Chapter 10

0Shares

எல்லாமே நீயென்று.. கடவுளிடம் சரண் புகுந்ததைப் போலத் தன் காதலனிடம் சரண் புகுந்திருந்த ராதாவின் நெற்றியில் சின்னதாக முத்தமிட்டு.. அவளது கண்ணீரைத் துடைத்து விட்டான் யதுநந்தன்..

“உன்னைக் காதலிக்கிறேனா.. இல்லையான்னு ஆரம்பத்தில் எனக்குப் பிடிபடவில்லை ராதா.. ஆனால்.. மெல்ல.. மெல்ல.. உன்னைக் காதலிக்க ஆரம்பித்து விட்டேன்.. புரிந்து கொள்..”

“ம்ம்ம்..”

“எனக்கு வேலை அதிகம்.. அதனால் உன்னை மறந்து விட்டேன்னு நினைக்கலாமா..?”

“ம்ம்ம்..”

“இப்படி அழுமூஞ்சியாய் நிற்காமல் சிரித்துக் கொண்டே டாட்டா சொல்லு.. இந்த இருட்டு நேரத்தில் மரத்தடியில் நாம் அதிகம் நேரம் நிற்கக் கூடாது..”

“ம்ம்ம்..”

“குட் கேர்ள்..”

அவளது முகம் மறைத்து கலைந்திருந்த முடியைக் கோதி விலக்கிவிட்ட யதுநந்தன்..

“போய் வரட்டுமா..?” என்றான்..

அவ்வளவு நேரமும்.. அவன் கூறியதற்கெல்லாம் கட்டுப்பட்டவள் போல் தலையை ஆட்டிய ராதாவின் மனம் அதிர்ந்தது..

‘கிளம்பிப் போய் விடுவானா..’ அவள் மனம் அடம்பிடித்தது..

அவளது மனத்தை உணர்ந்தவனாய் அவளது கன்னம் தட்டிச் சிரித்தான் யதுநந்தன்..

“காலையில் எக்ஸாம் இருக்கு.. போய் படி.. இன்னும் கொஞ்ச நாள்தான்.. யாமினிக்கும்.. இது ஃபைனல் இயர் எக்ஸாம்.. அவளுக்கு கேம்பஸ் இண்ட்டர்வியூவில் வேலை கிடைத்திருக்கு.. கொஞ்ச நாளில் அவள் மேரேஜ் முடிந்துவிடும்.. அடுத்த முகூர்த்தத்தில் உன் கழுத்தில் தாலியைக் கட்டி.. என் வீட்டிற்கு அழைத்துப் போய் விடுகிறேன்.. சரியா..?”

‘இப்போதே ஒரு மஞ்சள் கயிறில்.. சிறு மஞ்சள் துண்டைக் கட்டி.. என் கழுத்தில் கட்டிவிடு.. உன் பின்னாலேயே நானும்.. உன்னோடு வந்து விடுகிறேன்..’ என்று சொல்லத் துடித்தது அவள் மனது..

அதைச் சொல்லாமல் சிரித்தபடி கை அசைத்தாள் ராதா.. அவன் கிளம்பிச் சென்றதும்.. அந்தத் தெருவிலே வெறிச்சிட்டது போல உணர்ந்தாள்.. ஆள்கள் வந்து போய்க் கொண்டிருந்த சாலையில்.. ஒரு அநாதைபோல வீட்டிற்கு வந்தாள்..

“தினமுமா.. உன் ஃப்ரெண்டுடன் குரூப் ஸ்டடி பண்ணுகிற..?” மந்தாகிணி சந்தேகத்துடன் மகளை வினவினாள்..

“ஆமாம்மா..” சோர்வாக பதில் சொல்லியபடி குளியலறைக்கு புகுந்து கொண்டாள் ராதா..

“அவளை ஏன் கேள்வி கேட்டு தொந்தரவு செய்கிற..?” அப்பா கண்டிக்கும் குரலொளி கேட்டது..

“அதற்கில்லைங்க..” மந்தாகினி மறுத்துப் பேசினாள்.

“நீ எதற்காகச் சொன்னாலும்.. இப்போது அதைச் சொல்லாதே.. இது எக்ஸாம் டைம்.. அவள் படிக்க வேண்டாமா..?” அப்பா எடுத்துச் சொன்னார்..

முன்னறையில் பெற்றவர்கள் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தது ராதாவின் காதினில் விழத்தான் செய்தது.. அவள் சீக்கிரமாக வந்திருந்தால்.. இதைத் தவிர்த்திருக்கலாம்.. அவளால்தான் அதைச் செய்ய முடியவில்லையே..

ஆழ்ந்த பெருமூச்சுடன்.. முகத்தை துடைத்துக் கொண்ட ராதா.. புத்தகங்களை முன்னால் பரத்திக் கொண்டு அமர்ந்தாள்..

“காபி குடி..” மந்தாகிணி கோபம் மாறாத முகத்துடன் அவளிடம் காபியை நீட்டினாள்..

“ஸாரிம்மா.. என் மேல் கோபமா..?”

“உன் அக்கா ஸ்வேதாவும் தான் படித்தாள்.. வேலைக்குப் போனாள்.. ஒரு நாள்கூட லேட்டாக வந்ததில்லை ராதா..”

“அதுதான் நான் ‘ஸாரி சொல்லி விட்டேனே..'”

“அவளுக்குக் கல்யாணமாகிப் போகும்வரை.. உன்னைப் போல் இப்படி அவள் கலங்கடித்ததில்லை..”

“இப்ப எதுக்கும்மா.. எதையெதையோ பேசுகிறீங்க..?”

“நீ பேச வைக்கிறாயே..”

மந்தாகினி அறைக் கதவை ஓங்கிச் சாத்திய வேகத்தில் அவளது கோபத்தின் பரிமாணம் வெளிப்பட்டது.. ராதாவின் கண்கள் கலங்கின.. தாயின் கோபத்தில் இருந்த நியாயத்தை அவள் உணராமல் இல்லை..

‘நந்து கொஞ்சம் சீக்கிரமாக வந்து பேசிப் போகலாம்.. ஒரு பெண்ணிற்கான சுதந்திரம் வரையறுக்கப்பட்டது.. குறிப்பிட்ட நேரத்திற்குள் பார்த்துவிட்டால் தேவலைன்னு அவனிடம் யார் சொல்வது..’ ராதா பெருமூச்சு விட்டாள்..

சொன்னால் கோபித்துக் கொள்வான்.. ‘நீ சொல்கிற நேரத்திற்கு எல்லாம் என்னால் வரமுடியாது என்பான்.. அதிகம் பேசி விட்டால்.. அவளையே எதிரியைப் பார்ப்பது போல் பார்க்க ஆரம்பித்து விடுவான்..’

அவனது கோபத்தை தாங்கிக் கொள்ளும் அன்பு கொண்ட ராதாவிற்கு.. அவளது எரிச்சலைத் தாங்கிக் கொள்ளும் சக்தி இல்லையே..

ராதா படிப்பில் கவனத்தைச் செலுத்த முயன்றால், யதுநந்தனின் நினைவுகளைப் புறம்தள்ள முடியா விட்டாலும்.. சீக்கிரத்தில் அவள் படிப்பில் ஆழ்ந்து போனாள்..

புதிதாக கார் வாங்கியிருந்தான் யதுநந்தன்.. கோவிலுக்கு போய்விட்டு.. அதே சந்தோஷத்துடன்.. கம்பெனியை நோக்கி காரைச் செலுத்தும் போது, வழியில் ஆட்டோவை அழைத்துக் கொண்டிருந்த முரளியைப் பார்த்தான்.. அவன் அருகில் காரை நிறுத்தி..

“ஏறிக்கடா..” என்றான்..

“இது உன் காரா..?”

“ஆமாம்..”

“சொல்லவே இல்லை..”

“இப்போதுதான் சொல்லிவிட்டேனில்ல.. பேசாமல் வா..”

“என்னவோ போடா யது.. புது காரு.. புது காதலினு கலக்குற போ..”

“புது காதலியா..? அவள் பழைய காதலிடா.. உன்னைப் போல மாதத்திற்கு ஒரு காதலியைத் தேடற ஆள் நானில்ல..”

“எனக்கு மட்டும் என்ன.. மாதத்திற்கு ஒரு காதலியை மாற்றணும்னு வேண்டுதலா..? அது என்னவோ.. எனக்கென்று அடுத்தவனுக்கு நிச்சயம் பண்ணின பெண்களாகப் பார்த்து காதலியாய் மாட்டித் தொலைக்கிறாங்க.. அதுக்கு நான் என்னடா பண்ண..?”

“அந்த மட்டிலும்.. ‘உன்னை என் அண்ணனாக நினைக்கிறே’னு யாரும் சொல்லிவிடவில்லையே..”

“நான் சொல்ல விடவில்லை…. கபால்ன்னு கையெடுத்து கும்பிட்டு.. அம்மா தாயே.. வாயைத் திறக்காம இடத்தைக் காலி பண்ணுன்னு கட்அண்ட் ரைட்டா சொல்லிவிடுவேன்..”

“அதுசரி.. நீ எப்போ கார் வாங்கப் போகிற..?”

“கூடிய சீக்கிரம் வாங்கிட வேண்டியதுதான்.. சுபா கூட ‘நீங்க காரில் வந்தால்.. எனக்குப் பெருமையாயிருக்கும் முரளி’ன்னு சொன்னாள்..”

“சுபான்னா சொன்னே..?”

“ஆமாம்.. அதுக்கென்ன இப்ப..?”

“அடப்பாவி.. அந்த பிட்டு.. இன்னும் ஓடுதா..?”

“வாழ்க்கை பூராவும் ஓடும்ன்னு நினைக்கிறேன்..”

“நீ ஒவ்வொரு தடவையும் இந்த டயலாக்கைத்தான் மறக்காமல் சொல்கிற..”

“இந்தத் தடவை வெற்றி நிச்சயம்டா..”

“பார்த்துடா மச்சான்.. அவள் என் முகத்திலேயே கரியைப் பூசினவள்.. ஜாக்கிரதையாய் இரு..”

“என் முகத்தில் காதலைத்தான் பூசுவாள்..”

“நம்பிக்கை..? ம்ஹூம்.. நீ திருந்தவே மாட்டே..”

“நான் ஒருத்தன் திருந்தாவிட்டால்.. இந்த உலகத்திற்கு ஒன்றும் நஷ்டம் வந்துவிடாது..”

“எப்படியோ.. நீ நல்லா இருந்தால் சரிதான்.. எனக்கு வேறென்ன வேண்டும்..?”

“என் கதையை விடு.. உன் கதைக்கு வா… அதுதான் காதலில் மூழ்கி கரை சேர்ந்திட்டீங்களே.. காலாகாலத்தில் கல்யாணத்தைப் பண்ணிக் கொள்ள வேண்டியதுதானே..?”

“யாமினியின் கல்யாணம் முடிய வேண்டாமா..?”

“அதற்காக நீ உன் கல்யாணத்தை தள்ளிப் போடுகிறாயா..? என் கதையைப் பார்த்த பின்னாலுமா.. இப்படி விஷப் பரீட்சையில் இறங்கியிருக்கிற.. அவள் பாட்டுக்கு ஒரு நாள் கல்யாண இன்விடேஷனை நீட்டித் தொலைத்து விட்டால்.. என்னடா செய்வே..?”

சரக்கென்று காரை பிரேக்கடித்து நிறுத்தினான் யதுநந்தன்.. அவன் முகத்தில் கோபம் கொந்தளித்தது.

“இறங்குடா..” என்றான்..

“யது.. இட்ஸ்.. ஜஸ்ட் பார்ஃபைன்..”

“விளையாட்டுக்குப் பேசினாயா..? எதில்தான் விளையாடுவதுன்னு ஒரு விவஸ்தையில்லையா..? நீ ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் முரளி.. நான் அவளை விட்டு விலகினாலும்.. அவள் என்னை விட்டு விலகமாட்டாள்..”

“யது..”

“ஏய்.. எனக்கு காதல் மீது நம்பிகை கிடையாதுடா.. அந்தக் கல்யாண மண்டபத்தில் எனக்கு அவள் மேல் ஒரு ஈர்ப்பு வந்தது என்னவோ உண்மைதான்.. பழகிப் பார்க்கத்தான் முதலில் நினைத்தேன்.. அவளுடன் பழகிய பின்னால்.. விலகிவிட என்னால் முடியவில்லையடா..”

“நான் சொன்னதைப் போய் இவ்வளவு சீரியஸாக எடுத்தக் கொள்ளணுமாடா.. நீ இப்படியெல்லாம் டென்சன் ஆக மாட்டாயே..”

“மாட்டேன்தான்.. ஆனால் ராதா விசயத்தில் டென்சன் ஆவேன்.. அவள் இவ்வளவு தீவிரமாய் என்னைக் காதலிக்க ஆரம்பிப்பாள்ன்னு கனவிலும் நான் நினைக்கவில்லைடா.. அவளின் ஆவேசமான அன்பை உணர்ந்தவன் நான்.. அவளால் காதலிக்கப்படுவது எனக்குப் பிடித்திருக்கிறது.. ஆனால், எந்த நொடியில் அவளை நான் காதலிக்க ஆரம்பித்தேன்னு எனக்கே தெரியவில்லை..”

“உன் நன்மைக்குத்தான் சொல்கிறேன் யது.. அதிகமான அன்பை அவள் மீது வைக்காதே.. ஒருவேளை.. பிரிவு வந்து விட்டால்.. அதைத் தாங்கிக் கொள்ளும் பக்குவத்தை உனக்குள் வளர்த்துக் கொள்..”

முரளியின் வார்த்தைகளில் வெளிப்பட்ட பொறாமையை யதுநந்தன் சட்டென்று புரிந்து கொண்டான்.

“இந்தக் கவலையே உனக்கு, வேண்டாம் முரளி.. என்னைத்தவிர.. இன்னொருவனை அவள் ஏறெடுத்தும் பார்க்க மாட்டாள்.. ஒருவேளை நான் அவளை விட்டு விலக நினைத்தேன்னு வை.. அந்த நொடியில் அவள் உயிரை விட்டுவிடுவாள்..”

0Shares

Reviews — Geethaiyen rathai / கீதையின் ராதை

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link