Chapter 01

0Shares

உன்னை நினைத்தவுடன் கவிதைகளும்..

உன்னை பார்த்தவுடன் சிரிப்பும் வரும்..

மலர்ச்சிரிப்பில் எனை சிறைபிடித்தும்..

மயக்கமெதற்கு என் கரம் பிடிக்க..?

– காதலாகி.. கசிந்துருகி…

அலை கொஞ்சும் கன்யாகுமரிக் கடற்கரை.. அலையோரம் கால் நனைய நடந்தான் ஜீவா என்ற.. ஜீவானந்தம்.. பாறையைத் தொட்டும் திரும்பும் அலைகளைப் பார்த்தபடி.. சற்று நேரம் நின்றான்..

அந்த அலைகடல் போல்.. அவன் மனம் கொந்தளித்துக் கொண்டிருந்தது.. ஏன் அவள் அப்படிச் சொன்னாள்..? என்ன தவறு அவன் செய்தான் என்று அவனை வெறுத்தாள்..?

அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை…

“உங்களை ஒரு நல்ல நண்பர் என்றுதான் நான் இத்தனை நாள் நினைத்திருந்தேன்.. கடைசியில் நீங்களும்.. மற்றவர்கள் போல்தானா.. ஜீவா..?”

எவ்வளவு எளிதாக வார்த்தைகளைக் கொட்டி விட்டாள் சந்தியா..? பேசலாமா..? அவள் அப்படிப் பேசலாமா..? ஜீவாவைப் பார்த்து தேள் கொட்டும் வார்த்தைகளைச் சொல்லலாமா..?

ஆனால்.. அவள் அவன் மனதை நினைக்காமல்.. முகம் முறிக்கும் வார்த்தைகளைச் சொல்லி.. அவன் மனத்தை முறித்து விட்டாள்..

முதன் முதலாய் குமார் அவளை ஜீவானந்தத்திற்கு அறிமுகப்படுத்தி வைத்த போது.. ஜீவானந்தம்.. அவளின் அழகிய முகத்தைப் பார்க்கவில்லை..

அவளுடைய கடல் போன்ற கண்களில் தெரிந்த கவலையைத்தான் பார்த்தான்.. அடிபட்டு.. குற்றுயிரும்.. குலையுயிருமாய் கிடக்கும் பறவையின் வேதனையை அவளது கண்கள் பிரதிபலித்தன..

விவேகானந்தர் பாறையின் மீது.. மற்றவர்கள் பேசிக் கொண்டே நகர.. அவன் மட்டும்.. அவளுடைய கண்களின்.. கண்ணீர் துளிகளைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டு நின்றான்..

“ஜீவா.. இது சந்தியா.. என் தங்கையின் தோழி.. லேடிஸ் ஹாஸ்டலில் தங்கியிருக்கிறாள்.. வேலை பார்த்துக் கொண்டே படிக்கிறாள்.. எப்போதும் லீவு நாள்களில் எங்கள் வீட்டிற்கு வருவாள்.. இன்றைக்கு வீட்டில் எல்லாரும் ஊருக்குப் போய் விட்டாங்க.. சரி.. வா.. என் நண்பர்களுடன் நான் ஊர் சுற்றுவதை வேடிக்கை பாருன்னு சொல்லிக் கூப்பிட்டுக் கொண்டு வந்தேன்..”

குமார் சிரித்தான்.. சந்தியா ஒப்புக்குக் கூட லேசாக சிரிக்கவில்லை.. மௌனமாக கடலை வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றாள்..

ஜீவாவிற்கு.. அவளது சோகம் சங்கடத்தைக் கொடுத்தது.. வாரத்தின் அந்த ஒரு நாளில்தான்.. அவர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து ஊர் சுற்றுவார்கள்.. அரட்டை அடிப்பார்கள்.. மற்ற நாள்களில்.. அவரவர் வேலையில் ஈடுபட்டு விடுவார்கள்..

அந்த ஒரு நாளின் உற்சாகத்தில் பங்கெடுக்க.. இப்படி ஒரு அழுது வடியும் பெண்ணோடு.. ஏன் இவன் வந்து தொலைத்தான்.. என்று மனது ஒரு பக்கம் எரிச்சல் பட்டது.. அதே மனது.. ஐயோ பாவம்.. இந்தப் பெண்ணுக்குள் சொல்ல முடியாத சோகம் இருக்கிறது.. போல.. என்று பரிதாபப்பட்டது..

“ஏண்டா.. நாம ஆண்களாக சுற்றும் இடத்திற்கு இப்படி ஒரு பெண்ணைக் கூப்பிட்டுக் கொண்டு வந்திருக்கிறாயே.. உனக்கு அறிவு என்பது கொஞ்சமாவது இருக்கிறதா.. இல்லை அதைக் கடன் கொடுத்து விட்டாயா..?”

“சந்தியாவின் காதில் விழாத தூரத்திற்கு நண்பனைத் தள்ளிக் கொண்டு போய் கடிந்து கொண்டான் ஜீவா..”

“உனக்கு அவளைப் பற்றி முழுவதும் தெரியாது ஜீவா.. தெரிந்தால் இப்படிப் பேசமாட்டாய்..” என்றான் குமார்..

சந்தியாவிற்கு.. தாய் இருந்தும் இல்லாத நிலையாம்.. தந்தையார் இறந்து விட்டாராம்.. அந்தச் சூழ்நிலையில்.. இளம் பெண்ணான அவள்.. தனித்து எப்படி வாழ்வது என்ற பயத்தில் வீட்டைக் காலி செய்து விட்டு.. லேடிஸ் ஹாஸ்டலுக்குப் போய் விட்டாளாம்..

“அவள் தினமும் போராடிக் கொண்டிருக்கிறாள் ஜீவா.. முகம் காட்டும் எதிரியிடம் போராடலாம்.. முகம் தெரியாத எதிரியிடம் எப்படிப் போராடுவது..? தினமும்.. கத்தி முனையில் நடப்பது போலச் செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கிறாள்..”

“அப்படி என்ன தாண்டா அவளுக்குப் பிரச்சினை..?”

“அவளுடைய இளமையும்.. அழகுமே பிரச்சினை தானேடா..?”

“நீ சொல்வதைப் பார்த்தால்.. இளமையும்.. அழகும் உள்ள பெண்கள்.. நிம்மதியாக வாழவே முடியாது போல இருக்கே.. ஹா.. ஹா..”

“சிரிக்காதே ஜீவா.. மற்ற பெண்களுக்கு.. காப்பாற்ற உறவு இருக்கும்.. இவள் தனிமையில் இருக்கிறாள்.. அதை மறந்து விடாதே..”

குமாரின் குரலில் தொனித்த கவலையை உணர்ந்த ஜீவா சற்றுத் தொலைவில்.. கடலை வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்ற சந்தியாவைத் திரும்பிப் பார்த்தான்..

நிராதராவக தனித்து விடப்பட்ட ஜீவனின் சோகத்தை.. அவளது கண்கள் பிரதிபலிப்பதை புரிந்து கொண்ட ஜீவானந்தனுக்கு அவள் மேல் பரிவு உண்டானது..

“தினமும் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப் படுகிறாள்டா.. வேலை செய்யும் இடத்தில் கூட வேலை பார்ப்பவர்களால் பிரச்சினை.. மேலதிகாரியிடம் புகார் செய்யப் போனால்.. அவன் கையைத் தொட்டுப் பேசினானாம்.. கடவுளே என்று விதியை நொந்து கொண்டு ஹாஸ்டலுக்குப் போனால்.. அங்கே.. போன் மூலம் டார்ச்சர் தொடருகிறதாம்..”

“போலீஸில் புகார் கொடுத்தால் என்ன..?”

“தனியாய் இருக்கும் பெண்ணின் வார்த்தை எடுபடுமா..?”

“உன் தங்கைக்கு இந்தப் பெண் தோழியா..?”

“ஆமாம்.. இரண்டு பேரும்.. காலேஜ் வரை ஒன்றாகப் படித்தவர்கள்தான்.. வேலை செய்வதுதான்.. வேறு.. வேறு இடங்களில்..”

“உங்கள் குடும்பம்.. இந்தப் பெண்ணுக்கு சப்போர்ட் பண்ணலாமே..”

“எதுவரை சப்போர்ட் பண்ண முடியும்..? இது போல லீவு நாள்களில் வீட்டுக்கு வந்தால்.. வீட்டில் ஒருத்தி போல சேர்த்துக் கொள்ளலாம்.. மற்றபடி.. அவரவர் குடும்பம் தானே.. அவரவருக்கு முக்கியமாகப் படும்..?”

“உண்மைதான்..”

அவர்கள் இருவரும் பேசிக் கொண்டே சந்தியாவை அணுகிய போது.. அவள் அப்போதும்.. கடலை விட்டுப் பார்வையைத் திருப்பாமல் நின்றாள்..

“என்ன பார்க்கிறீங்க.. சந்தியா..?”

ஜீவாவிற்கு அவளிடம் பேச வேண்டும் போலத் தோன்றியதால் பேச்சுக் கொடுத்தான்.. அவள் சட்டென்று அவன் முகம் பார்த்தாள்.. அவனுடன் பேசுவதால் தவறில்லை.. என்று மனதிற்கு தோன்றியதோ என்னவோ.. மெதுவான குரலில் பதில் சொன்னாள்..

“அதோ அந்த கட்டுமரத்தில் தனியாக ஒரு சிறுவன் போகிறான்.. அவனைப் பார்த்துக் கொண்டிருந்தேன்..”

குமாரின் பார்வையும்.. ஜீவாவின் பார்வையும் சந்தித்துக் கொண்டன..

“அவனைப் பார்க்க.. உங்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கிறதா..” என்று ஜீவா கேட்டான்..

“இல்லை.. கவலையாக.. இருக்கிறது..” என்று அவள் பதில் சொன்னதும்.. ஜீவாவிற்கு ஆச்சரியமாகப் போய்விட்டது..

“கவலையா..? இதில் கவலைப்பட என்ன இருக்கிறது..?”

“ஓராயிரம் இருக்கிறது.. அவன் தனியாகப் போகிறான்..”

“அதனால் என்ன..?”

“கடலில் பெரிய அலை வரலாம்.. சுறாமீன் வரலாம்..” சந்தியாவின் உடல் பயத்தில் சிலிர்த்தது..

இவள் ஏன்.. வாழ்க்கையின் இருண்ட பக்கங்களையே எப்போதும் நினைக்கிறாள்..

யோசனையுடன்.. சந்தியாவின் முகம் பார்த்தான் ஜீவா.. “அவன் கடலின் மைந்தன் சந்தியா.. மீனவன்.. அவனுக்கு கடல்தான் தாய் வீடு.. தாயின் மடியில் அவன் பயப்படுவானா..? அவன் எல்லாவற்றையும் சமாளித்து கரைக்குத் திரும்பி விடுவான்.. நீங்க.. வாங்க.. நாம்.. விவேகானந்தர்.. தியானம் பண்ணிய அறைக்குப் போகலாம்..”

அவள் மனமில்லாமல்.. அவர்களுடன் நடந்தாள்..

இவள் மிகவும் பயந்திருக்கிறாள்.. என்று நினைத்துக் கொண்டான் ஜீவா..

“பாவம் துரத்தும் கவலைகளிடமிருந்து தப்பிக்க ஓடி ஓடிக் களைத்து விட்டாள் போல.. ஓய்ந்து உட்கார இவளுக்கென்று ஒரு இடமில்லையா..?”

தியான அறைக்குள் அமர்ந்ததும்.. அங்கே சூழ்ந்திருந்த அமைதி கலந்த மௌனம்.. அவர்களை ஆட்கொண்டு விட்டது..

கடலலைகளின்.. “ஓம்..” என்ற ரீங்கார சப்தம் மட்டும் காதுக்குள் கேட்டுக் கொண்டிருக்க.. அவர்கள் அனைவரும்.. அந்த சூழலில் கரைந்து கலந்து போனார்கள்.

கண்மூடி.. தியானித்த ஜீவா.. கண்விழித்த போது அவனுடைய நண்பர்கள் எல்லாரும் வெளியேறி விட்டிருந்தனர். எழுந்து கொள்ள நினைத்த ஜீவா, 

தன் முன்னால் கண்மூடி அமர்ந்திருந்த சந்தியாவைக் கண்டதும்.. அப்படியே அமர்ந்து விட்டான்..

மூடிய அவளுடைய விழிகளில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து வழிந்து கொண்டிருந்தது.. அதைக் காண்பதற்கு ஜீவாவினால் முடியவில்லை..

எவ்வளவு துயரத்தை இவள் மனதிற்குள் போட்டுப் பூட்டி வைத்திருந்தால்.. இப்படி மௌனக் கண்ணீரை வடிப்பாள்.. வார்த்தைகளில் வடிக்க இயலாத துயரத்தை இவள் கண்ணீரில் வடிக்கிறாளோ..? கண்ணதாசனின் திரையிசைப் பாடலில் வருவது போல..

‘சொல்லி அழுதால்

தீர்த்து விடும்..

சொல்லத்தானே

வார்த்தையில்லை..!’

என்று.. தன் துயரங்களை மனதிற்குள் பூட்டி வைத்துக் கொண்டு இவள் மருகுகிறாளோ..?

யாருமற்ற அநாதையாய்.. சோகத்தை முகத்தில் காட்டி.. துயருடன் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்த சந்தியாவைப் பார்க்கும் போது.. ஜீவாவின் மனம் பிசைந்தது..

அவளது கண்ணீரை நிறுத்த முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று அப்போது அவன் மனதிற்குள் தோன்றியது..

0Shares

Reviews — Kadalaki Kasinthuruki / காதலாகி கசிந்துருகி

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link