Chapter 17
காதலும் ஒருவகையில்
கடவுளைப் போன்றது..
கண்ணுக்குத் தெரியாமல்..
நம்பிக்கை அளிப்பது..
காதலாகி.. கசிந்துருகி..
சந்தியா ஒரு முடிவோடு ஜீவாவை நிமிர்ந்து பார்த்தாள்..
“ஓகே.. நான் இந்த டீலுக்கு வருகிறேன்..”
“தட் ஸ் குட்.. டீலா நோ டீலான்னு.. நீ ரொம்பவும் யோசித்து மண்டை சூடாகிவிட்டாய் போல.. வருகிறாயா..? அந்தக் கடையில் கூல் டிரிங்க்ஸ் சாப்பிட்டுவிட்டுப் போகலாம்..”
“என் தலை வெப்பத்தை நான் பார்த்துக் கொள்கிறேன்.. நீங்க உங்க வழியைப் பார்த்துக்கிட்டு போகலாம்..”
“இப்போதுதான் நீ சவாலை ஏற்றுக் கொண்டு டீலுக்கு வந்தாய்.. இப்போது பயந்து பின் வாங்குகிறாயே..”
“எனக்கு உங்களைப் பார்த்து பயமில்லைன்னு நான் புரூவ் பண்ணனும்னா.. உங்களுடன் கூல்டிரிங்க் சாப்பிட வரணுமா..?”
“ஆமாம்..”
“இதை மணிரத்னம்.. ‘மௌனராகம்’ படத்தில் அப்ளை பண்ணி விட்டார்.. நீங்க வேறு விதமா முயற்சி பண்ணுங்க ஜென்டில் மேன்..”
“என்னை ஜென்டில் மேன்னு ஒப்புக் கொண்டதற்கு ரொம்ப நன்றி.. அப்போ கூல்டிரிங்க் சாப்பிட வரமாட்டே..”
“மாட்டேன்..”
“சரிவா உன்னை ஹாஸ்டலில் விட்டுவிட்டுப் போகிறேன்..”
“என் ஹாஸ்டலுக்குப் போக எனக்கு வழி தெரியும்.. நீங்க ஒன்றும் வழிகாட்ட வேண்டாம்..”
“நான் வழிகாட்ட வரவில்லைம்மா.. வழித்துணையாய் வருகிறேன்.. என்ன முறைக்கிறாய்..? வாடி போடின்னாத்தான் தப்பு.. வாம்மா.. போம்மான்னால் என்ன தப்பு..? எனக்கு இப்படித்தாம்மா பேச வரும்..”
“எனக்குத் துணையாய் நீங்கள் வர வேண்டாம்..”
“வாழ்க்கைத் துணையாய் தானே வரக்கூடாது.. வழித்துணையாய் வரலாமில்லையா..?”
“என் வழியில் நான் போகிறேன்.. உங்கள் வழியில் நீங்கள் போங்க.. என் வழியில் குறுக்கே வராதீங்க…”
சந்தியா விருட்டென்று கிளம்பப் போக ஜீவா தன் கையை அவளுக்கு முன்னால் நீட்டி வழி மறித்தான்.
“நீ என்னுடன் பேச ஆரம்பித்த போது மணி எட்டு.. இப்போது ஒன்பதே கால்.. இந்த நேரத்தில் நீ தனியாகப் போவது சரியில்லை சந்தியா..”
“எது சரி எது தப்புன்னு.. எனக்குத் தெரியும்.. நீங்க உங்க வேலையைப் பார்த்துக்கிட்டுப் போங்க..”
சந்தியா கோபத்துடன் நடந்து.. அங்கேயிருந்த மெடிகல் ஷாப்பில் மாத்திரைகளை வாங்கிக் கொண்டு திரும்ப நடந்து வந்தாள்.. அங்கே நின்று கொண்டிருந்த ஜீவாவைக் காணவில்லை.. மனதில் நிம்மதி தோன்றுவதற்குப் பதில் பயம் தோன்றுவதை உணர்ந்தாள்.
வேகமாக எட்டு வைத்து அவள் நடந்த போது பின்னாலேயே இரண்டு பேர் தொடர்ந்து வந்தனர்.. தன் கையிலிருந்த கர்சீப்பை கீழே போட்டு விட்டு எடுப்பது போல் குனிந்தவள் யார் அவர்கள் என்று பார்த்தாள்..
அவள் மெடிகல் ஷாப்பில் மாத்திரை வாங்கிக் கொண்டிருந்த அங்கே அந்த இருவரும் நின்று கொண்டிருந்தது அவள் நினைவிற்கு வந்தது..
‘என்னைத்தான் பாலோ பண்ணுகிறான்களா..’ சந்தியாவின் வயிற்றில் பயம் பந்தாக உருண்டது..
அவள் நின்று நின்று நடக்க ஆரம்பித்தாள்.. அவர்கள் இருவரும் அவள் நின்றால்.. நின்றார்கள்.. நடந்தால் நடந்தார்கள்.. அவர்கள் தொடர்ந்து வருவது சந்தியாவிற்கு நிச்சயமாய் தெரிந்து விட்டது..
அவளுடைய ஹாஸ்டலுக்குப் போக வேண்டுமானால் இருள் அடர்ந்த நீண்ட பாதைவழியாகத்தான் அவள் போயாக வேண்டும்.. அந்தச் சாலையில் வேறு.. ஆள் நடமாட்டம் இல்லை.. சந்தியா திகிலுடன் நின்று விட்டாள்.. அவளைத் தொடர்ந்து வந்தவர்களும் அசையாமல் நின்று கொண்டிருந்தனர்..
‘கடவுளே.. காப்பாற்று..’ சந்தியா கடவுளை துணைக்கு அழைத்தாள்..
எப்போதையும் விட.. இப்போது தனிமை அவளை அதிகமாக அச்சுறுத்தியது.. இத்தனை நாளும் ஆறுதல் சொல்ல ஜீவா என்ற நண்பன் அவளுக்கு இருந்தான்.. இப்போதுதான் நண்பன் காதலனாக மாறி அவளை விட்டு விலகிச் சென்று விட்டானே..
சந்தியாவிற்கு கண்கள் கரித்தன..
“சந்தியா..” அவளுடைய பக்கவாட்டில் இருந்த கடையின் மறைவிலிருந்து குரல் கேட்டது..
‘இது இது ஜீவாவின் குரல் அல்லவா..’ சந்தியா.. ஆனந்தத்துடன் திரும்பினாள்..
கடையின் மறைவிலிருந்து, ஜீவா வெளிப்பட்டான்.. அவளருகே வந்து நின்றான்.. அவளுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தவர்களைத் திரும்பிப் பார்த்தான்..
ஜீவாவின் உயரத்தையும், வாட்டசாட்டமான தோற்றத்தையும் பார்த்த அந்த இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டே போவது போல் பாவனை செய்தவாறு அந்த இடத்தை விட்டு அகன்றார்கள்.
அவர்களை அலட்சியமாய் பார்த்து விட்டு சந்தியாவின் பக்கம் திரும்பிய ஜீவா முடியை ஒருகையால் ஒதுக்கி விட்டுக் கொண்டு.. எதுவுமே நடக்காதது போல..
“போகலாமா..” என்றான்..
சந்தியா பதில் பேசாமல் அவனுடன் இணைந்து நடந்தாள்..
Reviews — Kadalaki Kasinthuruki / காதலாகி கசிந்துருகி
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.