Chapter 20
கை தொடும் தூரத்தில் நீயிருந்தும்..
என்மனம் தொடமுடியாமல் தூர நின்றாய்..
அருகினில் வந்திட மனம் துடித்தேன்..
நீ முகத்தைத் திருப்பி.. ஏன் விலகிச் சென்றாய்..?
காதலாகி.. கசிந்துருகி..
“இப்போதுதாண்டா நீ என் நண்பன்..” மனம் குளிரச் சொன்னான் டேனியல்..
“பைபிள் படிப்பவன் நான் மகாபாரதம் சொல்வதை பொறுமையாய் கேட்கும்போதே என் மனதில் இமயம் போல் உயர்ந்துவிட்டாய்.. நீதான் என் நண்பேன்டா..” ஜீவா சிரித்தான்..
“அடப்போடா.. நீ என்னுடன் எத்தனை தடவை சர்ச்சுக்கு வந்து மண்டி போட்டு யேசுவிடம் பிரார்த்தனை பண்ணியிருக்கிறாய்.. டேய் ஜீவா.. மதங்கள் வேறாக இருந்தாலும் நம் மனது ஒன்றுதானேடா..”
“நமக்கு மேலே ஒரு சக்தி இருக்குடா டேனியல்.. அதை நாம் கடவுள் என்று கையெடுத்துக் கும்பிடுகிறோம்.”
“அந்தக் கடவுளை நான் கர்த்தர் என்கிறேன்.. நீ கிருஷ்ணன் என்கிறாய்.. வழிபடும் முறைகள் வேறு.. ஆனால் கடவுள் என்பவர் ஒருவர்தானேடா..”
அவர்கள் பக்குவப்பட்டவர்கள்.. இணைபிரியாத.. ஒருவர் மனதை ஒருவர் புரிந்த நண்பர்கள்.. வெகு நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு டேனியல் சென்றுவிட அன்று ஜீவா நிம்மதியாக தெளிந்த மனத்துடன் உறங்கினான்..
“ஏண்டி.. இவ்வளவு நேரம்..” என்று காய்ச்சலுடன் படுத்திருந்த சந்தியாவின் தோழி காயத்ரி வினவினாள்..
“வழியில் ஜீவாவைப் பார்த்தேன்..” சந்தியா.. மாத்திரையை எடுத்துத் தோழியிடம் கொடுத்தபடி கூறினாள்.
காயத்ரி மாத்திரையை விழுங்கிக் கொண்டே சந்தியாவைப் பார்த்தாள்..
“பேசினாயா..?”
“நான் பேசவில்லை.. அவன்தான் என்னுடன் பேசினான்..”
“பதிலுக்கு நீ பேசவில்லையா..?”
“பேசித்தானே ஆகனும்.. வேறு வழியில்லையே.. அவன் என் வழிமறித்துக் கொண்டு நிற்கும் போது.. வாயை மூடிக் கொண்டா வரமுடியும்..?” சந்தியா சுள்ளென்று பேசினாள்..
காயத்ரி காய்ச்சலின் சோர்வுடன் கட்டிலில் படுத்துப் போர்வையை இழுத்து விட்டுக் கொண்டாள்..
“உனக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகிறது சந்தியா.. நீ ஜீவாவுடன் வேறு வழியில்லாமல் பேசனும்னு கூட இல்லையே.. இன்றைக்குத்தானே அவனை நீ எதிரியாக நினைக்கிறாய்.. கொஞ்ச நாள்களுக்கு முன்னால் வரை நீ முணுக்கென்றால் கூட ஜீவாவுக்கு போன் பண்ணி கண்ணீர் விட்டவள்தானே..” காயத்ரி கண்களை மூடிக் கொண்டாள்.
“சொல்லிக் காட்டுகிறாயா..” சந்தியா காயத்ரியை முறைத்தாள்..
“நினைவு படுத்தினேன்..” விழி திறக்காமல் கூறினாள் காயத்ரி..
“அன்றைக்கு இருந்த ஜீவாவாகவா இன்றைக்கு அவன் இருக்கிறான்..?”
“ஏன் அவன் தலையில் கொம்பு முளைத்து பார்ப்பதற்கு பயங்கரமாய் அவன் மாறிவிட்டானா..?”
“காயத்ரி..”
“சும்மா என்னையே அதட்டாதே சந்தியா.. ஜீவாவைப் போல ஒரு காதலன் கிடைக்க நீ கொடுத்து வைத்திருக்க வேண்டும்.. உன் சூழ்நிலை கொஞ்சம் சிக்கலானது சந்தியா.. இந்த சூழ்நிலையைத் தவறாக பயன்படுத்திக் கொள்ளத்தான் சாதாரணமாக எல்லாரும் நினைப்பாங்க.. ஆனால் ஜீவா..? இது எதையும் யோசிக்காமல் உன்னிடம் காதல் சொல்லியிருக்கிறானே.. ரியலி ஹி இஸ் வெரி கிரேட்.. அவன் உன்னை.. உனக்காகவே நேசிக்கிறான் சந்தியா.. யாருக்குக் கிடைக்கும்.. இப்படிப்பட்ட காதல்..?”
“எனக்கு இப்படிப்பட்ட காதல் வேண்டாம்.. நீ வேண்டுமானால் அவனைக் காதலி..”
“அவன் மட்டும் என்னைக் காதலிக்கிறேன்னு ஒரு வார்த்தை சொல்லட்டும்.. நான் அவன் பின்னாலேயே போய்விடுவேன்.. ஆனால் அவன்தான் என்னைக் காதலிக்கவில்லையே.. உன்னைத்தானே காதலிக்கிறான்..?”
“ஷட் அப் காயத்ரி.. காய்ச்சலில் கிடக்கிறாயேன்னு பார்க்கிறேன்.. இல்லாவிட்டால் நன்றாக மொத்திவிடுவேன்..”
“இந்தக் கோபம் எதற்காக சந்தியா..? ஜீவா என்னைக் காதலிக்கவில்லையென்று நான் வருத்தப்படுகிறேனே.. அதற்காகவா..?”
“யு.. யு…”
சந்தியா தலையணையைத் தூக்கி காயத்ரியின் மேல் விட்டு எறிய அவள் புரண்டு படுத்துச் சிரித்தாள்..
“அவன் யாரைக் காதலித்தால் எனக்கென்ன வந்தது.”
“அப்படியா சொல்கிறாய்.. நான் வேண்டுமானால் டிரை பண்ணிப் பார்க்கவா..”
“அதை முதலில் செய்.. உனக்குக் கோடி புண்ணியமாகப் போகும்.. நான் தப்பித்துக் கொள்வேன்..”
இதைச் சொல்லும் போது சந்தியாவின் குரல் பிசிறடித்தது.. போர்வைக்குள்ளிருந்து காயத்ரியின் சிரிப்புச் சத்தம் கேட்டது..
“ஏண்டி சிரிக்கறே..”
“உன் முன்னால் ஜீவாதான் சிரிக்கக் கூடாது.. நானும் கூடவா சிரிக்கக் கூடாது..?”
“காரணமில்லாமல் சிரித்தால் உன்னைப் பைத்தியமுன்னு நினைப்பாங்க..”
“யாரும் அப்படி நினைக்கமாட்டாங்க.. சிரிக்கத் தெரிந்த புத்திசாலின்னு நினைப்பாங்க..”
“அப்போ நான் சிரிக்கத் தெரியாத முட்டாளா..?”
“ஊஹீம்.. உன்னைப் போய் யாராவது முட்டாளுன்னு சொல்வாங்களா..? ஜீவாவை உன் சுமைகளை இறக்கி வைக்கும் சுமைதாங்கியாய் மட்டும் யூஸ் பண்ணிவிட்டு அவன் மனதில் காதலை உண்டாக்கி விட்டு அவன் காதலைச் சொன்னதும் இரக்கமில்லாமல் அவன் மனதை உன் காலடியில் போட்டு மிதித்து நசுக்கும் ராட்ஸஸி இல்லையா நீ..?”
காயத்ரி அதற்கு மேல் பேசமுடியாதவளாய் மாத்திரைகளின் வேகத்தில் தூங்கிப் போனாய்.. இருளில் தூங்காமல் தன் எதிர்காலத்தை துழாவிக் கொண்டிருந்தாள் சந்தியா..
Reviews — Kadalaki Kasinthuruki / காதலாகி கசிந்துருகி
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.