Chapter 06
அங்கே குண்டூசி விழுந்தால் கூடக் கேட்கும் அளவிற்கு அமைதி நிலவியது.. ஆகாஷ் தன்னையே நொந்து கொண்டான்..
இதற்காகவா வாரம் முழுவதும் காத்திருந்தான்..? பெற்றவர்கள் முகம் பார்த்து ஒரு வார்த்தை பேசாமல் பெற்ற தாயின் கையால் ஒருவேளை சாப்பிடாமல் இதற்காகவா இங்கு ஓடி வந்தான்..? தங்கையிடம் கனிவாய் கதை பேசாமல் இவளிடம் கதை பேச ஓடி வந்ததற்கு எப்படிப் பட்ட பரிசைக் கொடுத்து விட்டாள்..? இவ்வளவு தற்பெருமை உடையவளா அவன் விரும்பிய அனுராதா..? அவன் மனம் கசந்தது..
‘திமிர்.. இவள் உடம்பெல்லாம் திமிர்..’
அவள் முகம் பார்க்கக்கூடப் பிடிக்காமல் அவன் முகம் திருப்பிக் கொண்ட வேளையில் தோட்டத்திலிருந்து தொண்டைமான் திரும்பி வந்து விட்டார்.. ஆகாஷைக் கண்டதும் முகம் மலர்ந்தவர்,
“வாப்பா ஆகாஷ்.. நீ வருவதற்குள் வரவேண்டு மென்று பார்த்தேன்.. முடியவில்லையே.. வந்து ரொம்ப நேரமாகி விட்டதா..? புத்தகங்களில் குறிப்பு எடுக்க ஆரம்பித்து விட்டாயா..?” என்று கேட்டுக் கொண்டே வீட்டிற்குள் வந்தார்..
“குறிப்பா.. என்ன குறிப்பு..?” என்று ஏளனமாய் கேட்டாள் அனுராதா..
“என்னம்மா ராதா.. புதிதாய் கேட்கிறாய்..?”
“எல்லாமே புதிதிற்கு மாறி விட்டார்கள் தாத்தா..?”
தொண்டைமானின் கூர் விழிகள் பேத்தியை அளவிட்டன..
“ஆகாஷின் ஆராய்ச்சி படிப்பிற்கு குறிப்பு எடுப்பதைப் பற்றித்தானே நான் சொன்னேன்.. நீ எதைப் பற்றிச் சொல்லுகிறாய்..?”
“எதையென்று சொல்ல தாத்தா..? படிப்பைத் தவிர அனைத்து ஆராய்ச்சியும் இங்கு நடந்து முடிந்து விட்டது.. சார்.. ராகினியுடன் அளவளாவிக் கொண்டிருக்கிறார்.. நீங்கள் ஏன் வீணாய் படிப்பைப் பற்றி அவருக்கு நினைவு படுத்துகிறீர்கள்..?”
ஆகாஷ் துணுக்குற்றான்.. என்ன வார்த்தை சொல்லி விட்டாள் இவள்.. அவன் மரியாதை வைத்திருக்கும் தொண்டைமான் ஐயா அவனைப் பற்றி என்ன நினைப்பார்..? சங்கடத்துடன் அவன்,
“ஐயா..” என்று விளக்கம் சொல்ல ஆரம்பித்தான்..
“விளக்கமெல்லாம் வேண்டாம் ஆகாஷ்.. படிப்பதற்காகத்தான் அன்னலட்சுமிபுரத்திற்கு வரவேண்டு மென்பதில்லை.. இந்தக் கிழவனைப் பார்ப்பதற்காகவும் வரலாம்.. எப்போது பார்த்தாலும் படித்துக் கொண்டிருந்தால் மூளை சூடேறி விடும்.. அவ்வப்போது அரட்டையும் அடிக்கலாம் அதில் தவறில்லை.. நீயே கல்லூரி விரிவுரையாளர்.. உனக்குப் போய் நான் எடுத்துச் சொல்ல வேண்டுமா.. என்ன..?”
தொண்டைமானின் வார்த்தைகளால் சங்கடம் விலக்கிய ஆகாஷ் மாடிக்குச் செல்லப் போனான்.. ராகினியும் ஏதோ பேசிக் கொண்டு அவனைத் தொடர்ந்து செல்ல முற்பட தொண்டமான்,
“ராகினி.. ஆகாஷிற்கு படிக்கத் தனிமை வேண்டும்.. நீ தொந்தரவு செய்யாதே.. அத்தோடு மாடிக்குப் போவதெல்லாம் என்ன பழக்கம்..? நான் உன்னை அங்கேயெல்லாம் அனுமதித்தது இல்லையே..” என்றார்..
ராகினியின் முகம் சிறுத்து விட்டது.. அனுராதாவின் முகம் மலர்ந்து விட்டது.. தொண்டைமான் ஆகாஷைப் பார்த்து,
“ஆகாஷ்..! என் நூலகத்திற்குள் அன்னியருக்கு அனுமதியில்லை.. அந்நியர் என்று நான் சொல்வது புத்தகம் படிக்காதவர்களை.. புத்தகத்தின் மதிப்புத் தெரியாதவர்களை.. ராகினிக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் கிடையாது.. அதனால் என் நூலகத்தில் நுழைய அனுமதி கிடையாது.. ராகினியுடன் பேச வேண்டுமானால் கீழேயே பேசி அனுப்பிவிடு.. மாடிக்கு அழைத்துப் போக வேண்டாம்..” என்று கண்டிப்பான குரலில் கூறினார்..
ஆகாஷ் வியப்புடன் தொண்டைமானைப் பார்த்தான்..
“ஐயா.. ராகினியிடம் பேச என்ன இருக்கிறது..? உங்கள் ரிலேடிவ் என்பதால் ஓரிரு வார்த்தைகள் பேசினேன்.. மற்றபடி ஷி இஸ் நாட் நத்திங் ஸ்பெஷல் டு மீ..” என்று கூறிவிட்டு ராகினியைத் திரும்பியும் பாராமல் மாடிக்குச் சென்று விட்டான்..
இந்த மாதிரியான நிலைமையிலும் மற்றவர்கள் எப்படி செயல்படுவார்களோ என்னவோ.. ராகினி ஒன்றுமே நடக்காதது போல் செயல்பட்டாள்.. தொண்டைமானின் வார்த்தைகள் அவளைத் துளிக்கூடப் பாதிக்காதவளாய் அங்கேயே சட்டமாய் அமர்ந்து கொண்டு பேச வேறு ஆரம்பித்து விட்டாள்..
‘எருமைத்தோல்..!’
அனுராதா அங்கே நின்றால் அவளை ஏதாவது சொல்லி விடுவோமென்ற பயத்துடன் சமையலறைக்குள் சென்று விட்டாள்.. தொண்டைமானுக்கு அவள்
அப்படிப் பேசுவது பிடிக்காது.. கண்டிப்பார்.. ராகினி தொண்டைமானிடம் ரம்பம் போட ஆரம்பித்தாள்.. கொஞ்ச நேரம் ‘ஊம்’ போட்ட தொண்டைமான், பொறுமை இழந்து விட்டார்..
“அம்மா ராகினி.. நீ வந்து வெகு நேரமாகி விட்டதே.. உன் வீட்டில் தேட மாட்டார்களா..?”
“இதுவும் நம்ம வீடு தானே தாத்தா..”
“இல்லையம்மா.. இது உன் வீடு இல்லை.. நீ என் சொந்தப் பேத்தியும் இல்லை.. இது அயலார் வீடு.. கிளம்பு..”
“நான் அயலார் வீடுன்னு நினைக்கவே இல்லையே தாத்தா..”
“நான் நினைக்கிறேன்.. கிளம்பு..”
“எனக்கு உங்கள் கூட பேசிக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியவில்லை தாத்தா.. என் வீட்டிற்குப் போனால் போரடிக்கும்..”
“உன்னுடன் இன்னும் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தால் தலைவலி வந்துவிடும்.. இது நான் ஓய்வெடுக்கும் நேரம்..”
“நீங்கள் பாட்டுக்கு ரெஸ்ட் எடுங்கள்.. நான் ஓரமாய் உட்கார்ந்து வாக்மேனில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்..”
அனுராதா ஏன் பத்ரகாளி போல் நின்று கொண்டிருந்தாள் என்று இப்போது தெள்ளத் தெளிவாக தொண்டைமானுக்குப் புரிந்தது.. ‘இப்படியும் ஒரு ஜீவன் இருக்குமா..?’
தொண்டைமான் கோபத்துடன்..
“ராதா.. ராதா..” என்று அழைத்தார்.
“என்ன தாத்தா..?” அவள் சமையலறையை விட்டு வெளியே வந்தாள்..
“எனக்கு கம்பெனி கொடுக்கத்தான் உன்னை வரச் சொன்னார் தாத்தா.. இல்லையா தாத்தா..” ராகினி கொஞ்சலாய் கூறினாள்..
“இல்லை.. அந்தப் பூட்டுச் சாவியை எடு..”
எதற்குக் கேட்கிறார்..? புரியாமல் அனுராதா எடுத்துக் கொடுத்தாள்..
அதை வாங்கிக் கொண்ட தொண்டைமான் எழுந்து கொண்டார்..
“ராகினி.. உன் வீட்டிற்குப் போ.. நான் கதவைப் பூட்ட வேண்டும்..”
“தாத்தா.. நான் சாயங்காலம் தான் வருவேன்னு அம்மாவிடம் சொல்லி விட்டுத்தான் இங்கு வந்தேன்..”
“சாயங்காலம் வரைக்கும் உனக்கு இங்கு என்ன வேலை..?”
“என் வீட்டில் மட்டும் என்ன வேலை..?”
“ஏன்..? எதையாவது வேலை செய்ய வேண்டியது தானே.. ராதா எங்கள் வீட்டில் செய்யவில்லையா..?”
“அவள் தனியாக ஏன் செய்ய வேண்டும் தாத்தா..? ஆகாஷ் வந்தால் அவருக்கு சாப்பாடு பரிமாறும் வேலையை நான் செய்கிறேனே..”
அவளின் திட்டம் புரிய தொண்டைமானிற்குக் கோபம் வந்து விட்டது.. இயல்பில்லாத இச்செயல்கள் அவருக்குப் பிடிக்காதவை..
“இப்போது நீ கிளம்புகிறாயா.. இல்லையா..?”
“என்ன தாத்தா.. உங்கள் பேத்தியைப் போய் விரட்டு கிறீர்கள்..?”
“நீ என் பேத்தியில்லை.. என் பேத்தி ராதாதான்.. என் பேரன் பேத்திகளை நாங்கள் இப்படி வளர்க்கவில்லை.. ராதாவோ அவளுடைய அண்ணன்களும் அக்காக்களுமோ அடுத்தவர் வீட்டிற்கு தேவையில்லாமல் போக மாட்டார்கள்.. வெட்டிப் பேச்சு பேசி வீணாய் பொழுதைக் கழிக்க மாட்டார்கள்..”
அப்போதும் அவள் வெளியேறாமல் நிற்க.. அனுராதாவிற்கு கோபம் வந்து விட்டது.. தாத்தாவையே இந்தப் பாடு படுத்துகிறாளே இவளை என்ன செய்தால் தேவலாம்.. பூட்டுச் சாவியை அவள் வாங்கிக் கொண்டாள்.. ராகினியின் கைபிடித்து இழுத்துக் கொண்டு வாசல் பக்கம் விரைந்தாள்.. வாசல் படியில் அவளை விட்டு விட்டு கேட்டைப் பூட்டி உள் பக்கமாய் பூட்டுப் போட்டு விட்டு திரும்பி வீட்டிற்குள் போய் விட்டாள்..
தொண்டைமான் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டார்.. நிஜமாகவே அவருக்கு தலையை மிகவும் வலித்தது..
“ராதா.. சூடாய் காபி போட்டுக் கொண்டு வாம்மா.. இந்தப் பெண் பண்ணிய ரகளையில் எனக்குத் தலைவலியே வந்த விட்டது..”
அனுராதா சற்று நேரத்தில் காபியுடன் வந்து விட்டாள்.
“ஏம்மா ஒரு தம்ளர்தான் போட்டாயா..? ஆகாஷிற்கும் போடவில்லை..?”
“காபி இருக்கிறது தாத்தா.. நான் இன்னொரு தம்ளரில் ஊற்றித் தருகிறேன்.. நீங்கள் கொண்டு போய் கொடுங்கள்..”
“என்னம்மா இது புதுப் பழக்கம்..? நம் வீட்டிற்கு வரும் விருந்தாளியை நாமே அலட்சியம் செய்யலாமா..?”
“அலட்சியமெல்லாம் இல்லை தாத்தா.. எனக்கு அவருக்குக் கொண்டு போய் கொடுக்க விருப்பமில்லை.. விட்டு விடுங்கள்..”
அப்போது தண்ணீர் தாகம் எடுத்ததால் கீழே இறங்கி வந்து கொண்டிருந்த ஆகாஷின் காதுகளில் அந்த வார்த்தைகள் விழுந்தன.. அவன் சிலையாய் உறைந்தான்.. சமாளித்துக் கொண்டு வந்த சுவடு தெரியாமல் மாடிக்குப் போய் விட்டான்..
தொண்டைமான் அனுராதாவின் முகம் பார்த்தார்.. அது இறுகியிருந்தது.. பேச்சை வளர்க்க விரும்பாமல்,
“சரிசரி.. இரண்டு தம்ளர்களையும் கொடு.. நான் ஆகாஷுடன் சேர்ந்தே காபி சாப்பிட்டுக் கொள்கிறேன்..” என்று கூறி எழுந்தார்..
ஆகாஷ் மேஜையின் முன்னாலிருந்த ஜன்னல் வழி தெரிந்த வேப்ப மரத்தின் கிளைகளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.. அனுராதாவின் உதாசீனம் அவன் மனதைப் புண்படுத்தியிருந்தது..
“ஆகாஷ்..”
தொண்டைமானின் அழைப்புக் குரல் கேட்டுத் திரும்பியவன் பதறி எழுந்தான்..
அந்த வயோதிகர் ஒரு தட்டில் இரண்டு தம்ளர்களை சுமந்து கொண்டு வந்து கொண்டிருந்தார்.. அவசரமாய் அதை வாங்கி மேஜையில் வைத்தவன்,
“ஐயா.. இதை நீங்கள் கொண்டு வரவேண்டுமா..? என்னைக் கூப்பிட்டால் நான் வந்து குடித்துக் கொள்ள மாட்டேனா..?” என்று துக்கம் தொண்டையை அடைக்க வினவினான்..
அவன்தான் அனுராதாவின் வெறுப்பை கண்கூடாய்ப் பார்த்தும் கேட்டும் விட்டானே.. அவள் கைகளில் ஒரு தம்ளர் காபி கொண்டு வந்து கொடுக்கக் கூட அவன் தகுதியில்லாதவன் என்று நினைத்து விட்டாளே.. அவன் நெஞ்சம் குமுறியது..
தொண்டைமான் அவன் கரங்களில் காபி தம்ளரை திணித்தார்.. அவன் காபி குடிப்பதையே அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தவர் மென்மையான குரலில்,
“என்னப்பா..?” என்று வினவினார்..
“எதுங்க ஐயா..?” அவன் திடுக்கிட்டுக் கேட்டான்..
“உன் மனதை வருத்தும் விஷயம் என்ன.?”
“ஒன்றுமில்லை ஐயா..”
“நான் வயோதிகன் ஆகாஷ்.. உன் வயதைக் கடந்து வந்தவன்.. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழியின் தாத்பர்யம் புரிந்தவன்.. இப்போது உன் உள்ளத்தில் புயல் அடித்துக் கொண்டிருப்பதை உன் முகம் எனக்குச் சொல்கிறது.. சொல்லப்பா.. எதனால் மனக்கஷ்டப் படுகிறாய்..”
ஆகாஷ் பல்லைக் கடித்துக் கொண்டான்.. ‘என்ன வென்று சொல்வது..? நானாய் என் மனதில் கட்டிய கோட்டை இடிந்து விழுந்து விட்டதைப் பற்றி இவர் எப்படி அறிவார்..?’
அவன் பதில் பேச முடியாமல் மௌனம் சாதிக்க தொண்டைமானே கேட்டு விட்டார்..
“ராதாவிற்கும் உனக்கும் என்னப்பா பிரச்சனை..?”
“ஐயா..” ஆகாஷ் பேச முடியாமல் திணறினான்..
“நீ மாடியிலிருந்து இப்போது கீழே வந்ததைப் பார்த்தேன் ஆகாஷ்.. ராதா உன்னைப் பார்க்கவில்லை.. அவள் பேசியதை நீ கேட்டு விட்டாய் இல்லையா..? அதனாலா மனம் வேதனைப்படுகிறாய்..?”
“ஐயா.. உங்கள் பேத்தி அவங்க மனதில் இருப்பதை வெளிப்படையாய் சொல்லி விட்டாங்க.. அவங்க மனதிற்கு அவங்க செய்வதுதான் சரி.. என் மனம் உடைவது எனது குற்றம்.. அவர்கள் மேல் குற்றமில்லை..”
தொண்டைமானின் விழிகள் ஆகாஷை கூர்ந்து பார்த்தன.. அவன் வேதனையுடன் முகம் திருப்பிக் கொண்டான்..
“ஆகாஷ்.. நீ ராதாவை விரும்புகிறாயா..?”
“அவள் என்னை விரும்பவில்லை ஐயா.. மாறாக வெறுக்கிறாள்..”
“அப்படி அவள் சொன்னாளா..?”
“ஆமாம்..”
ஆகாஷ் உதடு கடித்தான்.. தொண்டைமான் சிந்தனையில் ஆழ்ந்தார்..
Reviews — Idhayathini Salaram / இதயத்தின் சாளரம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.