Chapter 15
நீண்ட வெண்மை நிற ஓவர் கோட்டை அணிந்து கொண்டு.. கண்ணாடி டியூபினுள்.. மைக்ரோஸ்கோப்மூலம் பார்த்துக் கொண்டிருந்தாள் ராதா..
“ராதா.. உன்னைத் தேடி கெஸ்ட் வந்திருக்காங்க..” அவளது கைபேசியில் அழைத்து தகவல் சொன்னாள் ரிசப்சனிஸ்ட் சுனிதா..
“ரிசப்சன் ஹாலில் உட்கார வை சுனிதா.. இப்போ டியூட்டி முடிந்து விடும்.. வந்து விடுகிறேன்..” என்றாள் ராதா..
“ஓகேப்பா..” சுனிதா போனை அணைத்து விட்டாள்..
‘யாராக இருக்கும்..’ என்ற சிந்தனையுடன் வேலையை முடித்துவிட்டு, லிஃப்டிற்குள் புகுந்தாள் ராதா
ரிஷப்சனில் அவளுக்காக.. கால்மேல்கால்போட்டு.. தோரணையாய் சோபாவில் சாய்ந்தபடி காத்திருந்தான் யதுநந்தன்..
ராதா பெங்களூருக்கு வந்து பதினைந்து நாள்கள் ஆகிவிட்டன.. இந்த இருவாரத்திலும் அவள் யதுநந்தனிடம் போனில் பேச முடியவில்லை.. கடிதம் போடவில்லை அவனிடமிருந்தும் அவளுக்கு.. போனோ.. கடிதமோ வரவில்லை..
‘சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டிருப்பான்..’
வேதனையுடன் நினைத்துக் கொண்டாள் ராதா..
அந்த சுதந்திரப் போராட்ட வீரன்.. அவள் முன்னால் திடீரென்று வந்து நிற்பதை நம்ப முடியாமல் திகைத்துப் போய் நின்று விட்டாள் அவள்..
அவளை ஊடுருவிப் பார்த்தபடி.. நிதானமாக எழுந்து அருகில் வந்தான் யதுநந்தன்..
“என்னை நினைவிருக்கிறதா மேடம்..?”
‘எப்படிக் கேட்கிறான்..’ ராதாவிற்கு கண்களில் நீ தளும்பியது..
“மறந்தால்தானே.. நினைப்பதற்கு..?”
“ஹ.. பேச்செல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது.. சொல்லாமல் கொள்ளாமல் சென்னையை விட்டு ஓடி வந்துவிட்டு வசனம் பேசுகிறீங்களா..? இதை என்னை நம்பச் சொல்கிறீங்களா..?”
‘வாங்க.. போங்கவா..’ தன்னை அவன் அந்நியமாக்கி விட்டதாய் உணர்ந்தாள் அவள்..
“மரியாதையெல்லாம் பலமாயிருக்கு..” என்று முணுமுணுத்தாள்..
“வேறு என்ன செய்வது..? நீங்கள்தான் மகா மேதையாயிற்றே.. மூளையைக் கசக்கிப் பிழிந்து ஆயிரம் யோசனைகளைக் கண்டுபிடிப்பீங்க.. அதை என்னிடம் கூடச் சொல்லாமல் உடனே செயல்படுத்தி விடுவீங்க.. நீங்க யாரு.. உங்கலெவல் என்ன.. உங்களைப் போய்.. ‘வா.. போ..’னு கூப்பிட்டால் அது மரியாதையாய் இருக்குமா..?”
“நந்து..”
ராதாவின் நாத்தழுதழுத்த அந்த அழைப்பைக் கேட்டவன் அவளையே முறைத்துப் பார்த்தான்..
அவனது கோபம்.. அவளுக்கு இதமாக இருந்தது.. அவன் பேசிய வார்த்தைகளைக் கேட்டு.. அவள் மனதில் சாரல் அடித்தது..
“வெளியே வாங்க மேடம்..”
“ப்ளீஸ்.. சாதாரணமாய் பேசுங்களேன்..”
“எதை.. எப்போப் பேசணும்னு எனக்குத் தெரியும்.. நீங்க வாங்க..”
“எங்கே..”
“இதுதான் கார்டன் சிட்டியாச்சே.. ஏதாவது ஒரு கார்டனில் போய் உட்கார்ந்து பேசலாம்..”
“உட்கார்ந்து பேச.. ஐ மீன்.. என்னுடனெல்லாம் உட்கார்ந்து பேச.. உங்களுக்கு அவகாசம் இருக்கிறதா நந்து..?”
“கொழுப்பாடி..?” அவன் அடிக்குரலில் சீறினான்..
‘இது.. இது.. இதுதான் என் நந்து..’ அவள் கண்ணீருடன் அவனது கோபத்தை ரசித்தாள்..
அருகிலிருந்த பூங்காவிற்குள் சென்று அமர்ந்த பின்னும் யதுநந்தன் பேசவில்லை.. ராதா அவனது மௌத்தைக் கலைக்க முயலவும் இல்லை..
அவன் தீவிரமான யோசனையில் இருந்ததை அவனது புருவச் சுளிப்பு காட்ட… ராதா தன் கைவிரல்களைப் பார்த்தபடி அமைதியாக அமர்ந்திருந்தாள்… யதேச்சையாய் அவள் நிமிர்ந்தபோது… அவன் அவளையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்தாள்..
“நந்து..”
“வாய் ஓயாமல் பேசுவாயே.. அந்தப் பேச்சு இப்போது எங்கே போனது ராதா..?”
“உங்களுக்குத்தான் நான் பேசினால் பிடிக்காதே..”
“பிடிக்காமல்தான்.. தினமும் உன்னைத் தேடி ஓடி வந்தேனா..?”
“வந்ததும் என்ன செய்தீங்க..? மணியைப் பார்த்துக்கிட்டே உட்கார்ந்திருப்பீங்க..”
“நேரமில்லைன்னு சொல்வதையும் நேரே வந்துதானே சொன்னேன்.. ஐந்து நிமிசம்ன்னாலும் உன் அருகிலிருக்க வந்து நின்றேனா இல்லையா..”
“என் காதல் உங்களுக்கு சுமையாயிருக்கும்ன்னு நினைத்தேன் நந்து..”
“சுமையைச் சுமக்க முடியாத பலகீனமானவன் நானில்லை.. அத்தோடு இது சுகமான சுமைடீ..”
‘டி..’ என்று அழைத்து விட்டான்.. ராதாவின் மனம் பொங்கியது.. யதுநந்தனுடன் நூறு வருடம் வாழ்ந்து விட்ட நிறைவை அடைந்துவிட்டால்.. அவள்..
அவளது முகம் காட்டிய பரவசத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு.. மனம் நெகிழ்ந்தது.. அவன் அவளருகே நெருங்கி அமர்ந்து.. அவள் தோளைச் சுற்றி கை போட்டான்.. ராதா நம்ப முடியாத ஆனந்த திகைப்புடன் அவன் தோள் சாய்ந்தாள்..
“ஏண்டி என்னை விட்டு ஓடி வந்தே..?”
“நீங்க என்னை உங்கள் சுதந்திரத்தைப் பறித்துக் கொள்வதாய் சொல்லலாமா..?”
“அப்படிப் பார்த்தால் நான் கூடத்தான் உன் சுதந்திரத்தைப் பறித்துக் கொண்டேன்.. உன்னை முதன் முதலாய் பார்க்கும்போது உன்னிடம் இருந்த நிமிர்வு இப்போது இல்லையே.. அது எங்கே போனது..? உன் உற்சாகமும்.. கலகலப்பும் கூடத்தான் காணாமல் போயிருக்கிறது..”
“எனக்கு அவை எதுவும் வேண்டாம் நந்து..”
“நான் மட்டும்தான் வேண்டும்.. அப்படித்தானே..?”
“அப்படித்தான்..!”
“அப்புறமும் ஏன்.. என்னை விட்டு விலகிப் போவதாகக் கடிதம் எழுதிவிட்டு ஓடி வந்தாய்..? உன்னால் விலகிவிட முடியுமா..?”
‘அது எப்படி முடியும்..?’ ராதா விம்மினாள்..
“ச்சு.. அழக்கூடாது.. நமக்குள் நடந்த நிகழ்விற்கு இது தீர்வு இல்லை ராதா.. கீதையில் என்ன சொல்லியிருக்கிறது..? கடமையைப் புரிந்து கவலையை விடுன்னு சொல்லியிருக்கிறதா.. இல்லையா..?”
“ம்ம்ம்..”
“என்னைக் கண்ட நாள் முதல்.. என்னைக் காதலிப்பது தான் உன் தலையாய கடமைன்னு நினைத்துக் கொண்டு இருக்கிறாயே.. அந்தக் கடமையை விட்டு ஏன் நழுவப் பார்க்கிறாய்..?”
அவன் வினவிய விதத்தில் ராதாவின் முகத்தில் புன்னகை வந்தது..
‘இவன் இப்படித்தான் பேசுவான்.. இவனால் இப்படித்தான் பேச முடியும்..’ அவனது முகத்தை ரசித்துப் பார்த்தாள் ராதா..
“இந்தப் பார்வைக்கொன்றும் குறைச்சல் இல்லை.. நீ காதலிக்கும் கடமையை மட்டும் செய்து கொண்டு இரு.. பலன் தானாகக் கிடைக்கும்..”
“இது யார் சொல்லிய கீதை..?”
“பகவான் கிருஷ்ணன் சொல்லியதும் இதைத்தான்..”
“ஓ.. இது நீங்கள் சொல்வதா..?”
“ஆமாம்.. இது நான் சொல்லும் கீதைதான்.. எனக்குக் கல்யாணம் பண்ணிக் கொள்ள ருக்மணி வேண்டாம்.. இந்த ராதாவே போதும்..”
“அப்போ.. முரளி சொன்னது..?”
“சொல்கிறவங்க.. ஆயிரம் பேர் ஆயிரத்தைச் சொல்வாங்க.. உனக்கெங்கே புத்தி.. புல் மேயப் போனதா..?”
“சும்மா என்னயே திட்டாதீங்க..”
“இந்த ரோசத்திற்கு ஒன்றும் குறைச்சல் இல்லை.. உன்னை செவிட்டில் நாலு அறைவிட வேண்டும்னு நினைத்துத்தான் பெங்களூர் வந்தேன்..”
“அப்புறம் ஏன் பேசாமல் இருக்கறீங்க..?”
ராதா ஆசையுடன் கன்னம் காட்டினாள்.. அதில் இதழ் பதித்தான் யதுநந்தன்..
“உலகத்திலேயே அடிவாங்க ஆசைப்படும் பெண் குல திலகம் நீ ஒருத்தியாகத்தான் இருப்பாய்டி..”
அவர்கள் வெகுநேரம் பேசினார்கள்.. ராதாவின் விரலோடு.. விரல் சேர்த்துப் பேசிய யதுநந்தன் திருமணத்தைப் பற்றிய எந்த வாக்குறுதியையும் கொடுக்கவில்லை.. அதைக் கேட்க வேண்டுமென்ற எண்ணம் ராதாவிற்கும் வரவில்லை..
அவளுடைய யதுநந்தன் அவளுக்கு திரும்பவும் கிடைத்து விட்டான்.. அவளுக்கு அதுபோதும்.. என்று தோன்றிவிட்டது..
அந்த மாத இறுதியில் ராதா சென்னைக்குப் போனாள்.. வேலை பார்த்துக் கொண்டு பிரிந்திருக்கும் மகளைச் சீராட்டிய மந்தாகினி.. அன்று மாலை அவளை உடைமாற்றித் தயாராகச் சொன்னாள்..
“எங்கே போகிறோம் அம்மா..?”
“நாம் எங்கேயும் போகவில்லை.. நம் வீட்டிற்குத்தான் கெஸ்ட் வருகிறாங்க..”
மாலையில் விருந்தினர் வந்து இறங்கிய போது. அந்த மர்மம் வெளிப்பட்டது..
யதுநந்தன் தன் பெற்றோருடன் அவளைப் பெண்கேட்டு வந்திருந்தான்..
‘என் நந்து..!’ மீண்டும் கண்கள் நிறைந்து விட்டன ராதாவிற்கு..
அவள் காதினில் அன்று கீதை சொன்ன அந்தப் பிடிவாதக்காரன்.. சொன்னபடி.. பலன்தர வந்து விட்டான்.
‘நான் கேட்காமலே கிடைக்கட்டும்..!’ என்று தவமிருந்தாள் ராதா.. அவளது தவத்தை மெச்சி.. அவளது காதலன் வரம் கொடுத்து விட்டான்..
முரளியிடம் யதுநந்தனும்.. ராதாவும் சேர்ந்து சென்று திருமண அழைப்பிதழை நீட்டியபோது அவன் முகம் பேயறைந்தது போல் ஆகிவிட்டது..
தங்கையின் திருமணம் முடிந்த மறு வாரத்தில் ராதாவின் கையைப் பற்றி மணமேடை ஏறி.. அவன் கழுத்தில் தாலிகட்டினான்.. அவளுக்கு புதிய கீதை சொன்ன யதுநந்தன்..
…முற்றும்…
Reviews — Geethaiyen rathai / கீதையின் ராதை
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.