Chapter 33
“அனு ரெடியா..?” ஆகாஷ் கீழே நின்று கொண்டு கத்தினான்..
“ஏண்டா.. லேடிஸ் டிரஸ் பண்ணும்போது அவசரப் படுத்தலாமா..? மெதுவாய் கிளம்பி வரட்டும்..” பரசுராம் ஆகாஷை கடிந்து கொண்டான்.
“உனக்கென்னடா.. பிரம்மச்சாரி.. சொல்லிட்டே.. என் கஷ்டம் எனக்கில்ல தெரியும்.. இந்தப் பெண்களை சமையலில் விட்டால் நொடியில் சமைத்து விடுகிறார்கள்.. டிரெஸ் பண்ணச் சொன்னால் மட்டும் மணிக் கணக்கில் டைம் ஆகுது.. அதுதான் ஒண்ணும் பிடிபட மாட்டேங்குது..”
“ஒண்ணு செய்..” பரசுராம் தீவிரமான முகத்துடன் கூறினான்..
“என்னடா..?” ஆகாஷ் ஆவலுடன் கேட்டான்..
“பேசாமல் இந்த ஆராய்ச்சியையும் பண்ணி இன்னொரு பி.எச்.டி பட்டம் வாங்கிடு.. உன் வேலைக்கு உதவும்..”
“டேய்.. அடி வாங்கி ரொம்ப நாளாச்சா..”
அனுராதா மாடிப்படியில் இறங்கி வந்து கொண்டிருந்தாள்.. மயில் கழுத்து பிரிண்டட் சில்க் சேலையில் வெட்டித் தைத்த பிளவுஸ்… தளர்வாய் பின்னலிட்டிருந்தாள்.. காதுகளில் முத்து ஜிமிக்கி.. கழுத்தில் முத்து ஆரம்.. கைகளில் முத்து வளையல்கள்..
ஆகாஷ் சொக்கிப்போய் நின்றான்.. மனைவியின் மேல் வைத்த கண்ணை அவனால் விலக்கிக் கொள்ளவே முடியவில்லை.. பரசுராம் அவன் முதுகில் ஓர் அறை வைத்து தந்நிலைக்கு வரவைத்தான்..
“எதுக்கு லேட்டாகுதுன்னு கேட்டாயே.. இப்படி உன்னை மயக்கம் போட வைக்கத்தான் லேட்டாக்குச்சு என் தங்கை..”
“ஆனாலும் பரசு.. இவள் இவ்வளவு அழகாக இருந்து தொலைக்கக் கூடாது.. மனுசன் மேல் கொஞ்சமாவது கரிசனம் இருந்தால் இப்படி இவள் என்னை கிறங்கடிப்பாளா..?”
“ஏண்டா பாவி இப்படிச் சொல்ற..?”
“பின்னே என்னடா.. என் பால்ய காலச் சிநேகிதன் நீ.. முதல் முதலாய் வீட்டுக்கு வந்திருக்கிறாய்.. இவன் வராமலிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைக்க வைக்கலாமா இவள்..?”
அனுராதா மகிழ்ந்து போய் விட்டாள்.. தன் மனதிலிருந்த எண்ணம்.. தாபம்.. தன் கணவனுக்கும் இருக்கிறது என்ற நினைவில் அவள் இதயம் குளிர்ந்து விட்டது.. நல்ல மனைவியாய் அவனை அதட்டினாள்..
“போதுமே.. என் கரிசனம் இப்போது முக்கியமில்லை.. பிரகதீஸ்வரரின் தரிசனம் தான் இப்போது முக்கியம்.. வாங்க போகலாம்..” என்று கூறி விட்டு ஒயிலாக வாசலுக்குச் சென்றாள்..
அவர்கள் தஞ்சை பெரிய கோவிலுக்குக் கிளம்பிக் கொண்டு இருந்தார்கள்.. பரசுராம் அன்று மாலையே ஊர் திரும்ப வேண்டுமென்று சொன்னதால் ஊர் சுற்றிப் பார்க்கக் கிளம்பி விட்டார்கள்.. மதியம் ஹோட்டல் எதிலாவது சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று ஆகாஷ் கூறிவிட்டான்..
காருக்குள் ஆகாஷ் ஏறி டிரைவிங் சீட்டில் அமர்ந்து விட வீட்டை பூட்டி விடடு சாவியை ஹேண்ட் பேக்கில் போட்டுக் கொண்டு வந்த அனுராதா திகைத்தாள்..
கடைசியில் புதிதாய் வாங்கியிருக்கும் காரிலும் கணவன் அருகில் அமரும் பாக்கியம் தனக்குக் கிடைக்காதோ.. முதன் முதலாய் அதில் ஏறி அமரப் போகும் தான் பின் சீட்டில் தான் உட்கார வேண்டுமோ.. தளர்ந்த நடையுடன் அனுராதா காரின் பின் சீட்டுக் கதவைத் திறக்கப் போகையில் ஆகாஷ் அனுராதாவை அழைத்தான்..
“அனு.. முன்னால் வா..”
“இல்லை.. அண்ணா உட்காரட்டுமே என்று..” அனுராதா தடுமாறுகையில் பரசுராம் இலகுவாகச் சிரித்தான்..
“இது என்னம்மா பழக்கம்.. எவ்வளவுதான் நெருங்கிய உறவு.. நட்பாக இருந்தாலும்.. கணவன், மனைவி இருவருக்குமே அவர்கள் கொஞ்சம் தூரத்து உறவுதான்.. கணவன், மனைவி இருவருக்கம் இடையே வரும் உரிமை யாருக்கும் கிடையாது.. ஆகாஷின் அருகே நீதான் உட்கார வேண்டும்.. அது உன் இடம்.. அதை எக்காரணம் கொண்டும் யாருக்கும் விட்டுத் தராதே..” என்று கூறிக் கொண்டே அனுராதாவிற்கு முன் பக்கக் கதவைத் திறந்து விட்டான்..
அனுராதாவின் கண்கள் கலங்கி விட்டன.. எவ்வளவு நல்லவன்.. பிறர் மனமறிந்து நடக்கும் இயல்புடையவன்.. இவன் வருகைக்காக முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்ட தன் சின்னப் புத்தியை எண்ணி வெட்கினாள் அவள்.. பரசுராம் பின் சீட்டில் ஏறிக் கொள்ள கார் தஞ்சை பெரிய கோவிலை நோக்கிப் பறந்தது..
ஓர் விமானம் போல் தோற்றமளித்த கோவிலின் வெளிப்புற தோற்றத்தை ரசித்தபடி அதன் நீண்டு அகன்ற வெளிப் பிரகாரத்தில் அவர்கள் நடந்து கொண்டிருந்தார்கள்..
“அண்ணா.. இந்தக் கோவிலைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்..?” என்று அனுராதா கேட்டாள்..
“ராஜராஜ சோழன் கட்டியது.. அவ்வளவுதான் தெரியும்..”
“இந்தக் கோவிலில் உள்ள பிரம்மாண்ட நந்தி சிலை வளர்ந்து கொண்டே இருக்கிறதாம்.. தெரியுமா..?”
“ஈஸிட்.. அது எப்படிடா ஆகாஷ்..?”
“என்னைக் கேட்டால் எனக்கு என்ன தெரியும்..? பட்.. இந்தக் கோவிலின் நந்தி சிலையைப் பற்றி புராணக் கதை ஒன்று உண்டு.. இந்தக் கோவிலின் நந்தி இரவு நேரங்களில் உயிர் பெற்று தஞ்சையைச் சுற்றி வந்ததாம்.. இறைவன் சிவன் ஆணியடித்து அதை ஒரே இடத்தில் அமர வைத்தாராம்..”
“சிவபெருமான் ஏன் அதைச் செய்தாராம்..”
“பக்தர்கள் பயந்து போய் அவரிடம் வந்து முறையிட்டார்களாம்..”
“ஹௌ நைஸ் ஸ்டோரி.. ஆகாஷ் இங்கேதானே கருவூர் சித்தர் சந்நிதி இருக்கிறது..?”
“ஆமாம்.. அவரைப் பற்றிச் சொன்னால் இந்த ஒரு நாள் போதாது..”
“அண்ணா.. நீங்கள் பேசுவதெல்லாம் பழங்கால புராணக் கதைகள்.. நான் சொல்ல வருவது.. நம் கண் முன் நடந்த நிஜம்..”
“என்னம்மா சன் டி.வி. மாதிரி சொல்லுகிறாய்.. சரி சொல்லு..”
“நான் கைந்து வருடங்களுக்கு முன்னால் நான் ஒரு வார இதழை படித்துக் கொண்டிருந்தபோது அதில் ஒரு கவர் ஸ்டோரி வெளியாகி இருந்தது.. நம் தமிழகத்தில் இருக்கிற ராஜ பரம்பரையைப் பற்றி அவர்கள் வீட்டிற்கே சென்று பேட்டி எடுத்து கட்டுரையாக வாரா வாரம் வெளியிடுவார்கள்.. அது குமுதமா.. இல்லை ஆனந்த விகடனா என்று நினைவில்லை.. நான் படித்த கவர் ஸ்டோரியில் தஞ்சாவூர் ராஜவம்ச இளவரசர் ஒருவரை பேட்டியெடுத்து போட்டிருந்தார்கள்..”
“ஐ ஸீ.. அதில் என்னம்மா படித்தாய்..?”
“அந்த ராஜவம்சத்து இளைஞரின் படிப்பு.. தொழில்.. வியாபாரம்.. பொழுது போக்கு.. அவர் திருமணம் செய்திருந்த ராஜ குலத்துப் பெண் என்று அலசி ஆராய்ந்திருந்தவர்கள்.. அந்தப் பேட்டியில் அவரிடம் ஒரு கேள்வியைக் கேட்டார்கள்..”
“என்ன கேள்வி..?”
“தஞ்சை பெரிய கோவிலை சீரமைத்து கும்பாபிஷேகம் பண்ணும் பணியில் நீங்கள் ஈடுபட்டு இருக்கிறீர்களாமே.. பழமையான இந்தக் கோவிலை புனரமைப்பது கூடாது.. அப்படிச் செய்தால் தீ விபத்து போல ஏதாவது நேர்ந்து விடும்.. என்று சொல்கிறார்களே.. உங்களுக்கு பயமாக இல்லையா என்று கேட்டிருந்தார்கள்.”
“வெரி இன்ட்ரெஸ்டிங்.. அப்புறம்..”
“சரியாய் ஒரு ஆறு மாதமிருக்கும்.. தஞ்சையில் தீ விபத்து.. கும்பாபிஷேகத்தில் தீப்பிடித்து விட்டதுன்னு ஒரே பரபரப்பு.. அப்போது குங்குமம் வார இதழைப் படித்தேன்.. அதில் முதல்வரின் மனைவி பேட்டி கொடுத்திருந்தார்கள்..”
“என்னவென்று..?”
“தீ விபத்தில் சிக்கி காயப்பட்டிருந்தவர்களைப் போய் பார்த்து என் கணவரும் நானும் ஆறுதல் கூறினோம்.. அந்த ராஜ வம்சத்து தம்பி எனக்குத் தெரிந்த பையன் தான்.. சின்ன வயது.. பாவம்.. என்னைப் பார்த்ததும் கண்ணீர் விட்டு அழுதார்ன்னு சொல்லியிருந்தார்கள்..”
“அப்படியா..?”
“ஆமாம் அண்ணா.. இதில் என்னைப் பாதித்தது எதுன்னா.. முதலில் நான் படித்த கவர் ஸ்டோரியில் உங்களுக்குப் பயமில்லையா..? என்று கேட்ட கேள்விக்கு ‘இல்லை.. நாம் இளைய தலைமுறை.. இது போன்ற மூடநம்பிக்கைகளை தவிர்க்க வேண்டும்…’ என்று சொன்ன அதே இளவரசர்தான் தீக்காயத்துடன் கண்ணீர் விட்டிருக்கிறார்.. அவர் ஏன் அழுதார்..? இது இன்று வரை என் மனதில் உள்ள கேள்வி அண்ணா..”
“ராதா… கடவுள் வாழும் கோவில்கள் மனித ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டது அம்மா.. விஞ்ஞானத்தில் கரை கண்டவர்கள் ஏராளம்.. ஆனால் ஆன்மிகத்தில் யாரும் கரைகாண இயலாது.. நம் இந்திய ஆன்மிகம் வரையறைக்கு அப்பாற்பட்டதம்மா… அதை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.. கோவிலின் பழைமை குறையக் கூடாது.. அவ்வாறு குறைந்தால் அது தீக்குளித்து தன்னை சரி பண்ணிக் கொள்ளும் என்பது இந்த கோவிலில் ஆண்டவன் வகுத்த விதி.. அதை அலட்சியமாய் நினைத்து விட்டோமென்று அவர் கலங்கியிருக்கலாம்.. சரிவா.. சாமி கும்பிடப் போவோம்..”
அவர்கள் பிரகதீஸ்வரப் பெருமானை வணங்கி வழிபட்டு விட்டு மணி மண்டபத்தைப் பார்க்கச் சென்றார்கள்.. மதிய உணவை பிரபல ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டுவிட்டு காவேரிக் கரைக்கு காரை விட்டார்கள்.. அகன்று ஓடி தஞ்சை மண்ணை செழிக்க வைக்கும் காவேரித் தாயின் கரையில் அமர்ந்து கொண்டு பேசினார்கள்..
“அண்ணா.. இங்கே பக்கத்தில்தான் கும்பகோணம்.. இங்கே உள்ள சிவபெருமானின் கோவில்கள் எல்லாம் பிரம்மாண்டமானவை.. அப்புறம் கும்பகோணத்தைச் சுற்றியுள்ள ஊர்களில்தான் நவக்கிரக ஸ்தலங்கள் இருக்கின்றன தெரியுமா..? நீங்கள் இன்னும் ஓர் நாள் இங்கு இருந்தால் அவற்றையும் சுற்றிப் பார்த்து விட்டுப் போகலாம்..”
“இன்னொரு நாள் ஒரு வாரம் தங்கியிருப்பது போல் வருகிறேன் ராதா..”
அவர்கள் வீடு திரும்பியதும் அனுராதா காபி போட உள்ளே விரைந்தாள்.. அவள் காபியுடன் திரும்பி வந்ததும் பரசுராம் எழுந்து நின்று கொண்டு.
“ராதா ஒரு தட்டைக் கொண்டு வாம்மா..” என்றான்.
ராதா காபி டிரேயை டீப்பாயில் வைத்து விட்டு தட்டை எடுத்து வந்தாள்.. பரசுராம் அதில் பட்டுப் புடவை.. பேன்ட் சர்ட்.. பழம்.. வெற்றிலை பாக்கு.. ஆயிரம் ரூபாய் நோட்டு இவற்றை வைத்து அதன் மேல் ஓர் பத்திரிகையை வைத்தான்..
“இரண்டு பேரும் சேர்ந்து நில்லுங்கம்மா..”
இருவரும் இணைந்து நின்றவுடன் தட்டை எடுத்து இருவரிடமும் நீட்டி,
“எனக்குக் கல்யாணம்டா ஆகாஷ்.. நீ என் தங்கையுடன் வந்திருந்து நடத்திக் கொடுக்க வேண்டும்..” என்று கூறினான்..
“அது என் கடமைடா..” ஆகாஷ் சந்தோசமாய் நண்பனைக் கட்டிக் கொண்டான்..
பழம், வெற்றிலை, பணம் துணியுடன் அழைப்பிதழ் கொடுப்பது ஓர் உயர்ந்த கௌரவத்தைக் கொடுப்பது போலாகும்..
அப்படி ஓர் கௌரவத்தை தன் நண்பனுக்கு தேடி வந்து கொடுத்த பரசுராமை விழியகலப் பார்த்தாள் அனுராதா..
அதே திருமண மண்டபம்.. அதே மொட்டை மாடி.. அதே கைப்பிடிச்சுவரில் அமர்ந்து கொண்டு ஆகாஷ் இருக்க அனுராதா அவளை அணுகி அவன் தோளில் கை வைத்துத் திருப்பினாள்..
“எல்லோரும் கீழே உட்கார்ந்திருந்தால் நீங்கள் மொட்டை மாடியில் இருட்டில் நின்று கொண்டு என்ன செய்கிறீர்கள்..?”
“இது மொட்டை மாடியில்லை.. நினைவுச் சின்னம்.. இங்கே நின்று கொண்டு என் திருமண நாளை நினைத்துப் பார்த்தேன்..”
“நல்லாயிருக்கு உங்க கதை.. வாசலில் சீரியல் லைட்… மண்டபத்தில் மெல்லிசைக் கச்சேரி… ஜெகஜோதியாய் பிரகாசிக்கும் விளக்குகள்… விருந்தினர்கள்.. இவைகள் எதுவும் நம் திருமண நாளை நினைவு படுத்தாதா..?”
“இல்லை அனு.. இங்கே நின்று கொண்டு தான் நான் தவித்துக் கொண்டிருந்தேன்.. விரும்பாத பெண்ணின் கழுத்தில் விடிந்தால் மூன்று முடிச்சுப் போட வேண்டுமே என்று மருகிக் கொண்டிருந்தேன்.. பரசு வந்துதான் சமாதானப்படுத்தி அழைத்துப் போனான்..”
அனுராதா கோபத்துடன் கீழே போகத் திரும்பினாள்.. ஆகாஷ் அவள் கரம் பிடித்துத் தடுத்தான்..
“எங்கே போகிறாய்..”
“கீழே போய் பரசு அண்ணாவையே அனுப்புகிறேன்.. உங்களை அவர் அழைத்துக் கொண்டு வரட்டும்..”
“இனி உன்னைத் தவிர யார் பின்னாலும் போக மாட்டேன் அனு..”
ஆகாஷ் அவளைக் கட்டித் தழுவி அவள் முகத்தில் இதழ் பதித்தான்.. கோபம் பறந்தோடிய அனுராதா தாபத்துடன் அவனைப் பதிலுக்குத் தழுவி தன்னோடு இறுக்கிக் கொண்டாள்..
ஒவ்வொருவரின் இதயத்திலும் ஓராயிரம் உணர்வுகள் ஒளிந்திருக்கும்.. இதயத்தின் சாளரத்தை எவரேனும் தட்டித் திறந்து விட்டால் அவை இதமாக வெளியேறி உயிர் கொடுக்கும்..
– முற்றும் –
Reviews — Idhayathini Salaram / இதயத்தின் சாளரம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.