Chapter 14

0Shares

ராதா பூஜையறையில் கண்மூடி நின்றிருந்தாள்.. வீட்டில் யாருமில்லை… அவளது கண்ணீரைக் கட்டுப்படுத்த வேண்டுமென்ற அவசியமில்லை என்ற உணர்வில்.. தடையில்லாமல் அவள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்துக் கொண்டிருந்தது..?

‘இந்தத் தடையில்லாத உணர்வைத்தான் யதுநந்தனும் விரும்புகிறான் என்று அவளுக்குத் தோன்றியது.. அவனது விருப்பத்தில் இருந்த நியாயமும் அவளது பக்திக்கு உறைத்தது..’

கண்முன் இருந்த கிருஷ்ணனின் படத்தை அவள் உற்று நோக்கினாள்..

‘குருஷேத்திர போர்க்களம்..’ அவள் கண்முன் விரிந்தது.. போர் புரிய முடியாதவனாய் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு… கண்மூடி… கைகுவித்து… மண்டியிட்டு.. சரண் அடைந்திருக்கும் அர்ஜூனனுக்கு கீதை சொல்லி.. பாதை காட்டிக் கொண்டிருக்கிறான் கிருஷ்ணன்..

‘எதை நீ கொண்டு வந்தாய்..?’ என்று கேட்கிறான்..

ராதா பரிதவித்தாள்.. பார்த்தசாரதியிடம் தனக்கும் பாதைகாட்டச் சொல்லிக் கேட்டு விம்மி அழுதாள்..

‘எதையும் நான் கொண்டு வரவில்லையே மனதை மட்டும் நீ ஏன் கொடுத்தாய்..?

எல்லாமும் மாயை என்று சொல்லும் நீ.. ஆண்டாளை மட்டும் அடைக்கலமாய்,

ஏன் சேர்த்துக் கொண்டாய்..?

அவளது கேள்விக்கு பார்த்தசாரதியிடம் பதில் கிடைக்குமா..? என்று கடவுளின் பாதம் பார்த்தாள் ராதா..

‘கடமைகளைப் புரிந்து கவலை விடு.. என்று சொன்னாயே.. கடமைகளைப் புரிய எனக்கு வாழ்வதற்கான ஆசை வேண்டாமா..? நான் வாழ ஆசைப்படுவதே.. யதுநந்தனை அடைய வேண்டும் என்பதற்காகத்தானே..’

கிருஷ்ணன்ராதாவைப் புன்னகையுடன் பார்த்தான்.. ‘ஏன் என்னைப் பார்க்கிறாய்..? எனக்கும் கீதை சொல்..’ என்று வேண்டிக் கொண்டிருந்த ராதாவின் மனதினில் கீதையின் சாராம்ச பாடல் ஒலித்தது..

‘சுகத்தில் விருப்பும்.. துன்பத்தில் துயரும் இன்றி..

அனைத்திலுமே.. அபிமானங்கள் இல்லாத.. ஆன்றோன்

ஞானம் பெறுவானே..’

பளீரென்று ராதாவின் மூளையில் மின்னல் அடித்தது… இதுதானா…? இதேதானா..? அவளது துயரத்திற்கான மூலகாரணம் யதுநந்தனின் மேலிருக்கும் அவளது கரை கடந்த விருப்பம்.. அதைத் துறக்கச் சொல்கிறதா கீதை..?

முடியுமா..? கீதையின் பாதையில் நடக்க.. இந்த ராதையால் முடியுமா..? யதுநந்தனின் மேலிருக்கும் ஆசையைத் துறந்து.. அவனை மறந்து.. விலகிச் செல்வது அவளால் சாத்தியப்படுமா..?

ராதா பூஜையறையை விட்டு வெளியேறினாள்.. ‘நீ வழி கேட்டாய்.. நான் வழி சொல்லி விட்டேன்..’ என்ற பாவனையில் பூஜையறையில் பகவான் சிரித்துக் கொண்டிருந்தான்..

‘நீ கொடுமை செய்கிறாய் கிருஷ்ணா..’ ராதா மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்..

‘உன்னைச் சரணடைந்தேனே.. நீ எனக்குச் சொல்லும் கீதை இதுதானா..? நீ அன்று உன்னைக் காதலித்த அந்த ராதைக்கும் அநீதியை இழைத்தாய்.. இன்று.. எனக்கும் அதே அநீதியைத் தான் இழைக்கிறாய்.. காதலிக்க ராதையையும்.. திருமணத்திற்கு ருக்மணியையும்.. கொண்டவன்தானே நீ..? எனக்கு இந்தப் பாதையைத்தான் காட்டுவாய்..’

ராதாவிற்கு துக்கமாக வந்தது.. ஏன்தான் இந்தப் பெயரைத் தனக்கு வைத்தார்களோ என்று நினைத்துக் கொண்டாள்.. ராதை.. காதலின் அடையாளம்.. கல்யாணத்தின் அடையாளமல்ல.. அவள் நினைத்த வாழ்க்கையை வாழ முடியாத துரதிர்ஷ்டசாலி..

‘உனக்குக் கருணையில்லை கடவுளே.. என்னைப் படைத்து.. என்னுடன் மனதையும் படைத்து.. மனதினில் ஒரு காதலையும் படைத்து.. அது கிடைக்காமல் தட்டியும் பறிக்க நினைக்கிறாயே.. என்னைப் பார்த்தால் உனக்குப் பாவமாக இல்லையா..?’

யதுநந்தனிடம் கேட்க முடியாத இந்தக் கேள்வியை கடவுளிடம் கேட்டாள் ராதா..

அவன்தான் ஒரே வார்த்தையில் அவளுடைய இதயத்தைப் பிளந்து விட்டானே..?

“ஜூலி கணபதின்னு ஒரு படம் வந்திருக்கு தெரியுமா..? நீ அச்சு அசல் ஜூலி கணபதிதான் ராதா.. என்ன மாதிரியான ஆளுமை குணத்தை என் மேல் திணிக்கப் பார்க்கிறாய்..?”

‘இதைச் சொல்வதற்கு பதில் நீ கத்தியை எடுத்து என்னைக் குத்திக் கொன்றிருக்கலாம்..’ என்று ராதா மறுகினாள்..

“நந்து.. அந்த ஜூலி கணபதி கேரக்டர் ஒருவகையான சைக்கோ..”

“நீ.. அதைப்போல் மாறிக் கொண்டு வருகிறாய்.. இது ஏன் உனக்குப் புரியவில்லை..?”

யதுநந்தனின் கேள்வி புரிந்ததோ இல்லையோ.. ஒன்றும் மட்டும் தெளிவாக ராதாவிற்குப் புரிந்தது.. யதுநந்தன் அவளுடைய அளவுகடந்த அன்பினால் மூச்சுத் திணறுகிறான்.. அவன் ‘ஜூலி கணபதி..’ என்று இரக்கமில்லாமல் அவளைப் பார்த்துச் சொல்லி விட்டதற்கு அதுதான் காரணம்..

ராதா பதில் சொல்லாமல் எழுந்து கொண்டாள்.. அதற்காகவே காத்திருந்தது போல் யதுநந்தனும் சென்று விட்டான்..

எப்போதுமில்லாமல் இப்போது அதிகமாக மனம் வலிப்பதை உணர்ந்தாள் ராதா..

அவள் அவனுடன் சில விசயங்களைப் பேசி முடிவு பண்ண விரும்பினாள்.. கேட்க வேண்டியவனோ.. அதைத் தட்டிக்கழித்து விட்டான்..

இரவு முழுவதும் தூங்காமல் விழித்த ராதா.. விடியலின் போது ஒரு முடிவுக்கு வந்திருந்தாள்.. ஒரு நீண்ட மெயிலை யதுநந்தனுக்கு அனுப்பினாள்..

‘அன்பான நந்து..

நான் உங்களைக் காதலிக்கிறேன்.. என் உயிருக்கும் மேலாகக் காதலிக்கிறேன் என்று சொன்னால் அது மிகையில்லை.. உங்களுடன் இறுதிவரை வாழ ஆசைப் பட்டேன்.. ஆனால்.. என் ஆசைகள் கடவுளின் காதுகளில் விழவில்லை போல.. சிலருக்கு இதுதான் கிடைக்கும்.. இது கிடைக்காது என்பது.. இறைவன் விதித்திருக்கும் நியதிபோல.. நான் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அந்தத் தெய்வமும்.. நீங்களும் ஆசைப்படும்போது நான் என்ன செய்ய முடியும்..?

ஏழைகளின் ஆசையும்.. கோவில் மணியோசையும்.. என்றுமே வேறுபட்டுத்தான் நிற்கின்றன..

‘உங்களை உங்களுக்காகவே நான் காதலித்தேன்.. உங்களது உற்சாகத்திற்காக.. உங்களின் சுறுசுறுப்பிற்காக.. உங்களின் அலட்சிய மான பேச்சிற்காக.. உங்களின் ஆளுமை குணத்திற்காக.. உங்களின் ரௌத்திரத்திற்காக..’ என்று உங்களின் இயல்புகளைக் காதலிக்கிறவள் நான்..

என் அன்பால்.. இவை அனைத்தும் குலைகிறதாய் நீங்கள் சொல்லும் போது.. என் அன்பை நான் விலக்கிக் கொள்வதுதான் என் காதலுக்கு நான் செய்யும் கடமையாக இருக்க முடியும்..

நீங்கள்.. நீங்களாகவே இருங்கள் நந்து.. நான் விலகிப் போகிறேன்..

ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்கிறேன்.. என் மனதில் என்றுமே நீங்கள் இருப்பீர்கள்.. உங்களை மறந்து ஒரு வாழ்க்கையை நான் வாழ மாட்டேன்.. என் இறுதி மூச்சின் அந்த வினாடியிலும், உங்கள் நினைவு என் மனதில் உறைந்திருக்கும்..’

இப்படிக்கு,

கீதை சொல்லிய பாதையில் போகும் 

ராதா..

மறுநாள் பெங்களூர் கிளம்புவதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டாள்..

“ஹாஸ்டல் ரூமெல்லாம் ரெடியாய் இருக்குமா..?” மந்தாகினி கவலைப்பட்டாள்..

“என் ஃப்ரெண்ட் அங்கேயிருந்து போன் பண்ணினாளேம்மா.. நீங்கள்தானே பேசினீங்க.. அப்புறம் என்ன பயம்..?” ராதா, மனதின் வலியை மறைத்துக் கொண்டு சிரித்தாள்..

“அப்பாவுக்கு ஜுரம்டி.. அவர் உன்னுடன் வர முடியாதே..”

“அதனால் என்ன.. என்னுடன் ஸ்கூலில் இருந்து பிளஸ் டூ வரை ஒன்றாகப் படித்தவளம்மா அந்த காயத்ரி.. அவள் என்ஜினியரிங் படித்துவிட்டு பெங்களூரில் வேலை பார்க்கிறாள்.. நான் எம்.எஸ்.ஸி படித்துவிட்டு அதே பெங்களூருக்கு வேலைக்குப் போகிறேன்.. அவளுடைய ஹாஸ்டலில்.. அவள் ரூமிலேயே எனக்கு இடம் பிடித்து வைத்து விட்டாள்.. இதற்குப் போய் இவ்வளவு கவலைப் படுவானேன்..”

மந்தாகினி, ரயில் நிலையத்திற்கு வந்து மகளை ரயிலேற்றிவிட்டாள்.. நிறைய புத்திமதிகள் சொன்னாள்.. தினமும் போனில் பேசச் சொன்னாள்.. நன்றாகச் சாப்பிடச் சொன்னாள்.. பார்த்துப் பழகச் சொன்னாள்..

இவை எதுவுமே ராதாவின் மனதினில் பதியவில்லை.. அவள் மனம் ஆறாத துயரத்தில் இருந்தது.. இந்தச் சென்னையை விட்டு.. யதுநந்தனின் நிழலை விட்டு, அவனது நினைவுகளை மட்டுமே சுமந்து கொண்டு அவள் போகிறாள்..

இனி அவன் முகம் பார்க்க முடியாது.. அவன் குரல் கேட்க இனி வழியிருக்காது.. ‘உன் பாதையில் இனி நான் வரமாட்டே’னென்று உறுதி கொடுத்துவிட்டு விலகிச் செல்கிறாள்..

அவளது உயிருக்குயிரான காதலின் மேலிருந்த அளவு கடந்த காதலை மட்டும் மனதில் சுமந்து கொண்டு.. அவனுடன் கழித்த பொழுதுகளைப் பொக்கிஷமாய் மனதில் பூட்டி வைத்துக் கொண்டு.. உயிரற்ற உடலைச் சுமந்த கொண்டு.. பெங்களூரில் கால் வைத்தாள் ராதா..

காயத்ரி ரயிலடிக்கு அவளை வரவேற்க வந்திருந்தாள்.. பெட்டிகளுடன் இறங்கியவளுக்கு கை கொடுத்து அவள் இறங்க உதவினாள்..

“ரூம் ரெடியாய் இருக்குதானே காயத்ரி..?”

“என்ரூம்தாண்டி.. உனக்கும் இனி ரூம்..”

“அம்மா பயந்தாங்க..”

“யாமிருக்க பயமேன்னு உன்னிடம் சொல்லி-யிருந்தேனே.. அதை அம்மாவிடமும் சொல்லியிருக்க வேண்டியதுதானே..”

“பெரியவங்க கிட்ட என்ன சொல்வதுடி..?”

ஹாஸ்டலில் வார்டனிடம் கொடுக்க வேண்டிய செர்டிபிகேட்களைக் கொடுத்துவிட்டு.. போட வேண்டிய கையெழுத்துக்களைப் போட்டு விட்டு காயத்ரியைப் பின் தொடர்ந்தாள் ராதா..

“ஏன்டி டல்லாயிருக்க..?” காயத்ரி விசாரித்தாள்..

“ஒன்றுமில்லை.. அம்மா அப்பா நினைவு..” ராதா மனதை மறைத்துப் பதில் சொன்னாள்..

“யதுநந்தன் எப்படியிருக்கிறார்..?”

“…..”

“என்னடி மௌனமாகி விட்ட..? உன் வீட்டில் யதுநந்தனைப் பற்றிச் சொல்லி விட்டாயா..?”

“சொல்லவில்லை..”

“ஏன்..”

“அவரே இன்னும் ஒரு முடிவுக்கு வராதபோது.. நான் என் வீட்டில் எந்த நம்பிக்கையில் இந்தப் பேச்சை எடுப்பது காயத்ரி..?”

“அதற்காக..? சொல்லாமலே எத்தனை நாள் இதை மறைத்து வைப்பாய் ராதா..?”

“யதுநந்தனின் அனுமதியில்லாமல் இதை நான் என் வீட்டில் சொல்லமாட்டேன் காயத்ரி..”

ராதா உறுதியுடன் சொல்லிவிட்டு உடைகளை எடுத்துக் கொண்டு.. குளியலறைக்குள் புகுந்தாள்..

மலரும் நினைவுகளை காயத்ரி பேசிக் கொண்டிருக்க.. ‘மனமில்லாமல் ‘ஊம்’ போட்டுக் கேட்டுக் கொண்டிருந்தவள்.. உறங்குவது போல் கண்களை மூடிக்கொண்டாள்..’

“தூங்கி விட்டாயா..? தூங்கு.. தூங்கு..”

‘தூக்கத்தை தோழி மறந்து வெகு காலமாகி விட்டது..’ என்பதை உணராமல் காயத்ரி கூறிவிட்டு படுத்துவிட்டாள்..

இரவின் இருளினில்… ராதாவின் இமைகள் விரிந்து கொண்டன… ‘இந்நேரம் யதுநந்தன் என்னுடைய மெயிலை படித்திருப்பான்..’ என்று நினைத்துக் கொண்டாள் அவள்..

‘என்ன முடிவெடுத்திருப்பான்..? இனி இவள் தொல்லை இல்லையென்று நிம்மதியாக இருந்து விடுவானா..?’

அப்படி நிம்மதியாக இருக்க நினைத்தால்.. அந்த நிம்மதியை அவனுக்குக் கொடுப்பதுதான்.. தன் காதலுக்கு அர்த்தத்தைக் கொடுக்கும் என்று ராதா நினைத்தாள்..

காதலுக்காக.. காதலை தியாகம் செய்ய முடியாது.. காதலுக்காக.. தன் ஏக்கத்தை.. ஆசைகளைத் தியாகம் செய்தால் தப்பில்லை என்ற நினைவுடன் கண்மூடி உறங்கிப் போனாள் ராதா..

ஆனால்.. அவளது கனவுகளில் யதுநந்தன் மட்டுமே வந்தான்.. சிரித்தான்.. அவள் மனதை வென்றான்..

0Shares

Reviews — Geethaiyen rathai / கீதையின் ராதை

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link