் படிகளில் ஏறிக் கொண்டிருப்பதை ஒரு வேட்டைப் புலியின் பார்வையோடு பார்த்த யதுநந்தன்.. முரளியை உட்காரச் சொல்லிவிட்டு அவசரமாய் அங்கிருந்து நழுவினான்.

“எங்கேடா அந்தப் பக்கம் போகிற..? வாசல் பக்கம்தான் மொய் எழுதிக் கொண்டிருக்கிறாங்க..” முரளி கூப்பிட்டான்.

“பாத்ரூமுக்கு போய்விட்டு வருகிறேண்டா..”

“எத்தனை தடவைதான் பாத்ரூம் போவே..?”

“அது என் இஷ்டம்.. நீ அடங்கி உட்காரு..”

“என்னை அடக்குவதிலேயே குறியாய் இரு..”

முரளி முணுமுணுத்துக் கொண்டே சுடிதார் பெண்கள் யாரும் பார்வை வட்டத்திற்குள் சிக்குகிறார்களா என்று தேட ஆரம்பிக்க.. யதுநந்தன் அவசரமாய் மாடிப் படிகளில் தாவி ஏறினான்.. ராதா ஓர் அறைக்குள் நுழைவதைப் பார்த்ததும் சுற்றுமுற்றும் பார்த்தான்… யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு சட்டென்று அவள் நுழைந்த அறைக்குள் அவனும் நுழைந்து விட்டான்.

பெட்டியைத் திறந்து எதையோ எடுத்துக் கொண்டிருந்த ராதாவைத் தவிர அறையில் யாரும் இல்லை.. யதுநந்தன்.. நிதானமாய் அறைக் கதவைத் தாழிட்டான், சத்தம் கேட்டுத் திரும்பிய ராதா.. விழிகளில் பயத்தை வாங்கினாள்.

“என்ன… என்ன… வேண்டும்..? ஏன்… கதவைச்சாத்தினீங்க..?” நடுங்கிய குரலில் கேட்டாள்.. அவளது விரல்கள் நடுக்க ஆரம்பித்தன..

“என்ன வேண்டுமா..? எனக்கு நீதான் வேண்டும்.. ஏன் கதவைச் சாத்தினேனா..? உன்னுடன் பேச்சு வார்த்தை நடத்த கதவைச் சாத்தினேன் வா.. பேச்சு வார்த்தை நடத்தலாம்..” யதுநந்தன் அவளை நெருங்கினான்.

“என்னுடன் பேச்சு வார்த்தை நடத்த என்ன இருக்கிறது..? நீங்கள் யார்ன்னே எனக்குத் தெரியாது.. நான் யார்ன்னு உங்களுக்குத் தெரியாது.. நமக்குள் பேச எதுவுமில்லையே..”

ராதா பயந்த முகத்துடன் பின்வாங்கினாள்..

“நமக்குள் எதுவுமில்லையா..? நிறைய இருக்கிறது மேடம்.. என் முகத்தில் கரியைப் பூசி என் முகத்தைக் கண்ணாடியில் பார்க்க வைத்து.. கைக்கொட்டிச் சிரித்த வீராங்கனையாச்சே.. நீ பெண்களின் வீரதீரத்தைப் பற்றி கொஞ்ச நேரத்திற்கு முன்னால் வாய் கிழியப் பேசியவளாச்சே நீ.. பெண் நினைத்தால் இதையும் செய்வாள்.. எதையும் செய்வாள்.. அப்படி.. இப்படின்னு.. அள்ளி வீசினியே.. இப்ப ஏன்.. கை விரல்கள் எல்லாம் தந்தியடிக்குது..?”

“ப்ளீஸ்.. நான் என் பெரியம்மா பெண்ணிடம் சும்மா பேசிக் கொண்டிருந்தேன்.. நீங்கள் அதைத் தப்பா நினைத்து விட்டீங்க போல..”

“ம்ஹூம்.. உன்னைச் சரியாகத்தான் நினைத்து வைத்திருக்கிறேன்.. எவ்வளவு தைரியம் இருந்தால் என் முகத்தில் கரிப் பொடியை வீசுவ..?”

“யார் வீசியது..? நானா..?”

“தெரியாதது போல நடிக்கிறாயா..?”

“நடிக்கிறேனா..? நானா..? நிஜமாகவே எனக்குத் தெரியாது.. நம்புங்க..”

“உன்னை நம்புவதா..?”

ராதா பயத்துடன் பின்வாங்கி.. சுவரின் மேல் சாய்ந்து நின்றுவிட்டாள்.. அவளது இருபுறமும் கை நீட்டி.. அவளை சிறை பிடித்த யதுநந்தன்.. அவளது முகத்தின் அருகே நெருங்கினான்..

“ப்ளீஸ்.. வேண்டாம்.. போய்விடுங்கள்..” ராதா பயத்துடன் கெஞ்சிக் கொண்டிருந்தாள்..

“போவதற்காக நான் வரவில்லை..”

“ஒரேயொரு நிமிடம்.. நான் சொல்வது உண்மையாக இருக்கக் கூடாதான்னு நினைத்துப் பாருங்க..”

“நான்தான் கண்ணெதிரே பார்த்தேனே..”

“எதைப் பார்த்தீங்க..?”

“நீ சிரித்துக் கொண்டே படியிறங்கி வருவதைப் பார்த்தேன்..”

“ஏங்க.. நான் உங்கள் முகத்தில் கரிப்பொடியை வீசியதைப் பார்க்காமல்.. சிரித்துக் கொண்டே இறங்கி வருவதைப் பார்த்தேன்னு சொல்கிறீங்களே.. இது உங்களுக்கே நல்லா இருக்கா..? இதுதான் உங்கள் புத்திசாலித்தனமா..?”

“ஏய்ய்..”

யதுநந்தன் கோபம் அதிகமாகி கர்ஜித்தான்.. அவனது தோள் வளைவின் இரு பக்கமும்.. சுவரோடு கையூன்றி அவன் நிற்க.. அந்தக் கைகளுக்குள் அகப்பட்டுக் கொண்டிருந்த ராதா.. அந்த நிலைமையிலும் அவனது விழியோடு விழி பார்த்தாள்.

“இந்த நிலைமையிலும் உன் எகத்தாளம் குறையவில்லையே..”

“இப்போது என் நிலைமைக்கு என்ன குறைச்சல்..?”

“தோற்றுப் போய் விட்டாலும்.. உன் திமிர் உன்னை விட்டுப் போகவில்லையே..”

“இன்னும் நான் உங்களிடம் என்னைத் தோற்கவில்லை..”

“பேச்சை நிறுத்திவிட்டு செயலில் இறங்கு என்கிறாயா..?”

“இல்லை.. கடைசிவரை போராடாமல் தோல்வியை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என்கிறேன்..”

“போராட்டத்தை ஆரம்பித்து விடலாமா..?”

“அதற்கு முன் இந்தப் போராட்டம் எதற்காகன்னு எனக்குக் காரணத்தைச் சொல்லிவிடுங்கள்..”

“நீ தேவையில்லாமல் என்னுடன் விளையாடி விட்டாய்.. பதிலுக்கு.. நான் உன்னிடம் விளையாடிப் பார்க்க வேணாமா..?”

“நான் உங்களிடம் எந்த விளையாட்டையும் வைத்துக் கொள்ளவில்லை.. அதுதான் உண்மை.. ஆனால்.. அதை நீங்கள் நம்பப் போவதில்லை.. அதனால் ஒன்றே ஒன்றை மட்டும் நான் கேட்கிறேன்.. நான் விளையாடி விட்டதாக நீங்கள் சொல்லும் செயலிலே நீங்கள் எதை இழந்தீங்க..? இப்போது நீங்க விளையாடிப் பார்க்க விரும்பும் விளையாட்டில் நான் இழக்கப் போவதை உங்களால் திருப்பிக் கொடுக்க நினைத்தாலும் திருப்பிக் கொடுக்க முடியுமா..?”

யதுநந்தன் திகைத்தான்.. அவனது வேகம் கொஞ்சம் குறைந்தது..

“உங்களிடம் கோபம் இருக்கிறது.. அதனால் குணமும் கட்டாயம் இருக்கும்..”

“பேச்சை திசை திருப்புகிறாயா..?”

“நிச்சயம் இல்லை.. நீங்கள்தானே பேச்சு வார்த்தை நடத்தலாம்னு சொன்னீங்க..? பேச்சென்று வந்தால்.. எல்லாவற்றையும் பேசிப் பார்த்துவிட வேண்டாமா..?”

“பேசு.. கண்மணிபேசு.. அமுதிலும் இனிய உன் வாய்மொழிகளைக் கேட்கத்தான் ஒடோடி வந்திருக்கிறேன்.. என் செவியில் இன்பத் தேன்வந்து பாய்ந்தது போல் இருக்கிறது.. நீ பேசு..”

யதுநந்தனின் கேலியை ராதா கண்டு கொண்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை.. அவள் தன் போக்கில் பேசிக் கொண்டிருந்தாள்..

“பெண்களின் பெருமையை பேசினால் என்ன..? நான் மட்டும்தானா பெண்..? உங்கள் அம்மாவும் பெண்தானே.. தங்கையும் பெண்தானே.. அவர்கள் ஒரு தவறு செய்தால் பொறுத்துக் கொள்ள மாட்டீங்களா..?”

தங்கையின் நினைவு வந்ததும்.. யதுநந்தனின் கை தானாக விலகியது.. ராதா நிம்மதி மூச்சு விட்டாள்..

0Shares

Reviews — Geethaiyen rathai / கீதையின் ராதை

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link