Chapter 07

0Shares

“நீ அவளிடம் உன் காதலைச் சொன்னாயா ஆகாஷ்..?”

“வெறுப்பவளிடம் என் விருப்பத்தை எப்படி ஐயா சொல்வது..?”

“நான் வேண்டுமானால் உன் சார்பாய் அவளிடம் பேசிப் பார்க்கவா..?”

“தயவு செய்து வேண்டாம் ஐயா.. உங்களை கரம் குவித்துக் கேட்டுக் கொள்கிறேன்.. காதல் சிபாரிசு பண்ணி வரக்கூடாது.. அது தானாக வரவேண்டும்.. விருப்பமில்லாதவளைக் கட்டாயப்படுத்த எனக்கு விருப்பமில்லை.. என் மனதிலிருப்பது அவளுக்குத் தெரியவே கூடாது.. வாக்குக் கொடுங்கள் ஐயா..”

ஆகாஷ் தீவிரமான முகத்துடன் தன் கரத்தை நீட்டினான்.. மறுத்துப் பேசாமல் அவன் கைபிடித்து உறுதி அளித்தார் தொண்டைமான்.. சற்று நேரத்தில் இருவரும் மதிய உணவிற்குக் கீழே இறங்கிப் போனார்கள்..

அனுராதா மௌனமாய் அவர்களுக்குப் பரிமாறினாள்.. அவள் முகம் கடுமையாக இருந்தது.. ஆகாஷ் அவளை நிமிர்ந்து பார்க்கவும் முனையவில்லை.. ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்காமல் அவள் பரிமாற அவன் சாப்பிட்டு முடித்தான்..

மதிய உணவிற்கு பின்னர் தொண்டைமான் கண் அயர்ந்தார்.. அனுராதா ஏதோ சிந்தனையுடன் முன்புற ஹாலில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்திருந்தாள்.. ஆகாஷ் தன் குறிப்பு நோட்டுடன் கீழே இறங்கி வந்தான்.. தொண்டைமானிடம் விடைபெறச் சென்றபோது அவர் உறங்கிக் கொண்டிருந்தார்..

‘எப்படிச் சொல்லிக் கொண்டு போவது..’ அவன் தயங்கினான்.. நிழலாடவும் நிமிர்ந்து பார்த்த அனுராதா முகம் திருப்பிக் கொண்டாள்..

‘இவளிடம் போய் நாமாய் பேசுவதா..?’

அவன் எரிச்சலுடன் நினைத்துக் கொண்டான்.. அப்போது வாசல் புறமிருந்து காலிங்பெல் ஒலித்தது.. அந்த சத்தத்தில் தூக்கம் கலைந்து எழுந்தார் தொண்டைமான்..

“யாரும்மா வாசலில்..?”

“வேறு யார்.. அந்தப் பிசாசுதான்..”

“ராகினியா..?”

“ஊம்..”

“இப்போதுதானே போனாள்.. உடனே வந்து விட்டாளா..?”

“என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும் தாத்தா..”

அவள் சலிப்புடன் பின்பக்கம் சென்று விட்டாள்.. தெண்டைமான் சாவியை எடுத்துக் கொண்டு போய் வாசல் கதவைத் திறந்து விட்டார்..

“ஹாய்.. தாத்தா.. தூங்கி எழுந்து விட்டீர்களா..?”

“எங்கே நீ தூங்க விட்டாய்..? என்ன விஷயம்..?”

“என் தாத்தாவின் வீட்டிற்கு நான் வர விஷயமிருக்க வேண்டுமா..?”

ராகினி தொண்டைமானை விலக்கிக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள்.. அவள் கையில் இரண்டு டப்பாக்கள் இருந்தன.. உரிமையுடன் ஆகாஷின் கைபிடித்து அங்கிருந்த நாற்காலியில் அமர வைத்தவள்..

“என்ன சார் கிளம்ப ரொடியாகிட்டிங்களா..? அதனால் தான் நான் ஓடோடி வந்தேன்..” என்று செல்லம் கொஞ்சினாள்..

“எதற்காக.. ஓடோடி வரவேண்டும்..”

“காரணமில்லாமல் இருக்குமா.. ஆனால் அதை உடனே சொல்ல மாட்டேன் சஸ்பென்ஸ்..” என்று குலுங்கிச் சிரித்தாள் ராகினி..

“ராகினி ப்ளீஸ் டோன்ட் டிஸ்டர்ப் மீ.. நான் ஊருக்குப் போக வேண்டும்.. உனக்கு என்ன வேண்டும்..?”

“நீங்கள்தான் வேண்டும்..”

“வாட்..?”

“யெஸ்.. உங்களுக்காக கஷ்டப்பட்டு என் அம்மா வடையும் கேசரியும் செய்து அனுப்பி இருக்கிறார்கள்.. அதைச் சாப்பிடாமல் போய் விடுவீர்களா..? நான்தான் உங்களை விட்டு விடுவேனா..?”

அவள் தான் கொண்டு வந்த டப்பாக்களைத் திறந்து ஒரு தட்டில் அவற்றை பரிமாறி ஆகாஷின் கையில் கொடுத்தாள்..

“ஐயா உங்களுக்கு..?”

“எனக்கு இனிப்பும்.. எண்ணெய் பலகாரமும் ஒத்துக் கொள்ளாது ஆகாஷ்.. உனக்குத் தெரியாதா..?”

“அப்படியா..?” என்றவன் தன்னிடம் கொடுக்கப்பட்ட தட்டை அப்படியே ராகினியிடம் கொடுத்து விட்டான்..

“என்ன சார்..?”

“ஐயாவுக்கு ஒத்துக் கொள்ளாதது எனக்கும் ஒத்துக் கொள்ளாது ராகினி.. இனிமேல் இதுபோல் எதையும் செய்து கொண்டு வராதே.. ஐ டோன்ட் லைக் இட்..”

அவள் பதிலுக்காக காத்திருக்காமல் தொண்டைமானிடம் “வருகிறேன் ஐயா..” என்று விடைபெற்றுக் கொண்டு வாசலுக்குப் போய் காரில் ஏறிக் கொண்டான்..

பின்னாலேயே ஓடிய ராகினி கார் கதவின் பக்கம் குனிந்து.. “அடுத்த வாரம் வருவீர்களா..?” என்று கேட்டாள்.

“ஏன் கேட்கிறாய்..?”

“ஏன் நான் கேட்கக் கூடாதா..?”

“கேட்கக் கூடாது..”

ஆகாஷ் காரைக் கிளப்பிக் கொண்டு பறந்து விட்டான்.. மொட்டை மாடியில் நின்று கொண்டு அவர்கள் உரையாடியதைப் பார்த்துக் கொண்டு அனுராதா நின்று கொண்டிருந்தாள்.. அவர்கள் பேசியது அவள் காதில் விழுகவில்லை.. ஆகாஷ் பேசியதைக் கவனிக்காதவள் போல் ராகினி கையாட்டி அவனுக்கு விடை கொடுத்து விட்டு வீட்டுக்குள் வருவதைக் கவனித்துக் கொண்டே மாடியிலிருந்து இறங்கி வந்தாள்.. கீழே ராகினி தொண்டைமான் முன்னே நின்று கொண்டு..

“உங்களால்தான் தாத்தா அவர் டிபன் சாப்பிடாமல் போய் விட்டார்..” என்று குற்றம் சாட்டிக் கொண்டிருந்தாள்.

அனுராதா கோபத்துடன் அவள் தட்டில் வைத்திருந்த டிபனை டப்பாக்களில் மீண்டும் போட்டு மூடி ராகினியிடம் நீட்டினாள்..

“ஏய்.. இந்தாடி.. நீ கொண்டு வந்த டிபன்.. எடுத்துக் கொண்டு இடத்தைக் காலி பண்ணு.. ஒரு செகண்ட் நீ நின்றாலும் நான் உன் கழுத்தை நெரித்துக் கொன்று விடுவேன்.. ஓடி விடு.. எங்கே வந்து யார் முன்னால் நின்று கொண்டு பேசுகிறாய்.. என் தாத்தாவின் முன்நின்று பேசக்கூட யாரும் பயப்படுவார்கள்.. நீ குற்றம் சுமத்து கிறாய்.. உன் பல்லைத் தட்டி விடுவேன்.. போ போ..”

“நீ இருக்கச் சொன்னாலும் இனி இங்கென்ன எனக்கு வேலை..?”

“அதுதானே.. நீ நாடகமாடுவதைப் பார்க்கும் ஆள் இங்கில்லை.. போயாகி விட்டது.. நீயும் போ..”

ராகினி ‘உர்’ரென்று முகத்தை வைத்துக் கொண்டு போய் விட்டாள்..

“எல்லாம் உங்களால்தான் தாத்தா..”

“என்னாலா.. நான் என்ன செய்தேன் ராதா..?”

“யாரோ பி.எச்.டி. பண்ணுகிறார்கள்.. பண்ணாமல் போகிறார்கள்.. உங்களுக்கென்ன வந்தது..? நீங்கள் ஏன் கண்டவர்களையெல்லாம் வீட்டுக்குள் விடுகிறீர்கள்..? அனதால்தான் இவளை மாதிரி ஆள்களெல்லாம் இங்கே வட்டம் போடுகிறார்கள்..” அனுராதா கோபமாய் பேசினாள்.

“ஆகாஷ் கண்டவனில்லை.. அம்மா..”

“எனக்குக் கண்டவர்தான்.. எனக்கு அவரைப் பிடிக்க வில்லை தாத்தா..”

அனுராதா கோபமாய் உள்ளே போய் விட்டாள்.. தொண்டைமான் அவள் போவதையே யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்..

மறு வாரம் ஆகாஷ் வந்தபோது தொண்டைமான் தோட்டத்திற்குப் போகாமல் வீட்டிலேயே இருந்தார்..

“வணக்கம் ஐயா..”

“வாப்பா ஆகாஷ்.. பிரயாணம் சௌக்கியமா இருந்ததா..?”

“இருந்தது ஐயா.. ஆனால் வெயில்தான் தாங்க வில்லை..”

“ஆமாம் வெயில் சுட்டெரிக்குதே.. ராதா.. மோர் கொண்டுவாம்மா..” தொண்டைமான் உள்ளே திரும்பி சொல்லிக் கொண்டிருக்கும் போது..

“மோரெல்லாம் எதுக்கு தாத்தா.. நான் ஜூஸ் கொண்டு வந்திருக்கிறேன்..” என்று கூறியபடி ராகினி வந்தாள்.. அவள் கையில் ஒரு பாட்டிலில் ஐஸ் துண்டுகள் போட்ட ஆப்பிள் ஜூஸ்..

“இந்தாங்க..” உரிமையுடன் அவள் ஆகாஷிடம் ஜூஸ் பாட்டிலை நீட்டிக் கொண்டிருந்தபோது அனுராதா கையில் மோர் தம்ளருடன் உள்ளேயிருந்து வந்தாள்..

“ராதா.. சார் ஜூஸ் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.. உன் மோரை நீயே வைத்துக் கொள்..” ராகினி ஏளனமாகக் கூற அனுராதாவின் முகம் கறுத்தது..

தொண்டைமானை முறைத்துக் கொண்டே அனுராதா உள்ளே செல்லத் திரும்பினாள்..

“ஐயா.. அவங்களை மோரை என்னிடம் கொடுத்து விட்டுப் போகச் சொல்லுங்க..” ஆகாஷ் ராகினியின் ஜூஸ் பாட்டிலை இடது கையால் ஒதுக்கித் தள்ளியபடி வலது கையை அனுராதாவிடம் மோரை வாங்க நீட்டினான்..

“கொடு ராதா..” தொண்iடானும் கூற வேறு வழியின்றி அனுராதா தன் கையிலிருந்த மோர் தம்ளரை ஆகாஷிடம் நீட்டினாள்..

ஆகாஷ் மோரை வாங்கி அருந்த வயருகே கொண்டு போகும் போது ஆத்திரத்துடன் ராகினி..

“ஜூஸை விட மோர் உங்களுக்கு உயர்த்தியா..?” என்றவாறு மோர் தம்ளரை வாங்க முயன்றாள்..

ஆகாஷ் விலக முயற்சிக்கும் முன் மோர் தம்ளர் அவன் மீது கவிழ்ந்து அவன் சட்டை முழுவதும் மோர் கொட்டி விட்டது.. ஆகாஷிற்கு கோபம் தலைக்கு ஏறியது.. ராகினியை அவன் இமைக்காமல் முறைத்தான்..

அவளா சங்கடம் கொள்வாள்..? அவள் அதையும் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ள முனைந்தாள்..

“அச்சச்சோ.. மோர் கொட்டி விட்டதே.. என்ன ராதா மோர் இப்படி ஓர் வாடை அடிக்கிறது..? இரண்டுநாள் மோரைக் குடுத்து விட்டாயா..? நல்லவேளை.. சார் அதைக் குடிக்கவில்லை.. குடித்திருந்தால் அவர் வயிறு கெட்டுப் போயிருக்கும்.. சட்டையைக் கழற்றிக் கொடுங்கள் சார்.. நான் வாஷ் பண்ணித் தருகிறேன்..”

ராகினி ஆகாஷின் சட்டையைத் தொட முனைய ஆகாஷ் அருவெறுப்புடன் பின்னடைந்தான்.. தொண்டைமான் சினத்துடன்..

“ராகினி.. நீ இடத்தைக் கால் பண்ணு.. ஆகாஷ் நீ பாத்ரூமிற்குப் போய் சட்டையைக் கழற்றிப் போட்டு விட்டு வேறு சட்டையை மாற்றிக் கொள்..” என்றார்..

“வேறு சட்டை கொண்டு வரவில்லையே ஐயா..”

“ராதாவின் சின்ன அண்ணனின் சட்டை ஒன்று இங்கே இருக்கிறது.. துவைத்து அயர்ன் பண்ணி வைத்திருக்கிறேன்.. அதைப் போட்டுக் கொள்.. ராதா..”

அவர் சொல்லி வாய் முடிக்கு முன் அனுராதா அவனிடம் அவளது அண்ணனின் சட்டையை நீட்டிக் கொண்டிருந்தாள்..

“தேங்க்ஸ்..” அவள் முகம் பார்த்தான் ஆகாஷ்..

அவள் பதில் சொல்லாமல் உள்ளே போய் விட்டாள்.. ஆகாஷ் பின் பக்கம் போய் விட்டான்.. தொண்டைமான் ராகினியிடம் பக்கம் திரும்பினார்..

“நீ உன் ஜூஸ் பாட்டிலுடன் இடத்தை இன்னும் காலி பண்ணவில்லையா..?”

“தாத்தா.. அவர் வந்தபின் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுப் போகிறேன்..” ராகினி சட்டமாய் அமர்ந்து கொண்டாள்..

தொண்டைமான் மௌனமாய் அவளையே பார்த்தார்.. மற்றவர்கள் என்றால் அந்த ஏளனப் பார்வையில் துடித்தே போய் விடுவார்கள்.. ஆனால் அவளோ வெள்ளையாய் சிரித்தாள்..

“என்ன தாத்தா அப்படிப் பார்க்கறீங்க..?” என்று ஒன்றும் தெரியாத பச்சைக் குழந்தை போல் கேள்வி வேறு கேட்டாள்..

நிராசையுடன் தலையை ஆட்டிய தொண்டைமான் ஆகாஷ் வரும் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தார்..

ஆகாஷ் வேறு சட்டை அணிந்து வந்து கொண்டிருந்தான்..

“இந்த சர்ட் உங்களுக்கு நன்றாவே இல்லை தெரியுமா..?” என்றாள் கொஞ்சும் குரலில் ராகினி..

“உன்னைக் கேட்டேனா..?” வள்ளென்று விழுந்தான் ஆகாஷ்..

“நீங்கள் கேட்டால்தான் நான் சொல்ல வேண்டுமா..? என் மனதில் பட்டதைச் சொன்னேன்.. எனக்கு ஒளித்துப் பேசத் தெரியாது..”

“ஆமாமாம்.. உனக்கு ஒளிவு மறைவு பிடிக்காது தான்..” என்றாள் அனுராதா வெறுப்புடன் அவள் உடையைப் பார்த்தபடியே..

“ஐயா.. நான் மாடிக்குப் போகிறேன்..” ஆகாஷ் எழுந்து செல்ல முற்பட..

“இப்போதேவா.. இன்னும் கொஞ்ச நேரம் கழித்துப் போகக் கூடாதா..?” ராகினி அவன் கையைப் பற்றி உட்கார வைத்தாள்..

அவள் தொட்ட இடம் நெருப்பாய் சுட தன்னையறியாமல் அவள் கையை உதறி ஆகாஷ்..

“வாட் இஸ் திஸ்..” என்று கோபப்பட்டான்..

“என்ன இப்படிக் கேட்கறீர்கள்.. இந்த ஒரு வாரமாய் நீங்கள் வரும் பாதையைப் பார்த்து என் கண் பூத்து விட்டது தெரியுமா..?” அவள் விடாமல் கொஞ்ச அந்த நேரம் தான் அது நிகழ்ந்தது..

“தாத்தா நடு வீட்டில் இது என் அசிங்கம்..?” அனுராதா தொண்டைமானைப் பார்த்துக் கேட்டாள்..

பெண் பூப்போன்றவள் சில நேரம்.. புயல் போன்றவள் சில நேரம்.. அவளைப் பூவாக்குவதும் புயலாக்குவதும் சூழ்நிலைதான்.. அன்று அனுராதா புயலானாள்.. விளைவு.. ஆகாஷின் நெஞ்சில் மாறாத வடு ஒன்று ஏற்பட்டு விட்டது..

0Shares

Reviews — Idhayathini Salaram / இதயத்தின் சாளரம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link