Chapter 13
“சொல்லுங்க அண்ணா.. அப்புறம்.. என்னைப் பற்றி அவர் வேறு என்ன சொன்னார்..?”
‘அவளால் காதலிக்கப்படுவது எனக்குப் பிடித்திருந்தது.. ஆனால் போகப் போக.. நானும் அவளைக் காதலிக்க ஆரம்பித்துவிட்டேன்…’ யதுநந்தனின் வார்த்தைகள் முரளியின் மனதில் தோன்றின..
“அவளால் காதலிக்கப்படுவது எனக்குப் பிடித்திருக்கிறதுன்னு சொன்னான்ம்மா..”
அழகாக.. யதுநந்தன் சொன்ன அடுத்த வார்த்தையை மறைத்துவிட்டு பேசினான் முரளி..
‘பெருமாளே..!’ ராதாவின் மனம் பரிதவித்தது..
‘எனக்கு வழிகாட்டு.. அன்றைக்கு கீதை சொல்லி பார்த்தனுக்கு வழிகாட்டிய பார்த்தசாரதியே… எனக்கும் வழிகாட்டு… என் மனமெல்லாம் அவன் நிறைந்திருக்கிறான்… அவன் எனக்கு இல்லையென்றாகி விட்டால் நான் என்ன ஆவேனென்று எனக்கே தெரியவில்லை… என் வாழ்நாளின் வாழ்க்கையை நான்
வாழ எனக்கு அவன் வேண்டும்… அவனுடைய காதல் வேண்டும்..!’
இதை நினைக்கும் போதே..
‘அவன் என்னைக் காதலிக்கவில்லையே.. நான் தானே அவனைக் காதலிக்கிறேன்..’ என்ற ஏக்கம் ராதாவின் மனதில் பொங்கி எழுந்தது..
அவள் படித்தவள்.. பெற்றவர்களுக்கு செல்லப் பெண்.. மிக அதிகமான சம்பளத்துடன் பெங்களூரில் அவளுக்கு வேலை கிடைத்திருக்கிறது.. ஆனால்.. அவளின் இத்தனை அடையாளங்களையும் மறந்து.. யதுநந்தனின் காதலுக்காக மட்டுமே ராதா ஏங்கினாள்… அவன் காலடியில் ஒரு யாசகியாக மண்டியிடுவதைப் பற்றி அவள் கொஞ்சம் கூட யோசிக்கவில்லை.. தயங்கவில்லை.. கவலைப்படவில்லை..
அவள் கவலைப்பட்டதெல்லாம்.. யதுநந்தனின் காதலைதான் இழந்து விடக்கூடாது என்பதற்காக மட்டும்தான்..
“அவர் ஏதோ நினைவில் அப்படிச் சொல்லியிருப்பார்..”
“அவன் அவ்வளவு தீவிரமாய் யாரையும் நினைக்க மாட்டான்ம்மா.. எனக்கு அவன் குணம் தெரியும்..”
“எனக்கும் தெரியும்..”
“என்ன தெரியும்.. இப்போது யாமினிக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்துக்கிட்டு இருக்காங்க.. மாப்பிள்ளைக்கு ஒரே தங்கை.. அதுவும் கம்ப்யூட்டர் என்ஜினீயர்தான்.. பெண் கொடுத்து.. பெண் எடுக்கலமுன்னு பேச்சு அடிபடுது.. இது உங்களுக்குத் தெரியுமா..?”
“அதற்கெல்லாம் அவர் ஒப்புக் கொள்ளமாட்டார்..”
“யாமினிக்கு மாப்பிள்ளையை பிடித்துவிட்டது.. தங்கைக்காக அவன் எதையும் செய்வான்..”
‘செய்து விடுவானோ..!’ ராதா இதயம் நடுங்கினாள்.. அன்று ஒருநாளில்.. அவள் காத்திருக்கும் போது.. அவளுக்கு தகவல் சொல்ல நேரமில்லையென்று சொல்லிவிட்டு.. தங்கையைக் கொண்டுபோய் கல்லூரியில் விட்டு வந்தேன் என்று சொன்னவன்தானே அவன்.. அவன் செய்தாலும் செய்வான்.. அவன்தான் ராதாவைக் காதலிக்கவில்லையே..
ராதா மனம் தளர்ந்தாள்.. யதுநந்தனின் மேல் அவள் கொண்டிருந்த அளவு கடந்த காதலே.. அவளுடைய நிம்மதியை பறித்து.. உயிரைக் குடிக்க ஆரம்பித்தது..
“அப்போ.. நான் கிளம்புகிறேன்ம்மா.. பார்த்து இருந்துக்கங்க.. என்னவோ.. என் மனதில் பட்டதைச் சொல்லிவிட்டேன்.. ஒருவர் மேல் அளவுக்கு அதிகமான அன்பை வைக்கக் கூடாதும்மா.. ஒருவேளை பிரிவு வந்துவிட்டால்.. அதைத் தாங்கிக் கொள்ளும் பக்குவமும் உங்களுக்கு வேண்டும்..”
‘நீ நாசமாய் போக..’ என்று முறைத்தாள் ராதா..
‘கூடப் பிறந்தவள் போல் என்று சொல்லிக் கொண்டே என் உயிரைக் குடிக்கும் வார்த்தையைச் சொல்லுகிறாயேடா பாவி.. பிரிவு வந்தால் நான் செத்துவிடுவேன்டா..’
அவள் மனதிற்குள் தன்னை அவமரியாதையாய் விளிப்பதை அறியாமல் முரளி நடையைக் கட்டினான்.
ராதா வெகுநேரம் அசையாமல் கலங்கிப் போய் உட்கார்ந்திருந்தாள்.. வெகுநேரம் கழித்து வந்த யதுநந்தன்.. தன் வழக்கப்படி மணிபார்த்தபடி அவளருகே அமர்ந்து..
“ம்ம்.. அப்புறம்.. சீக்கிரம் சொல்லு.. எனக்கு நேரமாகி விட்டது..” என்றான்..
ராதா வேதனையுடன் கண்களை மூடித் திறந்தாள்..
“நீங்க இப்போதுதான் வந்தீங்க நந்து..”
“அதற்காக இங்கேயே குடியிருக்கச் சொல்கிறாயா..?”
“குடியிருந்தால் தப்பில்லை.. எனக்கு உங்களிடம் பேச வேண்டும்..”
“பேசு..”
அவன் என்னவோ எளிதாக சொல்லிவிட்டான்.. பேச நினைத்த வார்த்தைகள் மறந்து போய்.. ‘எதைப் பேசுவது.. எப்படிப் பேசுவது..’ என்று தெரியாமல் ராதான் தவித்தாள்..
“பேசேண்டி..”
அந்த ஒரு சொல்லில் உயிர் பெற்று முகம் பிரகாசிக்க அவனைப் பார்த்தாள் ராதா..
“நந்து..”
“ம்ம்.. சொல்லு..”
“ஐ லவ் யு..”
அவன் தன் வழக்கப்படி முல்லைப் பற்கள் வரிசை கட்டித் தெரிய பளீரென்று சிரித்தான்..
“இதைச் சொல்லவா.. இவ்வளவு திணறினாய்..? இன்னும் நீ மாறவே இல்லை ராதா.. நான் முதன் முதலாய் உன்னைப் பார்த்தபோது எப்படித் திணறினாயோ.. அப்படியேதான் இன்றைக்கும் இருக்கிறாய்..”
‘அது உனக்குப் பிடித்திருந்ததா..?’ ராதா மனதிற்குள் கேட்டுக் கொண்டாள்..
‘அவளைப் பார்த்தால் எனக்கு ஒரு ஈர்ப்பு வருகிறதுன்னு சொன்னாயாமே.. இது வெறும் ஈர்ப்பு மட்டும்தானா..?’
“யாமினிக்கு மாப்பிள்ளை பார்க்கிறீங்களாமே..”
“யார் சொன்னது..?”
“முரளி..”
“ஓ.. அவன் சொன்னானா..?”
நண்பனின் மேலிருந்த நம்பிக்கை மாறாமல் இயல்பாக யதுநந்தன் பேசினான்..
“யாமினிக்கு மாப்பிள்ளையை பிடித்து விட்டதாமே..?”
“ஆமாம்..”
“மாப்பிள்ளைக்கு ஒரு தங்கை இருக்கிறாளாமே..?”
“இருக்கிறாள்..”
“அவளும் உங்களைப் போல ஒரு கம்ப்யூட்டர் என்ஜினீயர் தானாமே..?”
ராதாவின் கேள்விகள் போகும் திசையை யதுநந்தன் கண்டுபிடித்து விட்டான்.. அவனது புருவங்கள் உயர்ந்தன..
“இப்போது.. நீ என்னதான் சொல்ல வருகிறாய்..?”
“அவங்க வீட்டில் பெண் கொடுத்து.. பெண் எடுக்க விருப்பப் படறாங்களாமே..”
“ராதா.. இது எனக்கு சரிவராது.. முரளிக்கு எதையும் மறைத்து பேசும் பழக்கம் கிடையாது..”
“ஓ.. அப்போ.. நீங்க என்னிடமிருந்து எதை வேண்டுமானாலும் மறைப்பீங்க..?”
“உன் பேச்சில் அதட்டல் தென்படுகிறது ராதா.. வேண்டாம்.. எனக்கு இது பிடிக்காது..”
ராதா மனம் அதிர்ந்தாள்.. அவளுடைய, அவன் மீதான கோபத்தை.. அவள் யாரிடம் காட்டுவாள்..? அவன் மீதுதானே அதைக் காட்ட முடியும்..! அவன் யாரோ ஒரு மூன்றாம் மனிதனா..? அவளுக்கு உயிர் மூச்சாய் இருப்பவன் தானே..
பேச நினைக்கும் வார்த்தைகளைப் பேச முடியாமல் போவது பெரும் துயரம்.. அந்தத் துயரைத்தை யதுநந்தன் தினம் தினம் ராதாவிற்கு அளித்து வந்தான்.. அதை உணராதவனாய் அவளையே குற்றவாளியாகவும் ஆக்கிவிட்டான்..
“நீங்கள் உங்களைப் பற்றி மட்டும்தான் எப்போதுமே நினைப்பீங்களா நந்து..? என்னைப் பற்றி கொஞ்சம் கூட யோசிச்சுப் பார்க்க மாட்டீங்களா..?”
“என்னத்தை யோசிக்கச் சொல்கிற..?”
“அதை நான் சொல்லி நீங்கள் செய்வது பெரும் கொடுமை..”
“இப்படிப் பூங்காவில் நான்கு பேர் பார்க்கும் இடத்தில் உட்கார்ந்து கொண்டு உன்னிடம் வழக்காடுவது.. அதைவிட பெரும் கொடுமை..”
“எனக்குப் பதில் சொல்ல வேண்டியது உங்களுக்குக் கடமை இல்லையா..?”
“அதை நான் சொல்ல வேண்டும்.. நீ சொல்லக் கூடாது..”
“நந்து.. நான் ‘மிஸஸ் யதுநந்தன்..’ என்ற உணர்வோடும்.. நினைவோடும் வாழ்பவள்..”
“அதுவும் உன் பிரச்சனை.. என்பிரச்சனையில்லை ராதா..”
“நந்து..”
“என்னைக் கட்டுப்படுத்த நினைக்காதே.. நான் சுதந்திரமாய் வாழ்ந்து பழக்கப்பட்டவன்.. கேள்வி கேட்டால் எனக்குப் பிடிக்காது..”
‘பூவேலி போடாதே என்கிறான்.. அவள் வேலிபோட நினைக்கவில்லை.. அவனைக் கட்டுப்படுத்தவும் முனையவில்லை என்பதை எப்படி அவனுக்கு புரிய வைப்பது என்று தெரியாமல் ராதா மனம் கலங்கினாள்..’
‘நீ நீயாய் இரு.. உன் சுதந்திரத்தை நான் தடை செய்ய மாட்டேன்.. நான் கேட்பதெல்லாம் என்ன..? உன் இதயத்தில் எனக்கென்று சிறு துளி இடம்… அது
எனக்கு இருக்கிறதா என்பதை அறியத்தானே நான் ஆசைப்பட்டேன்..? வேற என்ன கேட்டேன்..?’
யதுநந்தனோ.. கோபத்தில் கொதி கலனாக இருந்தான்.. ‘இவள் யார் என்னைக் கேள்வி கேட்க..?’ என்பது மட்டுமே அவனுக்கு நினைவாக இருந்தது..
அவன் ராதாவைக் காதலித்தான்தான்.. அதற்காக அவளது கட்டுக்குள் அடங்க விரும்பவில்லை… ராதாவின் காதல் தன்னைக் கட்டுப்படுத்துவதாய் அவன் உணர்ந்தான்..
முதல் முறையாக.. அவர்கள் இருவருக்குள்ளும் ஒரு விரிசல் வந்தது..
Reviews — Geethaiyen rathai / கீதையின் ராதை
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.