Chapter 09

0Shares

“உன்னோடு வாழாத..

வாழ்வென்ன வாழ்வு..

என் உள் நெஞ்சம்..

கேட்கின்றது..”

அருகேயிருந்த தள்ளுவண்டியிலிருந்து எஃப்எம் நேரயோவின் பாடல் காற்றில் கலந்து வந்து ராதாவின் காதுகளில் நுழைந்தது.. அவள் கொதிக்கும் மனத்தைக் கொஞ்சம் குளிர வைத்தது..

அலட்சியப் பார்வையுடன் நின்றிருந்த யதுநந்தனின் தோள் சாய்ந்து அந்தப் பாடலைப் பாடிவிட வேண்டும்.. அவனோடு வாழ்ந்துவிட வேண்டும்.. என்ற தவிப்பு அவள் மனதில் புயல்போல் உருவானது.. 

‘நான் யதுநந்தனின் மனைவி..’ மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்.. சொல்லும்போதே மனம் இனிக்க.. அவனது புறக்கணிப்பை புறக்கணித்து.. அவன் முகம் பார்த்து ஏங்கி நின்றாள்..

“இவ்வளவு நேரம் நான் சொன்னது உன் காதில் ஏறவே இல்லையா ராதா.. நான் சீக்கிரம் போக வேண்டும்.”

“நேற்று சாயந்திரம் முழுவதும்.. நான் உங்களை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தேன்..”

“எனக்கு வேலை இருந்ததும்மா..”

“அதற்காக.. என்னை மறக்கலாமா..?”

“ம்ச்ச்.. ஒரு நாள் உன்னைப் பார்க்க வரவில்லைன்னா நான் உன்னை மறந்து விட்டேன்னு அர்த்தமாகி விடுமா..?”

“நேற்றுக் காலையில்.. உங்கள் வீட்டிலிருந்துதானே கிளம்பினீங்க..?”

“ஆமாம்.. யாமினியை காலேஜில் விட்டுவிட்டு கம்பெனிக்கு போனேன்..”

“ஓ..”

இருட்டும் வரை அவனை எதிர்பார்த்து.. அவன் குரல் கேட்க அவள் தனியே தவித்து நிற்பாளே என்று அவனுக்கு ஒரு கணம் கூட நினைவுக்கு வரவில்லை.. ஆனால் அவனுடைய தங்கையை மட்டும் பொறுப்பாக கல்லூரியில் சேர்க்கும் கடமை நினைவுக்கு வந்திருக்கிறது..

ராதா தான் அநாதையாகிவிட்டது போல் உணர்ந்தாள்.. அவன் அருகிலிருக்கும் உரிமை தனக்கு இல்லை என்பதை அறிந்ததினால் ஏற்பட்ட தனிமை உணர்வு அவள் மனதில் கவிழ்ந்தது..

‘நான் உன் குடும்பத்தில் ஒருத்தியில்லையா..? உன் குடும்பம் வேறு.. நான் வேறா..? நான் அப்படி நினைக்கவில்லையே..! நீ வேறு.. நான் வேறு.. உன் குடும்பம் வேறு.. என் குடும்பம் வேறு என்ற எண்ணமே எனக்கு வந்ததில்லையே..! நீ மட்டும் ஏன்.. என்னைப் பிரித்து நினைத்து விட்டாய்..?’

“நந்து நீங்கள் என்னை விட்டு விலகிப் போவது போல எனக்கு இருக்கிறது..”

“ஏன்..? எனக்கு வேலை அதிகம் ராது.. புரிந்து கொள்..”

“எனக்கும் வேலையிருக்கிறது நந்து.. எம்.எஸ்.ஸி ஃபைனல் இயர் எக்ஸாம் ஸ்டார்ட் ஆகிவிட்டது.. நாளைக்கு ஃபர்ஸ்ட் எக்ஸாம்.. நான் உங்களுக்காக இங்கே நிற்கிறேன்..”

“உன்னை யார் இந்த மாதிரி.. பைத்தியக்காரத்தனமான வேலையைப் பார்க்கச் சொன்னது..?”

“நான் பைத்தியக்காரியா..?”

“பின்னே இல்லையா.. விடிந்தால் பரீட்சை.. நீ இங்கே வந்து நின்று கொண்டிருந்தால்.. உன்னை வேறு எப்படித்தான் நான் சொல்வது..?”

“உனக்கு இதுதான் தெரிகிறதா..? என் மனதில் உள்ளேயிருக்கும் காதல் தெரியவில்லையா..”

“ஓ..கே.. போகலாமா..?”

“அதற்குள்ளாகவா..? இப்போதுதானே வந்தீங்க..?”

“ஐந்து நிமிடம்தான் இருக்க முடியும்னு சொன்னேனா.. இல்லையா..? இப்போது பத்து நிமிடத்திற்கு மேல் ஆகிவிட்டது.. இன்றைக்கு இது போதும்.. கிளம்பு..”

‘போதுமா.. இது போதுமா.. இரண்டு நாள்கள் தவித்து இருந்தவளுக்கு.. இந்த நொடிப் பொழுது போதுமா..’

“இன்னும் கொஞ்ச நேரம் இருக்கக் கூடாதா..?”

“ம்ச்ச்.. எனக்கு வேலையிருக்கும்மா..”

‘எனக்கு மட்டும் இல்லையா..’ என்று கேட்கத் துடித்த நாவைக் கட்டுப்படுத்திக் கொண்டாள் ராதா.. கேட்டால் ‘நீ உன் வேலையைப் பார்க்க வேண்டியது தானே.. படிப்பை விட்டு விட்டு.. ஏன் பைத்தியம் போல் இங்கே வந்து நிற்கிறாய்..’ என்று கேட்டு வைப்பான் என்பதால்.. வாயை இறுக மூடிக் கொண்டாள்..

“வா.. உன்னை வீட்டில் டிராப் பண்ணி விடுகிறேன்..”

“வேண்டாம்.. நான் போய்க் கொள்கிறேன்..”

“இருட்டில் எப்படி தனியாகப் போவாய்..?”

“அது என் கவலை.. நீங்க வீணாய் கவலைப்பட வேண்டாம்..”

“இப்போ.. என்னிடம் அடிதான் வாங்கப் போகிறாய்.. ஏறுடி வண்டியில..”

அவன் அடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று அந்த நொடியில் அவளுக்குத் தோன்றியது.. உரிமையுடன் கூடிய இந்தக் கோபத்திற்காகத்தானே அவள் ஏங்கி நிற்கிறாள்..

“நேற்றும் இருட்டி விட்டது நந்து.. நான் தனியாகத்தான் இங்கே உட்கார்ந்திருந்தேன்.. ரொம்ப நேரம்.. உங்களை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தேன்.”

“அறிவைக் கடன் கொடுத்துவிட்டாயா..? இல்லை.. அறிவு என்பதே உனக்கு இல்லையா..?”

“நந்து..”

“இருட்டுகிற வேளையில் தனியாய் உட்கார்ந்திருந்தேன்னு சொல்கிறாயே.. ஏதாவது ஒன்றுகிடக்க.. ஒன்று ஆகியிருந்தால் என்ன செய்வது..?”

“என்னைப் புதைத்த இடத்தில் புல் முளைத்திருக்கும்.. எனக்காக நீங்கள் இரண்டு சொட்டு கண்ணீரை செலவழித்துவிட்டு.. மணியைப் பார்த்துக் கொண்டு ஓடியிருப்பீர்கள்..”

“நீ எதற்கு என்னை வரச் சொன்ன..?”

“உங்களைப் பார்க்க.. பேச..”

“இதுதான் நீ பேசும் லட்சணமா..?”

“எனக்கு இப்படித்தான் பேசத் தெரியும்..”

“மாற்றிக் கொள்..”

“ஏன்.. நான் என்ன தப்பாகச் சொல்லிவிட்டேன்..?”

“சண்டை போடத்தான் நாம் இங்கே வந்திருக்கிறோமா..?”

அவன் எரிச்சலுடன் வினவ.. அவள் உள்ளம் நைந்தாள்.. ‘இல்லையே.. உன்னோடு சிரித்துப் பேச ஆசைப்பட்டுத்தானே இங்கே வந்தேன்.. உன்னுடன் ஒரு வினாடி பேசிவிட்டால்.. விடியும் வரை என் படிப்பை விழித்திருந்து படிக்கும் ஜீவசக்தி எனக்குக் கிடைத்துவிடும் என்பதால்தான் ஓடி வந்தேன்.. உன்னுடன் சண்டை போட்டுவிட்டு.. ஒரு வினாடி.. என்னால் நிம்மதியாய் இருந்துவிட முடியுமா..? ஏன் என் மனதைப் புரிந்து கொள்ள மறுக்கிறாய்..?’

“வா.. ராதா.. என்ன யோசித்துக் கொண்டிருக்கிற..?”

“ஒரு கவிதை மனதில் தோன்றியது.. சொல்லவா..”

“வேண்டாம்ன்னா.. நீ விட்டுவிடப் போகிறாயா..? சீக்கிரம் சொல்லு..”

‘அதையும் சீக்கிரமாய்த்தான் சொல்ல வேண்டுமா..?’ மனதில் சலிப்பு வந்தது..

 “வாழ்வினிலே பகை யாவும் வென்று..

வாழ்ந்திடவே மனத்திண்மை உண்டு..

நீயென் பகையாய் மாறியதைக் கண்டு

என் நெஞ்சம் உடைந்து நொறுங்கியது

இன்று..”

“அட.. கவிதை சூப்பராக இருக்கே.. நீ எழுதியதா..? இல்லை எங்கேயாவது சுட்டாயா…?”

இவன் மாறவே மாட்டான் என்று அவளுக்குத் தோன்றியது.. அவளைத் தான் மாற்றப் பார்ப்பான்..

“நேரமாகும்.. நீ வீட்டுக்குப் போன்னு ஒரு ஃபோன் பண்ணிச் சொல்லியிருக்கலாமே நந்து..”

“நேற்றைக்குக் கதை நேற்றோடு.. அதைவிட்டு விடுகிறாயா..? ஐந்து நிமிடம்னு அரை மணி நேரமாகி விட்டது.. கிளம்பு தாயே..”

வேறு வழியின்றி அவன் பின்னால் ஏறி உட்கார்ந்தாள் ராதா.. வழியெல்லாம் அவன் எதையோ பேசிக்கொண்டே வர.. ராதா ‘ஊம்’ கொட்டிக் கொண்டிருந்தாள்.. அவன் பேசுவதைக் கேட்டுக் கொண்டே.. இப்படியே எங்காவது போய் விடலாமா என்று கேட்கத் தோன்றியதை வெளியே சொல்லாமல்.. மனதிற்குள்ளேயே அழித்தாள்..

அவனிடம் சொன்னால்.. அதற்கும் எதையாவது சொல்வான்.. அதற்குப் பேசாமல் இருந்து விடுவதே நல்லது என்று நினைத்தவாறு.. தெருமுனையில் இறங்கிக் கொண்டாள் ராதா..

“பை..”

“பை..”

வீட்டை நோக்கி நடந்தபோது.. திரும்பி அவனை ஒருமுறை பார்க்க வேண்டுமென்று அவளுக்குள் தோன்றியது.. திரும்பிப் பார்த்தாள்.. அவன் யாருடனோ.. செல்ஃபோனில் பேசிக் கொண்டிருந்தான்..

‘இவள் இன்னும் போகவில்லையா..’ அவன் மனம் கனிந்தது.. அவளைக் கையசைத்து.. அருகே அழைத்தான்..

அவசரமாய் முகம் மலர ஓடி வந்தவளைப் பார்த்தபடி வண்டியை விட்டு இறங்கியவன்.. தெருமுனையின் மரத்தின் கீழிருந்த இருட்டிற்குள் ஒதுங்கி நின்று.. அவளை நோக்கி கைநீட்டினான்..

ராதா நம்ப முடியாத ஆனந்தத்துடன்.. அவனது கைகளுக்குள்.. புகுந்து அவன் மார்பில் புதைந்தாள்.. அவள் முடி கோதி.. காதோரமாய் முத்தமிட்டான்..

“போக மனமில்லையா..?” என்று வினவினான்..

“ம்ம்ம்..” ராதாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது..

“ம்ச்ச்.. அழக்கூடாது.. நான் என்ன வேண்டுமென்றா செய்தேன்..? வேலையிருந்ததுடி..”

அந்த ஒரு வார்த்தையில் மனம் நிறைய விம்மி அழுதாள் ராதா.. அவள் மனம் நிறைந்து விட்டிருந்தது..

0Shares

Reviews — Geethaiyen rathai / கீதையின் ராதை

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link