Chapter 21

0Shares

நீயிருக்கும் நெஞ்சத்தில்

    வேறு யாரும் வரமுடியாது..

உன் நிழலாக நான் தொடர்வேன்..

  உன் நினைவுகளை ஒருநாள் வெல்வேன்..

காதலாகி.. கசிந்துருகி..

தன் வண்டியில் ஏறிக் கொண்டிருந்த ஜீவா குமாரைக் கண்டதும் கீழே இறங்கினான்..

“வாடா..” என்றபடி ஜிம்மிற்குள் சென்றான்..

“வீட்டுக்குப் போயிருந்தேன்.. நீ இங்கேயிருப்பதாக அம்மா சொன்னாங்க… வீட்டுக்குச் சரியாகப் போவதில்லையாமே.. ரூமிலேயே தங்கி விடுகிறாயாமே.. ஏண்டா..”

“இனி அடிக்கடி வீட்டுக்குப் போவேன்டா..”

குமாருக்கு காபி வரவழைத்துக் கொடுத்தான் ஜீவா.. இருவரும் பொதுவாக சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்..

“உன் கல்யாணத்தைப் பற்றி அம்மா வருத்தப் பட்டாங்கடா.. நல்ல இடங்களில் பெண் வந்தும் நீ மாட்டேன்னு சொல்கிறாயாமே..”

“என் கல்யாணத்துக்கு இப்போது அவசரமில்லை..”

“இன்னும் சந்தியாவையே நினைத்துக் கொண்டிருக்கிறாயா..?”

“இது என்னடா கேள்வி..? நான் என்றைக்குமே அவளைத்தானே நினைத்துக் கொண்டிருப்பேன்..?”

“எனக்கென்னவோ நீ வீட்டில் சொல்வதைக் கேட்கலாமுன்னு தோணுது ஜீவா..”

“வேறு பேசலாம் குமார்..”

குமார் பெருமூச்சுடன் மௌனமானான்.. இருவரும் பேசிக் கொள்ளவில்லை.. சற்றுநேரம் கழித்து குமார்..

“நீ சந்தியாவைப் பார்த்தாயாமே..” என்று கேட்டான்.

“யார் சொன்னது..?”

“சந்தியாதான் சொன்னாள்..”

“வேறு என்ன சொன்னாள்..?”

“நீ மாறிவிட்டாய்ன்னு சொன்னாள்..”

“ஆமாம்.. நான் உஜாலாவுக்கு மாறிவிட்டேன்..”

“சந்தியாவின் பேச்சைவிடு.. இப்போது நம் பேச்சிற்கு வரலாம்..”

“சொல்லு..”

“இந்த வாரக் கடைசியில் என் தங்கையின் நிச்சயதார்த்தம்.. அடுத்த மாதத்தில் முதல் வாரத்தில் கல்யாணம்..”

“நல்ல செய்திதானே.. இதை ஏன் வந்தவுடன் சொல்லவில்லை..?”

“இதைச் சொல்லத்தான் வந்தேன்.. அம்மாவைப் பார்த்ததும் அவங்க உன்னைப் பற்றிக் கவலைப்பட்டாங்க.. அதுதான் பேச்சு வேறுதிசையில் மாறிவிட்டது..”

“அம்மாவிடம் சொன்னாயா..?”

“சொல்லாமல் இருப்பேனா.. நிச்சயதார்த்தத்திற்கு வர முடியாதாதம்.. வேறு வேலை இருக்காம்.. கட்டாயம் கல்யாணத்துக்கு இன்விடேசன் தா வருகிறேன்னு சொன்னாங்க…”

“மேரேஜ் இன்விடேசன் அடித்து விட்டாயா..?”

“இல்லை.. இன்னும் நாள் இருக்கே.. நீ நிச்சயத்திற்கு மறக்காமல் வந்து விடு..”

“மறப்பேனா..?” என்றான் ஜீவா அர்த்தத்துடன்..

குமாரின் தங்கை கவிதாவும் சந்தியாவும் நெருங்கிய தோழிகள்.. கவிதாவின் மூலமாகத்தான் குமாருக்கு சந்தியாவைத் தெரியும்.. அவள் கட்டாயம் கவிதாவின் திருமண நிகழ்வின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பாள்..

இது போதாதா ஜீவாவிற்கு..?

கவிதாவின் நிச்சயதார்த்தம் நடந்த அன்று.. அதிகாலையிலேயே ஜீவா குமாரின் வீட்டிற்கு போய் விட்டான்.

அவன் எதிர்பார்த்தது போலவே சந்தியா வாசலில் மாக்கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்.. அவள் போட்டுக் கொண்டிருந்த கோலத்தை உரசியபடி தன் வண்டியைக் கொண்டு சென்று நிறுத்தினான் அவன்.. அவள் நிமிர்ந்து பார்த்தாள்..

வண்டியை விட்டு இறங்காமல் அலட்சியமாக முடியைக்கோதிவிட்டுக் கொண்டு ஜீவா அவளைப் பார்த்தான்..

ஏனோ அவனுடைய பார்வையை சந்தியாவினால் நேருக்கு நேர் சந்திக்க முடியவில்லை.. வேறுபக்கம் பார்வையைத் திருப்பிக் கொண்டாள்..

“நான் ஏதும் உதவி பண்ணவா..?” என்றான் ஜீவா..

“ஆமாம் பெரிய உதவி பண்ண வேண்டும்..” என்றாள் சந்தியா முகம் மாறாமல்..

“சொல் சந்தியா.. உனக்கு உதவி செய்யத்தான் ஓடோடி வந்திருக்கிறேன்.. என்ன செய்ய வேண்டும்..? வானத்தை வில்லாய் வளைக்கவா மேகத்தை போர்வையாக்கி மடிக்கவா..?” ஜீவா அடுக்கு மொழியில் அள்ளி வீசினான்..

“அதையெல்லாம் ஒன்றும் கிழிக்க வேண்டாம்.. நான் போட்டுக் கொண்டிருக்கும் கோலத்தை அழிக்காமல் உங்கள் டூவீலரை அந்தப் பக்கமாக நகர்த்திக் கொண்டு போனால் அதுவே மிகப்பெரிய உதவி..” என்றாள் சந்தியா அமைதியாக..

ஜீவாவிற்கு சிரிப்பு வந்தது.. சிரிப்பை அடக்கிக் கொண்டு சந்தியாவை ஓர் பார்வை பார்த்தான்..

“நீ பெரிய உதவின்னு சொன்னதும் அது பெரிதாகத்தான் இருக்கும்ன்னு நான் நினைத்தேன்..”

“நினைப்பையெல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு நிஜத்திற்கு வாங்க.. கனவு கண்டு கொண்டு இருக்காதீங்க..”

“பாரும்மா.. அப்துல்கலாமே கனவு காணச் சொல்லியிருக்கிறார்.. அவ்வளவு பெரிய மனிதர்.. நம் நாட்டிற்கே ஜனாதிபதியாக இருந்தவர்.. அவர் பேச்சைத் தட்டலாமா..?”

ஜீவா பச்சைப் பிள்ளை போல் முகத்தை வைத்துக் கொண்டு பேசியதைக் கண்ட சந்தியாவிற்கு.. மனதிற்குள் ஆச்சரியம் குமிழிட்டது..

‘இவனுக்கு இப்படியெல்லாம் கூடப் பேசத் தெரியுமா..’

ஜீவா அவளைப் பார்த்துக் கொண்டே வண்டியை பின்னால் நகர்த்தி.. சரியாக நிறுத்திப் பூட்டினான்.. மீண்டும் கோலத்தின் அருகே வந்து ஒரே தாவலில் அதை தாவிக் கடந்தான்..

அதை எதிர்பார்க்காத சந்தியா.. ஆச்சரியத்துடன் விழி விரித்து இமைகளை கொட்டி விழித்தாள்..

0Shares

Reviews — Kadalaki Kasinthuruki / காதலாகி கசிந்துருகி

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link